SHARE

அண்மைக் காலத்தில் சிறிலங்காவில் குறிப்பிடத்தக்க சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதாவது சிறிலங்காவின் உயர் கல்வி தொடக்கம், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை, நகர்ப்புற ஏழைகளைக் குடியேற்றுவது தொடர்பில் சுதந்திரமாக எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையும், இவை தொடர்பில் சிறிலங்கா அமைச்சர்கள் மற்றும் பேச்சாளர்களால் பல்வேறு வகையான அறிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளமையும் முக்கியமானதாகும்.

இவ்வாறு அறிக்கைகள் விட்ட அனைத்து அரசியல்வாதிகளும் ஜனநாயகம், நல்லாட்சி, மீளிணக்கப்பாடு, சமாதானம் மற்றும் அபிவிருத்தி போன்ற பதங்களையே பயன்படுத்தியுள்ளனர். மக்கள் எளிதில் நம்பும் வகையிலேயே இவ்வாறான அறிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இவர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான உண்மையான அரசியல் உறுதிப்பாடு சிறிலங்காவில் தற்போது நடைமுறையிலில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.

இதனால் சிறிலங்கா அமைச்சர்கள் மற்றும் பேச்சாளர்களால் விடுக்கப்படும் அறிக்கைகள் எப்போதும் தோல்வியிலேயே முடிவடைகின்றன. நாட்டிலுள்ள அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்களால் வேண்டுமென்றே மேற்கொள்ளப்படும் குளறுபடிகள், வன்முறைகள், தவறான அரசியற் கையாளுகை போன்றன சிறிலங்காவிலுள்ள சமூகங்களை வெறுமையாக்குவதுடன் தொடர்ந்தும் ஜனநாய வடிவிலான எந்தவொரு அரசியல் அமைப்பையும் வலுவிழக்கச் செய்கின்றன.

உள்நாட்டில் இடம்பெயர்ந்த அனைத்து மக்களையும் மீளக் குடியேற்றிவிட்டதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு செப்ரெம்பர் 25 அன்று அறிவித்திருந்தது. இதற்கான அனைத்துப் பணிகளும் பூர்த்தியாகிவிட்டதாக பாதுகாப்பு அமைச்சின் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

“இறுதியாக குடியேற்றப்படாதிருந்த 361 குடும்பங்களைச் சேர்ந்த 1186 பேர் செப்ரெம்பர் 24 அன்று அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றப்பட்டனர். மே 2009ல் சிறிலங்கா இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான மீட்பு நடவடிக்கையின் மூலம் மீட்கப்பட்ட 295,000 இற்கும் மேற்பட்ட மக்களை மிகக் குறுகிய காலத்தில் அதாவது மூன்று ஆண்டுகளுக்குள் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதில் வெற்றி பெற்றுக் கொண்ட சிறிலங்காவானது மிகக் குறுகிய காலத்தில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றிய முதலாவது உலக நாடாக உள்ளது” என சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தின் புதிய முகப்பில் புதிய வீடுகள் மற்றும் தொழில் செய்வதற்கான தயார் நிலையில் காணப்படும் மக்களின் ஒளிப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இப்புதிய வீடுகளின் ஒளிப்படங்கள் சிறிலங்காவின் எந்த இடத்திலும் எடுக்கப்பட்டிருக்கலாம். இடம்பெயர்ந்த மக்களைக் குடியேற்றியதானது தன்னிச்சையாக, சுயவிருப்போடு மேற்கொள்ளப்பட்ட ஒன்றல்ல. மெனிக்பாம் முகாமிலிருந்த மக்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றக் கோரி மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களை அடுத்தே சிறிலங்கா அரசாங்கம் இவர்களை மீள்குடியேற்றியுள்ளது.

“மெனிக்பாம் முகாமில் எஞ்சியுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் மரிற்றம்பற்று பிரதேச செயலர் பிரிவைச் சேர்ந்த கேப்பாப்புலவு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் செப்ரெம்பர் 24 அன்று மீள்குடியேற்றப்படுவர் என செப் 22 அன்று மெனிக்பாம் முகாமில் இடம்பெற்ற சந்திப்பில் சிறிலங்கா இராணு மற்றும் அரசாங்க அதிகாரிகள் மக்களிடம் அறிவித்திருந்தனர்” என Groundviews ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ள றுக்கி பெர்னாண்டோ மற்றும் நிக்கோல இமானுவேல் ஆகியோரால் வழங்கப்பட்ட சுயாதீன செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்ரெம்பர் 24 அன்று மெனிக்பாம் முகாமில் எஞ்சியிருந்த அனைத்து மக்களும் வற்றாப்பளை மகா வித்தியாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அடுத்த நாள் அதாவது செப் 25 அன்று வற்றாப்பளை-புதுக்குடியிருப்பு வீதியிலுள்ள சீனியமோட்டை என்ற காட்டுப் பகுதியில் இறக்கிவிடப்பட்டனர். இதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் வேறு மூன்று கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களும் சீனியமோட்டை காட்டுப் பகுதியில் இறக்கிவிடப்பட்டிருந்தனர்.

