SHARE

“வெடுக்குநாறியில் அரங்கேறிய மிலேச்சத்தனம்”

தேசிகன்
தமிழர் தாயகமெங்கிலும் உள்ள ஆலயங்களில் கடந்த 8ஆம் திகதி சிவராத்தி வழிபாடுகளுக்கான ஏற்பாடுகள் வெகுவிமர்சையாக முன்னெடுக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக, தாயகத்தின் சிவாலயங்களில் அதிவிசேட பூஜைவழிபாடுகள் ஏற்பாடாகி நடைபெற்றன. இது வெறுமனே, வடக்கு,கிழக்கில் மட்டுமல்ல சிறிலங்கா தீவெங்கும் இந்த நிலைமைகள் காணப்பட்டன.

அதுமட்டுமன்றி, சிறிலங்கா அரசாங்கமே, தேசிய விடுமுறை தினமாக கூட சிவராத்திரியை பிரகடனப்படுத்தியுள்ளன. இதனால் பெருவிழாக்கள் வழமையாக முன்னெடுக்கப்படுவது வழமையாகும்.

அந்தவகையில், வவுனியா நெடுங்கேணி பகுதியில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பாரம்பரியமுடைய வெடுக்குநாறியில் 300மீற்றர்கள் வரையிலான உயரத்தில் ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் காணப்படுகின்றது.

பண்பாட்டு மலையான வெடுக்குநாறி மலையின் தாழ்வாரத்தில் உள்ள தமிழ் பிராமிய கல்வெட்டுக்கள் மற்றும் வட்டெழுத்துக்கள் ஆலயத்தின் தொன்மைக்கு சான்று பகிர்கின்றன. ஆய்வுகளின் அடிப்படையில் இந்த பிராமி எழுத்துக்களும், அதனுடன் இணைந்த எச்சங்களும், நாக வழிபாடும், நீர்ப்பாசன கட்டமைப்புகளும் விஜயன் வருகைக்கு முன்னரான தமிழ் நாகர்களின் தொன்மையின் அடையாளமாக இருக்கின்றன.

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரரை ஐந்து தலைமுறையாக தமிழ் மக்கள் வணங்கி வந்த வழமையைப்போன்றே வழிபாடுகளுக்கான ஆயத்தங்களுடன் மலையை நோக்கி பயணப்படுவதற்காக ஒன்றிணைந்தனர்.

முன்னைய நாளான 7ஆம் திகதி வியாழக்கிழமை, விசேட பூஜைகளுக்கான ஆயத்தங்களைச் செய்வதற்கு சென்றிருந்த ஆலய பூசகரும், துணைக்குச் சென்றவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இதனால் மக்கள் பிரதிநிதிகளாக சிவஞானம் சிறீதரன், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்ட இயக்கத்தின் இணைப்பாளர் வேலன் சுவாமிகள் உட்பட பலரும் பொதுமக்களுடன் அணிதிரளும் நிலைமை ஏற்பட்டது.

ஏகநேரத்தில் கைது செய்யப்பட்ட ஆலயபூசகர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அவரும் அணிதிரண்ட பொதுமக்களுடன் இணைந்து கொண்டார். இதனால், அங்கு குவிக்கப்பட்டிருந்த பொலிஸார் வெடுக்குநாறி மலை தொல்பொருள் பகுதி என்பதால் அங்கே செல்ல முடியாது என்று மக்களுடன் மல்லுக்கட்ட ஆரம்பித்தனர்.
பின்னர் அங்கே செல்வதாக இருந்தால் தேரர்களையும் நாம் அங்கே செல்வதற்கு அனுமதிக்க வேண்டியேற்படும். அவர்கள் அங்கே வருகின்றபோது, முரண்பாடுகள் ஏற்பட்டால் நடவடிக்கைளை எடுப்போம் என்ற எச்சரிக்கையையும் செய்தனர்.

எனினும், அங்கிருந்தவர்கள் “எங்கள் கோயிலுக்கு போக விடுங்கோ, எங்கட கோயில்ல வருசத்தில ஒருநாள் நிம்மதியாய் கும்பிட விடுங்கோ, நாங்கள் உங்களிட்ட நாட்டையா கேட்டம், ஒருநேரம் கும்பிடத்தானே கேட்டம்” என்றவாறு கூட்டாக குரல் எழுப்பினர்.
பொலிஸார் நடப்பவற்றை அவதானித்துக் கொண்டிருக்கையில், அதில் ஒருவர் மேற்கண்ட கூற்றுக்கள் உட்பட அனைத்து விடயங்களையும் விரைந்து மொழியெர்த்துக் கொண்டிருக்கின்றார். மற்றொருவர் அனைத்தையும் காணொளியாக பதிவு செய்யும் செயற்பாடுகளில் ஈடுபட்ட நிகழ்வும் அரங்கேறியது.

