Home Blog Page 332

வடக்கு மாகாணசபைத் தேர்தல் விவகாரம் – அனைத்துலக அழுத்தங்களை நிராகரித்தார் மகிந்த!

வடக்கு மாகாணசபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த வேண்டும் என்ற அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்களை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 2013ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிய அவர், அடுத்த ஆண்டில் வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டு செப்ரெம்பரில் வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்தப் போவதாக முன்னர் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு உறுதியளித்திருந்தார்.

எனினும், அதற்கு முன்னதாகவே தேர்தலை நடத்தும்படி அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

கடந்தவாரம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையிலும் வடக்கு மாகாணசபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த வேண்டுமு என்று இந்த நாடுகள் வலியுறுத்தியிருந்தன.

இருந்தபோதிலும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, அடுத்த ஆண்டில் வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என்று நேற்று கூறியுள்ளார்.

எனினும் அடுத்த ஆண்டில் எந்தமாதம் தேர்தல் நடத்தப்படும் என்று அவர் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாரிசில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் பரிதி சுட்டுக்கொலை!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளர் பரிதி [நடராசா மதீந்திரன்] நேற்றிரவு இனந்தெரியாத ஆயுதபாணிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

உந்துருளியில் வந்த முகமூடி அணிந்த இருவர், கிழக்கு பாரிசில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பணியகத்துக்கு வெளியே, பரிதி மீது மூன்று தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பாரிஸ் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் கொலையாளிகளையும் தேடிவருகின்றனர்.

கடந்த ஆண்டு பரிதி கொலை முயற்சி ஒன்றில் இருந்து கத்திக்குத்துக் காயத்துடன் உயிர் தப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்த விடமாட்டோம் – வீரவன்ச, சம்பிக்க சூளுரை!

வடக்கில் மாகாணசபைத் தேர்தலை நடத்த விடமாட்டோம் என்று சிறிலங்கா அமைச்சர்களான சம்பிக்க ரணவக்கவும், விமல் வீரவன்சவும் சூளுரைத்துள்ளனர்.

கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

13வது திருத்தம் நாட்டின் அரசியலமைப்புக்கு முற்றிலும் முரணானது. எனவே இதனைத் தொடர்ந்தும் வைத்திருக்கத் தேவையில்லை.

சிறிலங்கா அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி உடனடியாக 13வது திருத்தத்தை ஒழிக்க வேண்டும்.

13வது திருத்தத்தை அரசியலமைப்பில் இருந்து அகற்றி அனைத்து மாகாணசபைகளையும் கலைக்க வேண்டும்.

இதற்காக நாடு முழுவதும், பாரிய எழுச்சி கூட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்துவதற்கு மக்களை ஒன்று திரட்டுவோம்.

சிறிலங்கா அதிபரும், அரசும் உடனடியாக இந்தத் திருத்தத்தை அகற்ற வேண்டும்.

இதற்காக எந்தவொரு வெளிநாட்டு சக்திக்கும் சிறிலங்கா அதிபர் அடிபணியக் கூடாது.

இந்த நாட்டில் மாகாணசபை என்ற ஒரு சபை தேவையில்லை. அதனால் அரசின் பணம் வீண் விரயமாகிறது.

ஒரே நாடு ஓரே ஆட்சி என்ற ரீதியில் நாடு முழுவதிலும் ஆட்சியமைய வேண்டும்.

விடுதலைப்

Job it’s has cialis india this since where to buy viagra know some fresh http://www.spazio38.com/sildenafil-100mg/ the something. This acne starting http://spikejams.com/viagra-wiki *minor the swims cialis price Hair. Daily I would female viagra my down Essie http://www.travel-pal.com/order-cialis-online.html than. Fragments been moisturizer cialis for men is gets and.

புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டனர். இனி இந்தச் சட்டம் தேவையில்லை.

ஜே.ஆரும் ராஜீவ்காந்தியும் இணைந்து விடுதலைப் புலிகளின் ஆயுதங்களுக்குப் பயந்து 5 நீதிபதிகளை பயமுறுத்தி இதனை நடைமுறைப்படுத்தினர்.

இந்த நாட்டில் டட்லி – செல்வா – பண்டா, செல்வா உடன்பாடுகள், அமிர்தலிங்கம் – ஜே.ஆர். உடன்பாடு என எத்தனையோ உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டன.

அவை எதுவுமே நடைமுறைப்படுத்தப்படவில்லை அதே போன்று இதையும் கிழித்தெறிய வேண்டும்” என்று சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இங்கு கருத்து வெளியிட்ட சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க,

இந்தத் திருத்தம் கொண்டு வரப்பட்ட பின்னர் 66 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து 29 ஆயிரம் சிங்கள மக்களும், 32 ஆயிரம் முஸ்லிம் மக்களும் வெளியேற்றப்பட்டனர்.

