யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அளவீட்டுப்பணி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது.
கீரிமலை, ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிக்கும் அடிப்படையில் அளவீடுகள் செய்வதற்கு நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் இன்று (26) வருகை தந்திருந்தனர்.
இதன்போது குறித்த காணி அளவீட்டுக்கு காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டதுடன், நில அளவைத்திணைக்களத்தின் வாகனத்தினையும் இடைமறித்ததால் சற்றுநேரம் பதற்றநிலை ஏற்பட்டது.
பின்னர் காணி உரிமையாளர்களின் நீண்ட நேர எதிர்ப்பினை அடுத்து, காணியினை அளவீடு செய்வதற்கு தமக்கு விருப்பம் இல்லை என காணி உரிமையாளர்கள் கடிதம் எழுதிக் கையொப்பமிட்டு வழங்கியதை அடுத்து, நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர்.
இணையத்தில் விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக மின்னஞ்சல் ஊடாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடு செய்ய முடியும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அதன்படி dir.ccid@police.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 109 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு பிரச்சினைகள் தொடர்பில் முறைப்பாடளிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான துஷ்பிரயோகம் தடுப்பு பணியகம் 24 மணி நேரமும் செயல்படும் எனவும், பாதிக்கப்படும் நபர்கள் எந்நேரமும் பொலிஸாரைத் தொடர்புகொண்டு உதவிகோர முடியும் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடமாகாணத்தில் கடந்த 2023 ஆண்டு 52 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 129 பேர் இது வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாவும்இ அவர்களில் 38 பேர் நீதிமன்றங்கள் ஊடாக பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்தியத்திற்கு உட்பட பகுதிகளில் 14 கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 44 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்ட நிலையில் இ 11 சந்தேகநபர்கள் நீதிமன்றம் மூலம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 5 கொலை சம்பவங்களும் மன்னார் பொலிஸ் பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 4 கொலை சம்பவங்க ளும் வவுனியா பொலிஸ் பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 8 கொலை சம்பவங்களும் முல்லைத்தீவு பொலிஸ் பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 8 கொலை சம்பவங்க ளும் கிளிநொச்சி பொலிஸ் பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 13 கொலை சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகளான போதில் வடக்கு கிழக்கில பெருமளவிலான இராணுவத்தினரும் பொலிஸாரும் நிலைகொண்டுள்ளனர். எனினும் தமிழர் வாழ் பகுதிகளில் தொடர்ந்தும் இவ்வாறு கொலைகள் இடம்பெறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றபோது ஜனாதிபதியாகப் பதவிவகித்த மைத்திரிபால சிறிசேனவே அதற்கு பொறுப்புக் கூறவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கனடாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அனுரகுமார திஸாநாயக்க அங்கு இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” உயிர்த் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் அதிகாரி எம்முடன் உள்ளார். எனவே நிச்சயமாகத் தீர்வு வரும். உயிர்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் குறித்து 2025 ஆம் ஆண்டிலாவது உண்மையை கண்டறியவேண்டுமென கனடாவில் உள்ள கத்தோலிக்க சமுகம் எதிர்பார்க்கின்றது.