இந்தச் சந்தர்ப்பத்தில் ஆலய பூசகரும் அவரது உதவியாளரும் மோட்டார் சைக்கிளில் மலைநோக்கி நகர முற்பட அவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
பொலிஸார் உத்தரவால் சினமடைந்த, பூசகர், “நீங்கள் நாட்டைக் காப்பதற்காக இருப்பவர்கள் அல்லர். நாட்டை கெடுப்பதற்காக இருப்பவர்கள். நீங்கள் அழிந்து தான் போகப்போகின்றீர்கள். உங்களுடைய தேரர்கள் போன்று நானும் சாபமிடுகின்றேன்” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றார்.

பின்னர் அங்கே ஒன்றுகூடியவர்கள் அனைவரும் பூசகருடன் கால்நடையாக தமது பயணத்தினை ஆரம்பித்து சற்றுத்தூரம் சென்றதும் பூஜைப்பொருட்கள் தவிர்ந்த ஏனைய பொருட்களுடன் செல்வதற்கு அனுமதிக்க முடியாது என்றார்கள். அதுமட்டுமல்ல, போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீரைக் கூட அனுமதிக்க முடியாது என்ற அறிவிப்பு வெளியாகின்றது.

அங்கிருந்த வயதான பெண்களும், குழந்தைகளின் தாய்மாரும் தண்ணீரைக் கூட கொண்டு செல்ல முடியாது என்ற பொலிஸாரின் உத்தரவால் சினமடைந்தனர். அவர்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

ஆனால், எந்தக் கோசங்களும் எடுபடவில்லை. கால்நடையாக ஐந்து கிலோமீற்றர்கள் வரையில் சென்றவர்கள், தங்களுடைய குலசாமியை தரிசிக்கின்றார்கள்.
பின்னர், அன்னதானத்துக்கான ஏற்பாடுகள் ஒருபுறமும், மறுபுறுத்தில் பூஜைவழிபாடுகளுக்கான ஏற்பாடுகளும் தடாலடியாக முன்னெடுக்கப்படுகின்றன. அத்துடன், பூஜையும் ஆரம்பமாகியது.

பொழுது சாய்ந்து கொண்டிருக்கையில், அப்பகுதியெங்கும், பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டனர். அங்கிருந்து அனைவரும் வெளியேற வேண்டும் என்ற அறிவிப்பும் அவர்களால் விடுக்கப்பட்டது. எனினும், “சிவராத்திரி, இரவில் தான் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். நாம் முதலாவது ஜாம பூஜையை நிறைவு செய்துவிட்டுச் செல்கின்றோம்” என்று அங்கிருந்த அனைவரும் விநயமாக வேண்டினர்.

ஆனால், எந்தக் கோரிக்கைகளும் எடுபடவில்லை. அன்னதானத்துக்கான ஆயத்தங்களை அங்கு வந்திருந்த பெண்பொலிஸார் தலையீடு செய்து இடைநிறுத்தியதோடு பஜனையில் ஈடபட்டவர்கள் உட்பட பூஜையை ஆரம்பிப்பதற்கு தயாரான பூசகர் உட்பட அனைவரும் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.
பொலிஸாரின் அறிவுறுத்தலை ஏற்று வெளியேற மறுத்தவர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். அதற்கும் முரண்டு பிடித்தவர்கள் நையப்புடைக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டனர்.

அவ்வாறான நிலைமையில் வெளியேற்றப்பட்டவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் தவத்திரு வேலன்சுவாமிகள் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர். ஆலய வளாகமன்றோ, அன்னதான தளமென்றோ பொலிஸார் சிந்திக்கவில்லை. காலணிகளுடன் பிரவேசித்து, கண்மூடி விழிப்பதற்குள் சிறப்பு பூஜை வழிபாட்டுக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் சிதைத்தனர்.

தமது பண்பாட்டு உரிமை, வழிபாட்டு உரிமை, ஒன்று கூடும் உரிமை, சித்திரவதைக்கு உட்படுத்தப்படாத உரிமை உள்ளிட்ட அனைத்து அடிப்படை உரிமைகளும் பறிக்கப்பட்டு அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு தரப்பாக அங்கிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.

