Home Blog Page 335

60 விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர்க்குற்ற வழங்குகள் – சிறிலங்கா அரசாங்கம் அறிவிப்பு!

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தீவிர உறுப்பினர்களான 60 போராளிகளுக்கு எதிராக அடுத்த சில வாரங்களில் சிறிலங்கா அரசாங்கம் போர்க்குற்ற வழக்குத் தொடுக்கவுள்ளது.

இவர்கள் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்துள்ளதற்கான தெளிவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதை அடுத்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மேலதிக சொலிசிரர் ஜெனரல் சுகத் கம்லத் தெரிவித்துள்ளார்.

“பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட சட்ட ஆலோசனைக் குழுவே, இவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முடிவு செய்துள்ளது.

தீவிரவாத விசாரணைப் பிரிவினால் விசாரிக்கப்பட்டு வரும் 80 இற்கும் அதிகமான விடுதலைப் புலிகள், தடுப்புக்காவலில் இருந்தபோது கூட பிரிவினைவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதற்கான புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

இவர்கள் விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களுடன் தொடர்பு வைத்துள்ளது மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசை அமைக்கும் இரகசிய சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ள புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்பு வைத்துள்ளது குறித்து தீவிரவாத விசாரணைப் பிரிவுக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன.

கடந்த ஜுன் மாதம் இடம்பெற்ற வவுனியா சிறைச்சாலைக் கலவரத்தின் போது இவர்களின் செயற்பாடுகள் வெளிச்சத்துக்கு வந்தன.

இவர்கள் தகவல் தொழில்நுட்பம் மற்றும், கைத்தொலைபேசிகள் மூலம் வெளிநாடுகளுடன் தொடர்புகளை வைத்திருந்தது, அவர்களின் ஆலோசனைக்கமைய செயற்பட்டது குறித்த ஆதாரங்களை தீவிரவாத விசாரணைப் பிரிவு கண்டறிந்துள்ளது.

அனுராதபுர, வவுனியா, மன்னார், வெலிக்கடை ஆகிய சிறைகளில் நான்கு புதிய உயர்நீதிமன்றங்கள் அமைக்கப்படவுள்ளன.
.
சட்ட ஆலோசனைக் குழு தமது விசாரணையின் போது தடுப்பிலுள்ள 300 விடுதலைப் புலிகள் பற்றிய ஆவணங்களைப் பரிசீலித்தது.

இவர்களில் 150 பேர் மோசமான குற்றங்களை இழைத்ததற்கான ஆதாரங்கள் இல்லாததால், புனர்வாழ்வுக்கு அனுப்பப்படவுள்ளனர்.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்தியாவின் உத்தரவாதத்துடன் கூட்டமைப்புடன் பேச்சுக்களை மீளத் தொடங்குகிறது சிறிலங்கா!

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்து கொள்ளும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மீண்டும் இருதரப்புப் பேச்சுக்களை சிறிலங்கா அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சமநேரத்தில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெறுவது என்ற இந்தியாவின் உறுதிப்பாட்டுடன் இந்தப் பேச்சுக்களை சிறிலங்கா அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது.

இதுதொடர்பாக அண்மையில் புதுடெல்லி சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குடன் விரிவாக ஆராய்ந்துள்ளார்.

நேற்று புதுடெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ள இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து பேர்கொண்ட குழுவுக்கு மகிந்த ராஜபக்ச – மன்மோகன்சிங் சந்திப்பு தொடர்பாக, இந்தியா விளக்கமளிக்கவுள்ளது.

இதன்போது இருதரப்பு பேச்சுக்கள் மற்றும் தெரிவுக்குழுவில் சமநேரத்தில் பங்கேற்பதை இந்தியா உத்தரவாதப்படுத்தவுள்ளது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், புதுடெல்லியில் முக்கியமாக இந்திய மத்திய அமைச்சர்கள் நாராயணசாமி, எஸ்.எம்.கிருஸ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், ஆகியோருடன் பேச்சுக்களை நடத்தவுள்ளதுடன் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கையும் சந்திக்கவுள்ளனர்.

