இளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகஸ்தரை நீதிமன்றில் முற்படுத்தாது பாதுகாக்கும் பொலிஸ்தலைமை!
மல்லாகத்தில் இளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகஸ்தரை நீதிமன்றில் பொலிசார் முற்படுத்தவிலை.
மல்லாகத்தில் இளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகஸ்தரை நீதிமன்றில் பொலிசார் முற்படுத்தவிலை.
மல்லாகத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனையின் பின் இன்றிரவு (18) 7.15 மணியளவில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி மயூரன் முன்னிலையில் இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.
அதனையடுத்து இன்றிரவு 7.15 மணியளவில் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சம்பவம் இடம்பெற்று 24 மணி நேரங்களின் பின்னரே சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
உடற்கூற்று பரிசோதனை தொடர்பான அறிக்கை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முன்வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மல்லாகம் குளமங்கால் பகுதியைச் சேர்ந்த பாக்கியராசா சுதர்சன் (வயது – 32) என்ற இளைஞனே மார்பில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
மானிப்பாய் அந்தோனியார் தேவாலய தேர் பவனியின் போது கையில் குழந்தை இயேசுவை ஏந்திய தூய அந்தோனியாரின் திருச்சொருபம் வீழ்ந்து உடைந்த மனக்கிலேசமூட்டும் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆலயத்தின் திருவிழா நாளான நேற்று (17) நடைபெற்ற குறித்த சம்பவத்தால் தேவாலயத்தில் கூடி இருத்த மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுததுடன் பெரும் சோகமாக காணப்பட்டனர்.
அந்தோனியார் தேவாலய தேர் பவனி நேற்றைய தினம் மாலை இடம்பெற்றது. அதன் போது தேரில் கையில் குழந்தை இயேசுவை ஏந்திய அந்தோனியாரின் திருசொருபம் பவணியாக எடுத்து வரப்பட்டது.
இந்நிலையில் தேர் தேவாலயத்தினை சுற்றி மீண்டும் தேவாலய முன் பகுதிக்கு வந்த வேளை அப்பகுதியில் இருந்த தாழ்வான பகுதிக்குள் தேரின் சில்லு இறங்கியமையால் தேர் சரிந்தது. அதன் போது தேரில் எடுத்து வரப்பட்ட தூய அந்தோனியாரின் திருச்சொருபம் கீழே விழுந்து தலை பகுதியில் சேதமடைந்தது.
அதன் பின்னர் உடனடியாக திருசொரூபம் தேவாலயத்தினுள் எடுத்து செல்லப்பட்டு , மற்றுமொரு திருசொரூபம் எடுத்து வரப்பட்டு பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கப்பட்டது.
தேவாலய பெருநாளின் போது திருசொரூபம் விழுந்து சேதமடைந்தமை பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி இருந்தது.
யாழ்.மல்லாகம் பகுதியில் இளைஞர் ஒருவரை சுட்டு படுகொலை செய்த பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யபட்டு உள்ளதாகவும் அவரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அது தொடர்பி மேலும் தெரிவிக்கையில் ,
மல்லாகம் துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் விஷேட பொலிஸ் குழு அமைக்கபட்டு உள்ளது. அக்குழுவினர் தற்போது விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
விசாரணைகளின் முடிவிலேயே சம்பவம் தொடர்பில் கூற முடியும். விசாரணைகளின் முடிவில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகஸ்தரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.
தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் குழப்பம் விளைவித்த குற்றசாட்டில் மூன்று இளைஞர்கள் தெல்லிப்பளை பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மல்லாகம் பகுதியில் நேற்றிரவு பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். குறித்த இளைஞனின் சடலம் தெல்லிப்பளை வைத்திய சாலையில் உடல் கூற்று பரிசோதனைக்காக வைக்கபட்டு உள்ளது.
அந்நிலையில் நேற்றிரவு தெல்லிப்பளை வைத்திய சாலைக்கு சென்ற இளைஞர்கள் அங்கு குழப்பத்தில் ஈடுபட்டார்கள் என வைத்திய சாலை நிர்வாகத்தினால் தெல்லிப்பளை பொலிசாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.
முறைப்பாட்டின் பிரகாரம் வைத்திய சாலைக்கு சென்ற பொலிசார் மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
யாழ். மயிலிட்டி துறைமுகத்திற்கு அண்மையில் நங்கூரம் இடப்பட்டிருந்த கப்பல் ஒன்று தீ பற்றிக்கொண்டுள்ளது.
இன்று அதிகாலை 1 மணியளவிலே இத் தீ சம்பவம் ஏற்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கடற்படை தீ அணைக்கும் பிரிவினர் தீயை கட்டுப்பட்டுக்குள் கொண்டுவர காலை தொடக்கம் நீரினை பீச்சி அடித்தாலும் கப்பலின் இயந்திர பகுதி கடுமையாக தீ பற்றியதால் கப்பலிலுள்ள டீசல் தாங்கி Gas என்பன வெடிக்கும் அபாயம் உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
தனியார் ஒருவருடைய குறித்த கப்பலானது திருத்த வேலை காரணமாகே அங்கு ஒருவருடமா நங்கூரம் இடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் கப்பலில் தீ பரவியமைக்கான காரணங்கள் இதுவரையில் கண்டுபிடிக்கப்படாமையால் இனந்தெரியாதோரின் திட்டமிட்ட செயலாக இருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளன.
