Home Blog Page 20

கவுன்சிலர் ஜோன் கோப்பின் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றுள்ள ஈழத்தமிழ் இளையோர்

image_pdfPRINT

பிரித்தானியாவில் எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு பிரித்தானிய அரசியல் வாதிகள் தமது தேர்தல் பரப்புரைகளை ஆரம்பித்துள்ளனர். அந்தவகையில் இச்சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி தமிழினப்படுகொலைக்கு நீதியும் தமிழீழ கொள்கைக்கு ஆதரவும் வழங்கவேண்டுமென்ற நிபந்தனையின் அடிப்படையில் தமிழ் இளையோர் கட்சிகளுக்கான தேர்தல் பிரச்சாரங்களில் கைகோர்த்துள்ளனர்.

இந்நிலையில் Esher மற்றும் Walton தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி ஆளும்கட்சியின் சார்ப்பில் தேர்தலில் போட்டியும் கவுன்சிலர் John Cope அவர்களின் தேர்தல் பரப்புரையில் தமிழ் இளையோர் கலந்து கொண்டு அவருக்கான பிரச்சார பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (07)நடைபெற்ற மேற்படி பிரச்சாரப்பணியில் செயற்பாட்டாளர்களான சசீஸ்கண்ணா நடராஜா மற்றும் தனுஷாத் மரியநேசன் ஆகியோர் தலைமையில் அனுஷன் பாலசுப்ரமணியம், கோகுலன் சிவசிதம்பரம், விதுஷன் கணேசமூர்த்தி, சாஹீம் முகம்மது, சதீஸ்கரன் குணரத்தினம் ஆகிய செயப்பாட்டர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் : 13 ஆவது நாளாகவும் போராட்டம்!

image_pdfPRINT

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்கு முறைகளுக்கு எதிராக, 13 ஆவது நாளாகவும் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் கவனயீர்ப்பு பேரணியும் இடம்பெற்றது.

குறித்த பிரதேச செயலகத்தின் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டமானது பொதுமக்களால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

13 ஆவது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை மக்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாக செயல்பட்டு வந்த வடக்கு பிரதேச செயலகம் 1988 ஆம் ஆண்டு தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டது.

இதனை தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பொன்னாவெளியில் டக்ளசுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு ; வாய்த்தர்க்கத்தால் திரும்பினார் அமைச்சர்

image_pdfPRINT

பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா மக்களின் எதிர்ப்பால் திரும்பினார். குறித்த சம்பவம் இன்று பகல் இடம்பெற்றுள்ளது.

பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னாவெளி பகுதியில் சீமெந்து தொழிற்சாலைக்கான சுன்னக்கற்களை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்றைய தினம் அமைச்சர் குறித்த தொழிற்சாலையை ஆரம்பித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இதன்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும், போராட்டக்காரருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் பொலிசார் கட்டுப்படுத்தியிருந்தனர்.

தொடர்ந்தும் போராட்டம் இடம்பெற்றதுடன், திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றது. ஆயினும், மக்களின் தொடர் எதிர்ப்பினால் குறித்த நிகழ்வு இரத்து செய்யப்பட்டு அமைச்சர் திரும்பியுள்ளார்.

முல்லைத்தீவு புதிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் உமாசங்கர்

image_pdfPRINT

முல்லைத்தீவு புதிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் உமாசங்கர் இன்று (03) கடமைகளை பொறுப்பேற்றார்

முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் அகிலேந்திரன் அண்மையில் வவுனியா ஓமந்தை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தார்.

இந்த நிலையில் அவரது பதவி வெற்றிடத்திற்கு புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது

மருத்துவ நிர்வாக துறையில் சிரேஷ்ட தரத்துக்கான பதவி உயர்வுகள் அண்மையில் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டிருந்த நிலையில் வைத்தியர் முத்துக்குமாரசுவாமிசர்மாஉமாசங்கர் இன்று கடமைகளை பொறுப்பெற்றார்

13 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலமே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்!

image_pdfPRINT

13 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக மட்டுமே இனப்பிரச்சினைக்கானத் தீர்வினை எட்ட முடியும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஸ்ரீ ரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று (02.04.2024) ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விடயத்தில் இனியும் சர்வதேசத்தை நம்பிக் கொண்டு, தமிழ் மக்களை முட்டாளாக்கும் செயற்பாட்டை தமிழ்த் தரப்புக்கள் கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கல்லூரியில் கார்த்திகை பூ விவகாரம் – மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட நடவடிக்கை

image_pdfPRINT

பாடசாலை மட்ட நிகழ்வுகளில் பொலிசாரினதும் அரச புலனாய்வாளரினதும் இராணுவத்தினரின் தலையீடுகள் மற்றும் விசாரணை செயற்பாடுகளை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்க உப தலைவர் தீபன் தீலீசன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்றைய தினம் தீபன் திலீசன் அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் நடைபெற்றுவரும் இல்ல விளையாட்டு நிகழ்வுகளில் அலங்கரிக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பாக – குறிப்பாக, வடக்கு கிழக்கு மாகாண பாடசாலைகளில் பொலிசாரினதும் இராணுவத்தினரதும் , அரச புலனாய்வாளர்களினதும் அச்சுறுத்தல் இடம்பெற்றுவருவது தனிமனித சிந்தனை மற்றும் மனச்சாட்சி சுதந்திரங்களை நசுக்கும் அடிப்படை மனித உரிமை மீறல்களாகும்.

