SHARE

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வெற்றி பெற்றதன் மூலம் சிறிலங்காவில் அமைதியை ஏற்படுத்தியிருக்கக் கூடும்.

ஆனால், அவர்களின் வெற்றிக்காக ஆயிரக்கணக்கான தமிழ்மக்களின் உயிர்கள் விலையாக கொடுக்கப்பட்டன என்று பிபிசியின் முன்னாள் கொழும்பு முகவரான பிரான்செஸ் ஹரிசன் தெரிவித்துள்ளார்.

இந்திய இணையத்தளம் ஒன்றின் செய்தியாளர் விக்கி நஞ்சப்பாவுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“சிறிலங்கா மீது இந்தியா அரசியல் செல்வாக்கு மற்றும் ஆர்வம் கொண்டுள்ளதா என்பதில் எனக்கு சிறிய சந்தேகம் உள்ளது.

ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த போது, இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் போருக்குப் பிந்திய தமிழர்களின் அதிகாரப்பகிர்வு பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.

அது போர் வலயத்தில் என்ன நடக்கிறது என்பதை இந்தியா கூர்ந்து அவதானிக்கவில்லை என்ற செய்தியை எடுத்துச் சொன்னது.

மாறாக விடுதலைப் புலிகளுக்குப் பின்னர் சிறிலங்காவின் எதிர்காலம் குறித்து கவனம் செலுத்துகிறது.

கொலைகள் குறித்து இந்தியா குருட்டுத்தனமாக இருந்து கொண்டதாகவே தோன்றுகிறது.

இந்தியா மட்டுமல்ல,பல மேற்குலக நாடுகளும் அப்படியே நடந்து கொண்டன.

தமிழர்களின் வாழ்க்கைத்தரத்தையும் நீதியையும் நிலைநாட்ட சிறிலங்கா மீது இந்தியா மேலும் அழுத்தங்களை கொடுக்கும் என்பதே எனது நம்பிக்கை.

போரில், ஏற்பட்ட இறப்புகள் பற்றிய சரியான கணிப்புகள் எவரிடமும் இல்லை.

கடந்த வெள்ளிக்கிழமை லண்டனில் எனது புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றிய – ஐ.நா நிபுணர் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான ஜஸ்மின் சூகா, 2009இல் சிறிலங்காவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 75,000 வரை இருப்பதற்கு சாத்தியம் உள்ளதாக கூறியிருந்தார்.

ஐ.நா நிபுணர் குழு அறிக்கையில் 40,000 பேர் கொல்லப்பட்டதற்கு நம்பகமான சான்றுகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மன்னார் ஆயர் 147,000 பேரின் நிலை தெரியவில்லை என்று கூறியிருந்தார்.

இந்தப் புள்ளிவிபரங்களில் பாரிய வேறுபாடுகள் உள்ளன. இதிலிருந்து பத்தாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் உறுதியாகிறது.

இது 1995இல் பொஸ்னியாவின் செர்பொனிக்காவில் இடம்பெற்ற படுகொலைகளை விடவும், தற்போது சிரியாவில் நடக்கின்ற போரில் இடம்பெறும் மரணங்களை விடவும் இது நிச்சயம் அதிகமானது.

தமிழர்களின் போராட்டம் மீண்டும் எழுச்சி பெறும். ஆனால் அது உடனடியாக அல்ல.

எனது புத்தகத்துக்காக செவ்வி கண்ட விடுதலைப் புலிகள் எவருமே இப்போது போராடத் தயாராக இல்லை.

அவர்களில் எவரும் ஆயுதப்போராட்டத்தை தொடங்குவார்கள் என்பது சந்தேகம் தான்.

ஆனால், தமிழ் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு இப்போது சிறிலங்கா தீர்வுகளை வழங்கத் தவறினால், இன்னொரு தலைமுறை, பெரும்பாலும் இன்னும் மோசமாக எழுச்சி கொள்ளும்“ என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email