வடமாகாண ரீதியிலான மாட்டு வண்டி சவாரி பெரும் திரளான ரசிகர்கள் மத்தியில் இன்று யாழ்ப்பணத்தில் நடைபெற்றது.
கைதடி பிரதேச சனசமூக நிலையங்களின் ஒன்றியம் நடாத்திய இம் மாட்டு வண்டி சவாரியானது மாலை 3 மணியளவில் மட்டுவில் சத்திரங்கிராய் சவாரி திடலில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற போட்டி மாடுகள் அனல் பறக்கும் வேகத்தில் சவாரி செய்வதை படங்களில் காணலாம்.
படங்கள் :- மயூரப்பிரியன்
மல்லாகம் சந்தியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார் என்று அறிய முடிகின்றது.
இந்தச் சம்பவம் இன்றிரவு இடம்பெற்றது.
கும்பல்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலைத் தடுக்க முற்பட்ட போது, பொலிஸார் மீது வாள்வெட்டு நடத்த முன்ற இளைஞனே சுட்டுக்கொல்லப்பட்டார் என்று பொலிஸார் கூறுகின்றனர்.
மாணவிகளை பாலியல்ரீதியாக துன்புறுத்திய வட்டுக்கோட்டை ஆசிரியர் ஒருவர் கடந்த புதன்கிழமை (13) பொலிஸாரால் கைது செய்யப்பட்ட விடயம் பலரும் அறிந்ததே. அந்த ஆசிரியரை காப்பாற்ற கடுமையான முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிரியரால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும், மூன்று மாணவிகளும் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் இருவர் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர் என்று மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என பொலிஸார் மன்றில் அறிவித்தனர்.
இதையடுத்து, ஆசிரியரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.
ஆசிரியர் தரப்பில் பிரபல சட்டத்தரணிகள் வழக்கிற்காக அமர்த்தப்பட்டுள்ளனர். இலங்கை குற்றவியல் தண்டனை சட்டக்கோவையில் வன்புணர்வுக்கு மட்டுமே சாட்டுதல்கள் உள்ளதென அவர்கள் மன்றில் குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கை எந்த திசையில் அவர்கள் நகர்த்தவுள்ளனர் என்பது, இதன்மூலம் வெளிப்படுகிறது. ஆசிரியர் அந்த மாணவிகளை பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கவில்லை, பாலியல் சீண்டல்களையே செய்தார், அது அவ்வளவு பாரதூரமான குற்றமல்ல என அவர்கள் வாதத்தை முன்வைக்கவிருப்பதாக அறிய முடிகிறது.
இந்த ஆசிரியரின் நடத்தை தொடர்பில் பாடசாலை நிர்வாகத்துக்கு பழைய மாணவர் சங்கம் அண்மைக்காலமாக எடுத்துக் கூறிவந்தது. பாடசாலையின் நிறைவேற்றுச் சபைக்கும் இந்த விடயம் கவனத்துக் கொண்டுவரப்பட்டிருந்தது.
எனினும் ஆசிரியருக்கு சார்பான தரப்புக்கள் இந்த விடயத்தில் தலையிட்டு, அவரைக் காப்பாற்றி வந்துள்ளன. ஆசிரியரைக் கைது செய்யப்போவதாக பாடசாலை அதிபருக்கு பொலிஸார் அறிவித்தல் வழங்கி பின்னரே, அவர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார். அதுவரை அதிபரும் அவரை பாதுகாத்து வந்துள்ளார்.
இந்த ஆசிரியர் தம்முடன் எப்படி நடந்து கொண்டார் என்பது குறித்து, மாணவிகள் பல அதிர்ச்சி வாக்குமூலமளித்துள்ளதாக அறிய முடிகிறது.
வெற்றிலை மென்றுவட்டு, துப்பலை தன் மீது துப்பினார் எனவும் அந்த அருவருப்பான செயலால் அவரை தள்ளிவிட்டதாகவும் ஒரு மாணவி வாக்குமூலமளித்துள்ளார் என அறியமுடிகின்றது.
தான் நடந்துகொள்ளும் விதம் பற்றி பெற்றோரிடமோ வேறு எவரிமோ கூறக்கூடாது. கூறினால் அனைவரையும் வீடு புகுந்து கொல்லுவேன் என மிரட்டினார் என்று மற்றொரு மாணவி பீதியுடன் வாக்குமூலமளித்துள்ளார்.
எனவே இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் உளவள ஆலோசனைக்கு உள்படுத்தப்படுவது கட்டாயமானதாகும். அதற்கு முன்னர் அவரை மீளவும் பாடசாலையில் இணைக்க, பாடசாலையின் முக்கிய புள்ளிகள் முயற்சிப்பதாக தெரிகிறது.