புதுடெல்லி சென்றுள்ள குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சுரேஸ் பிறேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தமிழர்கள் எந்த ஆயுதங்களை கையிலெடுக்க வேண்டுமென சர்வதேசமே தீர்மானிக்க வேண்டும்: ஐ.நா உதவிச் செயலரிடம் வலியுறுத்தல்!

தமிழர்களின் விடுதலைக்கான போராட்டம் இன்னமும் முடிவுபெறவில்லை. அவர்களின் ஆயுதங்களே மௌனிக்கப்பட்டுள்ளன.

தமிழர்கள் எவ்வாறான ஆயுதங்களை கையில் எடுக்க வேண்டும் என்பதை சர்வதேச சமூகமே தீர்மானிக்க வேண்டும் என யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஐ.நா உதவி செயலாளர் அஜய் சில்பரிடம் யாழ்.சிவில் சமூகப் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இன்று யாழ். வந்த உதவிச் செயலாளரை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் சிவில் சமூகப் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடினார்கள்.

யுத்ததின் பின்னர் வடக்கு கிழக்கு பகுதிகளில் பெருமளவான அபிவிருத்திப் பணிகள் இடம்பெறுவதாக அரசாங்கம் கூறிவருகின்றது. இதற்கு அரசாங்கத்தின் அடிச்சுவடுகளை பின்பற்றும் ஒரு சில தமிழ் அமைச்சர்களும் ஒத்து ஓதிவருகின்றனர்.

ஆனால் மக்கள் அபிவிருத்தியை விட அரசியல் தீர்வு ஒன்றையே எதிர்பார்க்கின்றனர். அபிவிருத்தி என்ற மாயையை தமிழ் மக்கள் விரும்பவில்லை அவர்கள் தமக்கான அரசியல் தீர்வையே எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

யுத்தம் முடிவு பெற்று விட்டது, அபிவிருத்தி நடைபெறுகின்றது என அரசாங்கம் கூறி வருகின்றது. தமிழர்களின் அரசியல் உரிமையை வென்றெடுக்கும் பேராட்டம் நிறைவு பெறவில்லை. அவர்களின் ஆயுதங்களே மௌனிக்கப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் எந்தவகையான ஆயுதங்களை கையில் எடுக்க வேண்டும் என்பதை சர்வதேச சமூகமே தீர்மானிக்க வேண்டும். தமிழர்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுக்க சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐ.நா உதவிச் செயலாளருக்கும் அரசஅதிபருக்கும் இடையில் சந்திப்பு; யாழ். மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் கேட்டறிந்தனர்!

