SHARE

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை, ஹோமாகம நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் வைத்து மிரட்டிய குற்றத்துக்கு பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ள சிறைத்தண்டனையிலிருந்து அவரை பொது மன்னிப்பளித்து விடுதலை செய்ய வலியுறுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தாயகத்தை காக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் முருதட்டுவ ஆனந்த தேரர் இந்த கடித்தத்தை இன்று அனுப்பியுள்ளார்.

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளரும், கேலிச் சித்திரக் கலைஞருமான பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவுக்கு ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் வைத்து பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், அச்சுறுத்தல் விடுத்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்தச் சம்பவம் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்றது.

இந்த நிலையில் ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் இரண்டு வருடங்களுக்கு மேலாக வழக்கு விசாரணை இடம்பெற்று வந்தது.

“சந்தியா எக்னெலிகொடவுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் எதிரியான ஞானசார தேரர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் இரண்டும் சாட்சியங்களின் ஊடாக நியாயமான சந்தேககங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளன. அதனால் அவரை குற்றவாளி என மன்று தீர்ப்பளிக்கிறது” என்று ஹோமாகம நீதிவான் உதேஷ் ரணதுங்க கடந்த மாதம் அறிவித்தார்.

குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இரண்டு குற்றங்களுக்கும் தலா 6 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கி நீதிவான் நேற்று (14) தண்டைத் தீர்ப்பளித்தார். இரண்டு தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க முடியும் எனவும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன், பாதிக்கப்பட்ட சந்தியா எக்னெலிகொடவுக்கு 50 ஆயிரம் ரூபா இழப்பீடு வழங்கவும் 3 ஆயிரம் ரூபா தண்டம் செலுத்தவும் நீதிமன்று கட்டளை வழங்கியது.

நீதிவான் நீதிமன்றின் தீர்ப்புக்கு ஆட்சேபணை தெரிவித்து மேல் நீதிமன்றில் மேன்முறையீடு செய்வதற்கான மனுவும் ஞானசார தேரரின் சட்டத்தரணிகளால் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கி அவரை விடுவிக்கவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தாயகத்தை காக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் முருதட்டுவ ஆனந்த தேரர் கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.

Print Friendly, PDF & Email