‘பேராபத்தில் மன்னார்த்தீவு’
ஆர்.ராம்
இலங்கையின் மன்னார் பகுதியில் பாரிய அளவில் கனியவள மணல் அகழ்வதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு பூர்வாங்கச் செயற்பாடுகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதற்கமைய ‘மன்னார் தீவில் 38துளைகள் இடும் செயற்பாடுகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதோடு ஏனைய செயற்பாடுகள் வெற்றிகரமாக முன்னேறி வருகின்றமை மகிழ்;ச்சி அளிக்கின்றது’ என்று அவுஸ்ரேலியாவின் டைட்டேனியம் சான்ட்ஸ் தனியார் நிறுவனமானது, கடந்த 11ஆம் திகதி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் பகிரங்கமாக அறிவித்துள்ளது.
இதன்படி, மன்னாரில் பாரியளவிலான கனியவள மணல் அகழ்வு இடம்பெறவுள்ளமை உறுதியாகிறது. குறித்த திட்டத்தின்படி இந்நிறுவனம் ‘மன்னார் தீவிலுள்ள 3,600மீற்றர் பரப்பளவுக்குள் 300துளைகளை இடுவதே இலக்காகும்’ என்றும் குறிப்பிட்டுள்ளது.
‘ஏற்கனவே இடப்பட்டுள்ள 38துளைகளில் 33துளைகள் 2மீற்றர் பரப்பரளவில் 12மீற்றர் ஆழத்தினைக் கொண்டிருக்கின்றன. பெறப்பட்ட மண்மாதிரிகள் முதலில் உள்நாட்டில் சுயாதீன மேற்பார்வையின் கீழான ஆய்வகத்தில் ஆய்வுசெய்யப்படவுள்ளதோடு மேலதிகமாக கனியவளப் பகுப்பாய்வுக்காக தென்னாபிரிக்காவில் உள்ள கனியவள மணல் பகுப்பாய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது’ என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்;டுள்ளது.
ஆகவே மன்னார்த்தீவில் நடைபெறப்போகும் பாரியளவிலான கனியவள மணல் அகழ்வால் பாதிப்படையப்போகும் சுற்றுச் சூழல் பற்றிய அவதானிப்பும் உயிர் பல்வகைமைகள், காலநிலை, என்பவற்றில் ஏற்படப்போகும் தாக்கங்கள் மனித வாழ்வுக்கு பேரச்சுறுத்தலாகுமா? என்பதே பலரதும் கேள்வி.
இந்நிலையில் ‘300துளைகளை இடும் இலக்கானது அடுத்த மார்ச் மாதத்தின் முதல்வாரத்தில் நிறைவடையவிருக்கின்றது’ என்று டைட்டேனியம் சான்ட்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இத்திட்டம்; 2015 டிசம்பரில் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் உள்ளூரில் ஏற்பட்ட பலதரப்பினரதும் எதிர்ப்புக்களை அடுத்து 2020இன் இறுதியில் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கள நிலை
இவ்வாறான நிலையில் ஏர்த் ஜேர்னலிசம் நெட்வேர்க்கின் அனுசரணையுடன் மன்னார் மாவட்டத்திற்கு கள விஜயத்தை மேற்கொண்டோம். மன்னார் மாவட்டமானது பிரதான நிலப்பரப்புடன் ஒரு சிறு தீவுப்பகுதியையும் உள்ளடக்கியது.
உலக வரைபடத்தில் இந்தியாவின் தென் கிழக்கு முனைக்கும் மன்னாரின் அமைவிடத்திற்கும் இடையில் மன்னார் வளைகுடா உள்ளது. இவ்வளைகுடாவின் கடற்பரப்பானது கடல்சார் உயிர்பல்வகைமையின் புகலிடமாக விளங்குகிறது. இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள நான்கு முக்கிய பவளப்பாறைகள் அமைந்துள்ள இடங்களில் மன்னார் வளைகுடாவும் ஒன்றாகும்.
