-இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே – பிரதிமேயர் பிரகடனம் –
சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) உலக மனித உரிமைகள் தின விழா 2025, 13.12.2025, சனிக்கிழமை அன்று இலண்டனில் நடைபெற்றது.

1948 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் உலகப்பிரகடனத்தை ஏற்றுக்கொண்டதை நினைவுகூரும் வகையிலும் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராகவும் உலகெங்கிலுமுள்ள அனைத்து இனத்தினருக்கு எதிராகவும் இழைக்கப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களை நினைவு கூர்ந்து அவற்றுக்கு எதிராக குரல் கொடுக்கவும் சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தவும் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்.” என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்கவும் தமிழ் தகவல் நடுவத்தினால் (TIC)ஆண்டுதோறும் மனித உரிமைகள் தின நிகழ்வு நடத்தப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் இந்த ஆண்டுக்கான (2025) மனித உரிமைகள் நிகழ்வு இலண்டன் Punjabi Centre, 293-297, Ley Street, Ilford இல் இடம்பெற்றது.
நிகழ்வின் பிரதம அதிதியாக ரெட்பிரிட்ஜின் பிரதி மேஜர், வணக்கத்துக்குரிய கவுன்சிலர் ஜோ ஹெஹிர் (The Worshipful the Deputy Mayor of Redbridge Councillor. Joe Hehir) அவர்களும் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கவுன்சிலர் முஷ்டாக் அகமது (Councillor Mustaq Ahmed), கவுன்சிலர் சன்னி பெரார் (Councillor Sunny Brar),கவுன்சிலர் அலெக்ஸ் ஹோல்ம்ஸ் (Councillor Alex Holmes), கவுன்சிலர் தன்வீர் கான் (Councillor Tanweer Khan), கவுன்சிலர் ஃபோய்சூர் ரஹ்மான் (Councillor Foyzur Rahman), கவுன்சிலர் கிரஹம் வில்லியம்ஸ் (Councillor Graham Williams, Cabinet Member for Regeneration), கவுன்சிலர் பரம் நந்தா (Councillor Param Nandha, Vice Chair: North Cheam, Stonecot and Worcester Park Local Committee) ஆகியோரும், சிறப்பு விருந்தினர் மற்றும் சிறப்பு பேச்சாளராக, மூத்த பத்திரிகையாளரும் தமிழ்நெட்டின் நிறுவனருமான திரு. ஜெயா கோபிநாத் (Mr Jeya Kopinath, Senior Journalist, Founder Editor of TamilNet) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வின் ஆரம்பமாக TIC இன் நிறுவனர்களில் ஒருவரும் நிறைவேற்றுப்பணிப்பாளருமான அமரர் வைரமுத்து வரதகுமார் அவர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து நிகழ்விற்கு ஒளியூட்டும் வகையில் அதிதிகளால் மங்கள விளக்கேற்றி நிகழ்வானது இனிதே ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து மனித உரிமைகளுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் துணிச்சலுடன் போராடியவர்களுக்காக அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற தியாகங்களை நினைவுகூரும் முகமாக ஒரு நிமிடம் மௌன அஞ்சலியினை தொடர்ந்து வசந்தகுமாரி சந்திரபாலன் மற்றும் வாகீசன் தங்கவேல் அவர்களால் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து வரவேற்பு நடனமாக மெய்வெளி நாடக கலைஞர்களால் தமிழ் கலாச்சார முறையி்ல் “கூத்து வணக்கம்” வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து வரவேற்பு உரை TIC இயக்குனர் குழுமத்தின் தலைவரும் TIC இன் மூத்த உறுப்பினருமான திரு வி. ஜே. போஸ் அவர்களினால் நிகழ்த்தப்பட்டது.
நிகழ்வின் மற்றுமொரு அங்கமாக TIC யின் வரலாறு மற்றும் தமிழர் பாரம்பரிய அருங்காட்சியகம் நிறுவுதல் தொடர்பான செயற்திட்ட ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது. தமிழர் கலை கலாச்சாரம் பாரம்பரியங்களை அடுத்த சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கும் TIC யின் செயற்திட்ட இலக்கு தொடர்பான ஒரு பார்வையாக இது அமைந்திருந்தது.
தொடர்ந்து முதலாவது விருந்தினர் உரையானது பிரதம அதிதியாக வருகை தந்து நிகழ்வை சிறப்பித்த ரெட்பிரிட்ஜின் பிரதி மேஜர், வணக்கத்துக்குரிய கவுன்சிலர் ஜோ ஹெஹிர் அவர்களால் நிகழ்தப்பட்டது. அவர் தனது உரையின்போது இலங்கையில் ஈழத்தமிழருக்கு எதிராக நடைபெற்றது மற்றும் நடைபெற்றுக் கொண்டிருப்பது இனப்படுகொலையே என்று பிரகடனம் செய்ததுடன், இதற்கு நீதி வழங்கும் பொறுப்பு பிரித்தானியாவுக்கு உள்ளது என்றும் பதிவுசெய்தார். தொடர்ந்து அவருக்கான கௌரவிப்பு நிகழ்வு TIC இன் இயக்குனர் குழுமத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
தொடர்ந்து சிறப்பு பேச்சாளர் உரையானது மூத்த பத்திரிகையாளரும் தமிழ்நெட் இணையத்தின் நிறுவனருமான திரு.ஜெயா கோபிநாத் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. அவர் தனது உரையில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை நிரூபிப்பதற்கும் அதற்கான நீதிதேடுவதற்கான அடுத்த கட்ட படிமுறைகளையும் தெளிவாக முன்வைத்தார்.
