SHARE

தந்திரீகன்-

“ஜனாதிபதி பதவியில் இருந்து என்னை நீக்குவதற்கான சதி” என்ற தலைப்பில் கோட்டாபய ராஜபக்ஷ எழுதிய நூலொன்று சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. நூலின் உள்ளடக்கம் பொதுப்படையில் அறிந்த விடயங்களாக இருந்தாலும் கூட, மீண்டும் சிங்கள தேசிய வாதமும், பௌத்த மேலாண்மை வாதமும் உமிழப்பட்டிருக்கிறது.

எந்தவொரு விடயத்தினையும் மிகப்பிரமாண்டமாக முன்னெடுக்கும் ராஜபக்ஷ குடும்பத்தில் முதல் தடவையாக ஒரு நூல் வெளியீட்டைக் கூட சுதந்திரமாக முன்னெடுக்க முடியாது நேரடியாக அச்சிட்ட நூலை சந்தைக்கு அனுப்பும் துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

இந்த நிலைமை ஏற்பட்டும் கூட, இன்னமும் ராஜபக்ஷக்கள் தங்களது நிலையை உணரத் தலைப்படவில்லை. குறிப்பாக கோட்டாபய ராஜபக்ஷ உணரவே இல்லை என்பது பரிதாபகரமான நிலைமை தான்.

ராஜபக்ஷக்கள் தாங்கள் காணும் பின்னடைவுகளுக்கு காரணங்களை கண்டறிவதில் வல்லவர்கள். 2015இல் மஹிந்த மூன்றாவது தடவையாகவும் ஆட்சி அதிகாரத்தில் அமர்வதற்கு ஆசைப்பட்டு தோல்வி கண்டபோது, இந்தியாவின் உளவு அமைப்பான ‘றோ’வைச் சாடினார்.

இப்போது அவருடைய சகோதரரான கோட்டாபய ராஜபக்ஷ, மக்கள் எழுச்சிக்கு முன்னால் முகங்கொடுக்க முடியாது உடுத்த உடையுடன் திருகோணமலை கடற்படை முகாமிலும், பின்னர் கட்டுநாயக்க விமானப் படை நிலையத்திலும், தொடர்ந்து மாலைதீவு, சிங்கப்பூர் என்று நகர்ந்து கொண்டிருந்த நிலைமைகளுக்கு மாறுபட்ட தரப்புக்களை நோக்கி அவர் சுட்டு விரலை நீட்டுகின்றார்.

அதில் முதலாவதாக, கோட்டாபய தன்னால் பதவிக்கு அமர்த்தப்பட்ட தற்போதைய பாதுகாப்புச் செயலாhளர் ஜெனரல் கமால் குணரட்ன, முப்படைகளின் தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சாலே ஆகிய மூவரையும் மிகக் கடுமையாக சாடியுள்ளதோடு அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் சந்தேகங்களையும் வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக, மிரிஹானவில் தன்னுடைய இல்லத்தினை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டபோது பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன ஷங்கிரில்லா விடுதியில் திருமண வைபவத்தில் இருந்தார். சவேந்திர சில்வா தொடர்புக்கு வரவில்லை. சுரேஷ் சாலே மட்டும் தாமதமாக வீட்டுக்கு வந்து காணொளி மூலமாக விடயங்களை கமலுக்கு காண்பித்தபோதும் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படவில்லை என்று குறிப்பிடுகின்றார் கோட்டாபய.

அதன்பின்னர் நாளடைவில் போராட்டத்தின் வீச்சு அதிகரித்தபோது, ஜனாதிபதி மாளிகையில் விசேட பாதுகாப்பு தீர்மானங்களை எடுக்கவல்ல கட்டமைப்புச் செயற்பட்டது. ஈற்றில் அதனால் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகையை நோக்கி நகர்ந்தவர்களை கட்டுப்படுத்த முடிந்திருக்கவில்லை. இதனால் கடற்படை தளபதியை அழைத்து அவரின் உதவியுடன் வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டது என்று சுட்டிக்காட்டுகின்றார் கோட்டாபய.