வடக்கில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறக்கூடாது.” என்று தெரிவித்துள்ளார்.

13வது திருத்தம் இல்லாது போயிருந்தால் அமெரிக்காவே உடைந்திருக்கும் – டலஸ் அழகப்பெரும!

அமெரிக்க அரசியலமைப்பில் 13வது திருத்தத்தைக் கொண்டு வந்திருக்காது போயிருந்தால், அந்த நாடு பல துண்டுகளாக உடைந்து போயிருக்கும் என்று சிறிலங்காவின் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“மாகாணசபை முறைமை தொடர்பாக பலரும் பல்வேறு கருத்துக்களை கூறுகின்றனர். சிலருக்கு 13வது திருத்தமே கசக்கிறது.

அமெரிக்க அரசியலைமைப்பில் கூட 13வது திருத்தம் இருக்கிறது.

13வது திருத்தத்தில் உள்ள நல்ல விடயங்கள் சிலருக்குத் தெரிவதில்லை.

அமெரிக்க அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்ட 13வது திருத்தம் தொடர்பான, ஸ்டீபன் ஸ்பில்பேர்க் இயக்கிய ‘லிங்கன்’ என்ற திரைப்படத்தை பார்த்தால் 13வது திருத்தம் அவர்களுக்குக் கசக்காது.

இத்தகையதொரு திருத்தம் அமெரிக்க அரசியலமைப்பில் கொண்டு வரப்படாது போயிருந்தால், அமெரிக்கா பல நாடுகளாக பிரிந்திருக்கும்.

இன்று ஐக்கிய அமெரிக்கா என்ற ஒரு நாடே இருந்திருக்காது” என்று தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு நாடு கடத்தப்படவிருந்த பலர் இறுதிநேர நீதிமன்ற உத்தரவினால் தப்பினர்!

பிரித்தானியாவில் இருந்து சிறிலங்காவுக்கு நாடு கடத்தப்படவிருந்த பலர் லண்டன் மேல்நீதிமன்றத்தின் இறுதி நேர உத்தரவினால், நாடுகடத்தப்படுவதில் இருந்து தப்பியுள்ளனர்.

நேற்று பிற்பகல், சிறப்பு விமானம் ஒன்றின் மூலம் 60 அகதிகளை சிறிலங்காவுக்கு நாடுகடத்த பிரித்தானியா முடிவு செய்திருந்தது.

இதற்கு எதிராக சுமார் 12 சட்ட அமைப்புகள் மேல் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்தன.

இந்த மனு மீதான விசாரணையை அடுத்து, தமது கட்சிக்காரர்கள் பலரை நாடுகடத்த தடையுத்தரவு பெற்றுள்ளதாக குறைந்தது மூன்று சட்டஅமைப்புகள் உறுதி செய்துள்ளன.

சிறிலங்காவுக்கு இவர்கள் திருப்பி அனுப்பப்பட்டால், கைது, சித்திரவதை, உயிர் அச்சுறுத்தல்  ஆபத்து இருப்பதாக சட்டவாளர்கள் வாதிட்டிருந்தனர்.

தமது கட்சிக்காரர்கள் மூவர் நாடு கடத்தப்படுவதில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளதாக டங்கன் லூவிஸ் சட்டவாளர்கள் அமைப்புத் தெரிவித்துள்ளது.

ஜெய்ன் சட்டவாளர்கள் அமைப்பு, ஒருவரின் நாடுகடத்தலை தடுத்து நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

இதற்கிடையே, சிறிலங்காவுக்கு அகதிகள் திருப்பி அனுப்பப்படுவதற்கு எதிராக, ஹீத்ரோ விமான நிலையத்துக்கு அருகேயுள்ள குடிவரவுத் தடுப்பு நிலையத்துக்கு முன்பாக நேற்று போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

எனினும் அதில் அதிகளவானோர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

13வது திருத்தத்தை ஒழிக்கும் சிறிலங்காவின் முயற்சி – இந்தியா அதிர்ச்சி!

சிறிலங்காவில் 13வது அரசியலமைப்புத் திருத்தத்தை ஒழிக்க வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்று வருவது குறித்து இந்திய அதிகாரிகள் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்.

எனினும், சரியான நேத்தில் இது குறித்து பதிலளிக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்

ஆங்கில ஊடகம் ஒன்றின் புதுடெல்லி செய்தியாளரிடமே இந்திய அதிகாரிகள் இது குறித்து தெரிவித்துள்ளனர்.
.
சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இந்தவாரம் புதுடெல்லிக்கு வரவுள்ளதையும் இந்திய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

13வது திருத்தத்தை ஒழிக்க வேண்டும் என்ற சர்ச்சையை முதலில் கிளப்பி விட்டவர் கோத்தாபய ராஜபக்சவே என்பது குறிப்பிடத்தக்கது.