உயிர்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி யார் எனத் தெரியுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போது கூறியுள்ளார். தாக்குதல் நடைபெற்ற போது அவர்தான் ஜனாதிபதி. அவருக்குத் தான் இது தொடர்பான முழுபொறுப்பும் உள்ளது. இத் தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் அதிகாரி நம்மோடு உள்ளார். எனவே கண்டிப்பாகத் தீர்வு கிடைக்கும் இவ்வாறு அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நமது ஈழநாட்டின் வாழ்வாதார உதவித்திட்டத்தில் இம்முறை கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த 100 சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கம், நமது ஈழநாடு உதவித்திட்டத்திடம் விடுத்த வேண்டுகோளிற்கிணங்க மாவீரர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களைச் சேர்ந்த 100 சிறார்களுக்கு அவர்களின் கற்றல் தேவைகளுக்காக ரூபாய் 3 இலட்சத்து 40 ஆயிரம் நிதிப்பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கீத் குலசேகரத்தின் ஏற்பாட்டில் செயற்பாட்டாளர்களான Suresh Perumal, Abinthan Subramaniam,Mareyanesan thanushath, Anojan Sivasithamparam, Thuraisingam Thuvarakan, Kasthuri Thurairaaja, Pavasuthan Uthaayaraja, Ratnasingam Jananan,Selvaraj Elanganathan,Sriskanthan,Sugan Vickneswaran & Ganeshalingam Ebinez ஆகியோரின் நிதிப்பங்களிப்பில் இந்த உதவித்திட்டம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வெடுக்குநாறி மலையில் கைதானவர்களை விடுவிக்கக்கோரி இன்று பாராளுமன்றத்திற்குள்ளும் தமிழ் எம்பிக்களினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் சஜீத் பிரேமதாச ஆகியோர் பாதாகைகளை ஏந்தியவாறு பாராளுமன்றத்திற்குள் கோசங்களை எழுப்பி போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
வெடுக்குநாறிமலை வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் நீதிமன்றால் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று கைதுசெய்யப்பட்ட ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேரையும் இன்று செவ்வாய்க்கிழமை (19) வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று உத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து அவர்கள் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அது தொடர்பான வழக்கு இன்றையதினம் நீதிமன்றில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த வழக்கினை நடத்த பொலிஸார் கால அவகாசம் கோரியிருந்தனர். மேலும் சட்டமா திணைக்களத்திடமிருந்து சில தகவல்களை பெற இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இருப்பினும் பொலிஸாரினால் எந்தவொரு ஆக்கப்பூர்வமான ஆவணங்களும் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க முடியாததையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து எட்டுபேரையும் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
குறித்த வழக்கில் ஆலயநிர்வாகம் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணிகளான என்.சிறிகாந்தா, அன்ரன் புனிதநாயகம், அருள், க.சுகாஸ், தலைமையில் பல சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.
தமிழர் தாயகத்தில் தொல்லியல் என்ற போர்வையிலான பண்பாட்டு அழிப்பையும் சிங்கள – பௌத்தமயமாக்கலையும் உடன் நிறுத்துமாறு கோரி யாழ் பல்கலை மாணவர்களால் இன்று போராட்மொன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்றலில், மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கடந்த எட்டாம் திகதி சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட 8 பேர் கைதுசெய்யப்பட்டமை குறித்தும் மாணவர்கள் தமது கண்டனத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவின் பாராளுமன்ற தேர்தலில் புலம்பெயர் தமிழர்கள் வாக்குகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சக்திகளாக உள்ளனர். அந்தவகையில் இச்சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி தமிழினப்படுகொலைக்கு நீதியும் தமிழீழ கொள்கைக்கு ஆதரவும் வழங்கவேண்டுமென்ற நிபந்தனையின் அடிப்படையில் தமிழ் இளையோர் கட்சிகளுக்கான தேர்தல் பிரச்சாரங்களில் கைகோர்த்துள்ளனர்.
இந்நிலையில், பிரித்தானியாவின் தொழிற்கட்சியின் மிச்சம் மோடன் தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினர் சியோபைன் மெக்டொனால்ட் (Hon. Siobhan McDonagh MP) அவர்களின் பிரச்சாரப் பணியில் பெருந்திரளான தமிழ் இளையோர் களமிறங்கியுள்ளனர்.
ஸ்ரீலங்காவில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதை பிரித்தானியாக ஏற்றுக் கொண்டு நீதி வழங்க வேண்டும், யுத்தக் குற்றவாளிகளில் ஒருவரான இராணுவ தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா மீது பிரித்தானியா தடை விதிக்கவேண்டும், தமிமீழ தனிநாட்டு கோரிக்கைக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையிலேயே தொழில்கட்சிக்கு ஆதரவு வழங்க தமிழர்கள் முன்வந்துள்ளனர்.