இடம்பெயர்வதற்கு முன்னர் தாம் பயிர்செய்கை மற்றும் விவசாயத்தில் ஈடுபட்டதாகவும், தமது கிராமத்தில் சிறப்பான வாழ்வொன்றைத் தாம் வாழ்ந்ததாகவும் கேப்பாப்பிலவைச் சொந்த இடமாகக் கொண்ட மக்கள் பெர்னாண்டோ மற்றும் நிக்கோல ஆகிய இருவரிடமும் தெரிவித்தனர். கேப்பாப்பிலவைச் சேர்ந்த 110 குடும்பங்கள் சீனியமோட்டை முகாமில் இடைத்தங்க வைக்கப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இத்தகவலை சிறிலங்காவிலுள்ள ஐ.நா நிறுவனங்களின் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

கேப்பாப்பிலவின் மொத்த நிலப்பரப்பு 1212 ஏக்கராகும். இதில் 528 ஏக்கர் நிலப்பரப்பு மக்கள் வாழ்வதற்கு உகந்த நிலப்பரப்பாகவும், 684 ஏக்கர் நிலப்பரப்பு விவசாயம் செய்வதற்கு உகந்த நிலமாக காணப்படுவதாக பிறிதொரு தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் வாழ்ந்த பெரும்பாலான காணிகள் மற்றும் சில விவசாயக் காணிகளின் சட்டபூர்வ காணி உறுதிகளை பொது மக்கள் வைத்திருக்கின்றனர். தமது சொந்த நிலங்களில் சிறிலங்கா இராணுவத்தினர் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு பயன்களைப் பெறுவதாக மக்கள் சிலர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கேப்பாப்பிலவில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் எவ்வளவு குடும்பங்கள் வாழ்ந்தனர் என்பது தொடர்பாகவும் மற்றும் இவர்களில் எத்தனை குடும்பங்கள் தற்போது தமது சொந்தக் காணிகளுக்கு திரும்பி வந்துள்ளனர், இவர்களில் எத்தனை குடும்பத்தவர்கள் காணி உறுதிகள் போன்ற ஆவணங்களை வைத்திருக்கின்றனர் என்பது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் எந்தவொரு தகவலையும் வெளிப்படுத்தவில்லை.

மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவது தொடர்பில் பிரச்சினைகள் நிலவுகின்றமை தெளிவாக உள்ள நிலையில், சிறிலங்கா இராணுவத்தினர் அல்லது விமானப் படையினர் மக்களின் காணிகளை ஆக்கிரமிக்கின்றனர் என்ற பிரச்சினையும் முன்வைக்கப்பட்டுள்ளது. கேப்பாப்புலவு வீதியோரத்தை அண்டிய மிகப் பெரிய நிலப்பரப்பில் முகாங்களை அமைத்துள்ள சிறிலங்கா விமானப்படையினர் அந்நிலப்பரப்பில் ‘இந்த நிலம் விமானப் படையினருக்குச் சொந்தமானது’ என பலகைகளில் அறிவித்தல் எழுதியுள்ளதை 2010லிருந்து எம்மால் பார்க்க முடிகிறது.

சிறிலங்கா விமானப் படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களின் காணி உறுதிகளை மக்கள் வைத்திருக்கின்றனர். இடம்பெயர்வதற்கு முன்னர் ஐந்து ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளைக் கொண்டிருந்த மக்களும் உள்ளனர். ஆனால் தற்போது பெருமளவு நிலங்கள் இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மக்கள் கால் ஏக்கர் தொடக்கம் மூன்று ஏக்கர் வரையான நிலப்பரப்புக்களை மட்டுமே கொண்டுள்ளனர். இவற்றுள் மக்கள் வாழ்ந்த நிலங்கள் மற்றும் விவசாய நிலங்கள் என்பன உள்ளடங்குகின்றன. சில காணிகளின் உறுதிகளை வைத்திருக்காத மக்கள் பலர் குறிப்பிட்ட ஒரு காணியில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாழந்துள்ளதுடன், பயிச்செய்கையிலும் ஈடுபட்டிருந்தனர்.

