Home Blog Page 334

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தியா வாக்குறுதி!

இலங்கைத் தமிழர்கள் சமத்துவம், கண்ணியம், நீதி மற்றும் சுய மரியாதையுடன் வாழ்வதற்கு இந்திய அரசு பெருமுயற்சி எடுக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தியா உறுதியளித்துள்ளது.

இந்தியப் பயணம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

“இந்திய வெளிவிவகார அமைச்சின் அழைப்பின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஸ் பிறேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், விநாயகமூர்த்தி, பொன் செல்வராசா மற்றும் சுமந்திரன் ஆகியோர் இந்தியாவுக்கு நான்கு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டனர்.

கடந்த 10ம் நாள் புதுடெல்லி சென்ற இந்தக்குழு இன்று நாடு திரும்பியுள்ளது.

இந்தப் பயணத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவினர் – இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, எதிர்க்கட்சி தலைவி சுஸ்மா சுவராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளிவிவகார அமைச்சின் செயலர் ரஞ்சன் மத்தாய், வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலர் சிறிங்லா மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

பிரதமர் மன்மோகன் சிங்கை இந்தக் குழுவினர் சந்தித்தபோது, தமிழ் மக்களின் மறுவாழ்வுக்கும், வாழ்வை புதுப்பிப்பதற்கும் இந்திய அரசாங்கம் வழங்கி வருகின்ற உதவிகளுக்கு தமிழ் மக்களின் சார்பில் நன்றிகளை தெரிவிப்பதாக கூறினர்.

இதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முறைப்படி நடைமுறைப்படுத்துவதன் ஊடாக சிறிலங்கா மக்களுக்கிடையில் சமரசத்தை ஏற்படுத்த வேண்டுமென்றும், தேசியப் பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல்தீர்வொன்றை முன்வைக்க வேண்டுமென்றும் சிறிலங்கா அதிபரையும் அரசாங்கத்தையும் இந்திய அரசு வலியுறுத்தி வருவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆக்கபூர்வப்படுத்துவதில் சிறிலங்கா அரசு காட்டிவருகின்ற அசமந்தப் போக்கிற்கும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசில் தீர்வொன்றை வழங்குவதில் சிறிலங்கா அரசு காட்டிவருகின்ற பின்னடிப்பிற்கும் தாங்கள் பெரிதும் மனம் வருந்துவதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவினர் – இந்திய உயரதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

மேற்படி விடயங்களில் எந்தவித அர்த்தமுள்ள நடவடிக்கைகளையும் எடுக்காமல் சமத்துவம், கண்ணியம், நீதி மற்றும் சுயமரியாதையுடன் எதிர்காலத்தில் இலங்கைத் தமிழ் மக்கள் வாழ்வது கேள்விக்குறியானது என உணர்வதாகவும், எனவே இந்த விடயம் தொடர்பாக இந்திய அரசு கூடிய கவனம் எடுக்க வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேலும் வலியுறுத்தியுள்ளது.

இந்திய உயர்மட்டக் குழுவுடனான பேச்சுக்கள் சுதந்திரமாக நடைபெற்றன.

எதிர்காலத்தில் இலங்கை தமிழர்கள் சமத்துவம், கண்ணியம், நீதி மற்றும் சுய மரியாதையுடன் வாழ்வதற்கு இந்திய அரசு பெருமுயற்சி எடுக்கும் என்று உறுதியளித்துள்ளது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

13வது திருத்தத்தை உடனடியாக இல்லாதொழிக்க வேண்டும் – கோத்தாபய போர்க்கொடி!

இனிமேலும் தாமதிக்காமல் 13வது அரசியல் திருத்தத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்று சிறிலங்காப் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

“சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கம், களநிலவரங்களைக் கருத்தில் கொண்டு 13வது அரசியலமைப்புத் திருத்தத்தை இல்லாமல் செய்ய வேண்டும் அல்லது அதில் திருத்தங்களைச் செய்ய வேண்டும்.

13வது திருத்தத்தில் எதுவும் இல்லை. ஆனால், போருக்குப் பிந்திய அபிவிருத்தி முயற்சிகளுக்கு அது முட்டுக்கட்டையாக இருந்தது.

மக்கள் ஆதரவுத் திட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அதன் ஆதரவாளர்களோ தலையிடுவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது.

இதுபற்றிய எனது கருத்தை சிறிலங்கா அதிபரிடமும் அமைச்சர்களிடமும் வெளிப்படுத்தியுள்ளேன்.

சிறிலங்கா அரசுக்கு எழுந்துள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்தல்களை முறிடியப்பதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

13வது திருத்தச் சட்டமும், நோர்வேயின் ஏற்பாட்டில் 2002 பெப்ரவரியில் கையெழுத்திடப்பட்ட போர்நிறுத்த உடன்பாடும் ஒரே வகையானவை. இவை இரண்டினாலும் சிறிலங்கா மக்களுக்கு பயனில்லை.

இருந்த போதிலும், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட ஏனைய தரப்பினரின் நலன்களையே கருத்தில் கொண்டவை. பிரிவினைக்கு இந்த இரண்டுமே ஆதரவளிக்கின்றன.

சிறிலங்கா அரசாங்கம் உடனடியாகச் செயற்படத் தவறினால், தற்போதைய நெருக்கடிகள் நிச்சயமாக தேசிய பாதுகாப்பின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

ஏற்கனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், வெளிநாடுகளில் உள்ள அதன் ஆதரவாளர்களும் வடக்கில் இருந்து சிறிலங்கா இராணுவத்தை வெளியேற்ற அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

திவிநெகும சட்டமூலத்துக்கு எதிராக காட்டப்படும் எதிர்ப்பு என்று பார்ப்பது எமது தவறாக அமையும்.” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இராணுவப் புலனாய்வு அதிகாரி வேறு பிரிவுக்கு மாற்றம்!

சிறிலங்கா அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வாவினால் தாக்கப்பட்ட சிறிலங்கா இராணுவ அதிகாரி, இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ நீதிமன்றம் நடத்திய விசாரணையில் குற்றவாளியாகக் காணப்பட்டதை அடுத்தே, கொழும்பு தெற்கு புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பதிகாரியாக இருந்த மேஜர் சந்தன பிரதீப், வேறு படைப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் நடந்தபோது, மேஜர் சந்தன பிரதீப் பணியில் இருக்கவில்லை என்றும், தனது அதிகாரபூர்வ ஆயுதத்தை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாகவும், சூதாட்ட வர்த்தக முகவருக்கு பாதுகாப்பு அளித்ததாகவும் குறிப்பிட்ட இராணுவ அதிகாரி மீது சிறிலங்கா இராணுவ நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா அதிபருக்கும் நீதித்துறைக்குமான முரண்பாடுகள் ஏன்?

சிறிலங்காவின் நிறைவேற்று அதிபருக்கும் நீதித்துறைக்கும் இடையிலான முறுகல் நிலை மேலும் வலுத்துள்ளது. சுயாதீன நீதிமுறைமை மற்றும் சட்ட ஆட்சி ஆகியவற்றை அழிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக செப்ரெம்பரில் சிறிலங்கா நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ண குற்றம் சுமத்தியிருந்தார். நீதிச்சேவை ஆணைக்குழுவானது கடந்த 40 ஆண்டு கால வரலாற்றில் இவ்வாறானதொரு அறிக்கையை ஒருபோதும் வெளியிடவில்லை.

இவ் ஆணைக்குழுவானது நீதிபதிகள் மற்றும் ஏனைய நீதிமன்ற அதிகாரிகளை நியமித்தல், அவர்களை இடம்மாற்றுதல் மற்றும் அவர்களை பணியிலிருந்து நிறுத்துதல் போன்ற சேவைகளையே மேற்கொண்டு வருகின்றது. நீதிச்சேவை ஆணைக்குழுவின் தலைவராக பிரதம நீதிபதி நியமிக்கப்படுவதுடன் மற்றும் ஏனைய இரு உயர் நீதிமன்ற நீதிபதிகளும் இதில் உறுப்புரிமை பெற்றுள்ளனர்.