“மகாசிவராத்திரி தினத்தில் இந்து மக்களினால் ஏற்றப்படும் ஒளியானது, முழு இலங்கை மக்களின் வாழ்விலும் ஒளியேற்றுவதாக அமையட்டுமெனப் பிராத்திக்கிறேன்” என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டு 24 மணிநேரத்துக்குள் தான் இந்த நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டுள்ளன.
உண்மையில், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் ஏதேச்சதிகாரமான செயற்பாடுகள் ஒரேபொழுதில் நிழ்ந்தவை அல்ல. பௌத்த தகவல் நிலையத்தினால் கடந்த 7ஆம் திகதி கடிதமொன்று பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதில், வெடுக்குநாறியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச அரசியல் வாதிகளால் ஏற்பாடு செய்யப்படும் பூஜை நிகழ்வுகளால் தொல்பொருள் பிரதேசம் பாதிக்கப்படப்போவதாக சுட்டிக்காட்டப்பட்டு அதனை நீதிமன்ற உத்தரவைப் பெற்று தடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.

அதேநேரம், கல்கமுவ சந்தபோதி தேரர் உள்ளிட்ட அவரது பரிவாரங்களும் மேற்படியான கருத்துக்களையே காணொளிகளாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பரப்பியதோடு, பௌத்தர்களை அணிதிரளுமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
பௌத்தத்தின் புராதனத்தை வெளிப்படுத்தும் இரண்டு தூபிகளின் இடிபாடுகள் வெடுக்குநாறியில் உள்ளதாக எல்லாவல மேதானந்த தேரர் குறிப்பிட்ட நிலையில், ‘வட்டமான பர்வத விகாரை” என்கிற பௌத்தத்தின் நிலமாக இதனை அடையாளப்படுத்த முயலுகின்றார்கள் தேரர்கள்.

இதனால், தான் வெடுக்குநாறிமலை மீது பிரத்தியேகமான கரிசனையை கொண்டிருக்கின்றார்கள் தேரர்கள். இவர்களுக்கு தென்னிலங்கை சிங்கள தேசியவாத அரசியல்வாதிகளும், அரச இயங்திரங்களான திணைக்களங்களும், படைகளும் முழுமையான பக்கத்துணையாக இருக்கின்றன.

2018 முதல் வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயமும், அங்கு நடைபெறும் பூஜை வழிபாடுகளும் தொடர்ச்சியாக முரண்பாடுகளுக்குள் தள்ளப்படுவதற்கு காரணம், மேற்படி தரப்புக்களின் கூட்டுச் செயற்பாடுகளின் வெளிப்பாடுகளே.
மகாசிவராத்திரி வழிபாடுகளை நடத்தினால் இனங்களுக்கு இடையில், மதங்களுக்கு இடையில் முரண்பாடுகள் தோற்றம் பெற்றுவிடும் என்று பொலிஸார் குறிப்பிடுவதும், நீதிமன்றத்தின் அனுமதி இல்லையென்று சுட்டிக்காட்டுவதும் ஏற்றுக்கொள்ள முடியாதொரு விடயமாகும்.

ஏனென்றால், 17-05-2023ஆம் திகதியன்று வெடுக்குநாறி மலையில் காணப்பட்ட விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பான வழக்கு வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தொல்பொருள் திணைக்களத்தால் அடையாளப்பட்ட பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படாது, அதிகாரிகளின் கண்காணிப்பில் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளை நடத்த முடியும் என்று மேலதிக மாவட்ட நீதிவான் தேவராசா சுபாஜினி வழங்கிய கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தவகையில், வழிபாடுகளை நடத்துவதற்கு நீதிமன்றம் எந்தவகையிலும் குறுக்கீடுகளைச் செய்யவில்லை என்பது மிகத்தெளிவாகின்றது. அதேநேரம், இன,மத முரண்பாடுகள் ஏற்படும் என்ற தர்க்கத்தை கவனத்தில் கொள்கின்றபோது, பூர்வீகமாக வாழ்ந்து அங்கு வழிபாடுகளை மேற்கொள்ளும் குழுவினர் செல்கின்றபோது, தேரர்களும், அவர்கள் சார்ந்தவர்களும் அங்கு பிரசன்னமாகுவதற்கு பொலிஸார் அனுமதிப்பது ஏன்?

