Home Blog Page 27

சிறிலங்காவின் போர்க்குற்றவாளிகளை அமெரிக்கா போன்று பிரித்தானியாவும் தடைசெய்ய அரசை வலியுறுத்துவோம்

image_pdfPRINT

பொங்கல் வாழ்த்துச் செய்தியில் பிரித்தானிய எம்.பி. வெஸ் ஸ்ரீற்றிங்

இலங்கையின் போர்க்குற்றவாளிகளை அமெரிக்கா தடை செய்தது போன்று பிரித்தானியாவிலும் தடை விதிக்க வேண்டுமென தொழிலாளர் கட்சி தொடர்ந்தும் பிரித்தானிய அரசாங்கத்தை வலியுறுத்தி வருமென சுகாதார மற்றும் சமூக சேவைகளுக்கான பிரித்தானிய நிழல் இராஜாங்க செயலாளரும் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினருமான வெஸ் ஸ்ரீற்றிங் (Hon. Wes Streeting, Labour MP) தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா மற்றும் உலகெங்கிலுமுள்ள தமிழர்களுக்கு தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பிரித்தானியா மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கும் தைப் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழர் அறுவடைத் திருவிழா என்பது குடும்பங்கள் ஒன்று கூடி தமிழ் கலாச்சாரத்தைக் கொண்டாடுவதற்கும் இயற்கையின் கொடைகளிற்கும் நன்றி செலுத்துவதற்குரிய ஒரு நேரமாகும். ஆனால் நீங்கள் செய்யும் மகத்தான பங்களிப்பிற்கு நான் நன்றி சொல்ல கிடைத்த ஒரு வாய்ப்பாக கருதுகின்றேன்.

Redbridge இலுள்ள எமது மக்களிற்கு தழிழ் சமூகம் அனைத்து வழிகளிலும் அதாவது அரசியல் தலைமை தாங்குவதன் மூலமோ சிறந்த வியாபார செயற்பாடுகள் மூலம் அனைத்து விதமான பங்களிப்புக்களை வழங்கி வருகின்றனர். மேலும் சுகாதாரம் மற்றும் சமூக சேவைகளுக்கான பிரித்தானியா நிழல் இராஜாங்க செயலாளர் என்ற வகையில் தேசிய சுகாதார சேவையின் மூலம் நமது நாட்டிற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் ஏராளமான தமிழ் மக்களுக்கு மகத்தான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களில் பலர் இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது சித்திரவதை மற்றும் துன்புறுத்தல்களிலிருந்து தப்பி இங்கிலாந்துக்கு வந்திருக்கிறீர்கள். துரதிர்ஷ்டவசமாக இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நாட்டின் கடந்த காலத்துடன் மட்டுப்படுத்தப்படவில்லை என்பதை நானும் நீங்களும் நன்றாக அறிவோம்.

அதனால்தான் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளாக Ilford North இன் தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக நான் தமிழ் சமூகத்துடன் இணைந்து உண்மை பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்காக பிரச்சாரம் செய்து வருகிறேன்.

பிரித்தானியாவில் பாராளுமன்றத்திலோ அல்லது ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையிலோ தமிழ் மக்களிற்காக குரல் எழுப்பப்படும் போது உங்களின் பிரகாசமான எதிர்காலத்திற்காக உங்கள் சார்பாக உங்களுடன் இணைந்து பிரச்சாரம் செய்வதில் நான் பெருமைப்படுகிறேன்.

நடந்துகொண்டிருக்கும் மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் கடந்த காலத்தின் கேள்விகளுக்கான பதில்களை பெற்றுக்கொள்வதற்கும் இவ்வாறான நீதிக்கான கோரிக்கைகள் அவசியமானதொன்றாகும். அதனால்தான் அமெரிக்கா போர்க்குற்றம் சுமத்தப்பட்டவர்களை தடை செய்தது போன்று பிரித்தானியாவிலும் தடை விதிக்க வேண்டுமென தொழிலாளர் கட்சி தொடர்ந்து பிரித்தானியா அரசாங்கத்தை வலியுறுத்தி வருவதுடன் ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வில் உலக நாடுகளின் முன் அவர்கள் செய்த உறுதிமொழிகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இலங்கையுடனான நமது இருதரப்பு உறவுகளைப் பயன்படுத்தி அவர்களை மீண்டும் மேசைக்கு கொண்டு வர முயற்சிப்போம்.

