இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நாடு கடந்த உறவினர்கள் சங்கம் பிரித்தானிய பிரதமருக்கு மனு கையளிப்பு

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவு நாளினையொட்டி பிரித்தானிய பிரதமர் கீர்ஸ்டாமருக்கு இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களுக்கான நீதியினை வழங்கக்கோரியும் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்க்ஷ , கோட்டாபாய ராஜபக்ஷ மற்றும் ஏனைய தமிழ் மக்களுக்கு எதிரான அநீதியிழைத்தவர்களுக்கான தடையினை நீடிக்குமாறும் சர்வதேச விசாரணையை ஆதரிக்கும் விடயங்களான ஐ.சி.சி பரிந்துரை மற்றும் ஐ.நா விசாரணையை ஆதரிக்க ஏதுவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் உண்மை நீதி மற்றும் அவர்களுக்கான இழப்பீடுகள் வழங்கப்படுவதை உறுதிசெய்யக்கோரியும் மனு கையளிக்கப்பட்டது .
இந்த மனுவை இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நாடு கடந்த உறவினர்கள் சங்கம் – ஐக்கிய ராஜ்ஜியம் (AEREDSL-UK) இனால் ஏற்பாடு செய்யப்பட்டபடி சிறிலங்கா இராணுவத்தின் திட்டமிடப்பட்ட சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் (AEREDSL-UK) ன் உறுப்பினர்கள் என கையொப்பமிடப்பட்ட குறித்த மனுவினை அனுசன் பாலசுப்ரமணியம் , ஆரங்கன் ஜெயக்குமார் , பவசுதன் உதயராசா , விதுசன் கணேச மூர்த்தி , மேகலக்சன் சந்திர பர்மன் , நிலானி சந்திர பர்மன் , ஆகிய செயற்பாட்டாளர்கள் கையளித்திருந்தனர்
மனுவின் முக்கிய கோரிக்கைகள் பின்வருமாறு
1. மகிந்தராஜபக்க்ஷ , கோட்டாபாய ராஜபக்ஷ மற்றும் ஏனைய தமிழ் மக்களுக்கெதிரான அநீதியிழைத்தவர்களுக்கான தடையை ஐக்கியராஜ்ஜியம் நீடிக்க வேண்டும்.
2. சர்வதேச விசாரணையை ஆதரிக்கும் விடயங்களான ஐ.சி.சி பரிந்துரை மற்றும் ஐ.நா விசாரணையை மேற்கொள்ள ஏதுவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
3.பாதிக்கப்ட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் உண்மை , நீதி மற்றும் அவர்களுக்கான இழப்பீடுகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் .
மனுவில் மேலும் பிரித்தானிய அரசாங்கம் ஏற்கனவே சில இலங்கை அதிகாரிகளுக்கு விதித்துள்ள தடைகளுக்கும் அண்மையில் இராணுவ தளபதி சவேந்திர சில்வாவிற்கான தடை விதித்தமை குறித்தான பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல அநீதியிழைத்த முக்கிய தலைவர்கள் இன்னும் தண்டனைக்கு உட்படுத்தப்படாத நிலையில் விரிவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக்கோரப்பட்டது.
இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நாடு கடந்த உறவினர் சங்கம் ஐக்கிய இராச்சியம் (AEREDSL-UK) இதுவரை ஐ.நா மற்றும் சர்வதேச விசாரணைகளுக்கு ஆதாரங்களை வழங்கி வரும் நிலையில் இந்த நடவடிக்கை முக்கய முயற்சியாக கருதப்படுகிறது .
