வடக்கில் மாகாணசபைத் தேர்தலை நடத்த விடமாட்டோம் என்று சிறிலங்கா அமைச்சர்களான சம்பிக்க ரணவக்கவும், விமல் வீரவன்சவும் சூளுரைத்துள்ளனர்.
கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
13வது திருத்தம் நாட்டின் அரசியலமைப்புக்கு முற்றிலும் முரணானது. எனவே இதனைத் தொடர்ந்தும் வைத்திருக்கத் தேவையில்லை.
சிறிலங்கா அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி உடனடியாக 13வது திருத்தத்தை ஒழிக்க வேண்டும்.
13வது திருத்தத்தை அரசியலமைப்பில் இருந்து அகற்றி அனைத்து மாகாணசபைகளையும் கலைக்க வேண்டும்.
இதற்காக நாடு முழுவதும், பாரிய எழுச்சி கூட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்துவதற்கு மக்களை ஒன்று திரட்டுவோம்.
சிறிலங்கா அதிபரும், அரசும் உடனடியாக இந்தத் திருத்தத்தை அகற்ற வேண்டும்.
இதற்காக எந்தவொரு வெளிநாட்டு சக்திக்கும் சிறிலங்கா அதிபர் அடிபணியக் கூடாது.
இந்த நாட்டில் மாகாணசபை என்ற ஒரு சபை தேவையில்லை. அதனால் அரசின் பணம் வீண் விரயமாகிறது.
ஒரே நாடு ஓரே ஆட்சி என்ற ரீதியில் நாடு முழுவதிலும் ஆட்சியமைய வேண்டும்.
விடுதலைப்
புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டனர். இனி இந்தச் சட்டம் தேவையில்லை.
ஜே.ஆரும் ராஜீவ்காந்தியும் இணைந்து விடுதலைப் புலிகளின் ஆயுதங்களுக்குப் பயந்து 5 நீதிபதிகளை பயமுறுத்தி இதனை நடைமுறைப்படுத்தினர்.
இந்த நாட்டில் டட்லி – செல்வா – பண்டா, செல்வா உடன்பாடுகள், அமிர்தலிங்கம் – ஜே.ஆர். உடன்பாடு என எத்தனையோ உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டன.
அவை எதுவுமே நடைமுறைப்படுத்தப்படவில்லை அதே போன்று இதையும் கிழித்தெறிய வேண்டும்” என்று சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இங்கு கருத்து வெளியிட்ட சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க,
இந்தத் திருத்தம் கொண்டு வரப்பட்ட பின்னர் 66 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து 29 ஆயிரம் சிங்கள மக்களும், 32 ஆயிரம் முஸ்லிம் மக்களும் வெளியேற்றப்பட்டனர்.
வடக்கில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறக்கூடாது.” என்று தெரிவித்துள்ளார்.