அதனைத்தொடர்ந்து Red Panda Entertainment Agency, இனால் ஆபிரிக்கா கலாச்சார நடனமானது இடம்பெற்றது அந் நடனமானது பார்வையார்களை உற்சாகப்பத்தும் வகையில் அமைந்திருந்தது.
அதனைத்தொடர்ந்து TIC நிறுவுனர்களில் ஒருவரும், நிறைவேற் றுப் பணிப்பாளருமான மறைந்த வரதகுமார் ஞாபகார்த்த விருது இவ்வாண்டு மாமனிதர் தாரகி சிவராம் அவர்களுக்கு அவரின் துணிகர ஊடகசேவைக்காக வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதனை அவரின் குடும்ப சார்பாக திரு. ஜெயா கோபிநாத் அவர்கள் பெற்றுக் கொண்டார். அத்துடன் அவர் மாமனிதர் தாரகி சிவராம் அவர்கள் பற்றிய நினைவுரையையும் வழங்கி, அவர் பற்றிய பல விடயங்களையும் பகிர்ந்து கொண்டார்.
இவ்வாண்டுக்கான முதலாவது மனித உரிமைகள் விருதானது பொது மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற வழக்கறிஞர் செல்வி சாந்தி சிவகுமரன் (Shanthi Sivakumaran, Barrister, Specialised in Public and Human rights and international law) அவர்களை செல்வி சௌமியா மாதூசன் அறிமுகப்படுத்த தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) இயக்குனர்கள் அவருக்கான விருதினை வழங்கி கௌரவித்தனர். அச்சந்தர்ப்பத்தில் அவர் மனித உரிமைகள் தொடர்பான பல விடயங்களை பகிர்ந்து கொண்டார்.
அதனைத்தொடர்ந்து இரண்டாவது மனித உரிமைகள் விருதானது மூத்த வழக்கறிஞரும் பொதுநல சட்ட மையத்தின் (PILC) நிறுவனருமான ஃபவுல் ஹெரோன் (Paul Heron, Senior Lawyer and Founder of the Public Interest Law Centre (PILC) அவர்களை செல்வி சௌமியா மாதூசன் அறிமுகப்படுத்த தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) இயக்குனர்கள் அவருக்கான விருதினையும் வழங்கி கௌரவித்தனர். இவர்கள் இருவரும் இலண்டனில் போராட்டம் செய்த தமிழர்களுக்கு கழுத்துவெட்டும் சமிக்கை காட்டி மிரட்டிய பிரிகேடியர் பிரிங்க பெர்ணாண்டோக்கு எதிரான வழக்கு மற்றும் விடுதலைப்புலிகள் மீதான தடை வழக்கு என்பவற்றை நடத்தியவர்கள் என்பதோடு, பிரித்தானிய கூலிப்படையாகிய “கினிமினி” இலங்கையில் 1980 காலப்பகுதியில் இழைத்த யுத்தக்குற்றங்களுக்கு நீதிகோரும் வழங்கும் வழக்கில் TICக்கு ஆலோசனை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
அதனைத்தொடர்ந்து அரங்கத்தை அலங்கரிக்கும் முகமாகவும் ஒரு மனிதனின் உரிமைகள் என்ன என்பதனையும் அது பறிக்கப்பட்டால் படும் வேதனையையும் சிறந்த முறையில் ஒரு நாடகமாக மெய்வெளி நாடக கலைஞர்களால் “அடைய முடியாத ஒளி” (Unreachable Ligh) எனும் தலைப்பில் நாடகமானது அரங்கேற்றி வைக்கப்பட்டது. அந்நாடகமானது பார்வையாளர்களை உணர்வுபூர்வமாக்கியது மட்டுமன்றி அனைவராலும் எழுந்து நின்று கரகோஷம் கொண்டு பாராட்டப்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
பின்னர் பன்நெடுங்கால வரலாற்றை தன்னகத்தே கொண்டுள்ள தமிழர்களின் பாரம்பரிய இசையான பறை இசை வாகீசன் தலைமையிலான குழுவினால் இசைக்கப்பட்டது.
அத்துடன் அரசியல் தலைவர்கள், மத தலைவர்கள், ஏனைய தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், தமிழ் தகவல் நடுவ தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வினை செல்வன் மதுசங்கர் கெங்கேஸ்வரன் மற்றும் மகிஷா வரதராசா ஆகியோர் சிறந்த முறையில் தொகுத்து வழங்கினர்.
இந் நிகழ்வின் மூலம் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு அனைவரிடமும் அதிகரித்தது. மனித உரிமைகள் அனைவராலும் மதிக்கப்படும் போது, சமத்துவமும் அமைதியும் நிறைந்த சமூகத்தை உருவாக்க முடியும் என்ற கருத்து பதிவுசெய்யப்பட்டது.







































