SHARE
ஜ.நா உதவிச் செயலாளர் நாயகத்திற்கும் யாழ் மாவட்ட அரச அதிபருக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று மதியம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
கடந்த 3ஆம் திகதி இலங்கைகான விஜயத்தினை மேற்கொண்டு வந்த பிரதிநிதிகள் இன்றைய தினம்  யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர். வருகை தந்த இவர்கள்யாழ். மாவட்ட செயலகத்தில் அரச அதிபரைச் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.
அதன்படி யாழ் மாவட்ட அபிவிருத்தி தொடர்பிலும், இனிவருங் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி தொடர்பிலும் அவற்றைச் செயற்படுத்தும் போது எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பிலும் ஜ.நா பிரதிநிதிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது.
அத்துடன் உட்கட்டமைப்பினை அபிவிருத்தி செய்வதிலும் வீதி மற்றும் ஏனைய முக்கிய அபிவிருத்திகளுக்கு உள்ளுர் மற்றும் வெளியூரில் இருந்தும் வேலைத்திட்டங்களுக்கு ஆட்கள் இணைத்துக் கொள்ளப்பட்டமை தொடர்பிலும் அவர்களது பங்களிப்பு பலமாக உள்ளமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தில் பல்வேறு சமயத்தவர்கள் இருப்பதனால் அவர்களது ஒற்றுமை தொடர்பிலும் ஜ.நா பிரதிநிதிகளால் வினாவப்பட்டது. அதற்கு பதிலளித்த அரச அதிபர் யாழில் சர்வமத ஒன்றியத்தின் ஊடாக அவர்கள் தமது சேவைகளை முன்னெடுத்துச் செல்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் தற்போது மீள்குடியேற்றப்பட்ட 31 ஆயிரம் குடும்பத்தவர்களது வாழ்வாதாரம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன் அவர்களில் பெரும்பாலானவர்கள் வேலைகள் இன்றி இருப்பதனால் அவர்களுக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, விவசாய அமைச்சு, பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சுக்கள் ஊடாக விவசாயம், சிறு கைத்தொழில் போன்றவற்றை ஊக்குவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் யாழில் இடம்பெயர்ந்தவர்களுக்கான உதவிகளை அரசாங்கத்துடன் இணைந்து ஜ.நா செயற்படுவதற்கும் நன்றி தெரிவித்ததாகவும் ஐ.நா பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலினையடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அரச அதிபர் இவ்வாறான விடயங்களை தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் ஜ.நாவின் உதவிச் செயலாளர் நாயகம் அஜை சிப்பர், இலங்கைக்கான ஐ.நாவின் வதிவிடப்பிரதி நிதி சுபைனோ நண்டி, ஐ.நா பிரதிநிதிகளான ரசினா, இன்றிகோ , இலங்கையில் உள்ள ஜ.நா அதிகாரிகள் மற்றும் யாழ் மாவட்ட உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இதேவேளை யாழ். வந்த இவர்கள் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க, மனித உரிமைகள்  ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட இணைப்பாளர் ரி. கனகராஜ் உட்பட சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும்  பண்டத்தரரிப்பில் உள்ள பனைசார் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பண்ணையினையும் பார்வையிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Print Friendly, PDF & Email