நாடளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் கீழ் இன்று அதிகாலையுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 871 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி கைது செய்யப்பட்ட 871 பேரில் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 626 பேரும், குற்றப்புலனாய்வு பிரிவினால் அனுப்பப்பட்ட பட்டியலில் உள்ள 245 பேரும் அடங்குவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேநேரம் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியகம் மற்றும் விசேட பணியகத்தினால் தேடப்படும் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள 14 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அலெக்ஸ் நோரிஸ் எம்.பி உடனான இராஜதந்திர சந்திப்பின் வெற்றி
இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்தகுற்றவாளிகளை உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடைசெய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, பிரித்தானிய காவல்துறையின் நிழல் அமைச்சரும், நாட்டிங்ஹாம் வடக்கு (Nottingham North) பகுதி பாராளுமன்ற உறுப்பினருமாகிய மதிப்பிற்குரிய அலெக்ஸ் நோரிஸ் எம்.பி (Hon. Alex Norris MP) அவர்களுடன் இராஜதந்திர சந்திப்பு ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை (19/01/2024) மதியம் 2.30 மணியளவில் மெய்நிகர் வழியாக இடம்பெற்றுள்ளது.
சட்ட ஆலோசகரும் மனித உரிமைசெயற்பாட்டாளுமான திரு கீத் குலசேகரம் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த முக்கிய சந்திப்பில் The Sri Lanka Campaign for Peace and Justice அமைப்பின் பிரச்சாரப் பணிப்பாளர் திரு. பென்ஜமின் குமார் மொறிஸ், தொrழில்கட்சிக்கான தமிழர்கள் (Tamils For Labour) அமைப்பின் தலைவர் திரு சென் கந்தையா, மற்றும் இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமாக சர்வதேச மையத்தின் (ICPPG) சார்பில் திரு. றோய் ஐக்ஷான் கலந்துகொண்டார்.
அத்துடன் இனப்படுகொலையின் நேரடி சாட்சியங்கள் மற்றும் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களான கனேசமூர்த்தி விதுஷன், அனுஷன் பாலசுப்ரமணியம், மற்றும் பிரகலதன் சிவகுருநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கீத் குலசேகரம் அவர்கள் உரையின் போது, இலங்கையில் இடம்பெறும் இனப்படுகொலைக்கு வரலாற்று ரீதியாக பிரித்தானியாவே பொறுப்பு என்பதை விளக்கி, தமிழ்மக்களுக்கு நீதி வழங்க வேண்டிய கடமைப்பாட்டையும் எடுத்துரைத்தார். ITJP மற்றும் ICPPG ஆகிய அமைப்புக்கள் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு(FCDO) போதுமான ஆதாரங்களை சமர்பித்த போதும் இன்னும் உரிய நடவடிக்கை எடுக்க தவறியிருப்பதனை சுட்டிக்காட்டினார். அத்துடன் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் மட்டுமன்றி, தற்போது இலங்கையில் தொடரும் ஆள்கடத்தல் மற்றும் சித்திரவதைகளும் சவேந்திர சில்வாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுத படைகளே மேற்கொண்டுவருவதால் அதற்கும் சவேந்திர சில்வாவே பொறுப்பு என்றும், சந்திப்பில் கலந்துகொண்ட சித்திரவதைக்குள்ளானவர்கள் இதற்கு நேரடிசாட்சி என்றும்தெரிவித்தார்.
சவேந்திர சில்வா யுத்தகுற்றங்களில் ஈடுபட்டிருப்பதைஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் குறிப்படப்பட்டிருப்பதையும், அவர்மீது ஏற்கனவே அமெரிக்கா, கனடா பயணத்தடை விதித்துள்ளதையும் எடுத்துக்காட்டிய அவர், அமெரிக்கா, கனடாவின் வழியை பின்பற்றி பிரித்தானியாவும் தடை விதிக்கவேண்டும் என்று கோரி பிரித்தானிய புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் என்பதையும் விவரித்தார்.
