SHARE

டிலக்‌ஷன் மனோரஜன்

பிரித்தானிய தமிழ் மரபுரிமை சமூகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள தேசிய தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வு Cristal Hayes இலண்டனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (7) மிகக் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தமிழர் கலை கலாச்சார பண்பாடுகளை முற்று முழுதாக கொண்டு வந்த இந்நிகழ்வு தமிழர்களின் இனியம் வாத்திய இசை முழங்க சிறப்பு விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு அரங்கு நிறைந்த மக்களுடன் விழா இனிதே ஆரம்பமானது.

தமிழர் சார் கலை கலாச்சார நிகழ்வுகளை கொண்டமைந்த மரபுத் திங்கள் 2024 சிறப்பு அம்சமாக “இலங்கை தமிழர்கள் ஒரு கால வரையறையற்ற பாரம்பரியம்” எனும் கண்காட்சி பலரையும் கவர்ந்திருந்தது.

இதன் சிறப்பு அம்சங்களாக தமிழர்களின் பண்டைய வரலாறு அவர்களின் வாழ்வியல் அம்சங்கள் தமிழ் மன்னர்களின் வரலாறு தொன்று தொட்டு நாம் பயன்படுத்திய அரியவகை பொருட்கள் தமிழர்களின் இசைக்கருவிகள், தமிழீழத்தில் இடம்பெற்ற நிழல் அரசாங்க அமைப்பு , முள்ளிவாய்க்கால் பேரவலம் மற்றும் தமிழர் மீதான தொடர் இனழிப்பு சாட்சியங்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

தாயகத்தில் இடம்பெறும் தொடர்ச்சியான பௌத்த பேரினவாதத்தின் இனவழிப்பு செயற்பாடுகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் நம் கலைகளையும் பண்பாட்டையும் பேணிப் பாதுகாக்க வேண்டிய தலையாய கடமை நம் மத்தியில் உள்ளது என்பதை இக் கண்காட்சி பார்வையாளர்கள் மத்தியில் வேரூன்ற செய்தது எனலாம்.

தொலைந்து கொண்டிருக்கும் நம் கலைகளையும் திட்டமிட்டு அழிக்கப்படும் நம் வளங்களையும் ஒருபோதும் நாம் இழந்து விடக்கூடாது என்பதற்காக பிரித்தானிய தமிழர் தகவல் நடுவம் (TIC) மற்றும் சமூக அபிவிருத்திக்கான மையம் (CCD) ஆகியவற்றின் வரலாறு மற்றும் மரபுரிமைக்கான பிரிவு (History and Heritage Unit) என்பவற்றின் ஐக்கிய இராஜ்ய மரபுரிமை சமூகத்தினால் இக் கண்காட்சியானது முன்னெடுக்கப்பட்டிருந்தது. இற்றைக்கு 200 வருடங்களுக்கு மேலான தகவல்களையும் அரிய வகை பொருட்களையும் இவ் மரபுரிமை சமூகம் இன்று வரை பேணிப் பாதுகாத்து வருகின்றார்கள்.

நம் இளைய தலைமுறையினர் நம் அடையாளங்களில் இருந்து விலகிவிடாமல் நமது கலைகளையும் பண்பாடுகளையும் பல நூறு தலைமுறைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் எனும் உயரிய நோக்கோடு ஐக்கிய இராஜ்ய மரபுரிமைச் சமூகமானது பல இன்னல்களை முகம் கொடுத்து இன்றுவரை உயிர்ப்போடு பல நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

எதிர்காலத்தில் மிகப்பெரும் தமிழர் அருங்காட்சியகம் ஒன்றை ஸ்தாபித்து அதன் ஊடாக நம் வருங்கால தலைமுறையினருக்கு நம் அடையாளங்களை கொண்டு சேர்ப்பதே இந்த கண்காட்சியின் அடிப்படையான நோக்கம் என ஐக்கிய இராஜ்ய மரபுரிமைச் சமூகத்தினர் தெரிவித்தார்கள்.

பிரித்தானியாவில் ஈழத்தமிழர்களுக்கான ஒரு நிரந்தர கலாச்சார நிலையம் ஒன்றை நிறுவி, அதில் ஒரு தமிழர் மரபு மற்றும் இனப்படுகொலையை ஆவணப்படுத்தும் அருங்காட்சியகம் ஒன்றையும் அமைப்பதே இந்த கண்காட்சியின் நீண்ட கால குறிக்கோள் என்பதும் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இக்கண்காட்சியின் பிரதான செயற்பாட்டாளர்களாக தங்கவேலாயுதம் வானுசன்,டிலக்‌ஷன் மனோரஜன், திருஞானசம்பந்தர் லக்ஷ்மன், சசிகரன் செல்வசுந்தரம், சிதம்பர சுப்ரமணியன் திருச்செந்திநாதன், கஜானந் சுந்தரலிங்கம்,
சுப்பிரமணியம் அபிந்தன், சுப்பிரமணியம் அருணோதயன், கிருஷாந் நவரட்ணம், சுகன் விக்ணேஸ்வரன், குணசீலன் கோகுலன், விஜயசுந்தரம் முரளிதரன், பெருமாள் சுரேஷ், சயந்தன் மகேந்திரம், கணேசலிங்கம் எபினேசர் மற்றும் சிவகுருநாதன் பிரகலாதன் ஆகியோர் கலந்துகொண்டு இக்கண்காட்சியை பார்வையாளர்களுக்கு எளிமையாக விளக்க உரைகளை வழங்கி சிறப்பாக வழி நடத்தினர்.

தமிழ் மரபுரிமை திங்கள் 2024ல் கலந்து கொண்ட பலர் கண்காட்சியை பார்வையிட்டதுடன் வேற்று மொழி பேசும் பலர் கண்காட்சியையும் காட்சிப்படுத்தப்பட்ட பொருட்களையும் வியப்புடன் பார்வையிட்டதுடன் நம் தமிழர் வரலாற்று சிறப்புகளையும் தொழில்நுட்பமும் விஞ்ஞானமும் வளர்ச்சி அடையாத காலங்களில் கூட தமிழர்கள் தங்கள் வாழ்வியலை எவ்வளவு அழகாக திட்டமிட்டு செயல்படுத்தி இருக்கின்றார்கள் இன்று நவீன உலகில் பயன்படுத்தும் எத்தனையோ பொருட்களை அன்று தமிழர்கள் உபயோகித்திருக்கின்றார்கள் என்று பெருமிதம் அடைந்தனர்.

இக்கண்காட்சியை ஒழுங்கமைத்த TIC மற்றும் CCD அமைப்புகளுக்கும் அதன் செயற்பாட்டாளர்களுக்கும் பலரும் நன்றி பாராட்டினர்.

Print Friendly, PDF & Email