அதை அண்டிய இந்த மன்னார் தீவின் பரப்பளவு 143 சதுர கிலோ மீற்றர்களாகும் அதன் நீளம் 26 கிலோ மீற்றராகவும் அகலம் 6கிலோமீற்றராகவும் காணப்படுவதோடு அதனுள் தலைமன்னார், பேசாலை ஆகிய பிரதான பிரதேசங்கள் உள்ளன. மன்னார் மாவட்டத்தின் முழுப் பரப்பளவும் 2002சதுர கிலோமீற்றர்களாகும்.
இந்த மன்னார் மாவட்டமானது உலகளாவிய இல்மனைற் வைப்பு பட்டியலில் நான்காவதாக காணப்படுகின்றது. விசேடமாக மன்னார் தீவில் 53மில்லியன் தொன் கனியவள மண் உள்ளது எனக் கூறப்படுகிறது. அத்துடன் அக்கனியவள மண்ணில் இல்மனைட் (ilmenite), லுகோக்சின்(leucoxene), சிர்கோனியம்(zirconium), ரூட்டில்(rutile) டைட்டேனியம் ஒக்சைட் (Titanium oxide), கிரனைட்(Garnet), சில்லிமனைட்(Sillimanite), ஆர்த்தோகிளேஸ் (Orthoclase) போன்ற கனிம உள்ளடக்கங்கள் காணப்படுகின்றன என்பதை இலங்கை புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில்தான் முதற்கட்ட ஆராய்ச்சிக்காக மன்னார்த் தீவையும் அதனை அண்டியுள்ள கடற்கரை பிரதேசங்களையும் உள்ளடக்கியதாக 204சதுர மீற்றர்கள் கொண்ட பரப்பளவு பகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை அந்த அலுவலகத்தினால் மேலதிக தகவலாக வழங்கப்பட்டது.
நடப்பது என்ன?
மன்னார்த் தீவில் நடைபெறும் இந்த கனியவள மணல் ஆய்வுக்கான பணிகளும் அதனைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள மணல் அகழ்வுகள் பற்றியும் சூழலியலாளர்கள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். ஆய்வுக்காக பெருமளவான மணல்கள் பெறப்பட்டு வரும் இந்த நிலையில் “சர்வதேச நிறுவனங்கள், வளர்ச்சியடைந்து வரும் நாடுகளுக்கு வருகைதந்து கனியவள மூலப்பொருட்களை பிரித்தெடுத்து அனைத்து வளங்களையும் சூறையாடி முழு அளவிலான சுற்றாடல் மற்றும் சமூக சிக்கல்களை ஏற்படுத்தி வருகின்றன” என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறை பேராசிரியர் கலாநிதி.சம்பத் செனவிரத்ன, குறிப்பிட்டுள்ளார்
“எமது கள ஆய்வின் படி மன்னார்த்தீவில், தனியாருக்குரிய காணிகளில் இதுவரை 3,500 ‘ஏயர்கோர்’ துளைகளும் மூன்று மீற்றர் ஆழத்தில் நில மட்டத்தின் கீழ் இருக்கும் நீர்ப்பரப்பினைத் தாண்டி 12 மீற்றர் ஆழத்தில் 473 துளைகளும் இடப்பட்டுள்ளன. இந்தச் செயற்பாடு தாழ்வுப்பாடு மற்றும், தலைமன்னாரில் இருந்து பேசாலை வரையும், கரிசலில் இருந்து நடுக்குடா வரையும் நடைபெற்றுள்ளதோடு அப்பகுதிகளிலிருந்து 20 கொள்கலன்கள் அடங்கிய கனியவள மணல் மாதிரிகள் பரிசோதனைக்காக தென் ஆபிரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன” என்று பிரிட்ஜிங் லங்கா என்ற தொண்டு நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான, ஜெரமி அஹமட் லியனகே கூறுகிறார். அத்துடன் இத்திட்டமானது 265மெற்றிக் தொன் கனிய மண் அகழ்வினைக் இலக்காக கொண்டது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இந்த மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு திட்டம் நடைமுறைக்கு வரும்போது 20முதல் 25 வருடங்களுக்கு கனியவள மணல் அகழ்வு முன்னெடுக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இச்;செயற்பாடு சுற்றுச்சூழலில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என ஆராய்ந்தபோது, “மாவட்டத்தில் வற்றுப்பெருக்குகள் மற்றும் கடற்பெருக்குகளின் போது கடல்நீர் உட்புகுவதை தடுக்க முடியாத நிலைமை ஏற்படவுள்ளதோடு மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் கடற்றொழில், பனை, தென்னை, கால்நடை வளர்ப்பு என்பன முழுமையாக நிறுத்தப்படும் நிலை உருவாகும். அத்துடன் மன்னார்த்தீவின் தரைத்தேற்றமே முழுமையாக மாற்றடைந்து குடியாளர்கள் வெளியேறும் அபாயம் உள்ளது” என்று யாழ்.பல்கலைக்கழகத்தின் ஒய்வுநிலைப் பேரசிரியர் கலாநிதி. சூசை ஆனந்தன் எச்சரிக்கிறார்.