ஜ.நா உதவிச் செயலாளர் நாயகத்திற்கும் யாழ் மாவட்ட அரச அதிபருக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று மதியம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
கடந்த 3ஆம் திகதி இலங்கைகான விஜயத்தினை மேற்கொண்டு வந்த பிரதிநிதிகள் இன்றைய தினம்  யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர். வருகை தந்த இவர்கள்யாழ். மாவட்ட செயலகத்தில் அரச அதிபரைச் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.
அதன்படி யாழ் மாவட்ட அபிவிருத்தி தொடர்பிலும், இனிவருங் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி தொடர்பிலும் அவற்றைச் செயற்படுத்தும் போது எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பிலும் ஜ.நா பிரதிநிதிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது.
அத்துடன் உட்கட்டமைப்பினை அபிவிருத்தி செய்வதிலும் வீதி மற்றும் ஏனைய முக்கிய அபிவிருத்திகளுக்கு உள்ளுர் மற்றும் வெளியூரில் இருந்தும் வேலைத்திட்டங்களுக்கு ஆட்கள் இணைத்துக் கொள்ளப்பட்டமை தொடர்பிலும் அவர்களது பங்களிப்பு பலமாக உள்ளமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தில் பல்வேறு சமயத்தவர்கள் இருப்பதனால் அவர்களது ஒற்றுமை தொடர்பிலும் ஜ.நா பிரதிநிதிகளால் வினாவப்பட்டது. அதற்கு பதிலளித்த அரச அதிபர் யாழில் சர்வமத ஒன்றியத்தின் ஊடாக அவர்கள் தமது சேவைகளை முன்னெடுத்துச் செல்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் தற்போது மீள்குடியேற்றப்பட்ட 31 ஆயிரம் குடும்பத்தவர்களது வாழ்வாதாரம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன் அவர்களில் பெரும்பாலானவர்கள் வேலைகள் இன்றி இருப்பதனால் அவர்களுக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, விவசாய அமைச்சு, பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சுக்கள் ஊடாக விவசாயம், சிறு கைத்தொழில் போன்றவற்றை ஊக்குவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் யாழில் இடம்பெயர்ந்தவர்களுக்கான உதவிகளை அரசாங்கத்துடன் இணைந்து ஜ.நா செயற்படுவதற்கும் நன்றி தெரிவித்ததாகவும் ஐ.நா பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலினையடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அரச அதிபர் இவ்வாறான விடயங்களை தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் ஜ.நாவின் உதவிச் செயலாளர் நாயகம் அஜை சிப்பர், இலங்கைக்கான ஐ.நாவின் வதிவிடப்பிரதி நிதி சுபைனோ நண்டி, ஐ.நா பிரதிநிதிகளான ரசினா, இன்றிகோ , இலங்கையில் உள்ள ஜ.நா அதிகாரிகள் மற்றும் யாழ் மாவட்ட உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இதேவேளை யாழ். வந்த இவர்கள் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க, மனித உரிமைகள்  ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட இணைப்பாளர் ரி. கனகராஜ் உட்பட சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும்  பண்டத்தரரிப்பில் உள்ள பனைசார் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பண்ணையினையும் பார்வையிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நல்லூர் பிரதேச சபையின் காணியை அடாத்தாக பிடித்தனர் படையினர்; காவலாளியைத் துரத்திவிட்டு இராணுவப் பாதுகாப்பு!