தமிழ் அறுவடை விழாவைக் நீங்கள் குடும்பமாக கொண்டாடும் போது நானும் இன்னும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் உங்களுடன் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

சிறிலங்கா இனியும் தாமதிக்காது செயற்படுவதை உறுதிப்படுத்த பிரித்தானியா நடவடிக்கை எடுக்க அழுத்தம்

image_pdfPRINT

பொங்கல் வாழ்த்துச் செய்தியில் பிரித்தானிய எம்.பி. டேவிட் லமி

நீதி பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஆதரிப்பது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் இனியும் தாமதிக்காது செயற்படுவதை உறுதிப்படுத்துவதற்கு பிரித்தானிய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தொழிற்கட்சியானது தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என பிரித்தானிய வெளியுறவுத்துறை மற்றும் வளர்ச்சி விவகாரங்களுக்கான நிழல் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான டேவிட் லமி (Rt. Hon. David Lammy Labour MP) தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா மற்றும் உலகெங்கிலுமுள்ள தமிழர்களுக்கு தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

பிரித்தானியா மற்றும் உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு வணக்கம் நீங்கள் தைப் பொங்கலைக் கொண்டாடும் இந்நேரத்தில் எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குடும்பத்துடன், நண்பர்களுடன் மற்றும் சமூகத்துடன் இணைந்து அறுவடையைக் கொண்டாடுவதற்குரிய ஒரு நேரமாகும்.

இலங்கையில் சுயநிர்ணயம், சமாதானம் மற்றும் நீதிக்காக தமிழ் மக்கள் ஆற்றிய தியாகங்களை நாம் நினைவுகூர வேண்டிய தருணம் இதுவாகும். இலங்கையில் சமாதானத்தையும் அரசியல் ஸ்திரத்தன்மையையும் கட்டியெழுப்புவதற்கு தமிழ் சமூகங்களுடன் தோளோடு தோள் நின்று எமது சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து தொழிற்கட்சி அரசாங்கம் பணியாற்றும்.

நீங்கள் பொங்கல் தயாரித்து ஒன்றாக அமர்ந்து உண்ணும் வேளையில் பிரித்தானியாவிற்கு தமிழ் சமூகம் ஆற்றிவரும் மகத்தான பங்களிப்பிற்கு தொழிலாளர் கட்சியின் அனைவரின் சார்பாக எனது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கின்றேன். உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான மற்றும் அமைதியான தைப்பொங்கல் வாழ்த்துக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

சனநாயகப் படுகொலைகளை தொடர்ந்து செய்யும் சிறிலங்கா அரசு

image_pdfPRINT

ஜெனிற்றாவின் கைதுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம்

கைதுகள் மூலம் அப்பட்டமான சனநாயகப் படு கொலைகளை தொடர்ந்தும் சிறிலங்கா அரசு அரங்கேற்றி வருவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவின் வடக்கு விஜயத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஒன்று திரண்டு வவுனியாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முற்பட்ட போது தலைவி ஜெனிற்றாவும் அங்கு நடப்பவற்றை படம் எடுத்துக்கொண்டிருந்த யுவதி ஒருவரும் பொலிசாரால் மிகவும் வன்முறையாக இழுத்துச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்த கைது குறித்து இன்று (11) வெளியிட்டுள்ள கண்ட அறிக்கையிலேயே பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மேற்கண்டவாறு கூறியுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அறவழியில் போராடிய ஜெனிற்றா அவர்கள் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமையினை மாணவ சமுதாயமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டிப்பதோடு அப்பட்டமான சனநாயக உரிமை மீறலாகவும் இதனை பதிவு செய்கின்றது.

மேலும் அனைத்து சமூகத்தின் முன்னாள் சனநாயக உரிமைகள் வழங்கப்படுவதாக ஒரு போர்வையை போர்த்திக்கொண்டு அறவழியில் போராடிய மக்களின் உரிமைகளை பொருட்படுத்தாது கைதுகள் விசாரணைகள் மூலமாக அடக்கியொடுக்குவதற்கு முயலும் சிறிலங்கா அரசின் போக்குகள் உலக அரங்கின் முன்னாள் வெளிச்சமாக்கப்பட வேண்டியவையாகும் என குறிப்படப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவியின் கைது; பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் கடும் கண்டனம்