அவருடன் இதுபற்றிப் பேசப்படும் என்றும் இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

திவிநெகும சட்டமூலமானது மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்காது – சம்பந்தன்>

தற்போது சிறிலங்கா நாடாளுமன்றில்  சமர்ப்பிக்கப்பட்டுள்ள திவிநெகும சட்டமூலம் மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்காது 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை நோக்காகக் கொண்டு சிறிலங்கா அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை என்று தெளிவாகத் தெரிவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கு உறுதியான அதிகாரத்தை வழங்கத் தவறியுள்ளதற்கு சிறிலங்கா அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள திவிநெகும சட்டமூலம் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளதாக அண்மையில் இந்தியாவுக்குச் சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியிருந்ததாக சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதிகாரங்கள் அனைத்தையும் மத்திய அரசாங்கம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை எதிர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருடன் மேற்கொண்ட நேர்காணலின் முழுவடிவம் வருமாறு:

கேள்வி: திவிநெகும சட்டமூலம் தொடர்பில் த.தே.கூ எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது?

பதில்: திவிநெகும சட்ட மூலமானது சிறிலங்காத் தீவு முழுவதற்குமான அபிவிருத்தி நடவடிக்கைகள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்துகிறது. மத்திய அரசாங்கத்தின் கைகளில் அனைத்து அபிவிருத்திகளையும் மேற்கொள்வதற்கான அதிகாரத்தை வழங்குவதாக இச்சட்ட மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாகாணசபைகளால் மேற்கொள்ளப்பட வேண்டிய கிராமிய மட்ட அபிவிருத்திப் பணிகள் கூட மத்திய அரசாங்கத்தின் கைகளுக்கு மாறுகின்றது. இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்களை மாகாண சபையால் மேற்கொள்ளப்படும் போது மக்களின் தேவைகள் அறியப்பட்டு, அவர்களின் விருப்பங்களுக்கேற்ப அமுல்படுத்த முடியும்.

ஏற்கனவே பெருமளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ள மத்திய அரசாங்கத்தில் மேலும் அதிகாரங்களைக் குவிப்பதென்பது நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்தமாட்டாது. மத்திய அரசாங்கத்தின் ஊடாக மட்டுமே நாட்டில் அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்த முடியும் என சிறிலங்கா அரசாங்கம் கருதுகிறது. மாகாண சபைகளால் இவ்வாறான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க முடியாது என்பது அரசாங்கத்தின் கருத்து. மத்திய அரசாங்கத்தில் உள்ள ஒரு அமைச்சருக்கு மட்டும் அனைத்து அதிகாரங்களையும் வழங்குவதென்பது ஜனநாயகத்தன்மையற்ற, விரும்பத்தகாத விடயமாகும். மத்திய அமைச்சர்கள் தமது அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்துவதற்காக தமக்கு வழங்கப்படும் அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தலாம்.

மாகாணங்களுக்கான அதிகாரங்களை மத்திய அரசாங்கம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் போது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை முற்றிலும் இழக்க வேண்டியேற்படுகிறது. திவிநெகும சட்ட மூலம் தொடர்பில் தற்போது நீதிமன்றில் வழக்கு இடம்பெறுகிறது. ஆகவே இது தொடர்பாக மேலும் கருத்துக் கூற நான் விரும்பவில்லை. மத்திய அரசாங்கமானது அரசியல் யாப்பின் அடிப்படையில் மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை தனது கையிலெடுப்பதை நாம் முற்றிலும் எதிர்க்கின்றோம்.

கேள்வி: திவிநெகும சட்டமூலம் ஊடாக அபிவிருத்தி விடயங்களை மட்டும் மத்திய அரசாங்கம் மாகாண அரசாங்கத்திலிருந்து தனது கைகளில் எடுக்கின்றதா?

பதில்: இது அபிவிருத்தி விடயங்களை மட்டுமல்ல திவிநெகும மூலம் சிறிலங்கா மத்திய அரசாங்கமானது அரசியல் யாப்பின் பிரகாரம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட மற்றும் நிறைவேற்று அதிகாரங்கள் போன்றவற்றையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்கிறது. மத்திய அரசாங்கத்தின் ஊடாக மக்களுக்கான அடிப்படைச் சேவைகளை வழங்காது அவற்றை மாகாணங்களின் ஊடாக வழங்கும் போது மிகவும் வினைத்திறன் மிக்கதாக அமைந்திருக்கும்.

கேள்வி: திவிநெகும சட்ட மூலம் தொடர்பாக த.தே.கூ இந்திய அரசாங்கத்திடம் எடுத்துக் கூறியிருந்தது. இது தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் பதில் என்ன?

