SHARE

திவிநெகும சட்டமூலத்துக்கு வடக்கு மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி ஒப்புதல் அளிப்பதற்குத் தடைவிதிக்கக் கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழக்குத் தொடுத்துள்ளது.

வடக்கு மாகாணசபை இன்னமும் தெரிவு செய்யப்படாத நிலையில், வடக்கு மாகாண ஆளுனரின் ஒப்புதலுடன் திவி நெகும சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற சிறிலங்கா அரசாங்கம் முற்படுகிறது.

இந்தச் சட்டமூலத்துக்கான ஒப்புதலை வடக்கு மாகாண ஆளுனர் ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளார்.

நேற்று கிழக்கு மாகாணசபையிலும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவுடன் இந்த சட்டமூலத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சிறிலங்காவின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, வடக்கு ஆளுனரின் ஒப்புதலைப் பெறுவதற்குத் தடைவிதிக்கக் கோரும் மனுவைச் சமர்ப்பித்துள்ளார்.

13வது திருத்தச்சட்டத்தின் மூலம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை இந்த திவிநெகும சட்டமூலம் பறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாணசபையின் ஒப்புதலின்றி இதனை நிறைவேற்றுவது, வடக்கு மக்களின் உரிமைகளை மீறும்செயல் என்று மாவை சேனாதிராசாவின் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email