விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தீவிர உறுப்பினர்களான 60 போராளிகளுக்கு எதிராக அடுத்த சில வாரங்களில் சிறிலங்கா அரசாங்கம் போர்க்குற்ற வழக்குத் தொடுக்கவுள்ளது.
இவர்கள் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்துள்ளதற்கான தெளிவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதை அடுத்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மேலதிக சொலிசிரர் ஜெனரல் சுகத் கம்லத் தெரிவித்துள்ளார்.
“பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட சட்ட ஆலோசனைக் குழுவே, இவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முடிவு செய்துள்ளது.
தீவிரவாத விசாரணைப் பிரிவினால் விசாரிக்கப்பட்டு வரும் 80 இற்கும் அதிகமான விடுதலைப் புலிகள், தடுப்புக்காவலில் இருந்தபோது கூட பிரிவினைவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதற்கான புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
இவர்கள் விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களுடன் தொடர்பு வைத்துள்ளது மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசை அமைக்கும் இரகசிய சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ள புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்பு வைத்துள்ளது குறித்து தீவிரவாத விசாரணைப் பிரிவுக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன.
கடந்த ஜுன் மாதம் இடம்பெற்ற வவுனியா சிறைச்சாலைக் கலவரத்தின் போது இவர்களின் செயற்பாடுகள் வெளிச்சத்துக்கு வந்தன.
இவர்கள் தகவல் தொழில்நுட்பம் மற்றும், கைத்தொலைபேசிகள் மூலம் வெளிநாடுகளுடன் தொடர்புகளை வைத்திருந்தது, அவர்களின் ஆலோசனைக்கமைய செயற்பட்டது குறித்த ஆதாரங்களை தீவிரவாத விசாரணைப் பிரிவு கண்டறிந்துள்ளது.
அனுராதபுர, வவுனியா, மன்னார், வெலிக்கடை ஆகிய சிறைகளில் நான்கு புதிய உயர்நீதிமன்றங்கள் அமைக்கப்படவுள்ளன.
.
சட்ட ஆலோசனைக் குழு தமது விசாரணையின் போது தடுப்பிலுள்ள 300 விடுதலைப் புலிகள் பற்றிய ஆவணங்களைப் பரிசீலித்தது.
இவர்களில் 150 பேர் மோசமான குற்றங்களை இழைத்ததற்கான ஆதாரங்கள் இல்லாததால், புனர்வாழ்வுக்கு அனுப்பப்படவுள்ளனர்.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.