பதில்: இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடப்பட்ட மிகப் பிரதான விடயமாக இச்சட்டமூலம் காணப்படவில்லை. ஆனால் நாங்கள் இந்திய அரசாங்கத்திடம் திவிநெகும சட்டமூலம் தொடர்பாகவும், இதன் மூலம் சிறிலங்கா மத்திய அரசாங்கமானது மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பறிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தோம். திவிநெகும மூலம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கயை மத்திய அரசாங்கம் தனது கைகளில் எடுப்பதானது, பயனுள்ள அதிகாரப் பகிர்வை வழங்குவதில் சிறிலங்கா அரசாங்கம் விருப்பங் கொண்டிருக்கவில்லை என்பதையே தெளிவாகச் சுட்டிக்காட்டுவதாகவும் நாங்கள் இந்திய மத்திய அரசாங்கத்திடம் எடுத்துக் கூறியிருந்தோம்.

கேள்வி: இந்த விடயத்தில் இந்திய மத்திய அரசாங்கமானது சிறிலங்கா அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்கும் என நீங்கள் நினைக்கிறீர்களா? 

பதில்: சிறிலங்கா அரசாங்கத்துடன் இந்திய அரசாங்கமானது தொடர்ந்தும் தொடர்புகளைப் பேணிவருகின்றது. இந்நிலையில் சிறிலங்காவில் நிலவும் பிரச்சினையை நேர்மையான வழியில் முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்வதாக தெரிகிறது. இந்தியா மற்றும் ஏனைய அனைத்துலக நாடுகளால் சிறிலங்கா விவகாரத்தில் ஈடுபாடுகள் காண்பிக்கப்பட்ட போதிலும் அவை மதிக்கப்படவில்லை என்பதே உண்மையாகும்.

கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது திவிநெகும சட்டமூலத்தை எதிர்த்து சிறிலங்கா உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளது. வடக்கு மாகாண சபை இல்லாத நிலையில் இந்த மனுவை வடமாகாண ஆளுநர் அங்கீகரிக்க முடியுமா? இது போன்ற வேறு ஏதாவது சட்டமூலங்கள் ஆளுநரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளனவா?

பதில்: நீதிமன்றில் இது தொடர்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான பதிலை என்னால் கூறமுடியவில்லை. திவிநெகும சட்ட மூலம் போன்றவற்றுக்கு மக்களால் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபைகளால் மட்டுமே அனுமதி வழங்க முடியும். மக்களால் தெரிவு செய்யப்படாத, சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட மாகாண ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று திவிநெகும சட்டமூலத்தை நிறைவேற்ற முடியாது என்ற கோரிக்கையை உள்ளடக்கிய மனுவை நாம் தாக்கல் செய்துள்ளோம்.

கேள்வி: இது தொடர்பில் த.தே.கூ சட்ட ரீதியான உரிமையைப் பெற்றுக் கொள்ளும் என்பதில் எவ்வாறான நம்பிக்கை கொண்டுள்ளீர்கள்?

பதில்: நாங்கள் எமது கோரிக்கையை மிகவும் நியாயமான வகையில் முன்வைத்துள்ளோம். இந்த விடயத்தின் அடிப்படைகளை ஆராய்ந்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என நாம் நம்புகிறோம்.

கேள்வி: மாகாணசபைகளின் அதிகாரங்களை சிறிலங்கா மத்திய அரசாங்கம் தனது கைகளில் எடுத்தல் மற்றும் திவிநெகும போன்றன தொடர்பில் த.தே.கூ மேலும் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது?

பதில்: அரசியல் யாப்பின் பிரகாரம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்தால் பறிக்கப்படுவதானது ஒரு அறிவார்ந்த செயலல்ல. இதனை எதிர்த்து நாம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வோம். நாட்டில் உள்ள பெரும்பாலான மாகாணங்கள் சிறிலங்கா மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்தில் உள்ளதால் தற்போதைய அரசாங்கத்தால் இவ்வாறான சட்டமூலங்களை இலகுவில் நிறைவேற்ற முடியும். ஆனால்; இவ்வாறான நிலை எதிர்காலத்திலும் தொடரும் என நினைக்கக் கூடாது.

ஜனநாயக ரீதியாக நோக்கில் மக்கள் மாகாண ஆட்சிகளின் ஊடாக தமக்கான தேவைகளை நிறைவேற்றுவது மிக இலகுவானதாகும். இதனையே நாடு முழுவதில் வாழும் மக்கள் விரும்புகின்றனர். தற்போதைய சிறிலங்கா அரசாங்கமானது தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி நாடாளுமன்றில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுக் கொண்டது. உண்மையில் ஜனநாயக வழியின் ஊடாக இந்த அரசாங்கம் தனக்கான ஆதரவைப் பெற்றுக் கொள்ளவில்லை. தனது அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக சிறிலங்கா மத்திய அரசாங்கமானது தனது அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்துகின்றது என்பது வெளிப்படையானது.