இலங்கை அரசின் சட்ட வரையறைக்குட்பட்டு கருத்தியல் ரீதியாகவும் – கலை ரீதியாகவும் – குறியீட்டு வடிவங்கள் மூலமாகவும் – சமூகம் சார் பிரக்ஞைகளை வெளிப்படுத்தும் போது, அதனை அரச இயந்திரங்களால் நசுக்கும் செயற்பாடுகள் நடைபெறுவதற்கு அனுமதிக்க முடியாது.

இதற்கு கல்வி திணைக்களங்களும் துணைபோகுமானால், கல்விக்குள் இராணுவ மற்றும் பொலிஸ் தலையீடுகளை ஆதரிக்கும் செயற்பாடுகளாகவே இவை அமையும்.

அண்மையில் நடைபெற்ற தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் இல்ல மெய்வன்மை போட்டியின், இல்ல அலங்காரங்களில் மாணவர்கள் வெளிப்படுத்திய வெளிப்பாடுகள், இலங்கை அரசியலமைப்பில் ஏற்று அங்கீகரிக்கப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகள் தொடர்பான சிந்தனை மற்றும் மனச்சாட்சி சுதந்திரத்துக்கு உட்பட்டதாகும்.

இந்த விடயங்களில் பொலிசாரோடு இணைந்து வடமாகாண கல்வி அமைச்சும் தலையீடு செய்வதென்பது மாணவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயற்பாடு எனபதே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நிலைப்பாடாகும்.

இவ்விடயம் தொடர்பாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யவுள்ளோம். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொருத்தமான விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் என்று குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

அம்பலமான கோட்டா !

image_pdfPRINT

தந்திரீகன்-

“ஜனாதிபதி பதவியில் இருந்து என்னை நீக்குவதற்கான சதி” என்ற தலைப்பில் கோட்டாபய ராஜபக்ஷ எழுதிய நூலொன்று சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. நூலின் உள்ளடக்கம் பொதுப்படையில் அறிந்த விடயங்களாக இருந்தாலும் கூட, மீண்டும் சிங்கள தேசிய வாதமும், பௌத்த மேலாண்மை வாதமும் உமிழப்பட்டிருக்கிறது.

எந்தவொரு விடயத்தினையும் மிகப்பிரமாண்டமாக முன்னெடுக்கும் ராஜபக்ஷ குடும்பத்தில் முதல் தடவையாக ஒரு நூல் வெளியீட்டைக் கூட சுதந்திரமாக முன்னெடுக்க முடியாது நேரடியாக அச்சிட்ட நூலை சந்தைக்கு அனுப்பும் துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

இந்த நிலைமை ஏற்பட்டும் கூட, இன்னமும் ராஜபக்ஷக்கள் தங்களது நிலையை உணரத் தலைப்படவில்லை. குறிப்பாக கோட்டாபய ராஜபக்ஷ உணரவே இல்லை என்பது பரிதாபகரமான நிலைமை தான்.

ராஜபக்ஷக்கள் தாங்கள் காணும் பின்னடைவுகளுக்கு காரணங்களை கண்டறிவதில் வல்லவர்கள். 2015இல் மஹிந்த மூன்றாவது தடவையாகவும் ஆட்சி அதிகாரத்தில் அமர்வதற்கு ஆசைப்பட்டு தோல்வி கண்டபோது, இந்தியாவின் உளவு அமைப்பான ‘றோ’வைச் சாடினார்.

இப்போது அவருடைய சகோதரரான கோட்டாபய ராஜபக்ஷ, மக்கள் எழுச்சிக்கு முன்னால் முகங்கொடுக்க முடியாது உடுத்த உடையுடன் திருகோணமலை கடற்படை முகாமிலும், பின்னர் கட்டுநாயக்க விமானப் படை நிலையத்திலும், தொடர்ந்து மாலைதீவு, சிங்கப்பூர் என்று நகர்ந்து கொண்டிருந்த நிலைமைகளுக்கு மாறுபட்ட தரப்புக்களை நோக்கி அவர் சுட்டு விரலை நீட்டுகின்றார்.

அதில் முதலாவதாக, கோட்டாபய தன்னால் பதவிக்கு அமர்த்தப்பட்ட தற்போதைய பாதுகாப்புச் செயலாhளர் ஜெனரல் கமால் குணரட்ன, முப்படைகளின் தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சாலே ஆகிய மூவரையும் மிகக் கடுமையாக சாடியுள்ளதோடு அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் சந்தேகங்களையும் வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக, மிரிஹானவில் தன்னுடைய இல்லத்தினை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டபோது பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன ஷங்கிரில்லா விடுதியில் திருமண வைபவத்தில் இருந்தார். சவேந்திர சில்வா தொடர்புக்கு வரவில்லை. சுரேஷ் சாலே மட்டும் தாமதமாக வீட்டுக்கு வந்து காணொளி மூலமாக விடயங்களை கமலுக்கு காண்பித்தபோதும் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படவில்லை என்று குறிப்பிடுகின்றார் கோட்டாபய.