அடுத்து உரையாற்றிய திரு. பெஞ்ஜமின் குமார் மொறிஸ், சவேந்திர சில்வா இழைத்த யுத்தக்குற்றங்களையும் அதற்கான ஆதாரங்களையும் விபரமாக எடுத்து விளக்கினார். தொடர்ந்து உரையாற்றிய சென் கந்தையா அவர்கள், இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடைசெய்வதற்கு இதுவரை 50ற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அனுப்பிய கோரிக்கைகளுக்கு சரியான பதிலை FCDO தராதது வருத்தத்தை தருவதுடன், தற்போதைய பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கு எதிராக தடை விதிக்க தயக்கம் காண்பிப்பது ஏன் என்று வினவினார். பிரித்தானிய எதிர்கட்சி தலைவர் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரனை செய்ய வேண்டும் என கூறியதை வரவேற்பதாகவும் அதேபோல் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையினை பிரித்தானியா அங்கீகரிக்க வேண்டும் என வழியுறுத்தினார்.
அனைவரின் கருத்துக்களையும் உள்வாங்கிய பாராளுமன்ற உறுப்பினர், மிகவும் ஆர்வத்துடன் மேலதிக விபரங்களையும் கேட்டறிந்தார். இலங்கை பிரச்சனை பற்றி தான் ஓரளவு அறிந்திருந்த போதிலும், ஈழத்தமிழர்கள் தன்னை சந்தித்து இவ்வாறு விளக்கமாக உரையாடியது இதுவே முதல்தடவை என்றும், இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை என தாம் முழுமையாக ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு தான் முழுமையாக ஆதரவளிப்பதாகவும், தனது தொகுதியிலுள்ள பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் சார்பில் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடைசெய்யக் கோரி FCDO விற்கு அழுத்தம் கொடுப்பதாகவும் வாக்களித்தார். அத்துடன் தமிழருக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற குழு (APPGT) மற்றும் மக்நெட்ஸ்கை தடைகளுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற குழு (APPG for Magnitsky Sanctions) என்பவற்றில் இணையவும் உத்தரவாதமளித்தார். தன்னை முதல்முறையாக சந்தித்து, இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை பற்றி பயனுள்ள முக்கிய தகவல்களை பகிர்ந்துகொண்டமைக்கு தனது நன்றிகளையும் தெரிவித்தார்.
தமிழர்கள் வாழ்வின் பெரும் பண்பாட்டு நிகழ்வான தமிழ் மரபுத் திங்கள் விழா இலண்டனில் நேற்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
இயற்கையை தெய்வமாக வழிபடும் தமிழர்கள் அந்த இயற்கைக்கு நன்றி கூறி விழா எடுப்பதுடன் தமிழர்களின் பண்பாட்டு சிறப்பையும்; கொண்டாடும் இந்த தை மாதத்தில் உலகெங்கும் வாழும் தமிழர்கள் தைத் திருநாளை கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் பிரித்தானியாவின் பல பகுதிகளிலும் பரந்து வாழும் தமிழர்கள் தம் அடையாளங்களின் வழி பயணிக்கவும் தம் அடையாளங்களை இளைய இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதற்கும் தமிழ் மரபுத்திங்கள் நிகழ்வுகளை பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் தமிழ் தகவல் நடுவம் (TIC) மற்றும் சமூக அபிவிருத்திக்கான மையம் (CCD) ஆகியன இணைந்து தமிழ் மரபுத் திங்கள் விழாவினை நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) கோலாகலமாக கொண்டாடினர்.
தமிழர்களின் வீர இசை பறை முழங்க மங்கள வாத்திய இசை மற்றும் மயிலாட்டம், குதிரையாட்டம், புலியாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம் என தமிழர் கண்கவர் கலைகளுடன் விருந்தினர்கள் திறந்தவெளி அரங்கிற்கு அழைத்துவரப்பட்டு பல்வேறு கலை நிகழ்வுகளுடன் கோலாகலமாக நடைபெற்றது.
