SHARE

வடக்கு மாகாணசபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த வேண்டும் என்ற அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்களை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 2013ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிய அவர், அடுத்த ஆண்டில் வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டு செப்ரெம்பரில் வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்தப் போவதாக முன்னர் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு உறுதியளித்திருந்தார்.

எனினும், அதற்கு முன்னதாகவே தேர்தலை நடத்தும்படி அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

கடந்தவாரம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையிலும் வடக்கு மாகாணசபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த வேண்டுமு என்று இந்த நாடுகள் வலியுறுத்தியிருந்தன.

இருந்தபோதிலும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, அடுத்த ஆண்டில் வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என்று நேற்று கூறியுள்ளார்.

எனினும் அடுத்த ஆண்டில் எந்தமாதம் தேர்தல் நடத்தப்படும் என்று அவர் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email