ஒக்ரோபர் 07 அன்று, தனது பிள்ளைகளை ரெனிஸ் வகுப்பு முடிந்ததும் அழைத்துச் செல்வதற்காக திரு.திலகரட்ண தனது காரில் காத்துக் கொண்டிருந்த போது அவர் மீது அடையாளந் தெரியாத ஆயுததாரிகள் தாக்குதல் நடாத்தினர். இரும்புக் கம்பிகளாலும் தமது கைமுட்டிகளாலும் இனந்தெரியாத ஆயுததாரிகள் திலகரட்ண மீது தாக்குதல் நடாத்தியிருந்தனர். சிறிலங்காவின் தலைநகரான கொழும்பிலுள்ள பொது வீதி ஒன்றில் வைத்து பட்டப்பகலில் இவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்கள் தொடர்பாக அறிக்கை வெளியிட்டபின்னர் தனது வாழ்வு ஆபத்தைச் சந்தித்துள்ளதாக திலகரட்ண செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ‘பல்வேறு வேறுபட்ட அதிகாரங்களைக்’ கொண்டுள்ளவர்களால் நீதிச் சேவை ஆணைக்குழுவானது அச்சுறுத்தப்பட்டுள்ளதுடன், அதிலுள்ளவர்களால் தலையீடு செய்யப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. நீதித்துறை மற்றும் நீதிச் சேவை ஆணைக்குழுவின் சுயஅதிகாரத்தை பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை ‘தொடர்புபட்ட தரப்புக்கள்’ இன்னமும் மதிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கான சான்றுகள் தம்மிடம் உள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கை தொடர்பாக குழப்பம் நிலவிய வேளையில், இது தொடர்பில் சிறிலங்கா அதிபர் சில விடயங்களைத் தெரியப்படுத்தியிருந்தார். அதாவது அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நீதிபதிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காகவும் நீதித்துறையின் ஏனைய செலவுகளுக்கும் எவ்வளவு தொகையை ஒதுக்குவது எனத் தீர்மானிப்பதற்காகவே தனது செயலாளர் நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு அழைப்பு விடுத்ததாக மகிந்த ராஜபக்ச ஊடகங்களிடம் தெரிவித்தார். ராஜபக்ச குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளதாக அறியப்படும் மாவட்ட நீதிபதி ஒருவரை தற்காலிகமாக பதவியிலிருந்து நீக்கியமை தொடர்பாக விசாரணை செய்வதற்காகவே ஆனைக்குழுவை சிறிலங்கா அதிபர் அழைத்திருந்ததாக மூத்த சட்டவாளர்கள் கூறுகின்றனர்.

சிறிலங்காவின் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கும் சிறிலங்கா அதிபருக்கும் இடையிலான உறவில் ஏற்கனவே விரிசல் ஏற்பட்டிருந்தது. சிராணி பண்டாரநாயக்கவின் கணவரான பிரதீப் காரியவம்சம் சிறிலங்கா அரசுக்குச் சொந்தமான தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக பொறுப்பு வகித்த வேளையில் இடம்பெற்ற சந்தேகத்திற்குரிய பங்குப் பரிமாற்றம் தொடர்பில் தற்போது அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகின்ற இந்நிலையில் சிறிலங்காவின் பிரதம நீதியரசருக்கும் சிறிலங்கா அதிபருக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவானது சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளது. ஊழல் மோசடிகள் தொடர்பான உச்ச முறையீடுகளுக்கு தீர்வு வழங்குவதில் ஊழல் மோசடி ஆணைக்குழு மிக மந்தகரமாக செயற்பட்டு வருகின்ற போதிலும், பிரதீப் காரியவம்சம் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டை மட்டும் இவ் ஆணைக்குழு மிக வேகமாக விசாரித்துள்ளது. சிறிலங்காவின் பிரதம நீதியரசராக மனைவி பதவி வகிக்கும் போது சிறிலங்கா அரசுக்குச் சொந்தமான வங்கி ஒன்றின் தலைவராக திரு.காரியவம்சம் எவ்வாறு பதவி வகித்திருக்க முடியும் என ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

திலகரட்ண மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அனைத்துலக சமூகமும் கண்டித்துள்ளது. இதனுடன் தொடர்புபட்டவர்களை நீதியின் முன் நிறுத்துமாறும், நீதிபதிகள் மீதான தாக்குதல்கள் மற்றும் தலையீடுகள் என்பன நிறுத்தப்படுவது உறுதிசெய்யப்பட வேண்டும் எனவும் அனைத்துலக நீதிபதிகள் ஆணைக்குழு சிறிலங்கா அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்காவிலுள்ள மாவட்ட, உயர் நீதிமன்ற நீதிபதிகள் இரு வாரகால பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான சட்டவாளர்களும் ஆதரவாளர்களும் பங்குபற்றினர். ஏற்கனவே நீதித்துறைக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையிலான முறுகல் நிலை உச்சமடைந்துள்ள நிலையில், சிறிலங்கா உயர் நீதிமன்றம் அரசியலமைப்பை மீறியுள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ச ஒக்ரோபர் 09 அன்று குற்றம் சாட்டியுள்ளதானது இம்முறுகல் நிலையை மேலும் தீவிரமாக்கியுள்ளது.

உயர் நீதிமன்றமானது தனது தீர்ப்பை சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பாது நாடாளுமன்ற செயலருக்கு நேரடியாக அனுப்பியதன் மூலம் அரசியலமைப்பை மீறியுள்ளதாக சிறிலங்கா அதிபரின் சகோதரர்களில் ஒருவரான சமல் ராஜபக்ச மேலும் குற்றம் சுமத்தியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதே.

கூட்டமைப்புக் குழு இன்று சிவ்சங்கர் மேனனைச் சந்திக்கிறது!

இந்திய அரசின் அழைப்பின் பேரில் புதுடெல்லி சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, இன்று இரண்டாவது நாளாகவும் அங்கு பேச்சுக்களை நடத்தவுள்ளது.

நேற்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா ஆகியோரைச் சந்தித்த கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளனர்.

அத்துடன் இந்திய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளுடனும் பேச்சுக்கள் இடம்பெறும் என்று தெரியவருகிறது.

பிரபாகரனைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டார் சொல்ஹெய்ம்!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நோக்கங்களைப் புரிந்து கொள்வதற்கு நோர்வேயின் சமாதானத் தூதுவராக இருந்த எரிக் சொல்ஹெய்முக்கு 30 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

“சொல்ஹெய்ம் உயர்நிலைப் பங்கு வகித்த போதிலும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சிந்தனையையும் அவரது இலக்குகளையும் புரிந்து கொள்ளத் தவறிவிட்டார்.

போரின் இறுதிக்கட்டத்தில், போர்வலயத்தில் சிக்கியிருந்த தன்னையும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏனையவர்களையும் கடல்வழியாக மீட்பதற்கு அனைத்துலக சமூகம் முன்வைத்த யோசனையை பிரபாகரன் நிராகரித்து விட்டார் என்று சொல்ஹெய்ம் கூறியுள்ளார்.

இது பிரபாகரனின் நோக்கங்களையும் அடிப்படை இலக்குகளையும் சிறிலங்கா அரசு நன்றாகவே புரிந்து வைத்திருந்தது என்பதை நிரூபித்துள்ளது” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

செர்பேனிக்கா, சிரியாவை விடவும் ஈழப்போரில் கொல்லப்பட்டோரின் தொகை அதிகம்’ – பிரான்செஸ் ஹரிசன்!

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் சிறிலங்காவில் சமாதானத்தை நிலைநிறுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிறிலங்காவில் யுத்த வெற்றி என அழைக்கப்படும் இந்தப் போரின் போது பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் தமது உயிர்களை விலையாகக் கொடுத்துள்ளதாக ஊடகவியலாளரான பிரான்செஸ் ஹரிசன் அண்மையில் எழுதி வெளியிட்ட ‘மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன’ என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“யுத்தத்தில் பங்கு கொண்ட இரு தரப்புக்களாலும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பல பத்தாயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள், வைத்தியர்கள், விவசாயிகள், மீனவர்கள், மதகுருமார்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் அகப்பட்டனர். போரில் அகப்பட்ட தமிழ் மக்கள் பட்ட துன்பங்கள் தொடர்பாக வெளியுலகம் அறிந்துகொள்ளாத வகையில் சிறிலங்கா அரசாங்கம் ஊடகங்களின் ஊடாக இருட்டடிப்பைச் செய்தது” என ஹரிசன் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தென்னாசியா, தென்கிழக்காசியா, ஈரான் போன்ற இடங்களில் செய்தியாளராகக் கடமையாற்றிய அனுபவம் மிக்க பி.பி.சி செய்தியாளரான ஹரிசன் 2000 தொடக்கம் 2004 வரை சிறிலங்காவில் பி.பி.சி செய்தியாளராக பணிபுரிந்தார். அத்துடன் அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரதான செய்தியாளராக கடமையாற்றிய அதேவேளையில், ‘மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன’ என்ற புத்தகத்தையும் எழுதிவெளியிட்டுள்ளார். இவற்றை விட ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் வருகைதரு ஆய்வாளராகவும் இவர் உள்ளார்.

பிரான்செஸ் ஹரிசனுடன் இந்தியாவை தளமாகக்கொண்ட Rediff.comஇணையத்தளத்தின் விக்கி நஞ்சப்பா மேற்கொண்ட நேர்காணலினை ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

அதன் முழு விபரம் வருமாறு:

கேள்வி: தற்போது நீங்கள் எழுதிய புத்தகம் தொடர்பில் எவ்வாறான கருத்துக்களைப் பெற்றுள்ளீர்கள்?