நமது ஈழநாட்டின் பிரதான ஊடக அனுசரணையுடன் கிங்ஸ்டனின் நியூமோல்டனில் உள்ள Jubilee Square எனும் இடத்தில் வெகுசிறப்பாக நடத்தப்பட்ட இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக,
தாராளாவாத ஜனநாயகக்கட்சியின் (Liberal Democrat) தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சேர் எட் டேவி (Rt.Hon.Sir Ed Davey), ரிச்மண்ட் பார்க் மற்றும் கிங்ஸ்டன் நாடாளுமன்ற உறுப்பினர் சாரா ஓல்னி (Hon. Sarah Olney) ஆகியோரும் கிங்ஸ்டன் நகரபிதா கவுன்சிலர் Cllr. Diane White – (Mayor of Royal Borough of Upon Themes), துணை மேயர் ரிச்சர்ட் தோர்ப் (Cllr. Richard Thorpe) மற்றும் அவரது துணைவியார் Cllr. Lynn Henderson, கிங்ஸ்டன் நகரசபை தலைவர் கவுன்சிலர் அன்றியஸ் கேர்ஸ்ச் (Cllr. Andreas Kirsch), கிங்ஸ்டன் கவுன்சில் நிறைவேற்று பணிப்பாளர் சாரா அயர்லாந்து (Sarah Ireland CEO) ஆகியோர் கலந்துகொண்டதுடன் சிறப்புரைகளும் வழங்கினர்.
மேலும் முன்னாள் மேயரும் தற்போதய கவுன்சிலருமான தயா தயாளன் மற்றும் பல கவுன்சிலர்கள்இ தமிழ் அமைப்புக்களின் தலைவர்கள், தமிழ் அறிஞர்கள் மற்றும் பிரமுகர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தனர்.
திறந்தவெளி அரங்கில் இடம் பெற்ற இந்நிகழ்வானது தமிழர்களின் பண்பாட்டு பெரும் அடையாளமான பொங்கல் காட்சிப்படுத்துலுடனும் சறே தமிழ் பாடசாலை மாணவர்களின் தமிழ் மொழி வாழ்த்து மற்றும் கிங்ஸ்டன் தமிழ் பாடசாலை மாணவர்களின் வரவேற்பு நடனம் ஆகியவற்றுடன் சிறப்புற ஆரம்பமானது.
தொடர்ந்து அதிதிகளின் சிறப்புரைகளும் மாணவ மாணவிகளின் நடனங்கள் மற்றும் மயிலாட்டம் கும்மியாட்டம் கோலாட்டம் என்பனவும் அரங்கேற்றப்பட்டது. அத்துடன் தமிழர்களின் கலைகளில் ஒன்றான வர்மக் கலை நிகழ்த்தி காண்பிக்கப்பட்டதுடன் மெய்வெளி அரங்க இயக்கத்தின் சர்வதேசமே கேள் கூத்தல் ஒரு கட்டியம் என்ற நாட்டுக்கூத்தும் அரங்கேற்றப்பட்டது.
இதனிடையே இந்த மரபுத் திங்கள் விழாவின் போது “இலங்கைத் தமிழர்கள்: ஒரு காலவரையறையற்ற பாரம்பரியம்” (Tamils of Lanka : A Timeless Heritage) என்ற கண்காட்சியும் இடம்பெற்றது. தமிழரின் வரலாற்றை அவர்களின் பயணப்பாதையை மிக இலகுவாக வெளிக்காட்டி நின்ற அந்த கண்காட்சியில் தமிழர்களின் பண்டைய பாவனைபொருட்கள் மற்றும் அவர்கள் மீது அரங்கேற்றப்பட்ட தொடர்ச்சியான இனவழிப்பு சாட்சியங்கள் என்பனவும் காட்சிப்படுத்தப்பட்டன.