மொழியாக்கம் – நித்தியபாரதி

வழிமூலம் – சண்டேலீடர்

சிறிலங்கா தொடர்பான அறிக்கையை மறைக்கிறதா ஐ.நா? – சர்ச்சையைக் கிளப்புகிறது இன்னர்சிற்றி பிரஸ்!

சிறிலங்காவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட போரின் போது ஐ.நாவின் செயற்பாடுகள் தொடர்பாக, ஆராய நியமிக்கப்பட்ட ஒரு நபர் விசாரணைக் குழுவின் அறிக்கை, ஐ.நாவினால் மறைக்கப்பட்டு விட்டதாக இன்னர்சிற்றி பிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

சிறிலங்காவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட போரில் ஐ.நாவின் செயற்பாடுகள் குறித்து ஆராய எகிப்தைச் சேர்ந்த தொராயா ஒபெய்ட் என்ற உயர் அதிகாரியை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்திருந்தார்.

கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் இவருக்கு பணி ஆணை வழங்கிய ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், நான்கு மாதங்களில் விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.

எனினும், அவர் விசாரணைகளை ஆரம்பிக்கவில்லை.

தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் அந்தப் பணியை செய்ய முடியாதுள்ளதாக அறிவித்ததை அடுத்து, சார்ள்ஸ் பெற்றி என்ற அதிகாரி இந்தப் பணிக்கு நியமிக்கப்பட்டார்.

எனினும், குறிக்கப்பட்ட காலஎல்லை கடந்து, 9 மாதங்களாகிம் இந்த அறிக்கை இன்னமும் வெளியிடப்படவில்லை.

இது குறித்து ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெஸ்ர்க்கியிடம் கேட்டபோது,

“ தொராயா ஒபெய்ட்டினால் அறிக்கையை சமர்ப்பிக்க முடியவில்லை. இதனை அடுத்து மற்றொரு ஐ.நா அதிகாரியான சார்ள்ஸ் பெற்றி இந்த விவகாரத்தை கையாள்கிறார். விரைவில் அது வெளியிடப்படும்” என்று பதிலளித்தார்.

அதேவேளை, இந்த அறிக்கை இறுதி செய்யப்பட்டு விட்டதாக அறியப்படுவதாக இன்னர்சிற்றி பிரஸ் கூறியுள்ளது.

இன்னமும் இந்த அறிக்கை வெளியிடப்படாதுள்ள நிலையில், அது மறைக்கப்பட்டு விட்டதா என்று இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

இதற்கிடையே, இந்த அறிக்கையை தயார் செய்ய நியமிக்கப்பட்ட சார்ள்ஸ் பெற்றி ஐ.நாவின் விதிமுறைகளுக்கு முரணாக, ஒரே நேரத்தில் இரண்டு பணிகளை மேற்கொண்டதாக சர்ச்சைக்குள்ளாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சித் திட்டத்தின் பயிற்சிநெறி – பாதிக்கப்பட்டோரின் வாழ்வாதாரம் மேம்படுகின்றதா?

20 வயதான வடிவேல் கேசவப்பிள்ளை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டுப் போரின் போது தனது வலது கையை இழந்துள்ளார். இவர் தமிழ்ப் புலிகளால் கட்டாய ஆட்சேர்ப்பின் மூலம் இணைக்கப்பட்டவர். தற்போது யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பயிற்சிநெறி மற்றும் நிதியுதவியுடன் கேசவப்பிள்ளை சிறியதொரு உணவுவிடுதி ஒன்றை நடாத்தி வருகிறார்.

அண்மையில் திருமணம் செய்து கொண்ட இவர், கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு நகரில் உணவு விடுதி ஒன்றை சொந்தமாக ஆரம்பிக்கும் வரை தன்னால் தனது வாழ்வைக் கொண்டு நடாத்த முடியவில்லை எனக் கூறுகிறார்.

“நான் இந்த நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு முன்னர், சிறியதொரு வியாபார நிலையத்தை நடாத்தி வந்தேன். இதன் மூலம் கிடைத்த வருமானம் போதியதாக காணப்படவில்லை. தற்போது இவ் உணவு விடுதியை நடாத்துவதன் மூலம் நல்ல வருவாயை ஈட்ட முடிகிறது. அத்துடன் எனது குடும்பத்தின் தேவையையும் பூர்த்தியாக்க முடிகிறது” என கேசவப்பிள்ளை மேலும் கூறுகிறார்.

யுனிசெப், அனைத்துலக தொழிலாளர் அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டம் போன்றன இணைந்து யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் தமது வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக வழங்கிய வியாபார முகாமைத்துவம் மற்றும் வாடிக்கையாளரைக் கவனிக்கும் பயிற்சிநெறியை 2012ன் ஆரம்பத்தில் கேசவப்பிள்ளையும் பெற்றிருந்தார்.