பதில்: யுத்தத்தில் பங்கு பற்றிய இரு தரப்புக்களிடமிருந்தும் இவ்வெளியீடு தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இப்புத்தகத்தை வாசித்த உலகெங்கும் பரந்து வாழும் சாதாரண தமிழ் மக்கள் தமது சமூகம் சந்தித்த அனுபவங்களை வெளிப்படுத்தியதற்காக எனக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

லண்டனில் இப்புத்தகத்தை வெளியிட்ட போது, அதில் கலந்து கொண்டிருந்த தமிழ் மகன் ஒருவர் என்னை நோக்கி ஒடி வந்தார். அவரது கண்களில் கண்ணீர் நிரம்பியிருந்தது. அவர் என்னை ஆரத்தழுவியவாறு ‘நன்றி’ எனக் கூறிவிட்டு மீண்டும் அழுதபடி நடந்து சென்றார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மற்றும் புலிகளின் மூத்த தலைவர் பொட்டு அம்மான் ஆகியோர் தவிர ஏனைய புலி உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பை வழங்குவது தொடர்பில் நோர்வே 2009ன் ஆரம்பத்தில் திட்டம் ஒன்றைக் கொண்டிருந்தது. இது தொடர்பாக நான் எனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

சிறிலங்கா அரசாங்கம் மீது அனைத்துலக சமூகத்தால் வழங்கப்பட்ட அழுத்தமானது ஏப்ரல் மற்றும் மே 2009ம் ஆண்டைவிட ஜனவரி 2009ல் அதிகமாக இருந்தது. புலிகள் சமரச முயற்சிகளைத் தட்டிக்கழித்தனர்.

தக்க தருணத்தில் புலிகள் அமைப்பு சமரசத்தை ஏற்றுக் கொண்டு சரணடைந்திருந்தால் பல ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும் அத்துடன் யுத்தத்தின் இறுதியில் இடம்பெற்ற யுத்த மீறல்களும் தடுக்கப்பட்டிருக்கும் என்பது எனது கருத்தாகும். பல ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் யுத்தம் புரிவதை மட்டுமே புலிகள் தெரிவாகக் கொண்டிருந்ததால் மிகக் கசப்பான விளைவை அது ஏற்படுத்தியது.

கேள்வி: தமிழ்ப் புலிகளுடனான யுத்தத்தின் போது சிறிலங்கா இராணுவம் எல்லை மீறிச் சென்றது என நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: ஐ.நா வல்லுனர் குழுவால் தயாரிக்கப்பட்ட அறிக்கையில், சிறிலங்கா இராணுவமானது யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டதாகவும், மனிதாபிமானத்திற்கு எதிரான மீறல்களைப் புரிந்ததுடன், அனைத்துலக போர்ச் சட்டத்தை மீறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. புலிகளை அழிக்கும் யுத்தத்தில் பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. தற்போது புலிகள் அழிக்கப்பட்டு விட்டனர். ‘பயங்கரவாதப் பிரச்சினை’ முடிவுக்கு வந்துவிட்டதாக சிறிலங்கா அரசாங்கம் நினைக்கிறது. ஆனால் யுத்தம் தொடங்குவதற்கு அடிப்படையாக இருந்த பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை. இதனை முதன்மைப்படுத்துவதில் சிறிலங்கா அரசாங்கம் தவறிழைத்துள்ளது.

கேள்வி: இவ்வாறான யுத்தக் குற்றங்களைத் தடுப்பதில் இந்தியா எத்தகைய பங்களிப்பை வழங்கியிருக்கும்?

பதில்: சிறிலங்கா மீது இந்தியாவானது மிகப் பெரிய அரசியல் செல்வாக்கையும் ஆர்வத்தையும் கொண்டுள்ளது என்பது தொடர்பில் சிறிது சந்தேகம் நிலவுகிறது. சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் போது பல ஆயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்ட வேளையில், இந்தியாவிலுள்ள அரசியல்வாதிகள் தமிழ்மக்களுக்கு யுத்தத்தின் பின்னான அதிகாரப் பகிர்வு வழங்கப்படுவது தொடர்பாக பேசிக் கொண்டிருந்தனர். சிறிலங்காவின் யுத்த வலயத்தின் என்ன நடக்கின்றது என்பதை இந்தியா மிக நெருக்கமாக அவதானிக்கவில்லை என்பதையே இந்தச் செய்தி எடுத்துக் காட்டுகிறது. இதற்கு மாறாக விடுதலைப் புலிகளுக்கு பின்னான சிறிலங்காவின் எதிர்காலம் தொடர்பில் இந்தியா கவனம் செலுத்தியது.

சிறிலங்காவில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் இந்தியா குருட்டுத்தனமாக நடந்து கொண்டுள்ளது என்பதையே இது எனக்கு காண்பிக்கிறது. இந்தியா மட்டுமல்ல மேற்குலக நாடுகள் பல சிறிலங்காவில் மக்கள் கொல்லப்பட்டது தொடர்பில் கண்டுகொள்ளாது நடந்துள்ளன. சிறுபான்மைத் தமிழ் மக்களின் வாழ்வை முன்னேற்றி, நீதி வழங்குவதற்காக இந்தியாவானது சிறிலங்கா மீது அழுத்தம் கொடுக்கும் என நான் நம்புகிறேன்.

கேள்வி: போரிலிருந்து மீண்டவர்களுக்கு சிறிலங்கா அரசாங்கமானது போதியளவு புனர்வாழ்வு அளிக்கிறதா?

பதில்: 2009ல் சிறிலங்கா இராணுவம் யுத்தக் குற்றங்களைப் புரிந்ததை தென் சிறிலங்காவில் வாழும் பெரும்பாலான மக்கள் மறுக்கின்றனர். மறுபுறத்தில், விடுதலைப் புலிகள் தமது சொந்த மக்கள் மீது அதாவது யுத்தத்தில் தோல்வியைச் சந்திப்பது நிச்சயம் எனத் தெரிந்த போதிலும் பலாத்காரமாக இளையோரைப் படையில் இணைத்தமை போன்ற பல்வேறு மீறல்களைப் புரிந்தனர் என்பதை பெரும்பாலான தமிழ் மக்கள் நிராகரிக்கின்றனர்.

சிறிலங்காவில் வாழும் சிங்கள, தமிழ் மக்களிடையே தத்தம் இனம் சார்ந்த உணர்வு நிலை அதிகம் காணப்படுவதால் இவ்வாறான பிரச்சினை ஒன்றுக்கு தீர்வு காண்பதென்பது மிகக் கடினமான ஒன்றாகும் என நான் கருதுகிறேன். யுத்தம் தொடர்பில் தமிழ் மற்றும் சிங்களவர்கள் இருவேறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருப்பதால் பொதுவான நிலைப்பாடொன்றை இரு சமூகத்தவர்களையும் ஏற்றுக் கொள்ளச் செய்வதென்பது இலகுவானதன்று.

சிறிலங்காவில் புனர்வாழ்வுத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் அதேவேளையில், யுத்தத்தில் தப்பிப் பிழைத்த ஆயிரக்கணக்கானோர் தென்னிந்தியா மற்றம் தென்கிழக்காசியா ஆகியவற்றின் ஊடாக வேறு நாடுகளுக்குத் தப்பிச் செல்கின்றனர். சிலர் ஐரோப்பா, அமெரிக்கா அல்லது அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் தப்பிச் செல்கின்றனர். இவ்வாறு செல்கின்றவர்களுக்கு வெளிநாடுகளில் எந்தவொரு புனர்வாழ்வுத் திட்டங்களும் உத்தியோக பூர்வமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இவர்கள் அடிப்படையில் தேவையான உதவிகளைக் கூடப் பெற்றுக் கொள்ள முடியாதவர்களாகக் காணப்படுகின்றனர்.

யுத்தத்தில் தப்பிப் பிழைத்த மக்களின் மனங்களை ஆற்றுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் கூட மேற்கொள்ளப்படவில்லை. யுத்தத்தில் இறந்தவர்களின் ஆத்மா சாந்திக்காக மேற்கொள்ளப்படும் மதச் சடங்குகளைக் கூட வெளிப்படையாகச் செய்ய முடியாத நிலையில் சிறிலங்காவில் வாழும் தமிழர்கள் உள்ளனர். முள்ளிவாய்க்காலின் ஊடாகச் சென்ற மக்கள் அழிக்கப்பட்டனர். இதிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களால் இரவில் நித்திரை கூடக் கொள்ள முடியவில்லை. அவர்கள் தமது அன்புக்குரியவர்களை காப்பாற்ற முடியாமல் போனதால் குற்ற உணர்வில் தவிக்கின்றனர். இவர்களுக்கு உளஆற்றுப்படுத்தல் முக்கியமானது. அத்துடன் பாதுகாப்பு, தொழில் மற்றும் வீடுகள் போன்ற அடிப்படைத் தேவைகளும் பூர்த்தியாக்கப்பட வேண்டும்.

கேள்வி: சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா வல்லுனர்களால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை ஏதாவது பெறுபேற்றை ஏற்படுத்தும் என நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: 2011ல் ஐ.நா வல்லுனர் குழுவால் வெளியிடப்பட்ட சிறிலங்கா தொடர்பான போர்க் குற்ற விசாரணை அறிக்கை சிறந்த ஆவணமாக உள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் கூட்டப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் மேற்கொள்ளப்பட்ட சிறிலங்கா தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றுவதற்கான வாக்களிப்பில் ஐ.நா விசாரணை அறிக்கை பங்களித்துள்ளது. பொதுவாக நோக்கில் ஐ.நா விசாரணை அறிக்கை போதுமான விளைவை ஏற்படுத்திய போதிலும், குறிப்பாக நோக்கில் இதன் பங்களிப்பு போதியதாக இல்லை என்பது வெளிப்படையானது.