மறுபக்கத்தில் சமையல் கலை நிபுணரான கௌரி ரூபன் அவர்களின் தமிழ் பாரம்பரிய உணவுக்கண்காட்சியும் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு Newmalden Partnership, Royal Borough of Kingston Upon Themes தமிழ் பாடசாலை மற்றும் கிங்ஸ்டன் தமிழ் பாடசாலை ஆகியன இணை அனுசரணை வழங்கியதுடன் IBC தமிழ்மற்றும் மெய்வெளி ஆகியன ஊடக அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பல்லின பண்பாட்டுச் சூழலில் நாம் எமது மரபுகளை பேணிப் பாதுகாப்பதற்கும் நாம் ஒரு நீண்ட நெடிய நாகரீகமுடைய தமிழ் தேசிய இனம் என்பதை நிலை நிறுத்துவதற்கும் பல்வேறு நாகரிகங்களைக் கொண்ட மக்கள் வாழும் பிரித்தானியாவில் தமிழ் மரபுத்திங்கள் எங்கள் இனத்தின் பெரும் அடையாளமாக திகழ்கின்றது.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் என்பனவற்றை மீளப்பெறுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கு அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகளால் குறித்த கவனயீர்ப்பு மற்றும் அடையாள உண்ணாவிரத போராட்டம் என்பன முன்னெடுக்கப்பட்டன.
இலங்கை அரசாங்கம் அடக்குமுறை சட்ட வரைபுகளை மீளப்பெறவேண்டும் என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து பேரணி ஆரம்பமானது.
பேரணியானது மட்டக்களப்பு காந்திபூங்கா வரையில் சென்றதுடன் அங்கு ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு அருகில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சுதந்திரமான வெளிப்படுத்துவதற்கும் ஒன்றுசேருவதற்குமான உரிமையினை உறுதிசெய், அரசே இலங்கை அரசியல் யாப்பிலுள்ள மனித உரிமையை மீறி செயற்படாதே, மக்களுடைய அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது அரசுடைய கடமையாகும், பயங்கரவாத எதிர்ப்பு சட்ட முன்மொழிவை மீளப்பெறு உட்பட பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகள், மகளிர் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் ஆதரவு வழங்கியிருந்தனர்.
இதன்போது, கிழக்கு மாகாண சிவில் சமூகத்தின் பிரகடனம் ஒன்றும் வாசிக்கப்பட்டு அவை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் வழங்கிவைக்கப்பட்டன.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் பொதுச்சபைக் கூட்டம் இன்று(21.01.2024) தமிழர் தலைநகர் திருகோணமலையில் இடம்பெற்றது.
இந்நிலையில், 184 வாக்குகளைப் பெற்று சிறீதரன் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்த்துப் போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் 137 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்.
கட்சியின் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்கள், பொதுச்சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
தமிழரசுக் கட்சி வரலாற்றில் முதற்தடவையாக தலைவர் தேர்வு மூவருக்கிடையிலான போட்டியாக அமைவதால் இன்றைய கூட்டம் முக்கியம் வாய்ந்ததாக தமிழ் அரசியற் தரப்பில் அனைவர் மத்தியிலும் பார்க்கப்பட்டது.
அந்த அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் கட்சியின் தலைவர் பதவிக்காக போட்டியிட்டனர்.
இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் சக போட்டியாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனுக்கு தனது ஆதரவை வழங்கினார். இதனைத் தொடர்ந்து தலைவர் தெரிவிற்கான வாக்களிப்பினை நடத்துவதற்கு பதில் செயலாளர் பா.சத்தியலிங்கத்தினால தெரிவிக்கப்பட்டதையடுத்து, இரகசிய வாக்களிப்பு இடம்பெற்றது.
தமிழரசுக் கட்சி வரலாற்றில் தலைவர் ஒருவர் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றமை இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர்களின் தைத்திருநாளாகிய பொங்கல் விழா பிரித்தானிய பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான இலக்கம் 10 டவுனிங் வீதியில் நேற்று (18) கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அதிகாரபூர்வ நுழைவாயிலில் கண்கவர் கோலமிட்டு தமிழீழத்தின் தேசிய மலரான கார்த்திகை பூ அலங்கரிக்கப்பட்ட பொங்கல் பானை மற்றும் கரும்பு என்பவற்றுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சுகாதாரம் மற்றும் சமூக பராமரிப்புக்கான அமைச்சர் விக்டோரியா அட்கின்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்வியாளர்கள், சட்டவாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் உட்பட பிரித்தானிய தமிழ் சமூகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள், குறிப்பாக இங்கிலாந்துக்கான இந்திய உயர் ஸ்தானிகர் விக்ரம் துரைசுவாமி என பலர் கலந்து கொண்டனர்.