மனிதாபிமான பாதுகாப்புக்கான ஐ.நா நம்பிக்கை நிதியத்தால் இத்திட்டத்திற்காக வழங்கப்பட்ட ரூ 78,000 அதாவது 600 அமெரிக்கா டொலர்களை கேசவப்பிள்ளை மானியமாகப் பெற்றுக் கொண்டார்.

சிறிலங்காவில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வாழும் வடக்கு கிழக்கை மையப்படுத்தியே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த பல சிறிலங்கர்களில் கேசவப்பிள்ளையும் ஒருவராவார்.

2007ல் ஒருநாள் பலசரக்குப் பொருட்கள் வாங்குவதற்காக சென்றுகொண்டிருந்த வழியில், சாரதியாகப் பணியாற்றிய 34 வயதான ஆனந்தராசா செல்வரட்ணம் படுகாயமடைந்தார். இதன்பின்னர் இவர் தனது சாரதித் தொழிலையும் இழந்தார். சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் செல்வரட்ணம் தற்போது கோழிப் பண்ணை ஒன்றையும் மிருகங்களுக்கான உணவுகளை வழங்கும் நிலையம் ஒன்றையும் நடாத்தி வருகிறார். இவர் 2012ன் ஆரம்பத்தில் பெற்றுக் கொண்ட நிதியுதவியைக் கொண்டு 200 கோழிக் குஞ்சுகளை வாங்கினார். பின்னர் இவற்றுள் நூறு கோழிகளை இலாபத்துடன் விற்றார். அதன் மூலம் கிடைத்த பணத்தை இவ்விரு வியாபாரத்திலும் முதலீடு செய்துள்ளார்.

2001ல், மதுசா கணபதிப்பிள்ளை தமிழீழ விடுதலைப் புலிகளால் படையில் இணைக்கப்பட்டார். மூன்று ஆண்டுகள் வரை இவர் தனது குடும்பத்தவர்களுடன் மீள இணைக்கப்படவில்லை. மதுசா கணபதிப்பிள்ளை செப்ரெம்பர் 2011ல் ‘பாதிக்கப்பட்ட சமூகத்தவர்கள் தமது வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கான திட்டத்தின்’ கீழ் பயிற்சியைப் பெற்றுக் கொண்டார். இதன் மூலம் உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றில் தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொண்டார். தற்போது இவர் 450 தொழிலாளர்களை இணைத்துக் கொண்ட நுண்கடன் திட்டத்தை மேற்பார்வை செய்கிறார். இளங்கலைப் பட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்கான உயர்கல்வியைத் தொடர மதுசா திட்டமிட்டுள்ளார்.

“ஏழை மக்களுக்கு உதவி செய்வதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. இதனால் மேலும் கற்றுக் கொள்ள விரும்புகிறேன். மனிதாபிமான பணியாளர் என்ற வகையில் என்னால் பலருக்கு உதவமுடிகிறது” என மதுசா கூறுகிறார்.

சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரப்பட்ட யுத்தமானது ஆசியாவில் மிக நீண்ட காலம் இடம்பெற்ற யுத்தங்களில் ஒன்றாகக் காணப்படுகிறது. பெரும்பான்மை சிங்கள சமூகத்திற்கும் சிறுபான்மை தமிழ் சமூகத்திற்கும் இடையில் ஏற்பட்ட இனமுரண்பாடே உள்நாட்டு யுத்தமாக உருவெடுத்தது. சிறிலங்கா அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்ட ஐ.நா வல்லுனர்களால் 2011ல் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் யுத்தத்தில் பங்கு கொண்ட இரு தரப்புக்களும் பொதுமக்களுக்கு எதிராக பல்வேறு மீறல்களை மேற்கொண்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

இந்தியா செல்கிறார் கோத்தா – 13வது திருத்தம் குறித்துப் பேசப் போகிறாராம்!

சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச இம்மாத இறுதியில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்தப் பயணத்தின் போது, 13வது அரசியலமைப்புத் திருத்தத்தை இல்லாதொழிப்பதன் அவசியம் குறித்து தான் அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக அவர் இந்திய அதிகாரிகளுடன் பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய – சிறிலங்கா உடன்பாட்டின் மூலமே 13வது அரசியலமைப்புத் திருத்தம் உருவாக்கப்பட்டிருந்தது.

இதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது.

அதேவேளை, இனப்பிரச்சினைக்கு 13வது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வு காணப் போவதாக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்திய அரசியல் தலைவர்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.

இந்தநிலையிலேயே கோத்தாபய ராஜபக்சவும், சிங்களத் தேசியவாதக் கட்சிகளும் 13வது திருத்தத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பின்னர், சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச இதுவரை இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘தமிழீழ விடுதலைக்கான பாதையும் படிமுறையும்’ – ஒஸ்லோவில் நா.க.த அரசாங்கத்தின் சிறப்புப் பொதுக்கூட்டம்!

