SHARE

சிறிலங்கா கடற்படையின் கண்காணிப்புத் திறனை வலுப்படுத்தும் நோக்கில், ஐந்து ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் வாங்கப்படவுள்ளதாக, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த கொலம்பகே தெரிவித்துள்ளார்.

“ஐந்து ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களை வாங்குவது தொடர்பாக, சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேச்சுக்களை நடத்தி வருகிறோம்.

இவற்றில் இரண்டு ரோந்துக் கப்பல்கள் ஒரு தரப்பிடம் இருந்து வாங்கப்படவுள்ளன. ஏனைய மூன்றும் வேறுவேறு தரப்புகளிடம் இருந்து வாங்கப்படவுள்ளன.

இரண்டு ரோந்துக் கப்பல்களை வாங்குவதற்காக உடன்பாடு விரைவில் இறுதி செய்யப்பட்டு விடும்.

ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களின் ஆற்றலைப் பலப்படுத்திக் கொள்வது போருக்குப் பிந்திய கால முன்னுரிமையாக இருக்கும்.

போருக்குப் பிந்திய காலத்தில் கடற்படையைப் புறக்கணிப்பது மிகப் பெரிய தவறாக அமையும்.

ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் என்ற வகைக்குள் தற்போது, இந்தியாவிடம் வாங்கப்பட்ட சயுர, சாகர, அமெரிக்காவிடம இருந்து பெறப்பட்ட சமுத்ர, இஸ்ரேலிடம் வாங்கப்பட்ட நந்திமித்ர, சுரனிமல மற்றும் கொழும்பு டொக்யார்ட்டில் கட்டப்பட்ட ஜெயசாகர ஆகிய ஆறு கப்பல்கள் உள்ளன.

இவற்றில் ஜெயசாகர தவிர்ந்த ஏனைய கப்பல்கள் விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல்களை மூழ்கடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டவை.

சிறிலங்காவின் கடல்எல்லை மற்றும் பொருளாதாரக் கடல் எல்லையில் சவால்களை எதிர்கொள்வதற்கு மேலதிக கலங்கள் எமக்குத் தேவைப்படுகின்றன.

புதிய கப்பல்கள் கிடைத்ததும், பழையவை கழித்து ஒதுக்கப்பட்டு விடாது. அவை பழையவை என்றாலும் பயன்படுத்தப்படும்.

சில கப்பல்களை 30, 40 ஆண்டுகளுக்குக் கூட பயன்படுத்த முடியும்.

சிறிலங்கா கடற்படை, ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களில் உலங்குவானூர்திகளைப் பயன்படுத்துவதற்கு சாத்தியம் உள்ளது.

மூன்று கப்பல்களில் அதற்கான வசதிகள் உள்ளன.

எமது கப்பல்களில் உலங்குவானூர்திகளை இறக்குவது குறித்து சிறிலங்கா விமானப்படையுடன் பேசமுடியும்.

அதைவிட ஆளில்லா வேவு விமானங்களையும் இதில் வைத்து பயன்படுத்த முடியும்.

சுனாமியின் போது துரிதமாகச் செயற்படாது போயிருந்தால் நாம் கிழக்கில் வைத்திருந்த பெருமளவு கப்பல்களை இழந்திருப்போம்.

அப்போது நான் கிழக்கு கடற்படைத் தலைமையகத்தின் இரண்டாவது நிலையில் இருந்தேன்.

கிழக்கு கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் உபாலி ரணவீர வெளியில் சென்றிருந்தார். 2004 டிசம்பர் 26ம் நாள் காலை 9.05 மணியளவில், திடீரென வழக்கத்துக்கு மாறாக கடல் நீர்மட்டம் அதிகரிப்பதை நாம் அவதானித்தோம்.

உடனடியாக அதுபற்றி கடற்படைத் தளபதி அட்மிரல் தயா சந்தகிரிக்கு தொலைபேசி மூலம் அறிவித்தேன்.

அவர் எல்லா கப்பல்களையும் உடனடியாக கடலுக்குக் கொண்டு செல்லும்படி பணித்தார். அதன்படி உடனடியாகவே கப்பல்கள் அனைத்தையும் கடலுக்கு அனுப்பினோம்.

இருபது நிமிடங்களில் சுனாமி தாக்கியது.

உடனடியாகச் செயற்பட்டதால், 30 தொடக்கம் 40 வரையிலான கப்பல்களைப் பாதுகாக்க முடிந்தது.

அப்போது நாம் துரிதமாகச் செயற்படாது போயிருந்தால், போர் வெடித்த போது நாம் மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொண்டிருப்போம்.

அதேவேளை, 2008இல் வன்னியில் போர் உச்சக்கட்டமாக நடந்து கொண்டிருந்தபோது, நிசா புயல் வடபகுதியை தாக்கியது.

அதனால் சிறிலங்கா கடற்படைக்கு கடுமையான இழப்பு ஏற்பட்டது.

வடக்கு கடற்படைத் தலைமையகத்துடன் இணைக்கப்பட்டிருந்த ஐந்து அதிவேகத் தாக்குதல் படகுகள் மோசமாக சேதமடைந்தன” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

Print Friendly, PDF & Email