சிறிலங்கா மீது மேலும் அழுத்தம் பிரயோகிக்கப்படவேண்டும். இந்த நூற்றாண்டில் அதிக இரத்தம் சிந்தப்பட்ட இடங்களில் ஒன்றாக முள்ளிவாய்க்கால் உள்ளது. ஆனால் இது தொடர்பில் பொறுப்புக் கூறவேண்டியவர்கள் இன்னமும் பொறுப்பளிக்க முன்வரவில்லை.

கேள்வி: தங்களது கருத்துப் படி, சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை என்ன?

பதில்: கொல்லப்பட்டவர்கள் தொடர்பான துல்லியமான எண்ணிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை. செய்மதி மூலமாக கிடைக்கப் பெற்ற ஒளிப்படங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் தடயவியல் மூலம் சிறிலங்காவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஓரளவு மதிப்பிடப்பட்டுள்ளது. சிறிலங்காவில் 2009ல் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை 75,000 வரை இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளதாக வெள்ளியன்று இடம்பெற்ற எனது புத்தக வெளியீட்டில் கலந்து கொண்ட ஐ.நா வல்லுனர்களில் ஒருவரான ஜஸ்மின் சூக்கா தெரிவித்திருந்தார்.

ஐ.நா வல்லுனர் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,000 என குறிப்பிடப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் உள்ளடக்கப்படாத 147,000 மக்களுக்கும் என்ன நடந்தது என மன்னார் மறை மாவட்ட ஆயர் கேள்வி எழுப்பியிருந்தார். ஆகவே இங்கு குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கைகளுக்குள் மிகப் பெரிய வேறுபாடு காணப்படுகின்றது. சிறேபிறேனிக்காவில் (1995ல் பொஸ்னியாவில் இடம்பெற்ற யுத்தம்) இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் தற்போது சிரியாவில் இடம்பெறும் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களை விட சிறிலங்காப் போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பது நிரூபணமாகிறது.

கேள்வி: இந்த விடயமானது பூகோளத்தின் கவனத்தை போதியளவில் ஈர்த்துள்ளதா? இந்த விடயத்தில் நீதியை நிலைநாட்டுவதற்காக அனைத்துலக சமூகம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்?

பதில்: அனைத்துலக ரீதியில் மறக்கப்பட்ட ஒரு விடயமாக சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தம் காணப்படுகிறது. ஐரோப்பாவில் மட்டும் தமிழர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர். புலம்பெயர் தமிழர் சமூகமானது பரந்த இறையாண்மை அமைப்பொன்றைக் கட்டியெழுப்பத் தவறிவிட்டது. இங்கு என்ன நடந்தது என்பது அனைத்துலக சமூகம் உற்று அவதானிக்க வேண்டும். ஐ.நா வல்லுனர் குழுவின் அறிக்கை, எனது புத்தகம் போன்றவற்றை வாசிப்பதுடன், கொலைக் களங்கள் என்ற சனல் 04 தொலைக்காட்சி சேவையால் வெளியிடப்பட்ட சிறிலங்காப் போர் தொடர்பான காணொலியையும் அனைவரும் பார்க்க வேண்டும். அத்துடன் சிறிலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கை போன்றவற்றை வாசித்து சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தம் தொடர்பில் நீங்கள் தெளிவுபெறவேண்டும்.

சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐ.நா வல்லுனர் குழுவால் விடுக்கப்பட்ட கோரிக்கையை தனிப்பட்ட ரீதியாக நான் ஏற்றுக் கொள்கிறேன். இதுவே சிறிலங்காவில் உண்மையைக் கண்டறிந்து சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு வழியாக உள்ளது.

கேள்வி: ராஜபக்ச ஆட்சிக்கெதிராக தமிழ்நாடு முழுவதிலும் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சிறிலங்காவுடன் வர்த்தக சார் உறவுகளைப் பேணக்கூடாது என தமிழ்நாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் சிறிலங்காத் தமிழர் விடயத்தில் உதவும் என நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: நான் ஊடகவியலாளரே தவிர அரசியல்வாதி அல்ல. இது அரசியல்வாதி ஒருவரின் கொள்கை தொடர்பில் கேட்கப்பட வேண்டிய வினாவாகும்.

கேள்வி: சிறிலங்காவில் மீண்டும் தமிழர் போராட்டம் வெடிப்பதற்கான வாய்ப்பு உள்ளதா?

பதில்: ஆம், ஆனால் உடனடியாக இல்லை. நான் எனது புத்தகத்திற்காக நேர்காணல் மேற்கொண்ட எந்தவொரு புலி உறுப்பினர்களும் உடனடியாகப் போர் தொடங்க வேண்டும் எனக் கூறவில்லை.

தமிழ் மக்களின் அவாக்களை சிறிலங்கா அரசாங்கம் ஏற்று அவற்றை நிறைவேற்றாவிட்டால், இது அடுத்த தலைமுறையினர் ஆயுதப் போராட்டம் ஒன்றை மீண்டும் தொடங்க காலாக அமையலாம். சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை முன்வைக்காவிட்டால், அடுத்த தலைமுறை மிக மோசமாக எழுச்சி கொள்ளும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

பிரபாகரன் சிறுவனாக இருந்த போது தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கலகங்களைக் கேள்விப்பட்டார். இதுவே பிரபாகரன் ஆயுதம் தூக்க தூண்டுதலாக இருந்தது. இதேபோன்று முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பாக அடுத்த தலைமுறையைச் சேர்ந்த சிறார்கள் கேள்விப்பட்டால் என்ன நடக்கும் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்கமுடியுமா? சுற்றுவட்டம் போன்று இடம்பெறும் பழிவாங்கல்களும், வன்முறைகளும் நிறுத்தப்பட வேண்டும்.

கேள்வி: தமிழர்களும் சிங்களவர்களும் தமது பிடிவாதப் போக்கை கைவிட்டு இரு தரப்பும் தமக்கிடையே மீளிணக்கப்பாட்டை உருவாக்க முடியுமா?

பதில்: முதலில் உண்மை என்பது மதிக்கப்படாதவிடத்து மீளிணக்கப்பாடு சாத்தியமில்லை. ஏதாவது பிழைகள் நடந்திருந்தால் தவறைச் செய்தவர்கள் தமது தவறுகளை ஏற்றுக் கொள்ள முன்வரவேண்டும். ஆனால் தற்போது இதற்கு எதிர்மாறான செயற்பாடுகளே நடைபெறுகின்றன. பிளவுகள் இருக்கும் வரை மீளிணக்கப்பாடுசாத்தியப்படமாட்டது.

சிறிலங்கா அதிபர் மக்களின் நம்பகத்தை இழந்து வருகிறார் – மீள்குடியேற்றமும் பொய்களும்!

அண்மைக் காலத்தில் சிறிலங்காவில் குறிப்பிடத்தக்க சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதாவது சிறிலங்காவின் உயர் கல்வி தொடக்கம், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை, நகர்ப்புற ஏழைகளைக் குடியேற்றுவது தொடர்பில் சுதந்திரமாக எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையும், இவை தொடர்பில் சிறிலங்கா அமைச்சர்கள் மற்றும் பேச்சாளர்களால் பல்வேறு வகையான அறிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளமையும் முக்கியமானதாகும்.

இவ்வாறு அறிக்கைகள் விட்ட அனைத்து அரசியல்வாதிகளும் ஜனநாயகம், நல்லாட்சி, மீளிணக்கப்பாடு, சமாதானம் மற்றும் அபிவிருத்தி போன்ற பதங்களையே பயன்படுத்தியுள்ளனர். மக்கள் எளிதில் நம்பும் வகையிலேயே இவ்வாறான அறிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இவர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான உண்மையான அரசியல் உறுதிப்பாடு சிறிலங்காவில் தற்போது நடைமுறையிலில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.

இதனால் சிறிலங்கா அமைச்சர்கள் மற்றும் பேச்சாளர்களால் விடுக்கப்படும் அறிக்கைகள் எப்போதும் தோல்வியிலேயே முடிவடைகின்றன. நாட்டிலுள்ள அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்களால் வேண்டுமென்றே மேற்கொள்ளப்படும் குளறுபடிகள், வன்முறைகள், தவறான அரசியற் கையாளுகை போன்றன சிறிலங்காவிலுள்ள சமூகங்களை வெறுமையாக்குவதுடன் தொடர்ந்தும் ஜனநாய வடிவிலான எந்தவொரு அரசியல் அமைப்பையும் வலுவிழக்கச் செய்கின்றன.