அதன்பின்னர் நாளடைவில் போராட்டத்தின் வீச்சு அதிகரித்தபோது, ஜனாதிபதி மாளிகையில் விசேட பாதுகாப்பு தீர்மானங்களை எடுக்கவல்ல கட்டமைப்புச் செயற்பட்டது. ஈற்றில் அதனால் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகையை நோக்கி நகர்ந்தவர்களை கட்டுப்படுத்த முடிந்திருக்கவில்லை. இதனால் கடற்படை தளபதியை அழைத்து அவரின் உதவியுடன் வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டது என்று சுட்டிக்காட்டுகின்றார் கோட்டாபய.

பின்னர், திருகோணமலைக் கடற்படை முகமிற்குச் சென்று அங்கிருந்துவிட்டு விமானப்படைத் தளபதியின் உதவியைப்பெற்று கட்டுநாயக்கவினை அடைந்து அங்கிருந்து நாட்டை விட்டு வெளியேறும் தீர்மானத்தினை எடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபாயவின் இந்தக் கூற்றானது, கமால், சவேந்திர, சலே போன்றவர்கள் தமது கடமைகளை உரிய வகையில் செய்திருக்கவில்லை என்பதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. விசேடமாக, கமாலுக்கும், சவேந்திரவுக்கும் இடையில் முரண்பாடான நிலைமை நீடித்ததையும் வெளிப்படுத்துவதாக குறிப்பிடுகின்றார்.

இதன்மூலமாக தனது பதவி பறிபோகுவதற்கு கமாலும், சவேந்திரவும், சலேயும் காரணமாக உள்ளனர் என்பதை நேரடியாகவே வெளிப்படுத்துகின்றனர். சிறிலங்காவின் படைகள் மீது மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானக் குற்றச்சாட்டுக்கள் வெளிப்படுத்தப்பட்டபோது, மார்பு தட்டி எதிர்ப்பு வெளியிட்டு முப்படைகளின் பாதுகாவலர்களாக இருந்த ராஜபக்ஷக்களே இப்போது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் அவல நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர் அரகலய போராட்டம் சம்பந்தமாக சில வேடிக்கையான கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கின்றார்.

“கொழும்பு காலிமுகத்திடல் அரகலயவில் கூடிநின்றவர்கள் யார் என்பதை எவரும் உன்னிப்பாக ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் சகலரும் ஏற்கனவே எனக்கு எதிரான பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ளமுடியும் ஒருபுறத்தில் சிங்கள பௌத்தர்களின் நலன்களுக்கும் மறுபுறத்தில் சிங்களவர்களும் பௌத்தர்களும் அல்லாதவர்களின் நலன்களுக்கும் இடையிலான ஒரு போட்டியின் விளைவாகவே ஜனாதிபதியாக தான் தெரிவு செய்யப்பட்டேன்.

“தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நான் எதிரானவன் என்ற எண்ணம் வலுவடைந்திருந்தது. கத்தோலிக்க திருச்சபையுடன் நான் உன்னதமான உறவைப் பேணிவந்தபோதிலும், அவர்களும் பிறகு எனக்கு எதிராகத் திரும்பினார்கள். அறகலயவில் பங்கேற்றவர்களுக்கு பல்வேறு குறிக்கோள்களும் முன்னுரிமைகளும் இருந்தன”

“பொருளாதார நெருக்கடியின் விளைவாக மக்கள் எதிர்நோக்கிய இடர்பாடுகளை தணிப்பதுதான் அறகலயவின் குறிக்கோள் என்று ஒரு எண்ணம் எவருக்காவது இருந்திருந்தால் அது வெறும் மருட்சியே. ஒற்றையாட்சி அரசுக்கு பதிலாக ஐக்கிய இலங்கைக்கு கோரிக்கை விடுக்கும் புலம்பெயர் தமிழர்களின் நிகழ்ச்சி நிரலை அரகலயவில் தெளிவாகக் காணக்கூடியதாக இருந்தது. இது சமஷ்டி அரசொன்றை வேண்டி நின்றவர்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்துவருகிறது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு மூன்று ராஜபக்ஷ சகோதரர்களும் மத்திய வங்கியின் இரு முன்னாள் ஆளுநர்கள் உட்பட அவர்களின் அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகித்த சில உயரதிகாரிகளுமே பொறுப்பு என்று கடந்த வருடம் நவம்பரில் உயர்நீதிமன்றம் தீர்ப்பைக் கூறியபோதிலும், அந்த நெருக்கடிக்கு தனது அரசாங்கம் பொறுப்பு என்பதை கோட்டா ஒத்துக்கொள்ளவேயில்லை. பயங்கரமான ஒரு சதித்திட்டத்தின் பலியாளாக தன்னை காண்பிப்பதற்கு நூலின் ஊடாக விளைந்திருக்கின்றார்.