மெனிக்பாம் முகாமிலிருந்து ஏற்றப்பட்ட மக்கள் எந்தவொரு வசதி வாய்ப்புக்களும் இல்லாத சீனியாமோட்டை காட்டுப் பகுதியின் நடுவில் இறக்கி விடப்பட்டனர். இடம்பெயர்ந்த மக்கள் தாமாகவே இக்காட்டை துப்பரவாக்கி தற்காலிக கொட்டகைகளை அமைத்தனர். அங்கே மின்சாரம், நீர் மற்றும் மலசலகூட வசதிகள் காணப்படவில்லை. பாதிக்கப்பட்ட, இடம்பெயர்ந்த கேப்பாப்புலவு வாழ் மக்கள் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து செப்ரெம்பர் 24 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது தமது சொந்த இடங்களில் தாம் மீள்குடியேற்றப்பட வேண்டும், தாம் இயல்பான வாழ்வை வாழ்வதற்குத் தேவையான வீடுகள் மற்றும் காணிகள் என்பன மீளத் திருப்பித் தரப்படவேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.

தமக்கான உடைமைகள் மற்றும் மனித உரிமைகள் என்பன மதிக்கப்பட வேண்டும் என கேப்பாப்பிலவைச் சேர்ந்த உள்ளுரில் இடம்பெயர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ள அதேவேளையில், இந்த மக்கள் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவர் எனவும் ஆனால் இதற்கான காலக்கெடு ஒன்றை நிர்ணயிக்க முடியாது எனவும் சிறிலங்கா மீள்குடியேற்ற அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மறுபுறத்தே, “இந்த 346 இடம்பெயர்ந்த மக்களுக்கும் பிறிதொரு மீள்குடியேற்றம் இனி இடம்பெறமாட்டாது எனவும், சீனியமோட்டையே இவர்களின் சொந்த இடம் எனவும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார்” என கேப்பாப்புலவு மக்களை நேரடியாகச் சென்று சந்தித்த ஊடகவியலாளரான கண்டுநேற்றி தெரிவித்துள்ளார்.

சீனியமோட்டைப் பகுதியில் இடம்பெயர்ந்த மக்களுக்கான வசதி வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, அங்கு இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகம் காணப்படுவதாகவும் கண்டுநேற்றி தெரிவித்துள்ளார். “நாங்கள் சீனியமோட்டைப் பகுதி நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, எம்மை வழிமறித்த படையினர் ‘விரைவில் திரும்பி வரவும்” என எமக்கு அறிவுறுத்தினர். ஏன் நாம் அங்கு செல்கின்றோம் என இளம் இராணுவ அதிகாரி ஒருவர் எம்மிடம்  கோரினார். “அங்கு மீள்குடியேற்றம் நடைபெற்றது தொடர்பாக யாராவது உங்களுக்கு அறிவித்துவிட்டார்களா? எனவும், மக்கள் இப்போது தான் இங்கு திரும்பி வந்துள்ளார்கள். அங்கு பார்ப்பதற்கு ஒன்றுமில்லை எனவும், இது சிறிலங்கா அரசின் பிரச்சினை எனவும் இளம் இராணுவ அதிகாரி எம்மிடம் வலியுறுத்தினார்” என ஊடகவியலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இடம்பெயர்ந்த மக்களின் முகாங்களைச் சென்று பார்வையிடுவதை விட முல்லைத்தீவில் பல நல்ல விடயங்களைப் பார்வையிட முடியும் என துப்பாக்கியைக் கையில் ஏந்தியவாறு நின்ற பிறிதொரு இராணுவத்தினன் எம்மிடம் தெரிவித்தார். “நீங்கள் பிரபாகரனின் நீச்சல் குளத்தை பார்வையிட்டுள்ளீர்களா? ஏன் அவரின் பதுங்குகுழியைப் போய்ப் பார்க்கவில்லை? இந்தப் பாதையில் செல்லுங்கள். நீங்கள் குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்களுடன் வந்திருந்தால் அவர்களுடன் செல்லலாம். ஆனால் இடம்பெயர்ந்த மக்கள் வாழும் முகாங்களுக்கு செல்ல வேண்டாம்” என அந்த இராணுவத்தினன் தம்மிடம் தெரிவித்ததாக ஊடகவியலாளரான கண்டுநேற்றி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தினரின் இவ்வாறான மனப்போக்கை றுக்கி பெர்னாண்டோவும் உறுதிப்படுத்தியுள்ளார். சிறிலங்காவின் தென்பகுதியிலிருந்து யுத்தநினைவு அருங்காட்சியகம் மற்றும் சிறிலங்கா இராணுவத்தால் கட்டப்பட்ட நினைவுத் தூபி போன்றவற்றைப் பார்ப்பதற்காக பேருந்துகளில் வந்திருந்த சிங்கள சுற்றுலாப் பயணிகளை தாம் பார்த்ததாகவும், இவர்கள் பைலா இசைகளை இசைத்தவாறு பேருந்துகளில் பயணித்ததாகவும் றுக்கி பெர்னாண்டோ கூறுகிறார்.

