தற்போது சிறிலங்கா நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள திவிநெகும சட்டமூலம் மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்காது 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை நோக்காகக் கொண்டு சிறிலங்கா அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை என்று தெளிவாகத் தெரிவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கு உறுதியான அதிகாரத்தை வழங்கத் தவறியுள்ளதற்கு சிறிலங்கா அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள திவிநெகும சட்டமூலம் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளதாக அண்மையில் இந்தியாவுக்குச் சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியிருந்ததாக சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதிகாரங்கள் அனைத்தையும் மத்திய அரசாங்கம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை எதிர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருடன் மேற்கொண்ட நேர்காணலின் முழுவடிவம் வருமாறு:
கேள்வி: திவிநெகும சட்டமூலம் தொடர்பில் த.தே.கூ எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது?
பதில்: திவிநெகும சட்ட மூலமானது சிறிலங்காத் தீவு முழுவதற்குமான அபிவிருத்தி நடவடிக்கைகள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்துகிறது. மத்திய அரசாங்கத்தின் கைகளில் அனைத்து அபிவிருத்திகளையும் மேற்கொள்வதற்கான அதிகாரத்தை வழங்குவதாக இச்சட்ட மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாகாணசபைகளால் மேற்கொள்ளப்பட வேண்டிய கிராமிய மட்ட அபிவிருத்திப் பணிகள் கூட மத்திய அரசாங்கத்தின் கைகளுக்கு மாறுகின்றது. இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்களை மாகாண சபையால் மேற்கொள்ளப்படும் போது மக்களின் தேவைகள் அறியப்பட்டு, அவர்களின் விருப்பங்களுக்கேற்ப அமுல்படுத்த முடியும்.
ஏற்கனவே பெருமளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ள மத்திய அரசாங்கத்தில் மேலும் அதிகாரங்களைக் குவிப்பதென்பது நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்தமாட்டாது. மத்திய அரசாங்கத்தின் ஊடாக மட்டுமே நாட்டில் அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்த முடியும் என சிறிலங்கா அரசாங்கம் கருதுகிறது. மாகாண சபைகளால் இவ்வாறான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க முடியாது என்பது அரசாங்கத்தின் கருத்து. மத்திய அரசாங்கத்தில் உள்ள ஒரு அமைச்சருக்கு மட்டும் அனைத்து அதிகாரங்களையும் வழங்குவதென்பது ஜனநாயகத்தன்மையற்ற, விரும்பத்தகாத விடயமாகும். மத்திய அமைச்சர்கள் தமது அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்துவதற்காக தமக்கு வழங்கப்படும் அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தலாம்.
மாகாணங்களுக்கான அதிகாரங்களை மத்திய அரசாங்கம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் போது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை முற்றிலும் இழக்க வேண்டியேற்படுகிறது. திவிநெகும சட்ட மூலம் தொடர்பில் தற்போது நீதிமன்றில் வழக்கு இடம்பெறுகிறது. ஆகவே இது தொடர்பாக மேலும் கருத்துக் கூற நான் விரும்பவில்லை. மத்திய அரசாங்கமானது அரசியல் யாப்பின் அடிப்படையில் மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை தனது கையிலெடுப்பதை நாம் முற்றிலும் எதிர்க்கின்றோம்.
கேள்வி: திவிநெகும சட்டமூலம் ஊடாக அபிவிருத்தி விடயங்களை மட்டும் மத்திய அரசாங்கம் மாகாண அரசாங்கத்திலிருந்து தனது கைகளில் எடுக்கின்றதா?
பதில்: இது அபிவிருத்தி விடயங்களை மட்டுமல்ல திவிநெகும மூலம் சிறிலங்கா மத்திய அரசாங்கமானது அரசியல் யாப்பின் பிரகாரம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட மற்றும் நிறைவேற்று அதிகாரங்கள் போன்றவற்றையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்கிறது. மத்திய அரசாங்கத்தின் ஊடாக மக்களுக்கான அடிப்படைச் சேவைகளை வழங்காது அவற்றை மாகாணங்களின் ஊடாக வழங்கும் போது மிகவும் வினைத்திறன் மிக்கதாக அமைந்திருக்கும்.
கேள்வி: திவிநெகும சட்ட மூலம் தொடர்பாக த.தே.கூ இந்திய அரசாங்கத்திடம் எடுத்துக் கூறியிருந்தது. இது தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் பதில் என்ன?