ஆசிரியர் உடனடியாக மீளவும் பாடசாலையில் இணைத்துக் கொள்ளப்படுவாராயின், பாதிக்கப்பட்ட மாணவிகளும் அதே பாடசாலையில் கல்வி பயில்வதால், அவர்கள் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
எனவே, இதையெல்லாம் கருத்தில் எடுத்தே, அடுத்த கட்ட முடிவுகளை எடுக்க வேண்டும்
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை, ஹோமாகம நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் வைத்து மிரட்டிய குற்றத்துக்கு பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ள சிறைத்தண்டனையிலிருந்து அவரை பொது மன்னிப்பளித்து விடுதலை செய்ய வலியுறுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தாயகத்தை காக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் முருதட்டுவ ஆனந்த தேரர் இந்த கடித்தத்தை இன்று அனுப்பியுள்ளார்.
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளரும், கேலிச் சித்திரக் கலைஞருமான பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவுக்கு ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் வைத்து பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், அச்சுறுத்தல் விடுத்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்தச் சம்பவம் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்றது.
இந்த நிலையில் ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் இரண்டு வருடங்களுக்கு மேலாக வழக்கு விசாரணை இடம்பெற்று வந்தது.
“சந்தியா எக்னெலிகொடவுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் எதிரியான ஞானசார தேரர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் இரண்டும் சாட்சியங்களின் ஊடாக நியாயமான சந்தேககங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளன. அதனால் அவரை குற்றவாளி என மன்று தீர்ப்பளிக்கிறது” என்று ஹோமாகம நீதிவான் உதேஷ் ரணதுங்க கடந்த மாதம் அறிவித்தார்.
குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இரண்டு குற்றங்களுக்கும் தலா 6 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கி நீதிவான் நேற்று (14) தண்டைத் தீர்ப்பளித்தார். இரண்டு தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க முடியும் எனவும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன், பாதிக்கப்பட்ட சந்தியா எக்னெலிகொடவுக்கு 50 ஆயிரம் ரூபா இழப்பீடு வழங்கவும் 3 ஆயிரம் ரூபா தண்டம் செலுத்தவும் நீதிமன்று கட்டளை வழங்கியது.
நீதிவான் நீதிமன்றின் தீர்ப்புக்கு ஆட்சேபணை தெரிவித்து மேல் நீதிமன்றில் மேன்முறையீடு செய்வதற்கான மனுவும் ஞானசார தேரரின் சட்டத்தரணிகளால் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கி அவரை விடுவிக்கவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தாயகத்தை காக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் முருதட்டுவ ஆனந்த தேரர் கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இளைஞர்களை கடத்தி காணாமல் போகச்செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட இராணுவ உயர் அதிகாரிக்கு பதவிஉயர்வு வழங்கப்பட்டுள்ளது. நாவற்குழி இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள ஆள்கொணர்வு மனுக்களில் முதலாவது பிரதிவதியாக குறிப்பிடப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன, இராணுவத் தலைமையகத்தின், காலாட்படையின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள காலாட்படை பணிப்பாளர் நாயகத்தின் பணியகத்தில் நேற்று இவர் தனது பணிகளைப் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிகழ்வில் காலாட்படை பணிப்பாளர் பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
காலாட்படை பணியக பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன முன்னர் 66ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக பணியாற்றியவர்.
இவர் அந்த பதவியை வகித்த காலப்பகுதியில், யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மூவர் சார்பான ஆள்கொணர்வு மனுக்களில் இவர் முதலாவது பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
1996ஆம் ஆண்டு நாவற்குழி இராணுவ முகாமின் பொறுப்பதிகாரியாக துமிந்த கெப்பிட்டிவலன்ன கடமையாற்றிய காலப்பகுதியில், அப்பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டு, 24 தமிழ் இளைஞர்களை கைது செய்திருந்தார். அவர்கள் அனைவரும் காணாமல் ஆக்கப்பட்டனர்.
இவர்களில் மூவர் தொடர்பாகவே, யாழ். மேல்நீதிமன்றத்தில் நாவற்குழி இராணுவ முகாமி தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த மனுக்களில் முதலாவது பிரதிவாதியாக மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன குறிப்பிடப்பட்டுள்ளார். அவரது சார்பில் சட்ட மா அதிபர் திணைக்களம், வழக்காடுவதற்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அத்துடன், நாவற்குழி காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்கள் சார்பில் அநுராதபுரம் மேல் நீதிமன்றிலும் 9 ஆள்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றிலும் மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
பாரதூரமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த நிலையிலும், மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன இராணுவத்தின் காலாட் படை பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், காலாட்படை பணிப்பாளராக உள்ள பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தனவும், மோசமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியவராவார்.
இறுதிப் போரில் 58 ஆவது டிவிசனின் ஒரு பிரிகேட்டுக்குத் தலைமை தாங்கியிருந்த அவர், வெலிவேரியவில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டவர்.
இந்தக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர். பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் அவர் இராணுவ தலைமையகத்தில் காலாட்படை பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.