அதுமட்டுமன்றி, தமிழர்களையும், முஸ்லிம்களையும், புலம் பெயர் தமிழர்களையும் அவர் மீண்டும் தனது நிரந்தரமான பகையாளிகளாக வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் தான் வெற்றி பெற்றமையால் தன்னைப் பழி தீர்த்துக்கொள்வதற்கு அரகலயவை அச்சக்திகள் பயன்படுத்தியுள்ளன என்று அர்த்தம் கற்பித்திருக்கின்றார்.

மேலும், அரகல பற்றிய மேற்படியான கோட்டாவின் விளக்கம் மீண்டும் சிறுபான்மைச் சமூகங்களின் நலன்களுக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுத்து பெரும்பான்மை இனவாத அணிதிரட்டலைச் செய்வதன் மூலம் மாத்திரமே தங்களால் மீண்டும் அரசியலில் செல்வாக்கான நிலைக்கு வரமுடியும் என்ற ராஜபக்ஷக்களின் உறுதியான தீர்மானத்தின் ஒரு தெளிவான வெளிப்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது.

ராஜபக்ஷக்களைப் பொறுத்தவரையில் தங்களுக்கு எதிரான அரசியல் செயற்பாடுகளை அவர்கள் மிகவும் சுலபமாக வெளிநாட்டுச்சதி என்று கூறிவிடுவார்கள். அதேபோன்று தான் கோட்டாபய ராஜபக்ஷவும் தனது வீழ்ச்சிக்குப் பின்னால் வெளிநாட்டுச் சக்திகளின் சதி இருப்பதாக கூறுகின்றார்.

ஆனால், அவரால் எந்தெந்த நாடுகள் தனக்கு எதிராக சதிவலையைப் பின்னியது என்பதைக் கூட வெளிப்படுத்துவதற்கு அவரிடத்தில் உறுதியான திராணி இல்லை என்பது மட்டும் மிகத் தெளிவாக தெரிகின்றது.

இதேவேளை, கோட்டா ஆயுதப் படைகள், பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவுகளின் மூத்த அதிகாரிகள் வெளிநாட்டுத் தூதரகங்களின் ஊழியர்களுடன் மேற்கொள்ளும் தொடர்புகளைக் கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் மட்டுப்படுத்தவும் கடுமையான நெறிமுறைகள் அமுல்படுத்தப்பட வேண்டும்.” என்று தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த விடயம் மிகவும் ஆழமாக பார்க்க வேண்டியுள்ளது. ரஷ்ய தூதரகம் கூட எந்த நாட்டை மையப்படுத்தி இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளீர்கள் என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தது.

எது எவ்வாறாயினும், சிறிலங்காவின் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் வெளிநாட்டு தூதரகங்களின் மறைமுக நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய செயற்பட்டுள்ளனர் என்பதை கோட்டா வெளிப்படுத்தியுள்ளார்.

தற்போதைய நிலையில், ராஜபக்ஷக்களைப் பொறுத்தவரை அவர்கள் ஒன்றில் மீண்டும் அதிகாரத்துக்கு வரவேண்டும் அல்லது கடந்தகால தவறுகளுக்காக தங்களை பொறுப்புக்கூற வைக்காத ஒருவர் அதிகாரத்துக்கு வருவதை உறுதிசெய்ய வேண்டும். இந்த நோக்கத்தில் தான் அவர்களின் வியூகங்கள் அமையும் என்பதில் சந்தேகமில்லை.
வெளிநாட்டுச்சதி என்ற பிரசாரத்தையும் சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான அரசியலையும் தவிர மீண்டுவருவதற்கு ராஜபக்ஷக்களுக்கு வேறு மார்க்கம் இல்லை. அரகலயவை சிங்கள பௌத்தர்களின் நலன்களுக்கு எதிரானது என்ற கோட்டாவின் கருத்து அந்த சமூகத்தின் விவேகத்தை நிந்தனை செய்வதாக அமைந்திருக்கிறது.

அதேநேரம், அரகலயவை சிறுபான்மை சமூகங்களின் திரட்சியாக வெளிப்படுத்த முனைவதும் சிங்கள, பௌத்த வாதத்தினை மீண்டும் தன்வசப்படுத்துவதற்கான ஒரு முயற்சியே. ஆனால். கோட்டாவை வெகுவாக ஆதரித்த படைகளும் அவரது உறவுகளும் இனியும் அவரை நம்புவார்களா என்பது தான் மிகப்பெரும் கேள்வி.
எது, எவ்வாறாக இருந்தாலும், சிறுபான்மை சமூகங்கள் கோட்டாவைப் பற்றி நன்கறிந்திருந்த நிலையில் இப்போது அவரது நூலால் பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் அம்பலப்பட்டு விட்டார்.