image_pdfPRINT

பாதிக்கப்பட்டோர் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது எனக் கூறியுள்ள பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் சிவோன் மக்டோனா (Siobhain McDonagh MP) காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வவுனியா மாவட்ட தலைவி சிவானந்தன் ஜெனிற்றாவின் கைதுக்கு தனது கண்டணத்தை வெளிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவின் வடக்கு விஜயத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஒன்று திரண்டு வவுனியாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முற்பட்ட போது தலைவி ஜெனிற்றாவும் அங்கு நடப்பவற்றை படம் எடுத்துக்கொண்டிருந்த யுவதி ஒருவரும் பொலிசாரால் மிகவும் வன்முறையாக இழுத்துச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையிலேயே குறித்த கைது நடவடிக்கைக்கு தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ள பிரித்தானியா அனைத்துகட்சி பாராளுமன்ற குழுவின் சிரேஷ்ட உறுப்பினருரும் தொழில் கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான சிவோன் மக்டோனா பாதிக்கப்பட்டோர் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது எனக் கூறியுள்ளார்.

அதே வேளை இது குறித்து நேற்றைய தினம் பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் டேவிற் கேமரூன் அவர்களுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் சிவானந்தன் ஜெனிற்றாவின் கைது நடவடிக்கையைக் கண்டிக்க வேண்டும் எனவும் அமைதியாக போராட்டம் மேற்கொண்ட போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் போரின் இறுதிக் காலத்தில் குழந்தைகள், சிறுவர்கள் உட்பட பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் இலங்கை இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டனர். மேலும் ஐக்கிய நாடுகளின் சபையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஆணை குழு தமது 2020 அறிக்கையில் இலங்கை காணாமல் ஆக்கப்படுவோரின் பட்டியலில் இரண்டாவது இடத்தை வகிப்பதாக சுட்டி காட்டினார்.

எனவே டேவிற் கேமரோன் அவர்களை கண்டனத்தை தெரிவிக்குமாறு வேண்டிக் கொள்வதுடன் பிரித்தானியா ஓரு தூதுவரை அந்த வழக்கு விசாரணைக்கு நிதிமன்றுக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டிக் கொண்டார்.

வெள்ள நீரில் மூழ்கிய தென்கிழக்குப் பல்கலைக்கழகம்!

image_pdfPRINT

நிலவிவரும் மழையுடனான வானிலை காரணமாக  தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகம் நீரில் மூழ்கியுள்ளது.

இந்நிலையில் எதிர்காலத்தில் வெள்ள நீர்  மேலும் அதிகரிக்கு அபாயம் இருப்பதால் முக்கிய ஆவணங்களையும் பல்கலைக்கழக சொத்துக்களையும் பாதுகாப்பாக அகற்றும் நடவடிக்கைகளில்   பல்கலைக்கழக ஊழியர்களும், இராணுவத்தினரும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மரபு திங்கள் நிகழ்வை சிறப்பித்த “இலங்கை தமிழர்கள் ஒரு காலவரையறையற்ற பாரம்பரியம்” கண்காட்சி

image_pdfPRINT

டிலக்‌ஷன் மனோரஜன்

பிரித்தானிய தமிழ் மரபுரிமை சமூகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள தேசிய தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வு Cristal Hayes இலண்டனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (7) மிகக் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தமிழர் கலை கலாச்சார பண்பாடுகளை முற்று முழுதாக கொண்டு வந்த இந்நிகழ்வு தமிழர்களின் இனியம் வாத்திய இசை முழங்க சிறப்பு விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு அரங்கு நிறைந்த மக்களுடன் விழா இனிதே ஆரம்பமானது.

தமிழர் சார் கலை கலாச்சார நிகழ்வுகளை கொண்டமைந்த மரபுத் திங்கள் 2024 சிறப்பு அம்சமாக “இலங்கை தமிழர்கள் ஒரு கால வரையறையற்ற பாரம்பரியம்” எனும் கண்காட்சி பலரையும் கவர்ந்திருந்தது.

இதன் சிறப்பு அம்சங்களாக தமிழர்களின் பண்டைய வரலாறு அவர்களின் வாழ்வியல் அம்சங்கள் தமிழ் மன்னர்களின் வரலாறு தொன்று தொட்டு நாம் பயன்படுத்திய அரியவகை பொருட்கள் தமிழர்களின் இசைக்கருவிகள், தமிழீழத்தில் இடம்பெற்ற நிழல் அரசாங்க அமைப்பு , முள்ளிவாய்க்கால் பேரவலம் மற்றும் தமிழர் மீதான தொடர் இனழிப்பு சாட்சியங்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

தாயகத்தில் இடம்பெறும் தொடர்ச்சியான பௌத்த பேரினவாதத்தின் இனவழிப்பு செயற்பாடுகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் நம் கலைகளையும் பண்பாட்டையும் பேணிப் பாதுகாக்க வேண்டிய தலையாய கடமை நம் மத்தியில் உள்ளது என்பதை இக் கண்காட்சி பார்வையாளர்கள் மத்தியில் வேரூன்ற செய்தது எனலாம்.

