SHARE

ByDilaksan Manorajan

தமிழர்கள் வாழ்வின் பெரும் பண்பாட்டு நிகழ்வான தமிழ் மரபுத் திங்கள் விழா இலண்டனில் நேற்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

இயற்கையை தெய்வமாக வழிபடும் தமிழர்கள் அந்த இயற்கைக்கு நன்றி கூறி விழா எடுப்பதுடன் தமிழர்களின் பண்பாட்டு சிறப்பையும்; கொண்டாடும் இந்த தை மாதத்தில் உலகெங்கும் வாழும் தமிழர்கள் தைத் திருநாளை கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் பிரித்தானியாவின் பல பகுதிகளிலும் பரந்து வாழும் தமிழர்கள் தம் அடையாளங்களின் வழி பயணிக்கவும் தம் அடையாளங்களை இளைய இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதற்கும் தமிழ் மரபுத்திங்கள் நிகழ்வுகளை பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் தமிழ் தகவல் நடுவம் (TIC) மற்றும் சமூக அபிவிருத்திக்கான மையம் (CCD) ஆகியன இணைந்து தமிழ் மரபுத் திங்கள் விழாவினை நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) கோலாகலமாக கொண்டாடினர்.

தமிழர்களின் வீர இசை பறை முழங்க மங்கள வாத்திய இசை மற்றும் மயிலாட்டம், குதிரையாட்டம், புலியாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம் என தமிழர் கண்கவர் கலைகளுடன் விருந்தினர்கள் திறந்தவெளி அரங்கிற்கு அழைத்துவரப்பட்டு பல்வேறு கலை நிகழ்வுகளுடன் கோலாகலமாக நடைபெற்றது.

நமது ஈழநாட்டின் பிரதான ஊடக அனுசரணையுடன் கிங்ஸ்டனின் நியூமோல்டனில் உள்ள Jubilee Square எனும் இடத்தில் வெகுசிறப்பாக நடத்தப்பட்ட இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக,

தாராளாவாத ஜனநாயகக்கட்சியின் (Liberal Democrat) தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சேர் எட் டேவி (Rt.Hon.Sir Ed Davey), ரிச்மண்ட் பார்க் மற்றும் கிங்ஸ்டன் நாடாளுமன்ற உறுப்பினர் சாரா ஓல்னி (Hon. Sarah Olney) ஆகியோரும் கிங்ஸ்டன் நகரபிதா கவுன்சிலர் Cllr. Diane White – (Mayor of Royal Borough of Upon Themes), துணை மேயர் ரிச்சர்ட் தோர்ப் (Cllr. Richard Thorpe) மற்றும் அவரது துணைவியார் Cllr. Lynn Henderson, கிங்ஸ்டன் நகரசபை தலைவர் கவுன்சிலர் அன்றியஸ் கேர்ஸ்ச் (Cllr. Andreas Kirsch), கிங்ஸ்டன் கவுன்சில் நிறைவேற்று பணிப்பாளர் சாரா அயர்லாந்து (Sarah Ireland CEO) ஆகியோர் கலந்துகொண்டதுடன் சிறப்புரைகளும் வழங்கினர்.

மேலும் முன்னாள் மேயரும் தற்போதய கவுன்சிலருமான தயா தயாளன் மற்றும் பல கவுன்சிலர்கள்இ தமிழ் அமைப்புக்களின் தலைவர்கள், தமிழ் அறிஞர்கள் மற்றும் பிரமுகர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தனர்.

திறந்தவெளி அரங்கில் இடம் பெற்ற இந்நிகழ்வானது தமிழர்களின் பண்பாட்டு பெரும் அடையாளமான பொங்கல் காட்சிப்படுத்துலுடனும் சறே தமிழ் பாடசாலை மாணவர்களின் தமிழ் மொழி வாழ்த்து மற்றும் கிங்ஸ்டன் தமிழ் பாடசாலை மாணவர்களின் வரவேற்பு நடனம் ஆகியவற்றுடன் சிறப்புற ஆரம்பமானது.

தொடர்ந்து அதிதிகளின் சிறப்புரைகளும் மாணவ மாணவிகளின் நடனங்கள் மற்றும் மயிலாட்டம் கும்மியாட்டம் கோலாட்டம் என்பனவும் அரங்கேற்றப்பட்டது. அத்துடன் தமிழர்களின் கலைகளில் ஒன்றான வர்மக் கலை நிகழ்த்தி காண்பிக்கப்பட்டதுடன் மெய்வெளி அரங்க இயக்கத்தின் சர்வதேசமே கேள் கூத்தல் ஒரு கட்டியம் என்ற நாட்டுக்கூத்தும் அரங்கேற்றப்பட்டது.

இதனிடையே இந்த மரபுத் திங்கள் விழாவின் போது “இலங்கைத் தமிழர்கள்: ஒரு காலவரையறையற்ற பாரம்பரியம்” (Tamils of Lanka : A Timeless Heritage) என்ற கண்காட்சியும் இடம்பெற்றது. தமிழரின் வரலாற்றை அவர்களின் பயணப்பாதையை மிக இலகுவாக வெளிக்காட்டி நின்ற அந்த கண்காட்சியில் தமிழர்களின் பண்டைய பாவனைபொருட்கள் மற்றும் அவர்கள் மீது அரங்கேற்றப்பட்ட தொடர்ச்சியான இனவழிப்பு சாட்சியங்கள் என்பனவும் காட்சிப்படுத்தப்பட்டன.

மறுபக்கத்தில் சமையல் கலை நிபுணரான கௌரி ரூபன் அவர்களின் தமிழ் பாரம்பரிய உணவுக்கண்காட்சியும் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு Newmalden Partnership, Royal Borough of Kingston Upon Themes தமிழ் பாடசாலை மற்றும் கிங்ஸ்டன் தமிழ் பாடசாலை ஆகியன இணை அனுசரணை வழங்கியதுடன் IBC தமிழ்மற்றும் மெய்வெளி ஆகியன ஊடக அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பல்லின பண்பாட்டுச் சூழலில் நாம் எமது மரபுகளை பேணிப் பாதுகாப்பதற்கும் நாம் ஒரு நீண்ட நெடிய நாகரீகமுடைய தமிழ் தேசிய இனம் என்பதை நிலை நிறுத்துவதற்கும் பல்வேறு நாகரிகங்களைக் கொண்ட மக்கள் வாழும் பிரித்தானியாவில் தமிழ் மரபுத்திங்கள் எங்கள் இனத்தின் பெரும் அடையாளமாக திகழ்கின்றது.

Photos by – Kajananth Suntharalingam

Print Friendly, PDF & Email