இதில் தமிழ் சமூகத்தை வரவேற்று உரையாற்றிய அமைச்சர் அட்கின்ஸ்,
உலகப் போரின் முன்னோடி விமானிகள் முதல் கோவிட் தடுப்பூசி கண்டுபிடிப்பில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் வரை ஐக்கிய இராச்சியத்திற்கு தமிழர்களின் நீண்டகால பங்களிப்புகளை பாராட்டினார். மேலும் தேசிய சுகாதார சேவையில் பணியாற்றும் தமிழர்களுக்கும், ஆசிரியர்கள் உட்பட தமிழ் கல்வியாளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
அதேவேளை இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான இங்கிலாந்தின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு தமது ஆதரவை வலியுறுத்துவதாகவும் இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை ஆதரிக்கும் ஒரு திட்டத்திற்காக 11 மில்லியன் பவுண்டுகள் ஒதுக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார். இது நீதிக்கான ஐக்கிய இராச்சியத்தின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும் எனவும் குறிப்பிட்டார்.
அமைச்சரது உரையை தொடர்ந்து திருமதி உஷா ராகவனின் மாணவிகளின் பாரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றதுடன் பொங்கல், தோசை, இட்லி, வடை உள்ளிட்ட பாரம்பரிய தமிழ் உணவுப் பண்டங்களும் பரிமாறப்பட்டன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின், ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் ரணில் விக்கிரமசிங்க உள்ளடக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு முன்பதாக நடத்தப்படுமென தாம் எதிர்பார்க்கின்றோம்.
எமது கட்சியின் எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர்களில் ரணில் விங்கிரமசிங்கவும் ஒருவர். எமது கட்சியின் ஆதரவுடனே அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
எனவே ரணில் விக்கிரமசிங்க எங்களுடன் இணைந்து செயற்படுகின்றார்.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கின்றோம்.
ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்கள் பட்டியலில் ரணில் விக்கிரமசிங்கவின் பெயரும் உள்ளது என்பதை கூறிக்கொள்கின்றோம்” என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.
தமிழ் மொழியையும் தமிழர்களின் கலை கலாச்சார பண்பாடுகளையும் வரலாற்று நீட்சியையும் கொண்டாடும் மாபெரும் தமிழ் மரபுத் திங்கள் விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21.01.2024) இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.
பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் தமிழ் தகவல் நடுவம் (TIC) மற்றும் சமூக அபிவிருத்திக்கான மையம் (CCD), கிங்ஸ்டன் தமிழ் பாடசாலை , சறோ தமிழ் கல்விக்கூடம், New Malden Town Centre Partnership, Kingston Upon Thames ஆகியன இணைந்து நடாத்தும் மேற்படி தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டம், ஞாயிற்றுக்கிழமை Jubilee Square, New Malden KT3 4TA எனும் இடத்தில் முற்பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணிவரை நடைபெறவுள்ளது.
தமிழர் கலை கலாச்சார பண்பாடுகளை முற்று முழுதாக வெளிக்கொணரும் இக் கொண்டாட்டத்தில் தமிழ் கலைகளான பறை இசைஇ நாதஸ்வர-தவில் இசை, கோலாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம்இ புலியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம், மற்றும் கும்மி பாட்டு, தெருக்கூத்து, நாட்டுக்கூத்து என்பன நூற்றுக்கும் அதிகமான கலைஞர்களால் இங்கிலாந்தின் வீதியூடாக ஆடப்பட்டு கோலகல பவணியாக இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்தை சென்றடையவுள்ளன. இதில் இங்கிலாந்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
நம் கலைகளோடும் பாரம்பரியங்களோடும் தைத்திருநாளை கொண்டாடுவதற்கு பிரித்தானியா வாழ் மக்கள் அனைவரையும் அழைத்து நிற்கின்றனர் விழா ஏற்பாட்டு குழுவினர்.
