SHARE

சிறிலங்காவின் தென்பகுதியில் கடலோரக் காவல்படையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 7 பேர் காயமடைந்தனர்.

இந்த மோதலை அடுத்து மீரிஸ்ஸ பகுதியில் அமைந்துள்ள கடலோரக் காவல் படைமுகாமை அகற்றக் கோரி நேற்றுக்காலை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மாத்தறை – கொழும்பு வீதிப் போக்குவரத்து பல மணிநேரம் தடைப்பட்டது.

நேற்றுமுன்தினம் இரவு துடுப்பாட்டப் போட்டியை பார்த்து விட்டுத் திரும்பிய இளைஞர்களுக்கும் மீரிஸ்ஸவில் உள்ள சிறிலங்கா கடலோரக் காவல்படையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

மதுபோதைகயில் இருந்த கடலோரக் காவல்படையினர் சுமார் 30 பேர் பொதுமக்களை கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர்.

மீரிஸ்ஸ பிரதேசசபைத் தலைவர் தலையிட்டு அமைதிப்படுத்த முயன்ற போது அவரும் கடலோரக் காவல்படையினரால் தாக்கப்பட்டார். அவரது வீடும் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மோதலில் 4 கடலோரக் காவல்படையினரும் 3 பொதுமக்களும் காயமடைந்தனர்.

காயமடைந்த கடலோரக் காவல்படையினர் கராப்பிட்டிய, பூசா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மீரிஸ்ஸ மீன்பிடித் துறைமுகத்தில் காவலில் ஈடுபட்டிருந்த இரு கடலோரக் காவல்படையினர் மீது இளைஞர்களால் பட்டாசு வீசப்பட்டதை அடுத்தே இந்த மோதல் ஏற்பட்டதாக சிறிலங்கா கடலோரக் காவல்படைப் பேச்சாளர் லெப்.கொமாண்டர் சந்தன புலேகொட தெரிவித்துள்ளார்.

அந்தக் குழுவினர் கடலோரக் காவல்படையினரின் ஆயுதங்களை பறித்தெடுக்க முயன்றதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Print Friendly, PDF & Email