“இவ்வாறு வரும் சிறிலங்காவின் தென்பகுதிச் சிங்களவர்கள் உள்ளுர் மக்களுடன் ஒருபோதும் கதைக்க முன்வருவதில்லை என்றும், தமது வாழ்வு நிலை தொடர்பாக எந்தவொரு வினாக்களையும் கேட்பதில்லை எனவும் உள்ளுர்வாசி ஒன்று தெரிவித்தார். இவ்வாறானதொரு நிலையை அரச இயந்திரங்கள் ஊக்குவிப்பதானது மிக வேதனை அளிப்பதாகவும் அவ்வாசி தெரிவித்தார்” என றுக்கி பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

சிறிலங்கா நீதிச்சேவைகள் ஆணைக்குழுவுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் முரண்பாடுகள் தலைதூக்கியுள்ளமை பிறிதொரு முக்கிய சம்பவமாகும். பிரதம நீதியரசர் மற்றும் இரு மூத்த நீதிபதிகளிடம் தன்னை அதிபர் இல்லத்தில் வந்து சந்திக்குமாறு சிறிலங்கா அதிபர் கூறியிருந்தார். அதாவது திவிநெகும சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியதுடன் இதுதொடர்பில் நீதித்துறை அதிகாரி ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்த பின்னரே நீதிச்சேவை ஆணைக்குழுவின் பிரதம நீதியரசர் மற்றும் ஏனைய இரு நீதிபதிகளையும் தன்னை வந்து சந்திக்கும் படி சிறிலங்கா அதிபர் அறிவித்திருந்தார்.

இவ்விரு சம்பவங்களுக்கும் இடையில் எவ்வித தொடர்புமில்லை என சிறிலங்கா அதிபர் அறிவித்துள்ளதை நாம் ஏற்க வேண்டிய நிலையிலுள்ள அதேவேளை, தற்போதைய காலம் கெடுவாய்ப்பாக உள்ளது என்பதை மட்டுமே எம்மால் கூறமுடியும். அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படும் நிலையில் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு தேவையான நிதி தொடர்பாக கலந்துரையாடுவதற்காகவே தான் நீதிபதிகளை அழைத்ததாக அதிபர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது சிறிலங்கா நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுக்கும் சிறிலங்கா அதிபருக்கும் இடையிலான முறுகல் நிலை உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

மூத்த சட்டவாளர் என்ற வகையில் நீதிச்சேவை தனித்து, சுயாதீனமாக இயங்க வேண்டிய தேவையுள்ளதாக அதிபர் தெரிவித்துள்ளார். அதிபரின் கூற்றை நாம் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் இந்த விடயத்தில் அதிபர் நடந்து கொள்ளும் முறையானது அவரது வாக்குறுதிக்கு முரண்பட்டதாக காணப்படுகிறது.

எமது நாட்டில் உண்மையான மீளிணக்கப்பாடும், சமாதானமும் உருவாக்கப்பட வேண்டுமெனில், நல்லாட்சிக்கான அனைத்து ஜனநாயக அமைப்புக்களும் பாதுகாப்பாக உள்ளனவா என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். நாம் நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் மதிப்புடனும், கௌரவத்துடனும் வாழ்வதை உறுதிப்படுத்தும் விதமாக நடக்க வேண்டும். நாங்கள் எவரும் அநீதியாக நடாத்தப்படக் கூடாது. அத்துடன் கெட்ட ஆட்சியின் விளைவாக நாம் ஒருவரும் பாரபட்சமாக நடாத்தப்படக் கூடாது என்பது நாட்டில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

Print Friendly, PDF & Email