அத்துடன், மன்னார் தீவின் நிலத்திற்கும் நீருக்கும் ஏற்படப்போகும் அபாயத்தை பேராசிரியர் கலாநிதி. சூசை ஆனந்தன் “12மீற்றர்கள் வரையில் துளையிடப்படுவதால் நீர்த்தட்டுக்கள் உடைக்கப்பட்டு உவர் நீர் கலப்பு ஏற்படுவதோடு ஏற்கனவே வரண்ட பகுதியாக இருக்கும் மன்னாரில் குடிநீர்த்தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும். அத்துடன் மன்னாரில் மட்டும் உவர்நீர்க் கண்டல், சேற்றுக்கண்டல் உள்ளிட்ட கண்டல் தாவரங்கள் 874ஹெக்டெயரில் காணப்படுகின்றது. இந்தக் கண்டல் தாவரங்கள் கடல்வாழ் உயிரினங்கள் உள்ளிட்ட நுண்ணங்கிகள், முலையூட்டிகள் போன்றவற்றின் இனப்பெருக்கம் மற்றும் கரியமில வாயு உட்பட சூழலை மாசடையச்செய்யும் காரணிகளையும் உறிஞ்சுவதாக உள்ளது. இதனைவிடவும் அந்நியச்செலாவணியையும் பெற்றுத்தருவதாக உள்ளது. மேற்படி நடவடிக்கையால் அத்தகைய கண்டல் தாவரங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இது ஏற்கனவே வெப்பநிலை கூடிய மன்னார் மாவட்டத்தின் சமநிலையையும் குழப்புவதாக அமையும்” என்றும் குறிப்பிடுகிறார்.
இத்தகைய பாதிப்புகளை வெளிநாட்டு அனுபவங்களுடாகவும் எம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக சர்வதேசத்தில், குவாலே கவுண்டி, கென்யா, மொறிசியஸ் போன்ற நாடுகளில் கனியவள மணல் அகழ்வினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை இங்கு நினைவிற்கொள்ளலாம்.
“கென்யாவில் முறையற்ற கனிய மணல் அகழ்வின் காரணமாக அங்குவாழும் மக்கள் தங்களின் பூர்வீக இடங்களை இழந்ததோடு சுற்றாடல் வறண்ட பிரதேசமாகவும் மாறியது. அத்துடன், குடிநீர் இல்லாத நிலைமைகள் ஏற்பட்டமையால் அப்பகுதிகளிலிருந்து மக்கள் அகதிகளாக வெளியேறும் நிலை அதிகரித்தது” என்கிறார் சுற்றுச்சூழல் நீதிக்கான மத்திய நிலையத்தின் தலைவரும், சட்டத்துறை விரிவுரையாளருமான சட்டத்தரணி ரவீந்திரநாத் தப்ரே.
அதேநேரம், இலங்கையின் புல்மோட்டையில் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான அகழ்வினால் தற்போது கனியவளம் நிறைவுக்கு வந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் எப்பாவல பகுதிகளில் மேற்கொள்ளப்படவிருந்த அகழ்வுகளுக்கு நீதிமன்ற தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்தான் மன்னார் மண் அகழ்வுப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
சுற்றுச் சூழல் பாதிக்கப்படுகின்றபோது மனிதர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதை அதிலும் குறிப்பாக இலங்கையில் பெண்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதை மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஸ்தாபகரும் மனித உரிமைகள் செயற்பாட்டளருமான, ஷரீன் சரூர், சுட்டிக்காட்டினார். “மன்னார்த் தீவினுள் 70ஆயிரம் பேர் வரையில் வாழ்கின்றார்கள். அவர்களில் பெரும்பான்மையாக பெண்குடும்பத்தலைவிகள் உள்ளனர். அவர்கள் கடலையும், நிலத்தையும் நம்பியே வாழ்பவர்கள். இந்த மணல் அகழ்வினால் இவர்களின் வாழ்வதாரம் பறிக்கப்படும். அப்பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்” என்றார்.