சிவராத்தியில் சிங்களத்தின் கோரமுகம்

image_pdfPRINT

“வெடுக்குநாறியில் அரங்கேறிய மிலேச்சத்தனம்”

தேசிகன்
தமிழர் தாயகமெங்கிலும் உள்ள ஆலயங்களில் கடந்த 8ஆம் திகதி சிவராத்தி வழிபாடுகளுக்கான ஏற்பாடுகள் வெகுவிமர்சையாக முன்னெடுக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக, தாயகத்தின் சிவாலயங்களில் அதிவிசேட பூஜைவழிபாடுகள் ஏற்பாடாகி நடைபெற்றன. இது வெறுமனே, வடக்கு,கிழக்கில் மட்டுமல்ல சிறிலங்கா தீவெங்கும் இந்த நிலைமைகள் காணப்பட்டன.

அதுமட்டுமன்றி, சிறிலங்கா அரசாங்கமே, தேசிய விடுமுறை தினமாக கூட சிவராத்திரியை பிரகடனப்படுத்தியுள்ளன. இதனால் பெருவிழாக்கள் வழமையாக முன்னெடுக்கப்படுவது வழமையாகும்.

அந்தவகையில், வவுனியா நெடுங்கேணி பகுதியில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பாரம்பரியமுடைய வெடுக்குநாறியில் 300மீற்றர்கள் வரையிலான உயரத்தில் ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் காணப்படுகின்றது.

பண்பாட்டு மலையான வெடுக்குநாறி மலையின் தாழ்வாரத்தில் உள்ள தமிழ் பிராமிய கல்வெட்டுக்கள் மற்றும் வட்டெழுத்துக்கள் ஆலயத்தின் தொன்மைக்கு சான்று பகிர்கின்றன. ஆய்வுகளின் அடிப்படையில் இந்த பிராமி எழுத்துக்களும், அதனுடன் இணைந்த எச்சங்களும், நாக வழிபாடும், நீர்ப்பாசன கட்டமைப்புகளும் விஜயன் வருகைக்கு முன்னரான தமிழ் நாகர்களின் தொன்மையின் அடையாளமாக இருக்கின்றன.

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரரை ஐந்து தலைமுறையாக தமிழ் மக்கள் வணங்கி வந்த வழமையைப்போன்றே வழிபாடுகளுக்கான ஆயத்தங்களுடன் மலையை நோக்கி பயணப்படுவதற்காக ஒன்றிணைந்தனர்.

முன்னைய நாளான 7ஆம் திகதி வியாழக்கிழமை, விசேட பூஜைகளுக்கான ஆயத்தங்களைச் செய்வதற்கு சென்றிருந்த ஆலய பூசகரும், துணைக்குச் சென்றவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இதனால் மக்கள் பிரதிநிதிகளாக சிவஞானம் சிறீதரன், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்ட இயக்கத்தின் இணைப்பாளர் வேலன் சுவாமிகள் உட்பட பலரும் பொதுமக்களுடன் அணிதிரளும் நிலைமை ஏற்பட்டது.

ஏகநேரத்தில் கைது செய்யப்பட்ட ஆலயபூசகர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அவரும் அணிதிரண்ட பொதுமக்களுடன் இணைந்து கொண்டார். இதனால், அங்கு குவிக்கப்பட்டிருந்த பொலிஸார் வெடுக்குநாறி மலை தொல்பொருள் பகுதி என்பதால் அங்கே செல்ல முடியாது என்று மக்களுடன் மல்லுக்கட்ட ஆரம்பித்தனர்.
பின்னர் அங்கே செல்வதாக இருந்தால் தேரர்களையும் நாம் அங்கே செல்வதற்கு அனுமதிக்க வேண்டியேற்படும். அவர்கள் அங்கே வருகின்றபோது, முரண்பாடுகள் ஏற்பட்டால் நடவடிக்கைளை எடுப்போம் என்ற எச்சரிக்கையையும் செய்தனர்.

எனினும், அங்கிருந்தவர்கள் “எங்கள் கோயிலுக்கு போக விடுங்கோ, எங்கட கோயில்ல வருசத்தில ஒருநாள் நிம்மதியாய் கும்பிட விடுங்கோ, நாங்கள் உங்களிட்ட நாட்டையா கேட்டம், ஒருநேரம் கும்பிடத்தானே கேட்டம்” என்றவாறு கூட்டாக குரல் எழுப்பினர்.
பொலிஸார் நடப்பவற்றை அவதானித்துக் கொண்டிருக்கையில், அதில் ஒருவர் மேற்கண்ட கூற்றுக்கள் உட்பட அனைத்து விடயங்களையும் விரைந்து மொழியெர்த்துக் கொண்டிருக்கின்றார். மற்றொருவர் அனைத்தையும் காணொளியாக பதிவு செய்யும் செயற்பாடுகளில் ஈடுபட்ட நிகழ்வும் அரங்கேறியது.

இந்தச் சந்தர்ப்பத்தில் ஆலய பூசகரும் அவரது உதவியாளரும் மோட்டார் சைக்கிளில் மலைநோக்கி நகர முற்பட அவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
பொலிஸார் உத்தரவால் சினமடைந்த, பூசகர், “நீங்கள் நாட்டைக் காப்பதற்காக இருப்பவர்கள் அல்லர். நாட்டை கெடுப்பதற்காக இருப்பவர்கள். நீங்கள் அழிந்து தான் போகப்போகின்றீர்கள். உங்களுடைய தேரர்கள் போன்று நானும் சாபமிடுகின்றேன்” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றார்.