திருநெல்வேலி பாற்பண்ணைக்கு முன்பாகவுள்ள நல்லூர் பிரதேச சபைக்குச் சொந்தமான காணியை நேற்று சபையின் அனுமதி எதுவுமின்றி அத்துமீறி அடாத் தாகக் கையகப்படுத்தினர் படையினர். இந்தக் காணியை படையினருக்கு வழங்குவதில்லை என நல்லூர் பிரதேசசபை அண்மையில் கூடி விசேட தீர்மானம் ஒன்றை நிறைவேற்றிய நிலையில் நேற்றுக்காலை படையினர் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்றுக்காலை அங்கு சென்ற படையினர் அங்கிருந்த காவலாளியைத் துரத்திவிட்டு காணியின் வாசல் கேற்றை மூடிப் பூட்டுப் போட்டதுடன் அதற்கு இராணுவப் பாதுகாப்பும் வழங்கினர்.
பிரதேச சபையின் காணி என்று ஏற்கனவே அடையாளமிடப்பட்டிருந்த போதும் நேற்றுக்காலை படையினர் அத்துமீறி அங்கு வந்து அதனைக் கையகப்படுத்தியதாக நல்லூர் பிரதேச சபையின் தலைவர் ப.வசந்தகுமார் தெரிவித்தார்.
பாற்பண்ணைக்கு முன்பாக அமைந்துள்ள இந்த 5 1/2 பரப்புக் காணியில் சிறுவர் பூங்கா ஒன்று அமைப்பதற்கு சபை தீர்மானித்தது. இதனையடுத்து அங்கு பூங்கன்றுகளும் நாட்டப்பட்டன.
அத்துடன் நல்லூர் பிரதேச சபைக்கு இந்தக் காணி சொந்தமானது எனத் தெரிவிக்கும் அடையாளப் பலகையும் போடப்பட்டிருந்தது. சிறுவர் பூங்காவுக்கான விளையாட்டு சாதனங்களும் அடுத்த சில தினங்களில் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்தநிலையில் நேற்றுக் காலை 9.15 மணியளவில் அங்கு சென்ற 5 இராணுவத்தினர் காவலாளியைத் துரத்திவிட்டு தாங்கள் கொண்டு சென்ற பூட்டினால் கேற்றைப் பூட்டி இராணுவப் பாதுகாப்பும் போட்டனர். இதுகுறித்துக் காவலாளி நல்லூர் பிரதேச சபைத் தலைவருக்குத் தெரியப்படுத்தினார்.
உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற தலைவரும், உத்தியோகத்தர்களும் அங்கு நின்ற படையினரிடம், இது பிரதேச சபைக்குச் சொந்தமான காணி என்பதை விளங்கப்படுத்தினர். எனினும் படையினர் அதனைக் கேட்கவில்லை. ஊரெழுப் படைமுகாமில் இருந்து திருநெல்வேலி முகாம் பொறுப்பதிகாரிக்கு அறிவிக்கப்பட்டதன் அடிப்படையிலேயே தாங்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அவர்கள் பிரதேச சபைத் தலைவரிடம் தெரிவித்தனர்.
இதனை அடுத்து கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு ஒன்றைத் தான் பதிவு செய்யச் சென்றதாகவும் தனது முறைப்பாட்டை ஏற்க மறுத்த பொலிஸார், சம்பந்தப் பட்ட காணி இராணுவத்துக்கு உரியது என அரச அதிபரால் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தாங்கள் எதுவும் செய்ய முடியாது எனவும் இதுகுறித்து அரச அதிபருடன் தொடர்பு கொள்ளுமாறும் கூறியதாக தலைவர் வசந்தகுமார் தெரிவித்தார்.
இந்தக் காணி யாழ்.மாவட்ட அபிவிருத்திச் சபையால் 2003 ஆம் ஆண்டு நல்லூர் பிரதேச சபைக்கு வழங்கப்பட்டதாகவும் தலைவர் குறிப்பிட்டார். இராணுவத்தினரின் இந்த நடவடிக்கை குறித்துத் தான் அரச அதிபருக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பலாலிப் படைத்தலைமையக ஊடகத் தொடர்பாளர் மேஜர் மல்லவராய்ச்சியுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, “அது இராணுவத்துக்கு உரிய காணி. பிரதேச சபைக்குச் சொந்தமானது அல்ல. அதனால்தான் இராணுவத்தினர் நேற்று அங்கு சென்றனர்.
இந்தக் காணி அரச அதிபரால் இராணுவத்துக்கு வழங்கப்பட்டு விட்டது. ஆகவே இது தொடர்பில் அரச அதிபருடன்தான் தொடர்பு கொள்ள வேண்டும்” என்றார். இது தொடர்பாக யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, “இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. காணியை அவ்வாறு வழங்கும் அதிகாரம் எனக்கு இல்லை.” என்று கூறினார்.

விடுதலைப் புலிகள் மீண்டும் தலையெடுப்பதற்கு இந்தியா இடமளிக்காதாம் – விமல் வீரவன்ச நம்பிக்கை!

விடுதலைப் புலிகள் மீண்டும் தலையெடுப்பதை இந்தியா விரும்பாது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் சிறிலங்கா அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இந்தியத் தலையீட்டுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த அவர், மன்னார், பெரியமடுவில் இரண்டாவது கட்ட இந்திய வீடமைப்புத்திட்ட தொடக்க நிகழ்வில் உரையாற்றிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.

“இப்போது விடுதலைப் புலிகளின் மரபுரீதியாகப் போரிடும் பலம் முற்றாகவே அழிக்கப்பட்டு விட்டது.

சிறிலங்காவிலோ இந்தியாவிலோ விடுதலைப் புலிகள் மீண்டும் தலையெடுப்பதை இந்தியா விரும்பாது.

விடுதலைப் புலிகளால் இந்தியாவும் கூடப் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, மீண்டும் அவர்கள் ஒன்றிணைவதற்கு இந்தியா ஊக்கமளிக்காது.” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

சிறிலங்காவில் தீவிர பணிகளில் இருந்து ஒதுங்குகிறது அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையம்!

