
இலங்கையில் இடம்பெறும் தமிழருக்கு எதிரான திட்டமிட்ட இனப்படுகொலையின் அங்கமான கலாச்சார அழிப்பை முறியடித்து, எமது மொழியையும், பாரம்பரிய கலைகளையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் நோக்கத்தில், புலம்பெயர் தமிழர்களின் முயற்சியால் பிரித்தானிய அரசு தை மாதத்தினை “தமிழர் மரபுத் திங்கள்” என அண்மையில் பிரகடனப்படுத்தியது யாவரும் அறிந்ததே. இதனை கொண்டாடும் முகமாக வருடம் தோறும் தைமாதம் உலகின் தமிழர்கள் வாழும் பல்வேறு பகுதிகளில் மரபுத்திங்கள் விழா அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (25.01.2025) தமிழ் தகவல் நடுவம் (TIC)மற்றும் சமூக அபிவிருத்திக்கான மையம் (CCD), கிங்ஸ்டன் நகரசபை, தமிழ் கலாசார கழகம் (ITC) மற்றும் சரே தமிழ் கல்விக்கூடம் ஆகியவற்றின் ஒழுங்கமைப்பில் இலண்டன் நியூ மால்டனில் அமைந்துள்ள றிச்சார்ட் சல்லோனர் பாடசாலையில் (Richard Challoner School, Manor Dr N, New Malden, London) தமிழர் மரபுத்திங்கள் விழாவானது சிறப்பாக நிகழ்த்தப்பட்டது.


இதன் சிறப்பு விருந்தினராக, பாராளுமன்ற உறுப்பினரும் லிபரல் டெமேகிரடிக் கட்சியின் தலைவருமான, அதிமதிப்புக்குரிய சேர் எட் டேவி (Rt. Hon. Sir. Ed Davey) அவர்கள் மற்றும் நகர முதல்வர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் ஆரம்பமாக, மகா பண்டிதன் என்று போற்றப்படுகின்ற பத்து தலை கொண்ட தமிழ் அரசன் இராவணன் போல் வேடம் தரித்து ஒருவர் முன்னே செல்ல தமிழர்களாகிய நமது பாரம்பரிய இசைவாத்தியங்களுடன் (நாதஸ்வரம், தவில், தம்பட்டம், பறை, கொம்பு, குழல) மங்கள இசை முழங்க பாரம்பரிய நடனக்கலைகளுடனும் (கரகம், காவடி, புலியாட்டம்) நமது கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் முகமாக அழகான பெண் ஒருத்தி கையில் தீச்சட்டி ஏந்திவர விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டு பொங்கல் நிகழ்வானது இடம்பெற்றது.



அதனைத்தொடர்ந்து மேடையினை மங்கள இசைகள் (நாதஸ்வரம், தவில்) அலங்கரிக்க ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் நிகழ்வுகளானது ஆரம்பமானது. முதல் நிகழ்வாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கவுன்சிலர் தயாளன் (Councillor Thayalan)அவர்களால் வரவேற்பு உரை நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்கள். தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களின் உரை இடம்பெற்றது.

தொடர்ந்து கிங்ஸ்ரன் தமிழ்ப் பாடசாலை மாணவர்களால் புராணக்கதையுடன் கூடிய பரதநாட்டிய நடனமானது கண்ணுக்கு இனிமை தரும் வகையில் இடம்பெற்றது. கறோ தமிழ்ப் பாடசாலை சின்னஞ்சிறு சிறுமிகளால் சிறப்பான பரதநாட்டிய நடமானது வழங்கப்பட்டது. தொடர்ந்து தவில் மற்றும் பறை இசை வாத்தியத்துடனான நடனம் இடம்பெற்றது அது பார்வையாளர்களிடையே உற்சாகம் தரும் வகையில் அமைந்தது. கலைக்கு வயது தடை அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் பெண்கள் குழுவினரால் அழகான நடமானது வழங்கப்பட்டது.

தொடர்ந்து நமது மனதுக்கு மிகவும் நெருக்கமான காத்தவராயன் கூத்தின் ஒரு பகுதி, செல்வி வர்ணவி தவகணேஸ் அவர்களால் வழங்கப்பட்டது. கிங்ஸ்ரன் தமிழ்ப் பாடசாலை மாணவர்களால் மற்றுமொரு நடனமானது வழங்கப்பட்டது. தொடர்ந்து மெய்வெளி நாடக கலைஞர்களால் தமிழையும் அதன் மரபையும் ஒன்றிணைக்கும் முகமாக “வேரின் குரல்” எனும் தலைப்பில் கிராமிய நடமானது வழங்கப்பட்டது. அதில் தற்காலத்தில் வாழும் முதியவர்கள் தமிழ் மற்றும் அதன் பண்பாடு அழிந்து போவதை கண்டு அஞ்சும் தன்மையையும் தற்கால இளையோர்களின் வாழ்க்கை முறையையும் எடுத்து காட்டும் வகையிலும் ஈழத்தமிழர்களின் வலியினையும் சுமந்து அமைந்தது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். தொடர்ந்து வைத்தியர் தேவா நாதன் அவர்களின் நன்றி உரையுடன் நிகழ்வானது சிறப்பாக நிறைவுபெற்றது.

இந் நிகழ்வினை பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் இணைந்து சிறப்பாக கொண்டாடியிருந்தார்கள்.
தமிழர் பண்பாடு அழகான ஒழுக்கத்தின் அடையாளம். தமிழர்களின் உணவு ஆரோக்கியத்தின் அடித்தளம். “அறம், பொருள், இன்பம்” எனும் மூன்று சொல்லில் வாழ்க்கையை சொன்ன செம்மொழி அதனால் தான் இத்தனை நூற்றாண்டுகள் கடந்தும் உயிர்ப்போடு இருக்கின்றது அதுவே அதன் பெருமை. தமிழ் மரபை காக்க பழைய காலத்துக்கு போக வேண்டியதில்லை. தமிழ் பேசினாலே போதும். தமிழை நேசித்தாலே போதும். தமிழ் மரபை நம் அன்றாட வாழ்க்கையில் சிறிதாவது வாழ்ந்தாலே போதும். மரபு பாரமாக அல்லாமல் பெருமையாக இருக்க வேண்டும்.