பின்னர் அங்கே ஒன்றுகூடியவர்கள் அனைவரும் பூசகருடன் கால்நடையாக தமது பயணத்தினை ஆரம்பித்து சற்றுத்தூரம் சென்றதும் பூஜைப்பொருட்கள் தவிர்ந்த ஏனைய பொருட்களுடன் செல்வதற்கு அனுமதிக்க முடியாது என்றார்கள். அதுமட்டுமல்ல, போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீரைக் கூட அனுமதிக்க முடியாது என்ற அறிவிப்பு வெளியாகின்றது.

அங்கிருந்த வயதான பெண்களும், குழந்தைகளின் தாய்மாரும் தண்ணீரைக் கூட கொண்டு செல்ல முடியாது என்ற பொலிஸாரின் உத்தரவால் சினமடைந்தனர். அவர்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

ஆனால், எந்தக் கோசங்களும் எடுபடவில்லை. கால்நடையாக ஐந்து கிலோமீற்றர்கள் வரையில் சென்றவர்கள், தங்களுடைய குலசாமியை தரிசிக்கின்றார்கள்.
பின்னர், அன்னதானத்துக்கான ஏற்பாடுகள் ஒருபுறமும், மறுபுறுத்தில் பூஜைவழிபாடுகளுக்கான ஏற்பாடுகளும் தடாலடியாக முன்னெடுக்கப்படுகின்றன. அத்துடன், பூஜையும் ஆரம்பமாகியது.

பொழுது சாய்ந்து கொண்டிருக்கையில், அப்பகுதியெங்கும், பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டனர். அங்கிருந்து அனைவரும் வெளியேற வேண்டும் என்ற அறிவிப்பும் அவர்களால் விடுக்கப்பட்டது. எனினும், “சிவராத்திரி, இரவில் தான் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். நாம் முதலாவது ஜாம பூஜையை நிறைவு செய்துவிட்டுச் செல்கின்றோம்” என்று அங்கிருந்த அனைவரும் விநயமாக வேண்டினர்.

ஆனால், எந்தக் கோரிக்கைகளும் எடுபடவில்லை. அன்னதானத்துக்கான ஆயத்தங்களை அங்கு வந்திருந்த பெண்பொலிஸார் தலையீடு செய்து இடைநிறுத்தியதோடு பஜனையில் ஈடபட்டவர்கள் உட்பட பூஜையை ஆரம்பிப்பதற்கு தயாரான பூசகர் உட்பட அனைவரும் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.
பொலிஸாரின் அறிவுறுத்தலை ஏற்று வெளியேற மறுத்தவர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். அதற்கும் முரண்டு பிடித்தவர்கள் நையப்புடைக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டனர்.

அவ்வாறான நிலைமையில் வெளியேற்றப்பட்டவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் தவத்திரு வேலன்சுவாமிகள் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர். ஆலய வளாகமன்றோ, அன்னதான தளமென்றோ பொலிஸார் சிந்திக்கவில்லை. காலணிகளுடன் பிரவேசித்து, கண்மூடி விழிப்பதற்குள் சிறப்பு பூஜை வழிபாட்டுக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் சிதைத்தனர்.

தமது பண்பாட்டு உரிமை, வழிபாட்டு உரிமை, ஒன்று கூடும் உரிமை, சித்திரவதைக்கு உட்படுத்தப்படாத உரிமை உள்ளிட்ட அனைத்து அடிப்படை உரிமைகளும் பறிக்கப்பட்டு அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு தரப்பாக அங்கிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.

“மகாசிவராத்திரி தினத்தில் இந்து மக்களினால் ஏற்றப்படும் ஒளியானது, முழு இலங்கை மக்களின் வாழ்விலும் ஒளியேற்றுவதாக அமையட்டுமெனப் பிராத்திக்கிறேன்” என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டு 24 மணிநேரத்துக்குள் தான் இந்த நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டுள்ளன.
உண்மையில், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் ஏதேச்சதிகாரமான செயற்பாடுகள் ஒரேபொழுதில் நிழ்ந்தவை அல்ல. பௌத்த தகவல் நிலையத்தினால் கடந்த 7ஆம் திகதி கடிதமொன்று பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதில், வெடுக்குநாறியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச அரசியல் வாதிகளால் ஏற்பாடு செய்யப்படும் பூஜை நிகழ்வுகளால் தொல்பொருள் பிரதேசம் பாதிக்கப்படப்போவதாக சுட்டிக்காட்டப்பட்டு அதனை நீதிமன்ற உத்தரவைப் பெற்று தடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.

அதேநேரம், கல்கமுவ சந்தபோதி தேரர் உள்ளிட்ட அவரது பரிவாரங்களும் மேற்படியான கருத்துக்களையே காணொளிகளாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பரப்பியதோடு, பௌத்தர்களை அணிதிரளுமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
பௌத்தத்தின் புராதனத்தை வெளிப்படுத்தும் இரண்டு தூபிகளின் இடிபாடுகள் வெடுக்குநாறியில் உள்ளதாக எல்லாவல மேதானந்த தேரர் குறிப்பிட்ட நிலையில், ‘வட்டமான பர்வத விகாரை” என்கிற பௌத்தத்தின் நிலமாக இதனை அடையாளப்படுத்த முயலுகின்றார்கள் தேரர்கள்.