சிறிலங்காவில் அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையத்தின் செயற்பாட்டு நிலைப் பணிகள் நிறுத்தப்படவுள்ளதாக, அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையர் அன்ரனியோ குரேரஸ் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் நடைபெற்ற அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையத்தின் 63வது நிறைவேற்றுக் குழுவில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

எனினும், இந்தியாவில் இருந்து சுயவிருப்பின் பேரில் நாடு திரும்பும் அகதிகள் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த அகதிகளுக்கு, தொடர்ந்தும் உதவிகள் அளிக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

வடக்கு ஆளுனரின் ஒப்புதலுக்கு தடைவிதிக்கக் கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு!

திவிநெகும சட்டமூலத்துக்கு வடக்கு மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி ஒப்புதல் அளிப்பதற்குத் தடைவிதிக்கக் கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழக்குத் தொடுத்துள்ளது.

வடக்கு மாகாணசபை இன்னமும் தெரிவு செய்யப்படாத நிலையில், வடக்கு மாகாண ஆளுனரின் ஒப்புதலுடன் திவி நெகும சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற சிறிலங்கா அரசாங்கம் முற்படுகிறது.

இந்தச் சட்டமூலத்துக்கான ஒப்புதலை வடக்கு மாகாண ஆளுனர் ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளார்.

நேற்று கிழக்கு மாகாணசபையிலும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவுடன் இந்த சட்டமூலத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சிறிலங்காவின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, வடக்கு ஆளுனரின் ஒப்புதலைப் பெறுவதற்குத் தடைவிதிக்கக் கோரும் மனுவைச் சமர்ப்பித்துள்ளார்.

13வது திருத்தச்சட்டத்தின் மூலம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை இந்த திவிநெகும சட்டமூலம் பறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாணசபையின் ஒப்புதலின்றி இதனை நிறைவேற்றுவது, வடக்கு மக்களின் உரிமைகளை மீறும்செயல் என்று மாவை சேனாதிராசாவின் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போர்க்குற்ற மீறல்கள் குறித்த விசாரணையின் நிலை என்ன? – சிறிலங்காவிடம் அமெரிக்கா மீண்டும் கேள்வி!

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில், இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமானச்சட்ட மீறல்கள் தொடர்பான விசாரணைகளின் தற்போதைய நிலை என்னவென்று, அமெரிக்கா மீண்டும் வினவியுள்ளது.

நியுயோர்க்கில் சிறிலங்காவின் நீதிஅமைச்சர் ரவூப் ஹக்கீமைச் சந்தித்த அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றோபேட் ஓ பிளேக் இதுபற்றி அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது, சிறிலங்கா அரசாங்கம் எதையும் மறைக்காது என்று தாம் உறுதியளித்ததாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.

திருகோணமலையில் 5 மாணவர்கள் 2006ல் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என்று உத்தரவாதம் அளித்ததாகவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறித்து பிளேக்கிடம் போட்டுக் கொடுத்தார் ஹக்கீம்!

கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்னர் தேசிய அரசு அமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, சிறிலங்கா அரசாங்கமோ ஆர்வம்

காட்டாததால் தான் தாம், ஆளும்கட்சியுடன் இணைந்து ஆட்சியமைத்ததாக, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமெரிக்காவிடம் கூறியுள்ளார்.

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க நியுயோர்க் சென்ற ரவூப் ஹக்கீம், அங்கு அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கை சந்தித்துப் பேசியுள்ளார்.

இதன்போதே ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து ஆட்சியமைத்ததற்கு நியாயம் கற்பித்துள்ளார்.

“மாகாணசபைகளுக்கான அதிகாரப்பகிர்வின் அவசியத்தையும், இனப்பிரச்சினைத் தீர்வின் முக்கியத்துவத்தையும் கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

மாகாணசபைத் தேர்தல் முடிந்தவுடன் நாம் சிறிலங்கா அரச தரப்பினருடனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் நடத்திய பேச்சுக்களின் போது , தேசிய அரசாங்கத்தை அமைக்க வலியுறுத்திய போதிலும், இருதரப்பினரும் அதில் அக்கறை காட்டவில்லை.