பிரித்தானிய தொழிலாளர் கட்சிக்கான தமிழர்கள் (Tamils For Labour) அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) இடம்பெற்ற இந்த அரசியல் பணியை, இளம் அரசியல் செயற்பாட்டாளர்களான தனுஷாத் மரியநேசன் ஆகியோர் தலைமையில் டிலான் சசிகரன், ஜெஸ்லின் உதயராணி யோகானந்தம், சிறிஸ்காந்தன் சின்னத்துரை, அல்பேட் பிறிற்றோ அன்ரன் ஐருசான், இரத்தினசிங்கம் வைகுந்தகுமார், வசந்தன்குமார் பாலசரஸ்வதி, குணசிங்கம் ஜிறோசன், சந்திரவர்மன் மேகலக்சன், சந்திரபர்மன் நிலானி, தங்கவேலு சுதாகரன், துஷாந்தன் செல்வரஞ்சன், அன்ராணி உதயகுமரன் ரொனால்ட், இரத்னசிங்கம் ஜனனன், விதுஷன் கணேசமூர்த்தி, புஸ்பகாந் சிவலிங்கம், முகமது இசத் தல்ஹா ஆகிய செயற்பாட்டாளர்கள் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவில் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு பிரித்தானியாவின் அனைத்து கட்சிகளும் தமது தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் பிரித்தானியாவில் வாழும் பெரும் தொகையான ஈழத்தமிழரின் வாக்குகள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவல்லன. அந்தவகையில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, நிபந்தனை அடிப்படையில் தமது ஆதரவை வழங்குவதன் மூலம் ஈழத்தமிழருக்கு நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதியும், தமிழீழ கொள்கைக்கு ஆதரவும் தேடும் இராஐதந்திர நகர்வை பிரித்தானிய வாழ் ஈழத்தமிழ் இளைஞர்கள் முன்னெடுத்துள்ளனர்.
ஸ்ரீலங்காவில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதை பிரித்தானியாக ஏற்றுக் கொண்டு நீதி வழங்க வேண்டும், யுத்தக் குற்றவாளிகளில் ஒருவரான இராணுவ தளபதி பிரிகேடீயர் சவேந்திர சில்வா மீது பிரித்தானியா தடை விதிக்கவேண்டும், தமிமீழ தனிநாட்டு கோரிக்கைக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே மேற்படி தமிழ் இளையோர் பழமைவாத கட்சிக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.
அந்தவகையில், தமிழ் இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தர முன்வந்துள்ள பழமைவாத கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை எதிர்வரும் பொதுத்தேர்தலில் மீண்டும் தெரிவுசெய்வதற்கும், பழமைவாத கட்சியே மீண்டும் அரசாங்கத்தை உருவாக்குவதற்கும் ஆதரவுதேடி தேர்தல் பிரச்சார பணிகளில் தமிழ் இளையோர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பிரித்தானியாவின் கரோ கிழக்கு (Harrow East) தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினர் பொப் பிளக்மான் (Hon. Bob Blackman CBE MP) அவர்களின் பிரச்சாரப் பணியில் பெருந்திரளான தமிழ் இளையோர் ஈடுபட்டுள்ளனர்.
பிரித்தானிய பழமைவாத கட்சிக்கான தமிழர்கள் (British Tamil Conservatives) அமைப்பின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (17) இடம்பெற்ற இந்த அரசியல் பணியை, செயற்பாட்டாளர்களான ஆயுட்சன் அருள்தாஸ், சசீஸ்கண்ணா நடராசா ஆகியோர் தலைமையில் அனுஷன் பாலசுப்பிரமணியம், அமல்ராஐ் ஜெயக்குமார், ஏஞ்சலோ நிருஷன் கதிராமர் , தனபால் சுப்ரமணியம், இன்பறாஜ் பத்திநாதர், சத்தியதேவன் தேவயான்சன், சிவசிதம்பரம் கோகுலன், பவிலன் ஐயம்பிள்ளை, றூபன் மத்தியாஸ், ரவிச்சந்திரன் சதுசன் ஆகிய செயற்பாட்டாளர்கள் குழுவினர் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 05 பேரின் உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது கடந்த 8 ஆம் திகதி நெடுங்கேணி பொலிஸாரால் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களில் 05 பேர் கடந்த செவ்வாய்கிழமை முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரியும், பொலிஸ் அராஜகத்தை கண்டித்தும் வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றிருந்தது.
ஆர்ப்பாட்டம் வவுனியா சிறைச்சாலை முன்றலில் நிறைவடைந்ததை தொடர்ந்து, வேலன் சுவாமி, அருட்தந்தை ரமேஸ், சட்டத்தரணி க.சுகாஸ், பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடி அவர்களின் இணக்கத்துடன் சிறைச்சாலைக்கு சென்று உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆலய பூசகர் மதிமுகராசா, எஸ்.தவபாலசிங்கம், கிந்துஜன், தமிழ்செல்வன், விநாயகமூர்த்தி ஆகிய 5 பேருடனும் கலந்துரையாடி அவர்களுக்கு நீராகாரம் கொடுத்து உணவு தவிர்ப்பு போராட்டத்தை நிறைவு செய்து வைத்தனர்.
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று 8 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கமைய , நாளை மறுதினம் ஜனாதிபதியை அவர்கள் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்திப்பில் , சிவராத்திரி தினத்தன்று கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.