இதனால், தான் வெடுக்குநாறிமலை மீது பிரத்தியேகமான கரிசனையை கொண்டிருக்கின்றார்கள் தேரர்கள். இவர்களுக்கு தென்னிலங்கை சிங்கள தேசியவாத அரசியல்வாதிகளும், அரச இயங்திரங்களான திணைக்களங்களும், படைகளும் முழுமையான பக்கத்துணையாக இருக்கின்றன.

2018 முதல் வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயமும், அங்கு நடைபெறும் பூஜை வழிபாடுகளும் தொடர்ச்சியாக முரண்பாடுகளுக்குள் தள்ளப்படுவதற்கு காரணம், மேற்படி தரப்புக்களின் கூட்டுச் செயற்பாடுகளின் வெளிப்பாடுகளே.
மகாசிவராத்திரி வழிபாடுகளை நடத்தினால் இனங்களுக்கு இடையில், மதங்களுக்கு இடையில் முரண்பாடுகள் தோற்றம் பெற்றுவிடும் என்று பொலிஸார் குறிப்பிடுவதும், நீதிமன்றத்தின் அனுமதி இல்லையென்று சுட்டிக்காட்டுவதும் ஏற்றுக்கொள்ள முடியாதொரு விடயமாகும்.

ஏனென்றால், 17-05-2023ஆம் திகதியன்று வெடுக்குநாறி மலையில் காணப்பட்ட விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பான வழக்கு வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தொல்பொருள் திணைக்களத்தால் அடையாளப்பட்ட பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படாது, அதிகாரிகளின் கண்காணிப்பில் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளை நடத்த முடியும் என்று மேலதிக மாவட்ட நீதிவான் தேவராசா சுபாஜினி வழங்கிய கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தவகையில், வழிபாடுகளை நடத்துவதற்கு நீதிமன்றம் எந்தவகையிலும் குறுக்கீடுகளைச் செய்யவில்லை என்பது மிகத்தெளிவாகின்றது. அதேநேரம், இன,மத முரண்பாடுகள் ஏற்படும் என்ற தர்க்கத்தை கவனத்தில் கொள்கின்றபோது, பூர்வீகமாக வாழ்ந்து அங்கு வழிபாடுகளை மேற்கொள்ளும் குழுவினர் செல்கின்றபோது, தேரர்களும், அவர்கள் சார்ந்தவர்களும் அங்கு பிரசன்னமாகுவதற்கு பொலிஸார் அனுமதிப்பது ஏன்?

ஆகவே, வெடுக்குநாறி மலை விவகாரம், தமிழர்கள் மீதான, சிங்கள, பௌத்த தேசியவாதத்தின் அரச இயந்திர துணையுடனான ஆக்கிரமிப்பு விரிவாகத்தையும், அடக்குமுறையின் முழுவீச்சையும் அம்பலமாக்கியிருக்கிறது.
அதுமட்டுன்றி, பொலிஸாரால் கைது செய்யப்பட்ட எட்டுப்பேர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு விளக்கமறியலும் நீடிக்கப்பட்டது. உண்மையில் அந்த எட்டுப்பேரும் கைது செய்யப்பட்டதன் பின்னர் தான் அவர்களின் கைதுக்கான காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

குறிப்பாக, வனப்பாதுகாப்புத் திணைக்களத்திற்கு சொந்தமான பகுதியில் வறட்சியான காலத்தில் தீமூட்டி பூஜை செய்வதற்கு முனைந்தமையால் காட்டுத்தி ஏற்படும் என்ற ஆபத்தை உணர்ந்த வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் வடமாகாண பிரதிப்பொலிஸ்மா அதிபருக்கு செய்த முறைப்பாட்டை அடுத்தே வழிபாடுகளுக்காகச் சென்றவர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். வெளியேற மறுத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் குறிப்பிடுகின்றர்.

அதேநேரம், தொல்பொருளியல் பகுதியில் அனுமதியின்றி செல்ல முடியாது என்றும், அங்கு பூஜை வழிபாடுகளை மேற்கொள்ள முடியாது என்றும் பொலிஸார் இன்னொரு காரணத்தினையும் கூறுகின்றனர்.

ஆனால், தமிழர்கள் வழிபாட்டுக்குச் சென்றபோது, அங்கே தேரர்களும் அவர்களின் பரிவாரங்களும் எதற்காக வருகை தந்தார்கள் என்பதற்கான பதில் பொலிஸாரிடம் இல்லை.