உள்நாட்டில் இடம்பெயர்ந்த அனைத்து மக்களையும் மீளக் குடியேற்றிவிட்டதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு செப்ரெம்பர் 25 அன்று அறிவித்திருந்தது. இதற்கான அனைத்துப் பணிகளும் பூர்த்தியாகிவிட்டதாக பாதுகாப்பு அமைச்சின் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

“இறுதியாக குடியேற்றப்படாதிருந்த 361 குடும்பங்களைச் சேர்ந்த 1186 பேர் செப்ரெம்பர் 24 அன்று அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றப்பட்டனர். மே 2009ல் சிறிலங்கா இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான மீட்பு நடவடிக்கையின் மூலம் மீட்கப்பட்ட 295,000 இற்கும் மேற்பட்ட மக்களை மிகக் குறுகிய காலத்தில் அதாவது மூன்று ஆண்டுகளுக்குள் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதில் வெற்றி பெற்றுக் கொண்ட சிறிலங்காவானது மிகக் குறுகிய காலத்தில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றிய முதலாவது உலக நாடாக உள்ளது” என சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தின் புதிய முகப்பில் புதிய வீடுகள் மற்றும் தொழில் செய்வதற்கான தயார் நிலையில் காணப்படும் மக்களின் ஒளிப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இப்புதிய வீடுகளின் ஒளிப்படங்கள் சிறிலங்காவின் எந்த இடத்திலும் எடுக்கப்பட்டிருக்கலாம். இடம்பெயர்ந்த மக்களைக் குடியேற்றியதானது தன்னிச்சையாக, சுயவிருப்போடு மேற்கொள்ளப்பட்ட ஒன்றல்ல. மெனிக்பாம் முகாமிலிருந்த மக்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றக் கோரி மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களை அடுத்தே சிறிலங்கா அரசாங்கம் இவர்களை மீள்குடியேற்றியுள்ளது.

“மெனிக்பாம் முகாமில் எஞ்சியுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் மரிற்றம்பற்று பிரதேச செயலர் பிரிவைச் சேர்ந்த கேப்பாப்புலவு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் செப்ரெம்பர் 24 அன்று மீள்குடியேற்றப்படுவர் என செப் 22 அன்று மெனிக்பாம் முகாமில் இடம்பெற்ற சந்திப்பில் சிறிலங்கா இராணு மற்றும் அரசாங்க அதிகாரிகள் மக்களிடம் அறிவித்திருந்தனர்” என Groundviews ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ள றுக்கி பெர்னாண்டோ மற்றும் நிக்கோல இமானுவேல் ஆகியோரால் வழங்கப்பட்ட சுயாதீன செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்ரெம்பர் 24 அன்று மெனிக்பாம் முகாமில் எஞ்சியிருந்த அனைத்து மக்களும் வற்றாப்பளை மகா வித்தியாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அடுத்த நாள் அதாவது செப் 25 அன்று வற்றாப்பளை-புதுக்குடியிருப்பு வீதியிலுள்ள சீனியமோட்டை என்ற காட்டுப் பகுதியில் இறக்கிவிடப்பட்டனர். இதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் வேறு மூன்று கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களும் சீனியமோட்டை காட்டுப் பகுதியில் இறக்கிவிடப்பட்டிருந்தனர்.

இடம்பெயர்வதற்கு முன்னர் தாம் பயிர்செய்கை மற்றும் விவசாயத்தில் ஈடுபட்டதாகவும், தமது கிராமத்தில் சிறப்பான வாழ்வொன்றைத் தாம் வாழ்ந்ததாகவும் கேப்பாப்பிலவைச் சொந்த இடமாகக் கொண்ட மக்கள் பெர்னாண்டோ மற்றும் நிக்கோல ஆகிய இருவரிடமும் தெரிவித்தனர். கேப்பாப்பிலவைச் சேர்ந்த 110 குடும்பங்கள் சீனியமோட்டை முகாமில் இடைத்தங்க வைக்கப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இத்தகவலை சிறிலங்காவிலுள்ள ஐ.நா நிறுவனங்களின் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

கேப்பாப்பிலவின் மொத்த நிலப்பரப்பு 1212 ஏக்கராகும். இதில் 528 ஏக்கர் நிலப்பரப்பு மக்கள் வாழ்வதற்கு உகந்த நிலப்பரப்பாகவும், 684 ஏக்கர் நிலப்பரப்பு விவசாயம் செய்வதற்கு உகந்த நிலமாக காணப்படுவதாக பிறிதொரு தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் வாழ்ந்த பெரும்பாலான காணிகள் மற்றும் சில விவசாயக் காணிகளின் சட்டபூர்வ காணி உறுதிகளை பொது மக்கள் வைத்திருக்கின்றனர். தமது சொந்த நிலங்களில் சிறிலங்கா இராணுவத்தினர் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு பயன்களைப் பெறுவதாக மக்கள் சிலர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கேப்பாப்பிலவில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் எவ்வளவு குடும்பங்கள் வாழ்ந்தனர் என்பது தொடர்பாகவும் மற்றும் இவர்களில் எத்தனை குடும்பங்கள் தற்போது தமது சொந்தக் காணிகளுக்கு திரும்பி வந்துள்ளனர், இவர்களில் எத்தனை குடும்பத்தவர்கள் காணி உறுதிகள் போன்ற ஆவணங்களை வைத்திருக்கின்றனர் என்பது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் எந்தவொரு தகவலையும் வெளிப்படுத்தவில்லை.

மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவது தொடர்பில் பிரச்சினைகள் நிலவுகின்றமை தெளிவாக உள்ள நிலையில், சிறிலங்கா இராணுவத்தினர் அல்லது விமானப் படையினர் மக்களின் காணிகளை ஆக்கிரமிக்கின்றனர் என்ற பிரச்சினையும் முன்வைக்கப்பட்டுள்ளது. கேப்பாப்புலவு வீதியோரத்தை அண்டிய மிகப் பெரிய நிலப்பரப்பில் முகாங்களை அமைத்துள்ள சிறிலங்கா விமானப்படையினர் அந்நிலப்பரப்பில் ‘இந்த நிலம் விமானப் படையினருக்குச் சொந்தமானது’ என பலகைகளில் அறிவித்தல் எழுதியுள்ளதை 2010லிருந்து எம்மால் பார்க்க முடிகிறது.

சிறிலங்கா விமானப் படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களின் காணி உறுதிகளை மக்கள் வைத்திருக்கின்றனர். இடம்பெயர்வதற்கு முன்னர் ஐந்து ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளைக் கொண்டிருந்த மக்களும் உள்ளனர். ஆனால் தற்போது பெருமளவு நிலங்கள் இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மக்கள் கால் ஏக்கர் தொடக்கம் மூன்று ஏக்கர் வரையான நிலப்பரப்புக்களை மட்டுமே கொண்டுள்ளனர். இவற்றுள் மக்கள் வாழ்ந்த நிலங்கள் மற்றும் விவசாய நிலங்கள் என்பன உள்ளடங்குகின்றன. சில காணிகளின் உறுதிகளை வைத்திருக்காத மக்கள் பலர் குறிப்பிட்ட ஒரு காணியில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாழந்துள்ளதுடன், பயிச்செய்கையிலும் ஈடுபட்டிருந்தனர்.

மெனிக்பாம் முகாமிலிருந்து ஏற்றப்பட்ட மக்கள் எந்தவொரு வசதி வாய்ப்புக்களும் இல்லாத சீனியாமோட்டை காட்டுப் பகுதியின் நடுவில் இறக்கி விடப்பட்டனர். இடம்பெயர்ந்த மக்கள் தாமாகவே இக்காட்டை துப்பரவாக்கி தற்காலிக கொட்டகைகளை அமைத்தனர். அங்கே மின்சாரம், நீர் மற்றும் மலசலகூட வசதிகள் காணப்படவில்லை. பாதிக்கப்பட்ட, இடம்பெயர்ந்த கேப்பாப்புலவு வாழ் மக்கள் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து செப்ரெம்பர் 24 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது தமது சொந்த இடங்களில் தாம் மீள்குடியேற்றப்பட வேண்டும், தாம் இயல்பான வாழ்வை வாழ்வதற்குத் தேவையான வீடுகள் மற்றும் காணிகள் என்பன மீளத் திருப்பித் தரப்படவேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.

தமக்கான உடைமைகள் மற்றும் மனித உரிமைகள் என்பன மதிக்கப்பட வேண்டும் என கேப்பாப்பிலவைச் சேர்ந்த உள்ளுரில் இடம்பெயர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ள அதேவேளையில், இந்த மக்கள் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவர் எனவும் ஆனால் இதற்கான காலக்கெடு ஒன்றை நிர்ணயிக்க முடியாது எனவும் சிறிலங்கா மீள்குடியேற்ற அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மறுபுறத்தே, “இந்த 346 இடம்பெயர்ந்த மக்களுக்கும் பிறிதொரு மீள்குடியேற்றம் இனி இடம்பெறமாட்டாது எனவும், சீனியமோட்டையே இவர்களின் சொந்த இடம் எனவும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார்” என கேப்பாப்புலவு மக்களை நேரடியாகச் சென்று சந்தித்த ஊடகவியலாளரான கண்டுநேற்றி தெரிவித்துள்ளார்.