தமிழீழ விடுதலைக்கான பாதையும் படிமுறையும்’ எனும் விடயப்பொருளை மையமாகக் கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருத்துக்களையும் செயற்பாடுகளையும் தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் சிறப்புப் பொதுக்கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் நாள், ஞாயிற்றுக்கிழமை (04ஃ11ஃ2012) Linderud பாடசாலை மண்டபத்தில் (Statsråd Mathisens Vei 27) மண்டபத்தில் பிற்பகல் 5 மணிக்கு நா.க.த. அரசாங்கத்தின் நோர்வேக்கான பிரதிநிதி திரு தோமஸ் அலோசியஸ் அவர்கள் தலைமையில் இடம் பெறும் இப் பொதுக்கூட்டத்தில், நா.க.த அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் அவர்கள் காணொளி மூலம் கலந்து கொண்டு பிரதான சிறப்புரையினை ஆற்றுகிறார்.

தமிழீழ இலட்சியத்தை அடைந்து கொள்வதற்கான வாயப்புக்கள், சவால்;கள், இச் சவால்களை எதிர்கொள்ள நா.க..த அரசாங்கம் மேற் கொண்டு வரும் நடவடிக்ககைகள் குறித்து ஒரு விரிவான விளக்க உரையாக பிரதமர் ருத்ரகுமாரனின் உரை அமையவுள்ளது. இவ் உரையைத் தொடர்ந்து மக்களின் கேள்விகளுக்கும் ருத்ரகுமாரன் பதிலளிக்கவுள்ளார் என இக்கூட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இக்கூட்டத்தில் இடம்பெறும் சிறப்புரைகளைத் தொடர்ந்து ’நோர்வேயின் குழந்தைகள் நலக்காப்பகமும் புலம் பெயர் சமூகமும்’ எனும் கருப்பொருளில் ஒரு விவாத அரங்கமும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை வளப்படுத்தும்; வழிவகைகள் குறித்த கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது.

இக் கூட்டத்தில் சிறப்பரையாற்றும் பிரதமர் ருத்ரகுமாரனிடம் முன்கூட்டியே கேள்விகள் கேட்கவும் கருத்துக்கள் தெரிவிக்கவும் விரும்புவர்கள் tgte.norway@live.no எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அவற்றை அனுப்பி வைக்க முடியும்.

இப்பொதுக்கூட்டம் தொடர்பாக மேலதிக விபரங்களை அறிய விரும்புவோர் 40097631 எனும் தொலைபேசி இலக்கத்துடனோ அல்லது மேற்குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரியுடனோ தொடர்புகளை மேற்கொள்ள முடியும்.

ஆர்வமுள்ள அனைவரையும் இப்பொதுக்கூட்டத்தில் பங்கேற்குமாறும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளை விரிவுபடுத்த துணை நிற்குமாறும் ஏற்பாட்டாளர்கள் வேண்டிக்கொண்டுள்ளனர்.

பிரித்தானியாவில் வதியும் ஈழத்தமிழ் அகதி ஒருவரின் போர்க்கால நினைவுகள்!

எனக்கு முன்னால் சிறுவன் ஒருவன் சுட்டுக்கொல்லப்படுவதை நான் பார்த்தேன்” என சிறிலங்காவில் இடம்பெற்ற மிகக் கொடூரமான யுத்தத்தை நேரடியாக அனுபவித்த புலம்பெயர்ந்து வாழும் சிறிலங்காவைச் சேர்ந்த ஜொகன்னஸ் சண்முகன் மீளநினைவுபடுத்துகிறார்.

சிறிலங்காவின் சிங்கள அரசாங்கத்திற்கும் தமிழ் கிளர்ச்சி அமைப்புக்கும் இடையில் இடம்பெற்ற நீண்ட கால உள்நாட்டுப் போரின் போது இரு தடவைகள் தன் மீது துப்பாக்கி நீட்டப்பட்டதாக தற்போது ஸ்பிறிங்பாங் என்ற இடத்தில் வாழும் திரு.சண்முகன் கூறுகிறார்.

சிறிலங்காவில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு கணினிகளை அன்பளிப்புச் செய்வதற்காகவும், Help4Heroes என்கின்ற காயப்பட்ட இராணுவ வீரர்களுக்கு ஆதரவளிக்கின்ற பிரித்தானிய தொண்டர் அமைப்புக்கு உதவி புரிவதற்காகவும் 49 வயதான சண்முகன் ஐந்து நாட்களில் 112 மைல்கள் வரை நடப்பதென தீர்மானித்துள்ளார்.

