SHARE

பொங்கல் வாழ்த்துச் செய்தியில் பிரித்தானிய எம்.பி. டேவிட் லமி

நீதி பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஆதரிப்பது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் இனியும் தாமதிக்காது செயற்படுவதை உறுதிப்படுத்துவதற்கு பிரித்தானிய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தொழிற்கட்சியானது தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என பிரித்தானிய வெளியுறவுத்துறை மற்றும் வளர்ச்சி விவகாரங்களுக்கான நிழல் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான டேவிட் லமி (Rt. Hon. David Lammy Labour MP) தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா மற்றும் உலகெங்கிலுமுள்ள தமிழர்களுக்கு தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

பிரித்தானியா மற்றும் உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு வணக்கம் நீங்கள் தைப் பொங்கலைக் கொண்டாடும் இந்நேரத்தில் எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குடும்பத்துடன், நண்பர்களுடன் மற்றும் சமூகத்துடன் இணைந்து அறுவடையைக் கொண்டாடுவதற்குரிய ஒரு நேரமாகும்.

இலங்கையில் சுயநிர்ணயம், சமாதானம் மற்றும் நீதிக்காக தமிழ் மக்கள் ஆற்றிய தியாகங்களை நாம் நினைவுகூர வேண்டிய தருணம் இதுவாகும். இலங்கையில் சமாதானத்தையும் அரசியல் ஸ்திரத்தன்மையையும் கட்டியெழுப்புவதற்கு தமிழ் சமூகங்களுடன் தோளோடு தோள் நின்று எமது சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து தொழிற்கட்சி அரசாங்கம் பணியாற்றும்.

நீங்கள் பொங்கல் தயாரித்து ஒன்றாக அமர்ந்து உண்ணும் வேளையில் பிரித்தானியாவிற்கு தமிழ் சமூகம் ஆற்றிவரும் மகத்தான பங்களிப்பிற்கு தொழிலாளர் கட்சியின் அனைவரின் சார்பாக எனது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கின்றேன். உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான மற்றும் அமைதியான தைப்பொங்கல் வாழ்த்துக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Print Friendly, PDF & Email