சீனியமோட்டைப் பகுதியில் இடம்பெயர்ந்த மக்களுக்கான வசதி வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, அங்கு இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகம் காணப்படுவதாகவும் கண்டுநேற்றி தெரிவித்துள்ளார். “நாங்கள் சீனியமோட்டைப் பகுதி நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, எம்மை வழிமறித்த படையினர் ‘விரைவில் திரும்பி வரவும்” என எமக்கு அறிவுறுத்தினர். ஏன் நாம் அங்கு செல்கின்றோம் என இளம் இராணுவ அதிகாரி ஒருவர் எம்மிடம்  கோரினார். “அங்கு மீள்குடியேற்றம் நடைபெற்றது தொடர்பாக யாராவது உங்களுக்கு அறிவித்துவிட்டார்களா? எனவும், மக்கள் இப்போது தான் இங்கு திரும்பி வந்துள்ளார்கள். அங்கு பார்ப்பதற்கு ஒன்றுமில்லை எனவும், இது சிறிலங்கா அரசின் பிரச்சினை எனவும் இளம் இராணுவ அதிகாரி எம்மிடம் வலியுறுத்தினார்” என ஊடகவியலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இடம்பெயர்ந்த மக்களின் முகாங்களைச் சென்று பார்வையிடுவதை விட முல்லைத்தீவில் பல நல்ல விடயங்களைப் பார்வையிட முடியும் என துப்பாக்கியைக் கையில் ஏந்தியவாறு நின்ற பிறிதொரு இராணுவத்தினன் எம்மிடம் தெரிவித்தார். “நீங்கள் பிரபாகரனின் நீச்சல் குளத்தை பார்வையிட்டுள்ளீர்களா? ஏன் அவரின் பதுங்குகுழியைப் போய்ப் பார்க்கவில்லை? இந்தப் பாதையில் செல்லுங்கள். நீங்கள் குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்களுடன் வந்திருந்தால் அவர்களுடன் செல்லலாம். ஆனால் இடம்பெயர்ந்த மக்கள் வாழும் முகாங்களுக்கு செல்ல வேண்டாம்” என அந்த இராணுவத்தினன் தம்மிடம் தெரிவித்ததாக ஊடகவியலாளரான கண்டுநேற்றி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தினரின் இவ்வாறான மனப்போக்கை றுக்கி பெர்னாண்டோவும் உறுதிப்படுத்தியுள்ளார். சிறிலங்காவின் தென்பகுதியிலிருந்து யுத்தநினைவு அருங்காட்சியகம் மற்றும் சிறிலங்கா இராணுவத்தால் கட்டப்பட்ட நினைவுத் தூபி போன்றவற்றைப் பார்ப்பதற்காக பேருந்துகளில் வந்திருந்த சிங்கள சுற்றுலாப் பயணிகளை தாம் பார்த்ததாகவும், இவர்கள் பைலா இசைகளை இசைத்தவாறு பேருந்துகளில் பயணித்ததாகவும் றுக்கி பெர்னாண்டோ கூறுகிறார்.

“இவ்வாறு வரும் சிறிலங்காவின் தென்பகுதிச் சிங்களவர்கள் உள்ளுர் மக்களுடன் ஒருபோதும் கதைக்க முன்வருவதில்லை என்றும், தமது வாழ்வு நிலை தொடர்பாக எந்தவொரு வினாக்களையும் கேட்பதில்லை எனவும் உள்ளுர்வாசி ஒன்று தெரிவித்தார். இவ்வாறானதொரு நிலையை அரச இயந்திரங்கள் ஊக்குவிப்பதானது மிக வேதனை அளிப்பதாகவும் அவ்வாசி தெரிவித்தார்” என றுக்கி பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

சிறிலங்கா நீதிச்சேவைகள் ஆணைக்குழுவுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் முரண்பாடுகள் தலைதூக்கியுள்ளமை பிறிதொரு முக்கிய சம்பவமாகும். பிரதம நீதியரசர் மற்றும் இரு மூத்த நீதிபதிகளிடம் தன்னை அதிபர் இல்லத்தில் வந்து சந்திக்குமாறு சிறிலங்கா அதிபர் கூறியிருந்தார். அதாவது திவிநெகும சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியதுடன் இதுதொடர்பில் நீதித்துறை அதிகாரி ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்த பின்னரே நீதிச்சேவை ஆணைக்குழுவின் பிரதம நீதியரசர் மற்றும் ஏனைய இரு நீதிபதிகளையும் தன்னை வந்து சந்திக்கும் படி சிறிலங்கா அதிபர் அறிவித்திருந்தார்.

இவ்விரு சம்பவங்களுக்கும் இடையில் எவ்வித தொடர்புமில்லை என சிறிலங்கா அதிபர் அறிவித்துள்ளதை நாம் ஏற்க வேண்டிய நிலையிலுள்ள அதேவேளை, தற்போதைய காலம் கெடுவாய்ப்பாக உள்ளது என்பதை மட்டுமே எம்மால் கூறமுடியும். அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படும் நிலையில் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு தேவையான நிதி தொடர்பாக கலந்துரையாடுவதற்காகவே தான் நீதிபதிகளை அழைத்ததாக அதிபர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது சிறிலங்கா நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுக்கும் சிறிலங்கா அதிபருக்கும் இடையிலான முறுகல் நிலை உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

மூத்த சட்டவாளர் என்ற வகையில் நீதிச்சேவை தனித்து, சுயாதீனமாக இயங்க வேண்டிய தேவையுள்ளதாக அதிபர் தெரிவித்துள்ளார். அதிபரின் கூற்றை நாம் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் இந்த விடயத்தில் அதிபர் நடந்து கொள்ளும் முறையானது அவரது வாக்குறுதிக்கு முரண்பட்டதாக காணப்படுகிறது.

எமது நாட்டில் உண்மையான மீளிணக்கப்பாடும், சமாதானமும் உருவாக்கப்பட வேண்டுமெனில், நல்லாட்சிக்கான அனைத்து ஜனநாயக அமைப்புக்களும் பாதுகாப்பாக உள்ளனவா என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். நாம் நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் மதிப்புடனும், கௌரவத்துடனும் வாழ்வதை உறுதிப்படுத்தும் விதமாக நடக்க வேண்டும். நாங்கள் எவரும் அநீதியாக நடாத்தப்படக் கூடாது. அத்துடன் கெட்ட ஆட்சியின் விளைவாக நாம் ஒருவரும் பாரபட்சமாக நடாத்தப்படக் கூடாது என்பது நாட்டில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

தமிழர்களின் போராட்டம் மீண்டும் வெடிக்கும்” – பிபிசியின் முன்னாள் கொழும்பு முகவர் பிரான்செஸ் ஹரிசன்!

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வெற்றி பெற்றதன் மூலம் சிறிலங்காவில் அமைதியை ஏற்படுத்தியிருக்கக் கூடும்.

ஆனால், அவர்களின் வெற்றிக்காக ஆயிரக்கணக்கான தமிழ்மக்களின் உயிர்கள் விலையாக கொடுக்கப்பட்டன என்று பிபிசியின் முன்னாள் கொழும்பு முகவரான பிரான்செஸ் ஹரிசன் தெரிவித்துள்ளார்.

இந்திய இணையத்தளம் ஒன்றின் செய்தியாளர் விக்கி நஞ்சப்பாவுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“சிறிலங்கா மீது இந்தியா அரசியல் செல்வாக்கு மற்றும் ஆர்வம் கொண்டுள்ளதா என்பதில் எனக்கு சிறிய சந்தேகம் உள்ளது.

ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த போது, இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் போருக்குப் பிந்திய தமிழர்களின் அதிகாரப்பகிர்வு பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.

அது போர் வலயத்தில் என்ன நடக்கிறது என்பதை இந்தியா கூர்ந்து அவதானிக்கவில்லை என்ற செய்தியை எடுத்துச் சொன்னது.

மாறாக விடுதலைப் புலிகளுக்குப் பின்னர் சிறிலங்காவின் எதிர்காலம் குறித்து கவனம் செலுத்துகிறது.

கொலைகள் குறித்து இந்தியா குருட்டுத்தனமாக இருந்து கொண்டதாகவே தோன்றுகிறது.

இந்தியா மட்டுமல்ல,பல மேற்குலக நாடுகளும் அப்படியே நடந்து கொண்டன.

தமிழர்களின் வாழ்க்கைத்தரத்தையும் நீதியையும் நிலைநாட்ட சிறிலங்கா மீது இந்தியா மேலும் அழுத்தங்களை கொடுக்கும் என்பதே எனது நம்பிக்கை.

போரில், ஏற்பட்ட இறப்புகள் பற்றிய சரியான கணிப்புகள் எவரிடமும் இல்லை.

கடந்த வெள்ளிக்கிழமை லண்டனில் எனது புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றிய – ஐ.நா நிபுணர் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான ஜஸ்மின் சூகா, 2009இல் சிறிலங்காவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 75,000 வரை இருப்பதற்கு சாத்தியம் உள்ளதாக கூறியிருந்தார்.

ஐ.நா நிபுணர் குழு அறிக்கையில் 40,000 பேர் கொல்லப்பட்டதற்கு நம்பகமான சான்றுகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மன்னார் ஆயர் 147,000 பேரின் நிலை தெரியவில்லை என்று கூறியிருந்தார்.

இந்தப் புள்ளிவிபரங்களில் பாரிய வேறுபாடுகள் உள்ளன. இதிலிருந்து பத்தாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் உறுதியாகிறது.

இது 1995இல் பொஸ்னியாவின் செர்பொனிக்காவில் இடம்பெற்ற படுகொலைகளை விடவும், தற்போது சிரியாவில் நடக்கின்ற போரில் இடம்பெறும் மரணங்களை விடவும் இது நிச்சயம் அதிகமானது.