பதில்: இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடப்பட்ட மிகப் பிரதான விடயமாக இச்சட்டமூலம் காணப்படவில்லை. ஆனால் நாங்கள் இந்திய அரசாங்கத்திடம் திவிநெகும சட்டமூலம் தொடர்பாகவும், இதன் மூலம் சிறிலங்கா மத்திய அரசாங்கமானது மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பறிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தோம். திவிநெகும மூலம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கயை மத்திய அரசாங்கம் தனது கைகளில் எடுப்பதானது, பயனுள்ள அதிகாரப் பகிர்வை வழங்குவதில் சிறிலங்கா அரசாங்கம் விருப்பங் கொண்டிருக்கவில்லை என்பதையே தெளிவாகச் சுட்டிக்காட்டுவதாகவும் நாங்கள் இந்திய மத்திய அரசாங்கத்திடம் எடுத்துக் கூறியிருந்தோம்.
கேள்வி: இந்த விடயத்தில் இந்திய மத்திய அரசாங்கமானது சிறிலங்கா அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்கும் என நீங்கள் நினைக்கிறீர்களா?
பதில்: சிறிலங்கா அரசாங்கத்துடன் இந்திய அரசாங்கமானது தொடர்ந்தும் தொடர்புகளைப் பேணிவருகின்றது. இந்நிலையில் சிறிலங்காவில் நிலவும் பிரச்சினையை நேர்மையான வழியில் முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்வதாக தெரிகிறது. இந்தியா மற்றும் ஏனைய அனைத்துலக நாடுகளால் சிறிலங்கா விவகாரத்தில் ஈடுபாடுகள் காண்பிக்கப்பட்ட போதிலும் அவை மதிக்கப்படவில்லை என்பதே உண்மையாகும்.
கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது திவிநெகும சட்டமூலத்தை எதிர்த்து சிறிலங்கா உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளது. வடக்கு மாகாண சபை இல்லாத நிலையில் இந்த மனுவை வடமாகாண ஆளுநர் அங்கீகரிக்க முடியுமா? இது போன்ற வேறு ஏதாவது சட்டமூலங்கள் ஆளுநரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளனவா?
பதில்: நீதிமன்றில் இது தொடர்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான பதிலை என்னால் கூறமுடியவில்லை. திவிநெகும சட்ட மூலம் போன்றவற்றுக்கு மக்களால் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபைகளால் மட்டுமே அனுமதி வழங்க முடியும். மக்களால் தெரிவு செய்யப்படாத, சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட மாகாண ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று திவிநெகும சட்டமூலத்தை நிறைவேற்ற முடியாது என்ற கோரிக்கையை உள்ளடக்கிய மனுவை நாம் தாக்கல் செய்துள்ளோம்.
கேள்வி: இது தொடர்பில் த.தே.கூ சட்ட ரீதியான உரிமையைப் பெற்றுக் கொள்ளும் என்பதில் எவ்வாறான நம்பிக்கை கொண்டுள்ளீர்கள்?
பதில்: நாங்கள் எமது கோரிக்கையை மிகவும் நியாயமான வகையில் முன்வைத்துள்ளோம். இந்த விடயத்தின் அடிப்படைகளை ஆராய்ந்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என நாம் நம்புகிறோம்.
கேள்வி: மாகாணசபைகளின் அதிகாரங்களை சிறிலங்கா மத்திய அரசாங்கம் தனது கைகளில் எடுத்தல் மற்றும் திவிநெகும போன்றன தொடர்பில் த.தே.கூ மேலும் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது?
பதில்: அரசியல் யாப்பின் பிரகாரம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்தால் பறிக்கப்படுவதானது ஒரு அறிவார்ந்த செயலல்ல. இதனை எதிர்த்து நாம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வோம். நாட்டில் உள்ள பெரும்பாலான மாகாணங்கள் சிறிலங்கா மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்தில் உள்ளதால் தற்போதைய அரசாங்கத்தால் இவ்வாறான சட்டமூலங்களை இலகுவில் நிறைவேற்ற முடியும். ஆனால்; இவ்வாறான நிலை எதிர்காலத்திலும் தொடரும் என நினைக்கக் கூடாது.
ஜனநாயக ரீதியாக நோக்கில் மக்கள் மாகாண ஆட்சிகளின் ஊடாக தமக்கான தேவைகளை நிறைவேற்றுவது மிக இலகுவானதாகும். இதனையே நாடு முழுவதில் வாழும் மக்கள் விரும்புகின்றனர். தற்போதைய சிறிலங்கா அரசாங்கமானது தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி நாடாளுமன்றில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுக் கொண்டது. உண்மையில் ஜனநாயக வழியின் ஊடாக இந்த அரசாங்கம் தனக்கான ஆதரவைப் பெற்றுக் கொள்ளவில்லை. தனது அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக சிறிலங்கா மத்திய அரசாங்கமானது தனது அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்துகின்றது என்பது வெளிப்படையானது.
மொழியாக்கம் – நித்தியபாரதி
வழிமூலம் – சண்டேலீடர்