இந்நிலைமையை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் 63வயதான யோகம் குரூஸ் “நான் 1990இல் இருந்து கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றேன். கடந்த நான்கு ஆண்டுகளாக பேசாலை பிரதேச கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளேன். பேசாலையில் 2700கடற்றொழில் செய்யும் குடும்பங்கள் இருக்கின்றன. அவற்றில் பல குடும்பங்கள் ஆபத்திலேயே உள்ளன. காரணம் 1980களில் 7முதல் 8கிலோமீற்றர் தொலைவில் இருந்த கடலானது தற்போது வெறுமனே 3 முதல் நான்கு கிலோமீற்றர் வரையில் உட்புகுந்து விட்டது. இப்படியொரு சூழலில் கடற்கரையில் உள்ள மணலை பாரிய அளவில் அகழ்ந்தால் கரையோர மக்களின் உயிர்வாழும் உரிமையை உறுதிப்படுத்துவது யார்?” என்று கேள்வியுடன் கரிசனைகளை வெளியிட்டார்.
எதிர்காலத்தில் இத்தகைய சூழல் பிரச்கினைகளையும்; ஆபத்துகளையும் ஏற்படுத்தக்கூடிய இந்த மண் அகழ்வுக்கான மாதிரிகளைப் பெறும் செயற்பாடு எத்தகைய விரிவான ஆய்வின்பின் திட்டமிடப்பட்டது என்பது இங்குள்ள முக்கிய வினாவாகும்.
ஆய்வுகளும் அனுமதியும்
இலங்கையில் கனியவள ஆய்வுகளை முன்னெடுப்பதாயின் புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம், மத்திய சுற்றாடல் அதிகாரசபை, கரையோரப்பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுமதிகளைப் பெற வேண்டியது அவசியமாகின்றது என்பது நாட்டின் சட்ட நியமமாகும்.
இது பற்றி இலங்கை புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் மன்னார் மாவட்ட அலுவலக பொறியியலாளர் ரெஜினோல்ட் ரொஹான் குலாசிடம் வினாவியபோது, “எமது மன்னார் பிராந்திய அலுவலகத்திற்கு குறித்த துளையிடும் விடயம் பற்றி எவ்விதமான அறிவிப்புக்களும் செய்யப்படவில்லை. பிரதான அலுவலகமே இந்த விடயத்தினைக் கையாள்கிறது” என்று குறிப்பிட்டார்.
அதேபோன்று மத்திய சுற்றாடல் அதிகாரசபை, கரையோரப்பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் திணைக்களம் ஆகியவற்றின் மன்னார் மாவட்ட அலுவலகத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் பெயர் குறிப்பிட விரும்பாத நிலையில் அவர்களும் ‘தமக்குத் தெரியாது’ என்றே பதிலளித்தனர்.
இவ்வாறிருக்க, மன்னார் மாவட்ட நிருவாகத்தின் அனைத்து அதிகாரங்களையும் கொண்டிருக்கும், மாவட்ட அரசாங்க அதிபர் நந்தினி ஸ்டான்லி டிமெல் குறிப்பிடுகையில் “குறித்த மணல் அகழும் திட்டத்திற்கு பிரதேச வாசிகள் எதிர்ப்புக்களைத் தெரிவித்து என்னிடத்தில் மகஜர்களை கையளித்தனர். அவற்றை உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளேன். ஆனால் உத்தியோக பூர்வமாக எந்தவொரு அறிவிப்புக்களும் எனக்கு கிடைக்கவில்லை. இருப்பினும் கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில் விடயம் சம்பந்தமான கரிசனைகளைக் கொண்டிருக்கின்றேன்” என்று பதிலளித்தார்.