தமிழ் மொழியையும் அதன் கலை கலாச்சார பண்பாடுகளையும் பிரித்தானியாவிலும் கொண்டாடும் வண்ணம் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரித்தானிய பெரு நகர அவை ஜனவரி மாதத்தை பிரித்தானியாவில் தமிழர் பாரம்பரிய மாதமாக பிரகடணப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது
தமிழர்களின் திருநாளான தைப் பொங்கல் விழாவினை பிரித்தானியா வாழ் தமிழ் சமூகத்தினருடன் இணைந்து பிரித்தானியாவின் தமிழருக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற குழுவினரும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
தமிழருக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற குழுவின் (APPG-T) அனுசரணையுடன் இலண்டன் வெஸ்ட்மினிஸ்டரில் நேற்றைய தினம் (15) நடைபெற்ற இந்நிகழ்வில் பிரித்தானிய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பரந்த தமிழ் சமூகத்தினர் என பலர் கலந்து கொண்டாடினர்.
இதில் பொங்கல் மற்றும் தமிழர் பாராம்பரிய உணவுகள் இனிப்புகள் பரிமாறப்பட்டதுடன் தமிழர் கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொது மன்னிப்பின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இரு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குறிப்பிட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டங்களின் கீழ் தண்டனை பெற்று ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த இரண்டு தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மன்னிப்பு வழங்கியுள்ளார்.
நாகலிங்கம் மதன்சேகர் மற்றும் செல்லத்துரை கிருபாகரன் ஆகிய கைதிகள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பரிந்துரையின் பேரில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட பின்னர் இருவரும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இதில் மதன்சேகருக்கு 2023 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் திகதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டில் கிருபாகரன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து 2022 ஜூலை 20 ஆம் திகதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய எதிர்க்கட்சி, தொழிலாளர் கட்சியின் தலைவர் Hon. Sir Keir Starmer KCB KC MP
இலங்கையில் சமாதானம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்புவதற்கு சர்வதேச அமைப்புக்களுடனும் தமிழ் சமூகங்களுடனும் தோளோடு தோள் நின்று தொழிற்கட்சி அரசாங்கம் செயற்படும் என பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவரும் தொழிலாளர் கட்சியின் தலைவருமான Hon. Sir Keir Starmer KCB KC MP தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா மற்றும் உலகெங்கிலுமுள்ள தமிழர்களுக்கு தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவரது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இன்று பிரித்தானியா மற்றும் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் தங்களின் அறுவடைத் திருநாளான தைப் பொங்கலைக் கொண்டாடுகிறார்கள். அறுவடைத் திருநாள் ஏராளமான ஆசீர்வாதங்களையும் செழிப்பையும் மகிழ்ச்சியையும் தரட்டும். செழுமையான தமிழ் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் இந்த சிறப்பு பண்டிகையினை நாம் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் ஒற்றுமையுடனும் நன்றியுணர்வுடன் ஒன்றுகூடி கொண்டாடுவோம்.
எமது நாட்டின் சமூக பொருளாதார மற்றும் கலாசார கட்டமைப்பிற்கு பிரித்தானிய தமிழ் சமூகம் ஆற்றிய பல பங்களிப்புகளிற்கு இச்சந்தர்ப்பத்தில் நான் நன்றி தெரிவிக்கின்றேன். கல்வி, மருத்துவம், வணிகம், கலை, இலக்கியம் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் அவர்களின் பங்களிப்புகள் எமது சமூகத்தையும் எமது நாட்டையும் வலிமையாக்கியுள்ளன. உலகெங்கிலுமிருந்து வந்திருக்கும் தமிழ் மாணவர்களின் கடின உழைப்புக்கும் வெற்றிக்கும் சிறப்பு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கையில் சுயநிர்ணயம் சமாதானம் மற்றும் நீதிக்காக தமிழ் மக்கள் ஆற்றிய தியாகங்களை நாம் நினைவுகூர வேண்டிய தருணம் இதுவாகும். நீதி பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஆதரிப்பது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் இனியும் தாமதிக்காது செயற்படுவதை உறுதிப்படுத்துவதற்கு பிரித்தானிய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தொழிற்கட்சியானது தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும். மேலும் இலங்கையில் சமாதானம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்புவதற்கு எமது சர்வதேச அமைப்புக்களுடனும் தமிழ் சமூகங்களுடனும் தோளோடு தோள் நின்று தொழிற்கட்சி அரசாங்கம் செயற்படும்.
