SHARE

எனக்கு முன்னால் சிறுவன் ஒருவன் சுட்டுக்கொல்லப்படுவதை நான் பார்த்தேன்” என சிறிலங்காவில் இடம்பெற்ற மிகக் கொடூரமான யுத்தத்தை நேரடியாக அனுபவித்த புலம்பெயர்ந்து வாழும் சிறிலங்காவைச் சேர்ந்த ஜொகன்னஸ் சண்முகன் மீளநினைவுபடுத்துகிறார்.

சிறிலங்காவின் சிங்கள அரசாங்கத்திற்கும் தமிழ் கிளர்ச்சி அமைப்புக்கும் இடையில் இடம்பெற்ற நீண்ட கால உள்நாட்டுப் போரின் போது இரு தடவைகள் தன் மீது துப்பாக்கி நீட்டப்பட்டதாக தற்போது ஸ்பிறிங்பாங் என்ற இடத்தில் வாழும் திரு.சண்முகன் கூறுகிறார்.

சிறிலங்காவில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு கணினிகளை அன்பளிப்புச் செய்வதற்காகவும், Help4Heroes என்கின்ற காயப்பட்ட இராணுவ வீரர்களுக்கு ஆதரவளிக்கின்ற பிரித்தானிய தொண்டர் அமைப்புக்கு உதவி புரிவதற்காகவும் 49 வயதான சண்முகன் ஐந்து நாட்களில் 112 மைல்கள் வரை நடப்பதென தீர்மானித்துள்ளார்.

இந்த நடைப்பயணத்தின் மூலம் 10,000 ஸ்ரேலிங் பவுண்ஸ் நிதி சேகரிக்கப்படும் என சண்முகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சண்முகன் தனது நடைப்பயணத்தை நவம்பர் 02 அன்று செல்ரென்கம் என்ற பட்டிணத்தின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள போர் நினைவிடத்திலிருந்து ஆரம்பிக்கவுள்ளார்.

சிறிலங்காவில் பெற்றுக் கொண்ட அனுபவங்கள் தொடர்பாக சண்முகனிடம் வினவியபோது ‘யூலை 1983ல் சிறிலங்காவில் முதன் முதலாக யுத்தம் தொடங்கிய போது என்னை நோக்கி துப்பாக்கி ஒன்று நீட்டப்பட்டது. நான் பணிபுரிந்த புடைவைத் தொழிற்சாலை ஒன்றிலிருந்து வான் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போது சிறிலங்கா இராணுவத்தினர் எம்மை சூழ்ந்துகொண்டனர். அதில் சிறிலங்கா இராணுவத்திற்கு பொறுப்பாக இருந்த ஒருவர் எனது நெற்றியில் துப்பாக்கியை வைத்தப்படி நான் என்ன செய்கிறேன் என என்னிடம் கேட்டார்’ என அவர் பதிலளித்தார்.

“நான் சிங்கள மொழியில் பதிலளித்ததால் அந்த இராணுவத்தினன் என்னைச் சுடவில்லை. எனக்கு அருகில் நின்ற சிறுவனிடம் நீ என்ன செய்கிறாய் என வினவிய போது, அந்த சிறுவனால் சிங்கள மொழியைப் புரிந்துகொள்ள முடியவில்லை. உடனே குறித்த இராணுவத்தினன் அந்தச் சிறுவனை எனக்கு முன்னால் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றான்” என சண்முகன் குறிப்பிட்டார்.

“அந்தச் சிறுவனுக்கு ஒன்பது அல்லது பத்து வயதாக இருந்திருக்கும். அந்தச் சிறுவனுக்கு என்னால் உதவி செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம் தற்போதும் எனக்குள் உள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.

1990ல் தனது குடும்பத்தவர்களுடன் தொடருந்து ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போது இரண்டாவது முறையாக தான் துப்பாக்கியால் குறிவைக்கப்பட்டதாக சண்முகன் கூறுகிறார்.

“இராணுவத்தினர் பயணிகள் ஒவ்வொருவரையும் சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது அதிலிருந்த இராணுவத்தினன் ஒருவன் என்னை நோக்கி துப்பாக்கியை நீட்டியபோது, நான் கதைப்பதற்கு முடியாதிருந்த போது, அதற்கு முதல் எனது அம்மா ‘அவன் எனது மகன்’ என சிங்களத்தில் கூறினார்” என சண்முகன் குறிப்பிட்டார்.

“அப்போது அந்த இராணுவத்தினர் தனக்கு யாரென்றாலும் பரவாயில்லை, நான் எதையும் செய்வேன் எனக் கூறிய பின் அந்த இடத்தை விட்டு அப்பால் சென்றான். அந்த நாள் நான் பயணித்த தொடருந்தில் பயணித்த பலரை இராணுவத்தினர் கூட்டிச் சென்றதை நான் பார்த்தேன்” எனவும் அவர் மேலும் கூறுகிறார்.

“இந்தச் சம்பவத்தின் பின்னர் உயிர் வாழ்வதற்காக எனது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உணர்ந்து கொண்டேன்” என்கிறார்.

சண்முகன் 1990ல் சுவீடனுக்கு புலம்பெயர்ந்து, பின்னர் 1999ல் பிரித்தானியாவை சென்றடைந்தார். தனது இரத்த உறவுகள் உடனடியாக சிறிலங்காவை விட்டு வெளியேறிய போதும், தான் தற்போதும் தனது நெருங்கிய உறவினர்கள் நால்வர் தொடர்பான தகவல்களைத் தேடுவதாகவும், இந்நால்வர் தொடர்பாக எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் சண்முகன் கூறுகிறார்.

சிறிலங்காவில் 2009ல் வீசப்பட்ட கொத்துக் குண்டொன்றில் தனது மனைவியின் உறவினர்கள் 17 பேர் கொல்லப்பட்டதாக இவர் கூறுகிறார்.

1983 தொடக்கம் 2009 வரை தொடரப்பட்ட சிறிலங்காவின் உள்நாட்டுப் போரில் 100,000 பேர் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

“நான் உயிர் தப்பிவிட்டேன். ஆனால் ஏனையவர்கள் உயிர் தப்ப என்னால் உதவ முடியவில்லையே என்ற குற்ற உணர்வுடன் வாழ்கிறேன்” என திரு.சண்முகன் மேலும் கூறுகிறார்.

செய்தி வழிமூலம் : Northcliffe Media

Print Friendly, PDF & Email