ஆகவே, வெடுக்குநாறி மலை விவகாரம், தமிழர்கள் மீதான, சிங்கள, பௌத்த தேசியவாதத்தின் அரச இயந்திர துணையுடனான ஆக்கிரமிப்பு விரிவாகத்தையும், அடக்குமுறையின் முழுவீச்சையும் அம்பலமாக்கியிருக்கிறது.
அதுமட்டுன்றி, பொலிஸாரால் கைது செய்யப்பட்ட எட்டுப்பேர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு விளக்கமறியலும் நீடிக்கப்பட்டது. உண்மையில் அந்த எட்டுப்பேரும் கைது செய்யப்பட்டதன் பின்னர் தான் அவர்களின் கைதுக்கான காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

குறிப்பாக, வனப்பாதுகாப்புத் திணைக்களத்திற்கு சொந்தமான பகுதியில் வறட்சியான காலத்தில் தீமூட்டி பூஜை செய்வதற்கு முனைந்தமையால் காட்டுத்தி ஏற்படும் என்ற ஆபத்தை உணர்ந்த வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் வடமாகாண பிரதிப்பொலிஸ்மா அதிபருக்கு செய்த முறைப்பாட்டை அடுத்தே வழிபாடுகளுக்காகச் சென்றவர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். வெளியேற மறுத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் குறிப்பிடுகின்றர்.

அதேநேரம், தொல்பொருளியல் பகுதியில் அனுமதியின்றி செல்ல முடியாது என்றும், அங்கு பூஜை வழிபாடுகளை மேற்கொள்ள முடியாது என்றும் பொலிஸார் இன்னொரு காரணத்தினையும் கூறுகின்றனர்.

ஆனால், தமிழர்கள் வழிபாட்டுக்குச் சென்றபோது, அங்கே தேரர்களும் அவர்களின் பரிவாரங்களும் எதற்காக வருகை தந்தார்கள் என்பதற்கான பதில் பொலிஸாரிடம் இல்லை.

அதேபோன்று தீ மூட்டி பூஜை செய்வதால் காடு தீ பற்றும் என்பதை கொழும்பில் உள்ள வனப்பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் எவ்வாறு அறிந்து கொண்டு முறைப்பாட்டைச் செய்தார் என்பதும் கேள்விக்குள்ளாகிறது.
அதுமட்டுமன்றி, தொல்பொருளியல் பகுதிக்குள் பிரவேசிக்க கூடாது என்றால், குருந்தூர் மலை தொல்பொருளியல் பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டதன் பின்னர் அங்கு பெருவிகாரையே நிர்மாணிக்கப்பட்டது. அது தொடர்பில் பொலிஸார் ஏன் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.

மேலும் நீதிமன்றம், வெடுக்குநாறி மலைக்குள் செல்ல முடியாது என்றோ பூஜை வழிபாடுகளை செய்ய முடியாதென்றோ அறிவிக்கவில்லை. அதற்கான தடைகளும் இல்லை. பின்னர் பொலிஸார் எந்த அடிப்படையில் தடைகளை ஏற்படுத்தினார்கள்.
ஆகவே, வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி நிகழ்வு நடைபெறக்கூடாது என்பது தான் ஒட்டுமொத்த சிங்களத்தின் நிலைப்பாடாகும். அதனை தடுக்கும் ஏவல் இயந்திரங்களாகவே பொலிஸாரும், படைகளும் செயற்பட்டள்ளன.

உண்மையில், இதன் பின்னால் இருப்பது அரசியல் தலைமைகளும், பௌத்த தேரர்களும் தான் என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. அதேநேரம், வவுனியா நீதிவான் நீதிமன்றில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்த வழக்கு விசாரணை 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டபோது அந்த வழக்கு விசாரணை மூன்று தடவைகள் நிறுத்தப்பட்டு முன்னெடுக்கப்பட்டது.

ஒவ்வொரு தடவைகள் நிறுத்தப்பட்டபோதும், நீதிவானின் தொனிகளில் மாற்றங்கள் காணப்பட்டதையும் ஆழமாக உற்றுநோக்குகின்றபோது உணர முடிகின்றது.
இறுதியில் கடந்த 19 ஆம் திகதி கைதானவர்கள் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டதுடன் பொலிசாரின் பொய் வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆகவே, சிறிலங்காவின் தமிழர் தாயகத்தில் சிங்கள, பௌத்த விரிவாகத்தின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலை தற்போதும் அதிகார சக்தியொன்று முன்னெடுப்பதில் தீவிரமாக உள்ளது என்பது மிகவும் வெளிப்படையாக உணரக்கூடியதாக உள்ளது.
ஆகவே, அச்சக்தியை முறியடிப்பதற்கு தாயகத்தின் தன்னெழுச்சியான போராட்டமொன்றே இறுதியான ஆயுதமாகும்.

Print Friendly, PDF & Email