தொலைந்து கொண்டிருக்கும் நம் கலைகளையும் திட்டமிட்டு அழிக்கப்படும் நம் வளங்களையும் ஒருபோதும் நாம் இழந்து விடக்கூடாது என்பதற்காக பிரித்தானிய தமிழர் தகவல் நடுவம் (TIC) மற்றும் சமூக அபிவிருத்திக்கான மையம் (CCD) ஆகியவற்றின் வரலாறு மற்றும் மரபுரிமைக்கான பிரிவு (History and Heritage Unit) என்பவற்றின் ஐக்கிய இராஜ்ய மரபுரிமை சமூகத்தினால் இக் கண்காட்சியானது முன்னெடுக்கப்பட்டிருந்தது. இற்றைக்கு 200 வருடங்களுக்கு மேலான தகவல்களையும் அரிய வகை பொருட்களையும் இவ் மரபுரிமை சமூகம் இன்று வரை பேணிப் பாதுகாத்து வருகின்றார்கள்.

நம் இளைய தலைமுறையினர் நம் அடையாளங்களில் இருந்து விலகிவிடாமல் நமது கலைகளையும் பண்பாடுகளையும் பல நூறு தலைமுறைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் எனும் உயரிய நோக்கோடு ஐக்கிய இராஜ்ய மரபுரிமைச் சமூகமானது பல இன்னல்களை முகம் கொடுத்து இன்றுவரை உயிர்ப்போடு பல நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

எதிர்காலத்தில் மிகப்பெரும் தமிழர் அருங்காட்சியகம் ஒன்றை ஸ்தாபித்து அதன் ஊடாக நம் வருங்கால தலைமுறையினருக்கு நம் அடையாளங்களை கொண்டு சேர்ப்பதே இந்த கண்காட்சியின் அடிப்படையான நோக்கம் என ஐக்கிய இராஜ்ய மரபுரிமைச் சமூகத்தினர் தெரிவித்தார்கள்.

பிரித்தானியாவில் ஈழத்தமிழர்களுக்கான ஒரு நிரந்தர கலாச்சார நிலையம் ஒன்றை நிறுவி, அதில் ஒரு தமிழர் மரபு மற்றும் இனப்படுகொலையை ஆவணப்படுத்தும் அருங்காட்சியகம் ஒன்றையும் அமைப்பதே இந்த கண்காட்சியின் நீண்ட கால குறிக்கோள் என்பதும் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இக்கண்காட்சியின் பிரதான செயற்பாட்டாளர்களாக தங்கவேலாயுதம் வானுசன்,டிலக்‌ஷன் மனோரஜன், திருஞானசம்பந்தர் லக்ஷ்மன், சசிகரன் செல்வசுந்தரம், சிதம்பர சுப்ரமணியன் திருச்செந்திநாதன், கஜானந் சுந்தரலிங்கம்,
சுப்பிரமணியம் அபிந்தன், சுப்பிரமணியம் அருணோதயன், கிருஷாந் நவரட்ணம், சுகன் விக்ணேஸ்வரன், குணசீலன் கோகுலன், விஜயசுந்தரம் முரளிதரன், பெருமாள் சுரேஷ், சயந்தன் மகேந்திரம், கணேசலிங்கம் எபினேசர் மற்றும் சிவகுருநாதன் பிரகலாதன் ஆகியோர் கலந்துகொண்டு இக்கண்காட்சியை பார்வையாளர்களுக்கு எளிமையாக விளக்க உரைகளை வழங்கி சிறப்பாக வழி நடத்தினர்.

