SHARE

பொங்கல் வாழ்த்துச் செய்தியில் பிரித்தானிய எம்.பி. சோபியன் மக்டோனா

தமிழர்களுக்கான சுய நிர்ணயம், ஐ.நா. தீர்மானங்களுக்கு கீழ்படிதல் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கல் என்பவை இனியும் செய்படுத்தப்படாவிட்டால் இலங்கையின் அரசியல் தலைவர்களை தடை செய்து இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவேண்டிய நேரம் இது என பிரித்தானிய தொழிலாளர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சோபியன் மக்டடோனா (Hon. Siobhain McDonagh MP) தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா மற்றும் உலகெங்கிலுமுள்ள தமிழர்களுக்கு தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

புத்தாண்டின் ஆரம்பத்தினை கொண்டாட நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இருக்க வேண்டிய நேரம் இது. ஆனால் என்னைப் பொறுத்தவரை இது எனது தமிழ் நண்பர்களைக் கொண்டாடுவதற்கும் நீங்கள் செய்யும் மகத்தான பங்களிப்பிற்கும் நன்றி தெரிவிக்கும் நேரமாகும்.

இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் நீதிக்காகவும் பொறுப்புக்கூறலுக்காகவும் நடந்து வரும் போராட்டத்தை இங்குள்ள நாம் அனைவரும் நன்கு அறிவோம். பிரித்தானிய அரசாங்கத்திடம் மேலும் நடவடிக்கை எடுக்கக் கோருவதில் தமிழ் சமூகத்தின் விடாமுயற்சியை நான் நேரில் கண்டுள்ளேன்.

2009 இறுதி யுத்தம் மற்றும் உயிர்த ஞாயிறு பண்டிகை தற்கொலை தாக்குதல்களின் போது துயரத்துடன் பிரித்தானிய தமிழ்ச் சமூகத்துடன் பாராளுமன்ற சதுக்கத்தில் எனது நேரத்தைக் கழித்தது எனக்கு நினைவிருக்கிறது.

பிரித்தானிய தமிழ் மாணவர்களில் சிலர் கடும் விரக்தியுற்று விபரீதமான நடவடிக்கைகளை எடுத்து தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்க வெளியுறவுச் செயலர் டேவிட் மிலிபாண்டைப் நேரில் சந்திக்க அழைத்துச் செல்வதில் எனது நேரத்தைச் செலவிட்டேன்.

இவை நடைபெற்று ஒரு தசாப்தத்திற்கும் மேலாகிவிட்டது ஆனால் என்ன மாறிவிட்டது? எப்பொழுதும் பேரம் பேசுவது எப்போதும் கலந்துரையாடுவது எப்போதும் அமைதியாக இருப்பது எதுவும் செய்யாமல் இருப்பது போன்ற நிலைமையே உள்ளது.

பல இலட்சக்கணக்கான மக்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை போர்க்குற்றம் செய்ததற்காக ஒருவர் மீதும் வழக்குத் தொடரப்படவில்லை. முன்பு இருந்ததை விட அதிகமான நடிவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

எனவே பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு இலங்கை அரசாங்கத்திடம் பின்வரும் விடயங்களை செயற்படுத்த கோர வேண்டிய நேரம் இது. தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை கொடுங்கள், ஐ.நா. தீர்மானங்களுக்குக் கீழ்ப்படியுங்கள் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழியுங்கள்.

மேற்படி செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தாவிடின் இலங்கையின் அரசியல் தலைவர்களை தடைசெய்து இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய நேரம் இது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email