SHARE

பொங்கல் வாழ்த்துச் செய்தியில் பிரித்தானிய எம்.பி. வெஸ் ஸ்ரீற்றிங்

இலங்கையின் போர்க்குற்றவாளிகளை அமெரிக்கா தடை செய்தது போன்று பிரித்தானியாவிலும் தடை விதிக்க வேண்டுமென தொழிலாளர் கட்சி தொடர்ந்தும் பிரித்தானிய அரசாங்கத்தை வலியுறுத்தி வருமென சுகாதார மற்றும் சமூக சேவைகளுக்கான பிரித்தானிய நிழல் இராஜாங்க செயலாளரும் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினருமான வெஸ் ஸ்ரீற்றிங் (Hon. Wes Streeting, Labour MP) தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா மற்றும் உலகெங்கிலுமுள்ள தமிழர்களுக்கு தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பிரித்தானியா மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கும் தைப் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழர் அறுவடைத் திருவிழா என்பது குடும்பங்கள் ஒன்று கூடி தமிழ் கலாச்சாரத்தைக் கொண்டாடுவதற்கும் இயற்கையின் கொடைகளிற்கும் நன்றி செலுத்துவதற்குரிய ஒரு நேரமாகும். ஆனால் நீங்கள் செய்யும் மகத்தான பங்களிப்பிற்கு நான் நன்றி சொல்ல கிடைத்த ஒரு வாய்ப்பாக கருதுகின்றேன்.

Redbridge இலுள்ள எமது மக்களிற்கு தழிழ் சமூகம் அனைத்து வழிகளிலும் அதாவது அரசியல் தலைமை தாங்குவதன் மூலமோ சிறந்த வியாபார செயற்பாடுகள் மூலம் அனைத்து விதமான பங்களிப்புக்களை வழங்கி வருகின்றனர். மேலும் சுகாதாரம் மற்றும் சமூக சேவைகளுக்கான பிரித்தானியா நிழல் இராஜாங்க செயலாளர் என்ற வகையில் தேசிய சுகாதார சேவையின் மூலம் நமது நாட்டிற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் ஏராளமான தமிழ் மக்களுக்கு மகத்தான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களில் பலர் இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது சித்திரவதை மற்றும் துன்புறுத்தல்களிலிருந்து தப்பி இங்கிலாந்துக்கு வந்திருக்கிறீர்கள். துரதிர்ஷ்டவசமாக இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நாட்டின் கடந்த காலத்துடன் மட்டுப்படுத்தப்படவில்லை என்பதை நானும் நீங்களும் நன்றாக அறிவோம்.

அதனால்தான் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளாக Ilford North இன் தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக நான் தமிழ் சமூகத்துடன் இணைந்து உண்மை பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்காக பிரச்சாரம் செய்து வருகிறேன்.

பிரித்தானியாவில் பாராளுமன்றத்திலோ அல்லது ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையிலோ தமிழ் மக்களிற்காக குரல் எழுப்பப்படும் போது உங்களின் பிரகாசமான எதிர்காலத்திற்காக உங்கள் சார்பாக உங்களுடன் இணைந்து பிரச்சாரம் செய்வதில் நான் பெருமைப்படுகிறேன்.

நடந்துகொண்டிருக்கும் மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் கடந்த காலத்தின் கேள்விகளுக்கான பதில்களை பெற்றுக்கொள்வதற்கும் இவ்வாறான நீதிக்கான கோரிக்கைகள் அவசியமானதொன்றாகும். அதனால்தான் அமெரிக்கா போர்க்குற்றம் சுமத்தப்பட்டவர்களை தடை செய்தது போன்று பிரித்தானியாவிலும் தடை விதிக்க வேண்டுமென தொழிலாளர் கட்சி தொடர்ந்து பிரித்தானியா அரசாங்கத்தை வலியுறுத்தி வருவதுடன் ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வில் உலக நாடுகளின் முன் அவர்கள் செய்த உறுதிமொழிகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இலங்கையுடனான நமது இருதரப்பு உறவுகளைப் பயன்படுத்தி அவர்களை மீண்டும் மேசைக்கு கொண்டு வர முயற்சிப்போம்.

தமிழ் அறுவடை விழாவைக் நீங்கள் குடும்பமாக கொண்டாடும் போது நானும் இன்னும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் உங்களுடன் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Print Friendly, PDF & Email