அதேபோன்று தீ மூட்டி பூஜை செய்வதால் காடு தீ பற்றும் என்பதை கொழும்பில் உள்ள வனப்பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் எவ்வாறு அறிந்து கொண்டு முறைப்பாட்டைச் செய்தார் என்பதும் கேள்விக்குள்ளாகிறது.
அதுமட்டுமன்றி, தொல்பொருளியல் பகுதிக்குள் பிரவேசிக்க கூடாது என்றால், குருந்தூர் மலை தொல்பொருளியல் பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டதன் பின்னர் அங்கு பெருவிகாரையே நிர்மாணிக்கப்பட்டது. அது தொடர்பில் பொலிஸார் ஏன் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.

மேலும் நீதிமன்றம், வெடுக்குநாறி மலைக்குள் செல்ல முடியாது என்றோ பூஜை வழிபாடுகளை செய்ய முடியாதென்றோ அறிவிக்கவில்லை. அதற்கான தடைகளும் இல்லை. பின்னர் பொலிஸார் எந்த அடிப்படையில் தடைகளை ஏற்படுத்தினார்கள்.
ஆகவே, வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி நிகழ்வு நடைபெறக்கூடாது என்பது தான் ஒட்டுமொத்த சிங்களத்தின் நிலைப்பாடாகும். அதனை தடுக்கும் ஏவல் இயந்திரங்களாகவே பொலிஸாரும், படைகளும் செயற்பட்டள்ளன.

உண்மையில், இதன் பின்னால் இருப்பது அரசியல் தலைமைகளும், பௌத்த தேரர்களும் தான் என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. அதேநேரம், வவுனியா நீதிவான் நீதிமன்றில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்த வழக்கு விசாரணை 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டபோது அந்த வழக்கு விசாரணை மூன்று தடவைகள் நிறுத்தப்பட்டு முன்னெடுக்கப்பட்டது.

ஒவ்வொரு தடவைகள் நிறுத்தப்பட்டபோதும், நீதிவானின் தொனிகளில் மாற்றங்கள் காணப்பட்டதையும் ஆழமாக உற்றுநோக்குகின்றபோது உணர முடிகின்றது.
இறுதியில் கடந்த 19 ஆம் திகதி கைதானவர்கள் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டதுடன் பொலிசாரின் பொய் வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆகவே, சிறிலங்காவின் தமிழர் தாயகத்தில் சிங்கள, பௌத்த விரிவாகத்தின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலை தற்போதும் அதிகார சக்தியொன்று முன்னெடுப்பதில் தீவிரமாக உள்ளது என்பது மிகவும் வெளிப்படையாக உணரக்கூடியதாக உள்ளது.
ஆகவே, அச்சக்தியை முறியடிப்பதற்கு தாயகத்தின் தன்னெழுச்சியான போராட்டமொன்றே இறுதியான ஆயுதமாகும்.

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைத்தால் நாடெங்கும் போராட்டம் வெடிக்கும்!

image_pdfPRINT

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் எச்சரிக்கை

டெங்கும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மக்கள் போராட்டம் வெடிக்கும் என்பதால் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கவே முடியாது. அதனைச் செய்வதாயின் அரசமைப்பு மறுசீரமைப்பு அவசியம்.

அதற்கு உயர்நீதிமன்றத்தின் அனுமதி அவசியம். நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் தேவை. சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

இதற்கிடையில் அவ்வாறான முயற்சி எடுக்கப்பட்டால் மக்கள் வன்முறையற்ற அமைதிப் போராட்டத்தில் இறங்குவார்கள். நானும் முதலில் சட்டத்தை நாடுவேன். அதன்பின்னர் போராட்டம் செய்வேன். எனவே, அப்படியான முயற்சி இடம்பெறாது என்றே தோன்றுகின்றது.

அதேவேளை, நான் அரசியல் செய்வேன். ஆனால், தேர்தல் அரசியலில் ஈடுபடமாட்டேன். ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் அல்ல பிரதேச சபை தேர்தலில்கூட போட்டியிட மாட்டேன் என  குறிப்பிட்டுள்ளார்.

முச்சக்கரவண்டி சாரதியிடம் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிக்குச் சிறை!

image_pdfPRINT

முச்சக்கரவண்டி சாரதி ஒருவரிடம் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (28) சிறைத்தண்டனை விதித்துள்ளது.

போக்குவரத்து விதிமீறல் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தவிர்ப்பதற்காக, முச்சக்கரவண்டி சாரதி ஒருவரிடம் 500 ரூபாயைப்  பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு 4 குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்றில் கருத்துக்களை முன்வைத்திருந்தது.

இதன்படி 4 குற்றச்சாட்டுக்களிலும் குற்றவாளியாக இனம்காணப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட், குற்றவாளி என நீதவான் நீதிமன்ற உறுதிப் படுத்தியுள்ளதோடு ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு  சிறைத்தண்டனையை ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 5,000 ரூபா வீதம் 20,000 ரூபா அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மனித உரிமை மீறலாக அமையாது!

image_pdfPRINT

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மனித உரிமை மீறலாக அமையாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை அண்மையில் களனி பல்கலைக்கழக திறப்பு விழாவில் கலந்து கொண்ட போது சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த போதிலும், தமது பொறுப்பு மற்றும் கடமையை நிறைவேற்றுவதற்கு தான் தவறவில்லை எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!