இவ்வாறு மன்னார் மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்கு அப்பால் இவை நடப்பதாக தெரிகிறது. அவ்வாறாயின் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இது உள்ளதா என்று தேடியபோது பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகின.
மத்திய புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் ‘டைட்டேனியம் நிறுவனத்தின் ஆய்வுக்கான உரிமம் எதனையும் தாம் வழங்கவில்லை அந் நிறுவனத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் சட்ட ரீதியற்றவை’ என்று நேரடியாக எம்மிடம் சுட்டிக்காட்டிது.
அதேநேரம், “தற்போது ஆய்வுக்கான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்படுகின்றன. எனினும் நடைமுறையிலுள்ள எமது நியமங்கள் மற்றும் சட்டங்களின் பிரகாரம் ஒரு நபரோ அல்லது ஒரு நிறுவனமோ எம்மிடம் பெற்றுக் கொண்ட அகழ்விற்கான உரிமத்தினை பரிமாற்றம் செய்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. உள்ளுரைச் சேர்ந்த ஐந்து நிறுவனங்கள் மட்டுமே அனுமதியைப் பெற்றுள்ளன. அவுஸ்திரேலிய நிறுவனத்திற்கு அது வழங்கப்படவில்லை” என்று இலங்கை புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் தலைப்பிடல் பகுதியின் பணிப்பாளரான ஹேமா லியனாராய்ச்சி, குறிப்பிடுகிறார்.
ஆனால், கனியவள மண் ஆய்வுக்குரிய சகல சட்டரீதியான உரிமங்களும்; தம்மால் பெற்றுகொள்ளப்பட்ட பின்னரே, மன்னார் தீவில் உயர்தர இல்மனைற் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகள் தம்மால் மேற்கொள்ளப்பட்டதாக டைட்டேனியம் நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அது எவ்வாறு என்ற வினாவுக்கு எங்கும் பதில் இல்லை.
டைட்டேனியம் நிறுவனத்தால் பெறப்பட்டுள்ள ஏழு அனுமதி உரிமங்களில் இரண்டு மொறீசியன் நிறுவனங்களுக்குச் சொந்தமானவை என்பதோடு ஏனைய ஐந்து உரிமங்களும் உள்ளுர் நிறுவனங்களுக்கானவையாக உள்ளன. அத்துடன் மேற்படி ஏழு உரிமங்களைக் கொண்ட நிறுவனங்களும் டைட்டேனியம் நிறுவனத்தின் துணை நிறுவனங்களாகவும் காண்பிக்கப்பட்டுள்ளன.
கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வளங்கள் மேலாண்மைகள் குறித்த 1981ஆம் இலக்கச் சட்டத்தின் 57ஆவது பிரிவில், ‘ஒரு திட்டமானது கடலோர மண்டலத்தின் ஸ்திரத்தன்மை, உற்பத்திதிறன், சுற்றுச்சூழலின் தரம் போன்றவற்றிற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்துமாயின், அத்தகைய திட்டத்திற்கு எந்தவித அனுமதி பத்திரமும் வழங்கப்பட மாட்டாது’ என்று அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது.
இருந்தபோதும் டைட்டேனிய நிறுவனத்தின் துணை நிறுவனங்களின் பணியாளர்கள் ‘தமக்கு அரச அனுமதிகள் முறையாக உள்ளன’ என்று தெரிவித்துள்ளனர்.
இவ்வாறிருக்க, மன்னார்த்தீவில் உள்ள சாதாரண மக்கள் கனிய மணல் ஆய்வு நடவடிக்கைகள், அகழ்வுத்திட்டங்கள் குறித்து எதனையும் அறிந்தவர்களாக இல்லை. அதேநேரம், சில தனியாருக்குச் சொந்தமான நிலப்பரப்புக்களில் துளையிடல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன்போது ‘நீரின் தரத்தினை அறிந்து கொள்வதற்கான பரிசோதனை’ என்று ஒரு புனையப்பட்ட காரணத்தை அவர்கள் மக்களிடத்தில் முன்வைத்ததாக தெரியவருகிறது.