தொழிலாளர் கட்சியின் சார்பாக அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் அமைதியான தைப் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் வாழ்த்துச் செய்தியில் பிரித்தானிய எம்.பி. சோபியன் மக்டோனா
தமிழர்களுக்கான சுய நிர்ணயம், ஐ.நா. தீர்மானங்களுக்கு கீழ்படிதல் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கல் என்பவை இனியும் செய்படுத்தப்படாவிட்டால் இலங்கையின் அரசியல் தலைவர்களை தடை செய்து இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவேண்டிய நேரம் இது என பிரித்தானிய தொழிலாளர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சோபியன் மக்டடோனா (Hon. Siobhain McDonagh MP) தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா மற்றும் உலகெங்கிலுமுள்ள தமிழர்களுக்கு தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
புத்தாண்டின் ஆரம்பத்தினை கொண்டாட நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இருக்க வேண்டிய நேரம் இது. ஆனால் என்னைப் பொறுத்தவரை இது எனது தமிழ் நண்பர்களைக் கொண்டாடுவதற்கும் நீங்கள் செய்யும் மகத்தான பங்களிப்பிற்கும் நன்றி தெரிவிக்கும் நேரமாகும்.
இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் நீதிக்காகவும் பொறுப்புக்கூறலுக்காகவும் நடந்து வரும் போராட்டத்தை இங்குள்ள நாம் அனைவரும் நன்கு அறிவோம். பிரித்தானிய அரசாங்கத்திடம் மேலும் நடவடிக்கை எடுக்கக் கோருவதில் தமிழ் சமூகத்தின் விடாமுயற்சியை நான் நேரில் கண்டுள்ளேன்.
2009 இறுதி யுத்தம் மற்றும் உயிர்த ஞாயிறு பண்டிகை தற்கொலை தாக்குதல்களின் போது துயரத்துடன் பிரித்தானிய தமிழ்ச் சமூகத்துடன் பாராளுமன்ற சதுக்கத்தில் எனது நேரத்தைக் கழித்தது எனக்கு நினைவிருக்கிறது.
பிரித்தானிய தமிழ் மாணவர்களில் சிலர் கடும் விரக்தியுற்று விபரீதமான நடவடிக்கைகளை எடுத்து தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்க வெளியுறவுச் செயலர் டேவிட் மிலிபாண்டைப் நேரில் சந்திக்க அழைத்துச் செல்வதில் எனது நேரத்தைச் செலவிட்டேன்.
இவை நடைபெற்று ஒரு தசாப்தத்திற்கும் மேலாகிவிட்டது ஆனால் என்ன மாறிவிட்டது? எப்பொழுதும் பேரம் பேசுவது எப்போதும் கலந்துரையாடுவது எப்போதும் அமைதியாக இருப்பது எதுவும் செய்யாமல் இருப்பது போன்ற நிலைமையே உள்ளது.
பல இலட்சக்கணக்கான மக்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை போர்க்குற்றம் செய்ததற்காக ஒருவர் மீதும் வழக்குத் தொடரப்படவில்லை. முன்பு இருந்ததை விட அதிகமான நடிவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
எனவே பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு இலங்கை அரசாங்கத்திடம் பின்வரும் விடயங்களை செயற்படுத்த கோர வேண்டிய நேரம் இது. தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை கொடுங்கள், ஐ.நா. தீர்மானங்களுக்குக் கீழ்ப்படியுங்கள் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழியுங்கள்.
மேற்படி செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தாவிடின் இலங்கையின் அரசியல் தலைவர்களை தடைசெய்து இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய நேரம் இது என தெரிவிக்கப்பட்டுள்ளது.