தமிழ் மரபுரிமை திங்கள் 2024ல் கலந்து கொண்ட பலர் கண்காட்சியை பார்வையிட்டதுடன் வேற்று மொழி பேசும் பலர் கண்காட்சியையும் காட்சிப்படுத்தப்பட்ட பொருட்களையும் வியப்புடன் பார்வையிட்டதுடன் நம் தமிழர் வரலாற்று சிறப்புகளையும் தொழில்நுட்பமும் விஞ்ஞானமும் வளர்ச்சி அடையாத காலங்களில் கூட தமிழர்கள் தங்கள் வாழ்வியலை எவ்வளவு அழகாக திட்டமிட்டு செயல்படுத்தி இருக்கின்றார்கள் இன்று நவீன உலகில் பயன்படுத்தும் எத்தனையோ பொருட்களை அன்று தமிழர்கள் உபயோகித்திருக்கின்றார்கள் என்று பெருமிதம் அடைந்தனர்.

இக்கண்காட்சியை ஒழுங்கமைத்த TIC மற்றும் CCD அமைப்புகளுக்கும் அதன் செயற்பாட்டாளர்களுக்கும் பலரும் நன்றி பாராட்டினர்.

பிரித்தானியாவில் கோலாகலமாக இடம்பெற்ற மரபுத் திங்கள் விழா

image_pdfPRINT

டிலக்‌ஷன் மனோரஜன்

ஐக்கிய இராச்சிய தமிழ் மரபுரிமை சமூகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள ‘தேசிய தமிழ் மரபு திங்கள் நிகழ்வு – 2024‘ இலண்டனில் நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.

தமிழர் கலை கலாச்சார பண்பாடுகளை முற்று முழுதாக வெளிக்கொண்டு வந்த இந் நிகழ்வு, தமிழர் பாரம்பரிய நிகழ்வுகள் மற்றும் பாரம்பரிய உணவு வகைகள் சிலம்பாட்டம், கோலாட்டம் என மிகக் கோலாகலமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (7) Crystal Hayes எனும் இடத்தில் நடைபெற்றது.

தமிழர்களின் மங்கள வாத்திய இசை முழங்க சிறப்பு விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு அரங்கு நிறைந்த மக்களுடன் விழா இனிதே ஆரம்பமானது.

இதில் விசேடமாக இலங்கைத் தமிழர்கள் ஒரு கால வரையறையற்ற பாரம்பரியம் எனும் சிறப்பு கண்காட்சியானது தமிழ் தகவல் நடுவம் மற்றும் சமூக அபிவிருத்திக்கான மையம் என்பவற்றின் ஐக்கிய இராச்சிய மரபுரிமை சமூகத்தினால் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஒரு சமூகத்தின் பண்பாடு மரபுரிமைகளை விளங்கிக் கொள்வதற்கு அது சார்ந்த சமூக வரலாற்றை புரிந்து கொள்வது அக் கண்காட்சி இன்றியமையாததாகும்.

இதில் தமிழர்களின் பண்டைய வரலாறு அவர்களின் வாழ்வியல் அம்சங்கள் தமிழ் மன்னர்கள் பண்டைய காலத்து அரிய பொருட்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன் தமிழீழத்தில் இடம்பெற்ற நிழல் அரசாங்க அமைப்பு மற்றும் முள்ளிவாய்க்கால் பேரவலம் தமிழர் மீதான தொடர் இனவழிப்பு சாட்சியங்கள் என்பனவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

படங்கள் – சிதம்பர சுப்பிரமணியம் திருச்செந்தில்நாதன், அனுசன் பாலசுப்பிரமணியம்

யாழ். சித்த மருத்துவ துறையை, பீடமாக தரமுயர்த்த  வேண்டும் என கோரிக்கை!

image_pdfPRINT

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ துறையை பீடமாக தரமுயர்த்த  வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவ பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையேயான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்றைய தினம் இடம்பெற்றது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஸ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் சிரேஸ்ட பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா ஆகியோரும் அக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

கலந்துரையாடலில், மாணவர்களினால், மாணவ விடுதிகளில் உள்ள குறைபாடு, முகாமைத்துவ பீடத்திற்கான பேருந்து வசதிகளை ஏற்படுத்தல், சித்த மருத்துவ துறையை பீடமாக தரமுயர்த்தல், இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களுக்கான உள்ளக பயிற்சி வழங்குதல் போன்ற விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டது.

இக் கலந்துரையிடாலில் பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட 37 மாணவர்கள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

பிரித்தானியாவில் விழாக்கோலம் காணும் தமிழர் பெருவிழா

image_pdfPRINT

ஐக்கிய இராச்சிய தமிழ் மரபுரிமை சமூகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள ‘தேசிய தமிழ் மரபு திங்கள் நிகழ்வு – 2024‘ எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (7) பிரித்தானியாவின் ஹேய்சில் (Hayes) நடைபெறவுள்ளது.