தமிழர்களின் போராட்டம் மீண்டும் எழுச்சி பெறும். ஆனால் அது உடனடியாக அல்ல.

எனது புத்தகத்துக்காக செவ்வி கண்ட விடுதலைப் புலிகள் எவருமே இப்போது போராடத் தயாராக இல்லை.

அவர்களில் எவரும் ஆயுதப்போராட்டத்தை தொடங்குவார்கள் என்பது சந்தேகம் தான்.

ஆனால், தமிழ் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு இப்போது சிறிலங்கா தீர்வுகளை வழங்கத் தவறினால், இன்னொரு தலைமுறை, பெரும்பாலும் இன்னும் மோசமாக எழுச்சி கொள்ளும்“ என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

போர் வெடித்தபோது மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொண்டிருப்போம்” – சிறிலங்கா கடற்படைத் தளபதி!

சிறிலங்கா கடற்படையின் கண்காணிப்புத் திறனை வலுப்படுத்தும் நோக்கில், ஐந்து ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் வாங்கப்படவுள்ளதாக, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த கொலம்பகே தெரிவித்துள்ளார்.

“ஐந்து ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களை வாங்குவது தொடர்பாக, சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேச்சுக்களை நடத்தி வருகிறோம்.

இவற்றில் இரண்டு ரோந்துக் கப்பல்கள் ஒரு தரப்பிடம் இருந்து வாங்கப்படவுள்ளன. ஏனைய மூன்றும் வேறுவேறு தரப்புகளிடம் இருந்து வாங்கப்படவுள்ளன.

இரண்டு ரோந்துக் கப்பல்களை வாங்குவதற்காக உடன்பாடு விரைவில் இறுதி செய்யப்பட்டு விடும்.

ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களின் ஆற்றலைப் பலப்படுத்திக் கொள்வது போருக்குப் பிந்திய கால முன்னுரிமையாக இருக்கும்.

போருக்குப் பிந்திய காலத்தில் கடற்படையைப் புறக்கணிப்பது மிகப் பெரிய தவறாக அமையும்.

ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் என்ற வகைக்குள் தற்போது, இந்தியாவிடம் வாங்கப்பட்ட சயுர, சாகர, அமெரிக்காவிடம இருந்து பெறப்பட்ட சமுத்ர, இஸ்ரேலிடம் வாங்கப்பட்ட நந்திமித்ர, சுரனிமல மற்றும் கொழும்பு டொக்யார்ட்டில் கட்டப்பட்ட ஜெயசாகர ஆகிய ஆறு கப்பல்கள் உள்ளன.

இவற்றில் ஜெயசாகர தவிர்ந்த ஏனைய கப்பல்கள் விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல்களை மூழ்கடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டவை.

சிறிலங்காவின் கடல்எல்லை மற்றும் பொருளாதாரக் கடல் எல்லையில் சவால்களை எதிர்கொள்வதற்கு மேலதிக கலங்கள் எமக்குத் தேவைப்படுகின்றன.

புதிய கப்பல்கள் கிடைத்ததும், பழையவை கழித்து ஒதுக்கப்பட்டு விடாது. அவை பழையவை என்றாலும் பயன்படுத்தப்படும்.

சில கப்பல்களை 30, 40 ஆண்டுகளுக்குக் கூட பயன்படுத்த முடியும்.

சிறிலங்கா கடற்படை, ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களில் உலங்குவானூர்திகளைப் பயன்படுத்துவதற்கு சாத்தியம் உள்ளது.

மூன்று கப்பல்களில் அதற்கான வசதிகள் உள்ளன.

எமது கப்பல்களில் உலங்குவானூர்திகளை இறக்குவது குறித்து சிறிலங்கா விமானப்படையுடன் பேசமுடியும்.

அதைவிட ஆளில்லா வேவு விமானங்களையும் இதில் வைத்து பயன்படுத்த முடியும்.

சுனாமியின் போது துரிதமாகச் செயற்படாது போயிருந்தால் நாம் கிழக்கில் வைத்திருந்த பெருமளவு கப்பல்களை இழந்திருப்போம்.

அப்போது நான் கிழக்கு கடற்படைத் தலைமையகத்தின் இரண்டாவது நிலையில் இருந்தேன்.

கிழக்கு கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் உபாலி ரணவீர வெளியில் சென்றிருந்தார். 2004 டிசம்பர் 26ம் நாள் காலை 9.05 மணியளவில், திடீரென வழக்கத்துக்கு மாறாக கடல் நீர்மட்டம் அதிகரிப்பதை நாம் அவதானித்தோம்.

உடனடியாக அதுபற்றி கடற்படைத் தளபதி அட்மிரல் தயா சந்தகிரிக்கு தொலைபேசி மூலம் அறிவித்தேன்.

அவர் எல்லா கப்பல்களையும் உடனடியாக கடலுக்குக் கொண்டு செல்லும்படி பணித்தார். அதன்படி உடனடியாகவே கப்பல்கள் அனைத்தையும் கடலுக்கு அனுப்பினோம்.

இருபது நிமிடங்களில் சுனாமி தாக்கியது.

உடனடியாகச் செயற்பட்டதால், 30 தொடக்கம் 40 வரையிலான கப்பல்களைப் பாதுகாக்க முடிந்தது.

அப்போது நாம் துரிதமாகச் செயற்படாது போயிருந்தால், போர் வெடித்த போது நாம் மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொண்டிருப்போம்.

அதேவேளை, 2008இல் வன்னியில் போர் உச்சக்கட்டமாக நடந்து கொண்டிருந்தபோது, நிசா புயல் வடபகுதியை தாக்கியது.

அதனால் சிறிலங்கா கடற்படைக்கு கடுமையான இழப்பு ஏற்பட்டது.

வடக்கு கடற்படைத் தலைமையகத்துடன் இணைக்கப்பட்டிருந்த ஐந்து அதிவேகத் தாக்குதல் படகுகள் மோசமாக சேதமடைந்தன” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

சிறிலங்கா கடலோரக் காவல்படையினருடன் பொதுமக்கள் மோதல் – 7 பேர் காயம்.

சிறிலங்காவின் தென்பகுதியில் கடலோரக் காவல்படையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 7 பேர் காயமடைந்தனர்.

இந்த மோதலை அடுத்து மீரிஸ்ஸ பகுதியில் அமைந்துள்ள கடலோரக் காவல் படைமுகாமை அகற்றக் கோரி நேற்றுக்காலை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மாத்தறை – கொழும்பு வீதிப் போக்குவரத்து பல மணிநேரம் தடைப்பட்டது.

நேற்றுமுன்தினம் இரவு துடுப்பாட்டப் போட்டியை பார்த்து விட்டுத் திரும்பிய இளைஞர்களுக்கும் மீரிஸ்ஸவில் உள்ள சிறிலங்கா கடலோரக் காவல்படையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

மதுபோதைகயில் இருந்த கடலோரக் காவல்படையினர் சுமார் 30 பேர் பொதுமக்களை கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர்.

மீரிஸ்ஸ பிரதேசசபைத் தலைவர் தலையிட்டு அமைதிப்படுத்த முயன்ற போது அவரும் கடலோரக் காவல்படையினரால் தாக்கப்பட்டார். அவரது வீடும் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மோதலில் 4 கடலோரக் காவல்படையினரும் 3 பொதுமக்களும் காயமடைந்தனர்.

காயமடைந்த கடலோரக் காவல்படையினர் கராப்பிட்டிய, பூசா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மீரிஸ்ஸ மீன்பிடித் துறைமுகத்தில் காவலில் ஈடுபட்டிருந்த இரு கடலோரக் காவல்படையினர் மீது இளைஞர்களால் பட்டாசு வீசப்பட்டதை அடுத்தே இந்த மோதல் ஏற்பட்டதாக சிறிலங்கா கடலோரக் காவல்படைப் பேச்சாளர் லெப்.கொமாண்டர் சந்தன புலேகொட தெரிவித்துள்ளார்.

அந்தக் குழுவினர் கடலோரக் காவல்படையினரின் ஆயுதங்களை பறித்தெடுக்க முயன்றதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகள் இறுதிவரை போராட முடிவு செய்தது மிகப்பெரிய வரலாற்றுத் தவறு – எரிக் சொல்ஹெய்ம்.

சிறிலங்கா அரசுக்கு எதிரான போரின் போது, இறுதிவரை போராடுவதற்கு விடுதலைப் புலிகள் எடுத்த முடிவு மிகப்பெரிய வரலாற்றுத் தவறு என்று நோர்வேயின் முன்னாள் அமைச்சரும், சிறிலங்காவின் சமாதானப் பேச்சுக்களில் ஏற்பாட்டாளராக பணியாற்றியவருமான, எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

லண்டனில் பிபிசி தமிழோசை மற்றும் சிங்கள சேவைக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி:  சிறிலங்கா இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போரின் இறுதிக் கட்டத்தில் பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்படக் கூடிய மனிதப் பேரவலம் நடக்காமல் தடுக்கும் நோக்கத்தில், அனைத்துலக நாடுகள் கூட்டாக எடுத்த முயற்சி, இந்த திட்டம் உருவான பின்னணி, அது ஏன் செயற்படாமல் கைவிடப்பட்டது?