இந்தநிலையிலேயே தற்போதைய அரசியல் சூழல் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் நலன் கருதி கிழக்கு மாகாணசபையில் ஆட்சிமைக்க, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவளிக்க முன்வந்தோம்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உள்வாங்கினால், இதுவரை தீர்வு காணப்படாத பல்வேறு பிரச்சினைகளில் உரிய கவனம் செலுத்த முடியும்.

இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான எத்தகைய பேச்சுக்களிலும் முஸ்லிம்களும் தனித்தரப்பாக பங்கேற்ற வேண்டும்.

விடுதலைப் புலிகளைப் போன்றே, தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் பேச்சுக்களில் முஸ்லிம்களைத் தனித்தரப்பாக ஏற்க மறுக்கின்றது.

சிறிலங்கா அரசுடன் தாம் பேச்சுக்களில் ஈடுபடுவதாகவும், முஸ்லிம்கள் தம்மோடு பிரச்சினைகள் குறித்து பேசலாம் என்றும் அவர்கள் கூறிவருகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முஸ்லிம்கள் தமது பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.“ என்றும் ரவூப் ஹக்கீம், அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் பிளேக்கிடம் கூறியுள்ளார்.

கிழக்கில் தமிழர் ஒருவரை முதல்வராக்கும் அமெரிக்காவின் முயற்சியை தாம் சிறிலங்கா அரசுடன் இணைந்து முறியடித்திருந்ததாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாரிஸ் கடந்தவாரம் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கூறியிருந்தார்.

இதற்காகவே தேர்தல் முடிந்ததும், பிளேக் கொழும்பு வந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணசபையில் தவிசாளர் பதவியையும் பறித்துக் கொண்டது சிறிலங்கா சுதந்திரக் கட்சி!

கிழக்கு மாகாணசபையில் தவிசாளர் பதவியையும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியே பறித்துக் கொண்டுள்ளது.

அண்மையில் கிழக்கு மாகாணசபைக்கு நடத்தப்பட்ட தேர்தலில், 14 ஆசனங்களை வென்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைத்துள்ளது.

முஸ்லிம் காங்கிரசின் கிழக்கு முதல்வர் கனவை உடைத்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நஜீப் அப்துல் மஜீத்தை ஆளும்கட்சி முதல்வராக நியமித்தது.

அமைச்சர்கள் நியமனத்தின் போது தமிழர்கள் எவருக்கும் சிறிலங்கா அரசு வாய்ப்பு அளிக்கவில்லை.

இந்தநிலையில் தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளர் பதவிகள் ஆளும் கூட்டணியில் உள்ள முஸ்லிம் கட்சிகளுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

ஆனால் தவிசாளர் பதவியையும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியே கைப்பற்றியுள்ளது.

நேற்று நடைபெற்ற கிழக்கு மாகாணசபையின் முதலாவது அமர்வில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஆரியவதி கலப்பதி தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

பிரதித் தவிசாளராக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த சுபைர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் – இந்திய அரசு உன்னிப்பாக கவனிக்கிறதாம்!

தமிழ்நாட்டில்விடுதலைப் புலிகள் இயக்கம் வலுவடைந்து வருகிறதா என்பது குறித்து இந்திய மத்திய அரசு, உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தெரிவித்துள்ளார் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அன்ரனி.

புதுடெல்லியில் நேற்று, இடம்பெற்ற இராணுவ நிகழ்வு ஒன்றையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கம் வலுவடைந்து வருகிறதா என்று இதன்போது செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்குப் பதிலளித்த இந்தியப் பாதுகாப்பு அமைச்சர், ஏ.கே. அன்ரனி, இந்திய மத்திய அரசு, உன்னிப்பாகக் கவனித்து வருகிறது என்று  சுருக்கமாகக் குறிப்பிட்டார்.

அதுபற்றி மேலதிகமான விளக்கம் எதையும் கொடுக்கவில்லை.

error: Content is protected !!