சாத்தியமே இல்லாத பொருளாதார மீட்சி
இதேநேரம், இந்த சூழல் பிரச்சினைகளுக்கு அப்பால், மன்னார் கனியவள மணல் அகழ்வு நடவடிக்கை ஊடாக இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.9சதவீதத்தினை ஈட்டிக் கொள்ள முடியும் என்றும் கனியவள ஏற்றுமதியை விரிவுபடுத்துவதன் ஊடாக மேலும் வருமானத்தினை ஈட்ட முடியும் என்றும் டைட்டேனியம் சான்ட்ஸ் நிறுவனம் தனது மன்னார் கனியவள மணல் அகழ்வு செயற்றிட்ட தெளிவுபடுத்தலில் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் இக்கூற்றை மறுதலிதலிக்கிறார் இலங்கை மழைக்காடு பாதுகாப்பாளர்களின் ஒருங்கிணைப்பாளரான ஜெயந்த விஜேசிங்க. அவர் கூறும்போது “கனியவளப் பிரித்தெடுத்தல் தொடர்பான பிரச்சினைகளில் பெறுமதிகளை அதிகரித்துக் காண்பிப்பது முக்கியமானதாகும். இலங்கை மூலப்பொருட்களை மட்டுமே ஏற்றுமதி செய்கிறது. இவை பிரித்தெடுக்கப்பட்ட நிலையில் விற்பனை செய்யப்படவில்லை. இதனால் கனிமத்தின் ஒரு கிராஃபைட் வெறும் 250 டொலர்களுக்கே விற்கப்பனை செய்யப்படுகின்றது. அதேசமயம் இலங்கையின் நனோ தொழில்நுட்ப நிறுவனம் ஒரு கிலோ கிராபைட்டை சுத்திகரிக்கரித்து 5000 முதல் 9000 அமெரிக்க டொலர்களுக்கே விற்பனை செய்யப்படுகின்றது. ஆகவே கனிமத்தைப் பயன்படுத்தி பொருளாதார ரீதியாக இலாபமீட்டுதல் என்ற கோணத்தில் பார்க்கின்றபோதும் ஒரு தேசமாக இழப்புக்களே எஞ்சுகின்றது. புல்மோட்டை தொடக்கம், கோமாரி, கிரிந்த மற்றும் மன்னார் வரையான கரையோரப் பகுதிகளில் விலைமதிப்பற்ற கனிமங்கள் முழுமையாக குறிப்பிட்ட காலத்தில் இல்லாதொழிகின்றது” என்கிறார்.
வாழ்வா சவா?
இவ்விதமான நிலைமைகளில் டைட்டேனியம் சான்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஜேம்ஸ் சீலே, “மன்னார் தீவில் திட்டமிட்டபடி அகழ்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு நாம் முழுமையான நம்பிக்கையுடன் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றோம்” என்று சிட்னியைத் தளதமாகக் கொண்டு செயற்படும் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியில் உறுதிபடக் கூறியுள்ளார்.
ஆனால் “மன்னார் தீவிலிருந்து ஒருபிடி மண் கூட மாவட்டத்திற்கு வெளியே செல்வதற்கு அனுமதிக்கப்போவதில்லை” என்று மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவரும் போசாலை பங்குத்தந்தையுமான அருட்தந்தை ஞானப்பிரகாசம் அடிகளார், சூளுரைத்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் ஆலோசகரான மறைமாவட்ட ஆயர் இம்மானுவல் பெர்னாண்டோ தலைமையில் விரைவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்திப்பதற்கு தயாராகி வருவதோடு, அக்கலந்துரையாடல்கள் எதிர்மறையான விளைவுகளைத் தருமாயின் ‘மக்கள் வீதிக்கு இறங்கிப் போராடி தமது வாழ்வுரிமையை உறுதி செய்து கொள்வார்கள்’ என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் மன்னார்த் தீவில் கனிய மணல் அகழ்வுக்கான ஆரம்ப நடவடிக்கைகளே இலங்கைச் சட்டத்திற்கு உட்பட்டு நடைபெறுகிறதா? இத்திட்டத்தால் ஏற்படப்போகும் சூழல் பாதிப்பு கணக்கிடப்பட்டதா? அவ்வாறு கணக்கிடப்பட்டால் எத்தகைய மாற்றுக்கள் முன்வைக்கபட்டன? இவை பதிலளிக்கப்படவேண்டிய கேள்விகளாக நிற்கின்றன.