பதில்: சிறிலங்காவின் சமாதானத்துக்காக முயற்சி எடுத்த கொடை நாடுகளான ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் இணைந்து 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு யோசனையை முன்வைத்தன. ஐ.நாவும் இதன் பின்னணியில் இருந்தது.

அப்போது, போரின் முடிவு சிறிலங்கா அரசுக்கு இராணுவ ரீதியிலான வெற்றியாக அமையும் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்த நிலையில், பேரழிவை தடுக்கும் வகையில் போரை முறையாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற யோசனையை நாங்கள் முன்வைத்தோம்.

விடுதலைப்புலிகளும் சிறிலங்கா அரசும் ஒப்புக்கொண்ட பிறகு தான் அந்தத் திட்டத்தின் முழுமையான இறுதி வடிவமும் முடிவு செய்யப்பட்டிருக்கும்.

அதற்கு அடிப்படையாக நாங்கள் தெரிவித்த நடைமுறை யோசனை என்னவென்றால், சர்வதேச அமைப்பு, உதாரணமாக அமெரிக்கா, இந்தியா அல்லது வேறு ஒரு நாடு சிறிலங்காவின் வடக்கு – கிழக்குப் பகுதிக்கு ஒரு பெரிய கப்பலை அனுப்பி வைப்பது என்றும், அதில் ஐ.நா அதிகாரிகளோ அல்லது மற்ற அனைத்துலக அமைப்பை சேர்ந்தவர்களோ இருந்து, போரின் இறுதியில் எஞ்சியிருந்த அனைத்து விடுதலைப்புலிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் ஒருவர் விடாமல் கணக்கெடுத்து புகைப்படத்துடன் பதிவு செய்வது என்றும் தெரிவித்திருந்தோம்.

அவர்கள் அனைவரும் கொழும்பு கொண்டு செல்லப்பட்டு அவர்களிடமிருந்த ஆயுதங்களை ஒப்படைத்த பின்னர், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகிய இருவர் தவிர்ந்த மற்ற அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்பதாகும்.

அப்படி நடந்திருந்தால், அனைத்துலக சமூகத்தின் முன்னிலையில் அனைத்துலக அமைப்புக்களால் பதிவு செய்யப்பட்டவர்களை சிறிலங்கா அரசால் நினைத்த மாத்திரத்தில் கொல்ல முடிந்திருக்காது.

எங்களின் இந்த யோசனை மட்டும் ஏற்கப்பட்டிருந்தால், இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் இன்று நம்மிடையே உயிருடன் இருந்திருப்பார்கள்.

எமது இந்தப் பேச்சுக்கள் 2009ம் ஆண்டு பெப்ரவரி மாதம் தொடக்கம் போரின் இறுதி வரை தொடர்ந்தது.

இதன் ஒரு கட்டமாக, ஏப்ரல் மாதம் இந்த திட்டத்தின் இறுதி வடிவத்தை முடிவு செய்வதற்காக விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலகத் தொடர்பாளராக இருந்த குமரன் பத்மநாதன் ஒஸ்லோவுக்கு வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் கடைசி நிமிடத்தில் பிரபாகரன் அவரைத் தடுத்து விட்டார்.

எங்களின் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பத்திரமாக அழைத்து வருவதற்காக கோலாலம்பூருக்கே சென்றிருந்தனர்.

ஆனால் இந்தத் திட்டம் தங்களுக்கு ஏற்படையதல்ல என்று எங்களுக்கு செய்தி சொல்லப்பட்டது. எங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை.

கேள்வி:  இந்த திட்டத்திற்கு சிறிலங்கா அரசின் ஒப்புதல் இருந்ததா?

பதில்:  அந்த நாட்களில் நான் சிறிலங்காவுக்குச் செல்லவில்லை.

ஆனால் ஒஸ்லோவில் இருக்கும் சிறிலங்கா தூதரகம் மூலமாகவும், மற்ற தூதரகங்கள் மூலமாகவும் சிறிலங்கா அரச தரப்புடன் எங்களுக்கு இருந்த தொடர்புகள் மூலமாகவும் சிறிலங்கா அரசுடன் நாங்கள் பல பேச்சுக்களை நடத்தினோம்.

அவர்களுடன் பேசியதிலிருந்து முழுமையான இராணுவ வெற்றியை பெறுவதே சிறிலங்கா அரசின் பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள் என்ற உணர்வையே நாங்கள் பெற்றோம்.

அதேசமயம், விடுதலைப் புலிகள் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியிருந்தால் சிறிலங்கா அரசுக்கு அதற்கு சம்மதிப்பதைத் தவிர வேறு வழி இருந்திருக்காது என்றே எங்களுக்கு தோன்றியது.

கேள்வி:  இந்தத் திட்டத்திற்கு சிறிலங்கா அரசு ஒப்புக்கொண்டிருக்கும் என்று எதை வைத்து நீங்கள் நம்புகிறீர்கள்?

பதில்: அவர்களுக்கு இதில் விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, அவர்கள் இதை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டிய நிலைமையே இருந்தது.

காரணம் இந்தியாவும் அமெரிக்காவும் மற்றவர்களும் இதில் உறுதி காட்டியிருப்பார்கள், ஒட்டுமொத்த அனைத்துலக சமூகத்தினரும் இதில் ஒன்றாகவும் உறுதியாகவும் குரல் கொடுத்திருப்பார்கள்.

சிறிலங்கா அரசில் தயக்கம் இருந்திருந்தாலும் அவர்களுக்கு வேறு வழி இருந்திருக்காது.

கேள்வி:  அப்படியானால், சிறிலங்கா போரின் இறுதிக் கட்டத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதற்கு முதன்மையான பொறுப்பு விடுதலைப் புலிகளின் தலைமையை சாரும் என்கிறீர்களா?

பதில்: போரின் இறுதி முடிவு என்னவாக இருக்கப் போகிறது என்பதை அனைவரும் உணர்ந்த நிலையிலும் போரை ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் முடிக்காமல் கடைசிவரை போராடவேண்டும் என்று பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைமை முடிவெடுத்தது மிகப்பெரிய வரலாற்று தவறு என்றே நான் நினைக்கிறேன்.

அதேசமயம், இதை காரணமாகக் காட்டி சிறிலங்கா அரசு நடத்திய குறிவைத்த தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாது.

மக்கள் செறிவாக வாழும் பகுதிகள் என்று தெரிந்தே, சிறிலங்கா அரசு தாக்குதல்களை நடத்தியது என்பதற்கான பல சான்றுகள், அறிக்கைகள் வெளிவந்துள்ளன.

அதிலும் குறிப்பாக துப்பாக்கிச் சூடுகள் நடத்த முடியாத ‘பாதுகாப்பு வலயம்’ என்று அரசே ஒரு பகுதியை அறிவிப்பதும் அந்த பகுதிக்கு மக்கள் வந்த பிறகு அங்கே குறிவைத்து தாக்குதல் நடத்துவதுமாக அரசு செயற்பட்டிருக்கிறது என்பதற்கான வலுவான சான்றுகள் கிடைத்திருக்கின்றன.

கேள்வி:  இந்த திட்டத்திற்கு இந்திய அரசின் ஒப்புதல் இருந்ததா?

பதில்: விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பாக இந்திய அரசிடம் கொஞ்சம் கூட அனுதாபம் இல்லை.

ராஜீவ்காந்தி கொலை உட்பட பல்வேறு காரணங்கள் இதற்கு பின்னணியில் இருக்கின்றன.

ஆனால் அதேசமயம், இறுதிகட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படக்கூடாது என்பது குறித்து அங்கே கரிசனை காணப்பட்டது.

கேள்வி:  நீங்கள் இறுதியாக முன்வைத்த திட்டத்திற்கு இந்திய அரசின் ஒப்புதல் இருந்ததா இல்லையா?

பதில்: சிறிலங்கா பிரச்சினையில் நான் ஈடுபட்டிருந்த 10 ஆண்டு காலங்களில் இந்தியாவுக்கு தெரிவிக்காமல் நான் எந்த திட்டத்தையும் முன்னெடுத்ததில்லை.

இந்த திட்டத்தை இந்தியா ஏற்றிருக்கும் என்பதிலும் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசும் இருந்திருக்கும் என்பதிலும் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.

கேள்வி: இப்படி ஒரு திட்டம் இருந்ததாக நீங்கள் இப்போது கூறும் கருத்துக்கள் உண்மையா என்பதற்கு என்ன ஆதாரம்?

பதில்: 2009ம் ஆண்டில் நடந்த இந்த விடயங்கள், கொழும்பில் இருக்கும் அமெரிக்கத் தூதரகத்தின் தகவல் பரிமாற்றங்கள் மற்றும் அது தொடர்பான மற்ற ராஜீய தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும் விக்கிலீக்ஸில் வெளியாகியிருக்கின்றன.

அவற்றில் இருக்கும் தகவல்களை நுணுகிப் பார்த்தால் இந்தக் கூற்றுக்கான ஆதாரங்கள் அதில் இருக்கின்றன.

error: Content is protected !!