SHARE

சிறிலங்காவின் நிறைவேற்று அதிபருக்கும் நீதித்துறைக்கும் இடையிலான முறுகல் நிலை மேலும் வலுத்துள்ளது. சுயாதீன நீதிமுறைமை மற்றும் சட்ட ஆட்சி ஆகியவற்றை அழிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக செப்ரெம்பரில் சிறிலங்கா நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ண குற்றம் சுமத்தியிருந்தார். நீதிச்சேவை ஆணைக்குழுவானது கடந்த 40 ஆண்டு கால வரலாற்றில் இவ்வாறானதொரு அறிக்கையை ஒருபோதும் வெளியிடவில்லை.

இவ் ஆணைக்குழுவானது நீதிபதிகள் மற்றும் ஏனைய நீதிமன்ற அதிகாரிகளை நியமித்தல், அவர்களை இடம்மாற்றுதல் மற்றும் அவர்களை பணியிலிருந்து நிறுத்துதல் போன்ற சேவைகளையே மேற்கொண்டு வருகின்றது. நீதிச்சேவை ஆணைக்குழுவின் தலைவராக பிரதம நீதிபதி நியமிக்கப்படுவதுடன் மற்றும் ஏனைய இரு உயர் நீதிமன்ற நீதிபதிகளும் இதில் உறுப்புரிமை பெற்றுள்ளனர்.

ஒக்ரோபர் 07 அன்று, தனது பிள்ளைகளை ரெனிஸ் வகுப்பு முடிந்ததும் அழைத்துச் செல்வதற்காக திரு.திலகரட்ண தனது காரில் காத்துக் கொண்டிருந்த போது அவர் மீது அடையாளந் தெரியாத ஆயுததாரிகள் தாக்குதல் நடாத்தினர். இரும்புக் கம்பிகளாலும் தமது கைமுட்டிகளாலும் இனந்தெரியாத ஆயுததாரிகள் திலகரட்ண மீது தாக்குதல் நடாத்தியிருந்தனர். சிறிலங்காவின் தலைநகரான கொழும்பிலுள்ள பொது வீதி ஒன்றில் வைத்து பட்டப்பகலில் இவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்கள் தொடர்பாக அறிக்கை வெளியிட்டபின்னர் தனது வாழ்வு ஆபத்தைச் சந்தித்துள்ளதாக திலகரட்ண செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ‘பல்வேறு வேறுபட்ட அதிகாரங்களைக்’ கொண்டுள்ளவர்களால் நீதிச் சேவை ஆணைக்குழுவானது அச்சுறுத்தப்பட்டுள்ளதுடன், அதிலுள்ளவர்களால் தலையீடு செய்யப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. நீதித்துறை மற்றும் நீதிச் சேவை ஆணைக்குழுவின் சுயஅதிகாரத்தை பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை ‘தொடர்புபட்ட தரப்புக்கள்’ இன்னமும் மதிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கான சான்றுகள் தம்மிடம் உள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கை தொடர்பாக குழப்பம் நிலவிய வேளையில், இது தொடர்பில் சிறிலங்கா அதிபர் சில விடயங்களைத் தெரியப்படுத்தியிருந்தார். அதாவது அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நீதிபதிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காகவும் நீதித்துறையின் ஏனைய செலவுகளுக்கும் எவ்வளவு தொகையை ஒதுக்குவது எனத் தீர்மானிப்பதற்காகவே தனது செயலாளர் நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு அழைப்பு விடுத்ததாக மகிந்த ராஜபக்ச ஊடகங்களிடம் தெரிவித்தார். ராஜபக்ச குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளதாக அறியப்படும் மாவட்ட நீதிபதி ஒருவரை தற்காலிகமாக பதவியிலிருந்து நீக்கியமை தொடர்பாக விசாரணை செய்வதற்காகவே ஆனைக்குழுவை சிறிலங்கா அதிபர் அழைத்திருந்ததாக மூத்த சட்டவாளர்கள் கூறுகின்றனர்.

சிறிலங்காவின் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கும் சிறிலங்கா அதிபருக்கும் இடையிலான உறவில் ஏற்கனவே விரிசல் ஏற்பட்டிருந்தது. சிராணி பண்டாரநாயக்கவின் கணவரான பிரதீப் காரியவம்சம் சிறிலங்கா அரசுக்குச் சொந்தமான தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக பொறுப்பு வகித்த வேளையில் இடம்பெற்ற சந்தேகத்திற்குரிய பங்குப் பரிமாற்றம் தொடர்பில் தற்போது அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகின்ற இந்நிலையில் சிறிலங்காவின் பிரதம நீதியரசருக்கும் சிறிலங்கா அதிபருக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவானது சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளது. ஊழல் மோசடிகள் தொடர்பான உச்ச முறையீடுகளுக்கு தீர்வு வழங்குவதில் ஊழல் மோசடி ஆணைக்குழு மிக மந்தகரமாக செயற்பட்டு வருகின்ற போதிலும், பிரதீப் காரியவம்சம் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டை மட்டும் இவ் ஆணைக்குழு மிக வேகமாக விசாரித்துள்ளது. சிறிலங்காவின் பிரதம நீதியரசராக மனைவி பதவி வகிக்கும் போது சிறிலங்கா அரசுக்குச் சொந்தமான வங்கி ஒன்றின் தலைவராக திரு.காரியவம்சம் எவ்வாறு பதவி வகித்திருக்க முடியும் என ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

திலகரட்ண மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அனைத்துலக சமூகமும் கண்டித்துள்ளது. இதனுடன் தொடர்புபட்டவர்களை நீதியின் முன் நிறுத்துமாறும், நீதிபதிகள் மீதான தாக்குதல்கள் மற்றும் தலையீடுகள் என்பன நிறுத்தப்படுவது உறுதிசெய்யப்பட வேண்டும் எனவும் அனைத்துலக நீதிபதிகள் ஆணைக்குழு சிறிலங்கா அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்காவிலுள்ள மாவட்ட, உயர் நீதிமன்ற நீதிபதிகள் இரு வாரகால பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான சட்டவாளர்களும் ஆதரவாளர்களும் பங்குபற்றினர். ஏற்கனவே நீதித்துறைக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையிலான முறுகல் நிலை உச்சமடைந்துள்ள நிலையில், சிறிலங்கா உயர் நீதிமன்றம் அரசியலமைப்பை மீறியுள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ச ஒக்ரோபர் 09 அன்று குற்றம் சாட்டியுள்ளதானது இம்முறுகல் நிலையை மேலும் தீவிரமாக்கியுள்ளது.

உயர் நீதிமன்றமானது தனது தீர்ப்பை சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பாது நாடாளுமன்ற செயலருக்கு நேரடியாக அனுப்பியதன் மூலம் அரசியலமைப்பை மீறியுள்ளதாக சிறிலங்கா அதிபரின் சகோதரர்களில் ஒருவரான சமல் ராஜபக்ச மேலும் குற்றம் சுமத்தியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதே.

Print Friendly, PDF & Email