உலகெங்கும் வாழும் தமிழர்களால் ஜனவரி மாதத்தில் தமிழ் மொழியின் பெருமையும் தமிழர்களின் கலை கலாச்சார பண்பாடுகளும் கொண்டாடப்படுவது யாவரும் அறிந்ததே! அந்தவகையில் ஐக்கிய இராச்சிய தமிழ் மரபுரிமை சமூகம் நடப்பாண்டிற்கான தமிழ் மரபு திங்களை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07.01.2023) பிரித்தானியாவில் பிரமாணடமாக கொண்டாடுகின்றது.

Crystal Hayes, 466-468 Uxbridge Road Middlesex, Hayes, UB4 0SD எனும் இடத்தில் நண்பகல் 12.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இவ் விழா நடைபெறவுள்ளவுள்ளது.

தமிழர் கலை கலாச்சார பண்பாடுகளை முற்று முழுதாக வெளிக்கொணரும் இக் கொண்டாட்டத்தில் நேரலை கண்காட்சி, பாரம்பரிய மற்றும் சமகால அரங்காற்றுகை, தமிழர் கலைகள் மற்றும் இசைகள். தமிழ் உணவு வகைகள் மற்றும் வியாபார, தொண்டு நிறுவனங்களின் விற்பனையகம் என்பனவும் இடம்பெறவுள்ளன.

முற்றிலும் இலவசமான இந்நிகழ்வில் பிரித்தானியா வாழ் தமிழர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழியையும் அதன் கலை கலாச்சார பண்பாடுகளையும் பிரித்தானியாவிலும் கொண்டாடும் வண்ணம் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரித்தானிய பெரு நகர அவை ஜனவரி மாதத்தை பிரித்தானியாவில் தமிழர் பாரம்பரிய மாதமாக பிரகடணப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

வரலாற்று சிறப்பு மிக்க இம் மரபு திங்கள் விழாவிற்கு நமது ஈழநாடு உம் ஊடக அனுசரணை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ் சென்ற ஜனாதிபதி : மூவர் கைது

image_pdfPRINT

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விஜயத்தை முன்னிட்டு யாழில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகம் சுற்றியுள்ள பகுதிகள் வீதிகளில் வீதித்தடைகள் போடப்பட்டுள்ளதோடு அப்பகுதிகளில் விசேட அதிரடிப் படையினர் கலகமடக்கும் படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை  ஜனாதிபதி ரணில்  விக்கிரமசிங்கவின் யாழ் விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ் மாவட்ட செயலகத்துக்கு அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (04)உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் வருகைதரும் ஜனாதிபதி மாலை 3 மணி முதல் 5.30 வரை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்குகொள்ளவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வடக்குக்கு விஜயம் செய்வதற்கு முன் தமிழ் எம்.பி.க்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பு

image_pdfPRINT

அரசாங்கத்துடன் சேர்ந்து பணியாற்ற வடக்கு – கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வர வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அப்போதுதான் பொருளாதாரத் தீர்வையும், அரசியல் தீர்வையும் நாம் விரைவில் வென்றெடுக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி நான்கு நாள் பயணம் மேற்கொண்டு நாளை வடக்குக்கு வருகின்றார்.

இந்நிலையில், கொழும்பு ஊடகம் ஒன்றுக்குப் பொருளாதாரப் பிரச்சினை, தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், ஒரு புறத்தில் நாட்டின் பொருளாதாரத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும். அதேவேளை, மறுபுறத்தில் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை நாம் காண வேண்டும். இந்த இரண்டு பிரதான விடயங்களும் நிறைவேற வடக்கு – கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் முழுமையான ஆதரவு மிகவும் அவசியமானது.

எனவே, இந்த இரண்டு விடயங்களையும் முன்னெடுக்கின்ற அரசுடன் சேர்ந்து பணியாற்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வர வேண்டும்.

இன, மத, மொழி வேறுபாடின்றி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரே குடையின் கீழ் பயணித்தால் தான் பொருளாதாரத் தீர்வையும், அரசியல் தீர்வையும் நாம் விரைவில் வென்றெடுக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார். 

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

image_pdfPRINT

2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலுக்கான பதிவு நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளன.

இதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் பதிவு நடவடிக்கைகளை பெப்ரவரி முதலாம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதால் அது தொடர்பான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த தீர்மானிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!