இந்த நடைப்பயணத்தின் மூலம் 10,000 ஸ்ரேலிங் பவுண்ஸ் நிதி சேகரிக்கப்படும் என சண்முகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சண்முகன் தனது நடைப்பயணத்தை நவம்பர் 02 அன்று செல்ரென்கம் என்ற பட்டிணத்தின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள போர் நினைவிடத்திலிருந்து ஆரம்பிக்கவுள்ளார்.

சிறிலங்காவில் பெற்றுக் கொண்ட அனுபவங்கள் தொடர்பாக சண்முகனிடம் வினவியபோது ‘யூலை 1983ல் சிறிலங்காவில் முதன் முதலாக யுத்தம் தொடங்கிய போது என்னை நோக்கி துப்பாக்கி ஒன்று நீட்டப்பட்டது. நான் பணிபுரிந்த புடைவைத் தொழிற்சாலை ஒன்றிலிருந்து வான் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போது சிறிலங்கா இராணுவத்தினர் எம்மை சூழ்ந்துகொண்டனர். அதில் சிறிலங்கா இராணுவத்திற்கு பொறுப்பாக இருந்த ஒருவர் எனது நெற்றியில் துப்பாக்கியை வைத்தப்படி நான் என்ன செய்கிறேன் என என்னிடம் கேட்டார்’ என அவர் பதிலளித்தார்.

“நான் சிங்கள மொழியில் பதிலளித்ததால் அந்த இராணுவத்தினன் என்னைச் சுடவில்லை. எனக்கு அருகில் நின்ற சிறுவனிடம் நீ என்ன செய்கிறாய் என வினவிய போது, அந்த சிறுவனால் சிங்கள மொழியைப் புரிந்துகொள்ள முடியவில்லை. உடனே குறித்த இராணுவத்தினன் அந்தச் சிறுவனை எனக்கு முன்னால் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றான்” என சண்முகன் குறிப்பிட்டார்.

“அந்தச் சிறுவனுக்கு ஒன்பது அல்லது பத்து வயதாக இருந்திருக்கும். அந்தச் சிறுவனுக்கு என்னால் உதவி செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம் தற்போதும் எனக்குள் உள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.

1990ல் தனது குடும்பத்தவர்களுடன் தொடருந்து ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போது இரண்டாவது முறையாக தான் துப்பாக்கியால் குறிவைக்கப்பட்டதாக சண்முகன் கூறுகிறார்.

“இராணுவத்தினர் பயணிகள் ஒவ்வொருவரையும் சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது அதிலிருந்த இராணுவத்தினன் ஒருவன் என்னை நோக்கி துப்பாக்கியை நீட்டியபோது, நான் கதைப்பதற்கு முடியாதிருந்த போது, அதற்கு முதல் எனது அம்மா ‘அவன் எனது மகன்’ என சிங்களத்தில் கூறினார்” என சண்முகன் குறிப்பிட்டார்.

“அப்போது அந்த இராணுவத்தினர் தனக்கு யாரென்றாலும் பரவாயில்லை, நான் எதையும் செய்வேன் எனக் கூறிய பின் அந்த இடத்தை விட்டு அப்பால் சென்றான். அந்த நாள் நான் பயணித்த தொடருந்தில் பயணித்த பலரை இராணுவத்தினர் கூட்டிச் சென்றதை நான் பார்த்தேன்” எனவும் அவர் மேலும் கூறுகிறார்.

“இந்தச் சம்பவத்தின் பின்னர் உயிர் வாழ்வதற்காக எனது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உணர்ந்து கொண்டேன்” என்கிறார்.

சண்முகன் 1990ல் சுவீடனுக்கு புலம்பெயர்ந்து, பின்னர் 1999ல் பிரித்தானியாவை சென்றடைந்தார். தனது இரத்த உறவுகள் உடனடியாக சிறிலங்காவை விட்டு வெளியேறிய போதும், தான் தற்போதும் தனது நெருங்கிய உறவினர்கள் நால்வர் தொடர்பான தகவல்களைத் தேடுவதாகவும், இந்நால்வர் தொடர்பாக எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் சண்முகன் கூறுகிறார்.

சிறிலங்காவில் 2009ல் வீசப்பட்ட கொத்துக் குண்டொன்றில் தனது மனைவியின் உறவினர்கள் 17 பேர் கொல்லப்பட்டதாக இவர் கூறுகிறார்.

1983 தொடக்கம் 2009 வரை தொடரப்பட்ட சிறிலங்காவின் உள்நாட்டுப் போரில் 100,000 பேர் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

“நான் உயிர் தப்பிவிட்டேன். ஆனால் ஏனையவர்கள் உயிர் தப்ப என்னால் உதவ முடியவில்லையே என்ற குற்ற உணர்வுடன் வாழ்கிறேன்” என திரு.சண்முகன் மேலும் கூறுகிறார்.

செய்தி வழிமூலம் : Northcliffe Media

error: Content is protected !!