பின்னர், திருகோணமலைக் கடற்படை முகமிற்குச் சென்று அங்கிருந்துவிட்டு விமானப்படைத் தளபதியின் உதவியைப்பெற்று கட்டுநாயக்கவினை அடைந்து அங்கிருந்து நாட்டை விட்டு வெளியேறும் தீர்மானத்தினை எடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபாயவின் இந்தக் கூற்றானது, கமால், சவேந்திர, சலே போன்றவர்கள் தமது கடமைகளை உரிய வகையில் செய்திருக்கவில்லை என்பதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. விசேடமாக, கமாலுக்கும், சவேந்திரவுக்கும் இடையில் முரண்பாடான நிலைமை நீடித்ததையும் வெளிப்படுத்துவதாக குறிப்பிடுகின்றார்.

இதன்மூலமாக தனது பதவி பறிபோகுவதற்கு கமாலும், சவேந்திரவும், சலேயும் காரணமாக உள்ளனர் என்பதை நேரடியாகவே வெளிப்படுத்துகின்றனர். சிறிலங்காவின் படைகள் மீது மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானக் குற்றச்சாட்டுக்கள் வெளிப்படுத்தப்பட்டபோது, மார்பு தட்டி எதிர்ப்பு வெளியிட்டு முப்படைகளின் பாதுகாவலர்களாக இருந்த ராஜபக்ஷக்களே இப்போது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் அவல நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர் அரகலய போராட்டம் சம்பந்தமாக சில வேடிக்கையான கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கின்றார்.

“கொழும்பு காலிமுகத்திடல் அரகலயவில் கூடிநின்றவர்கள் யார் என்பதை எவரும் உன்னிப்பாக ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் சகலரும் ஏற்கனவே எனக்கு எதிரான பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ளமுடியும் ஒருபுறத்தில் சிங்கள பௌத்தர்களின் நலன்களுக்கும் மறுபுறத்தில் சிங்களவர்களும் பௌத்தர்களும் அல்லாதவர்களின் நலன்களுக்கும் இடையிலான ஒரு போட்டியின் விளைவாகவே ஜனாதிபதியாக தான் தெரிவு செய்யப்பட்டேன்.

“தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நான் எதிரானவன் என்ற எண்ணம் வலுவடைந்திருந்தது. கத்தோலிக்க திருச்சபையுடன் நான் உன்னதமான உறவைப் பேணிவந்தபோதிலும், அவர்களும் பிறகு எனக்கு எதிராகத் திரும்பினார்கள். அறகலயவில் பங்கேற்றவர்களுக்கு பல்வேறு குறிக்கோள்களும் முன்னுரிமைகளும் இருந்தன”

“பொருளாதார நெருக்கடியின் விளைவாக மக்கள் எதிர்நோக்கிய இடர்பாடுகளை தணிப்பதுதான் அறகலயவின் குறிக்கோள் என்று ஒரு எண்ணம் எவருக்காவது இருந்திருந்தால் அது வெறும் மருட்சியே. ஒற்றையாட்சி அரசுக்கு பதிலாக ஐக்கிய இலங்கைக்கு கோரிக்கை விடுக்கும் புலம்பெயர் தமிழர்களின் நிகழ்ச்சி நிரலை அரகலயவில் தெளிவாகக் காணக்கூடியதாக இருந்தது. இது சமஷ்டி அரசொன்றை வேண்டி நின்றவர்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்துவருகிறது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு மூன்று ராஜபக்ஷ சகோதரர்களும் மத்திய வங்கியின் இரு முன்னாள் ஆளுநர்கள் உட்பட அவர்களின் அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகித்த சில உயரதிகாரிகளுமே பொறுப்பு என்று கடந்த வருடம் நவம்பரில் உயர்நீதிமன்றம் தீர்ப்பைக் கூறியபோதிலும், அந்த நெருக்கடிக்கு தனது அரசாங்கம் பொறுப்பு என்பதை கோட்டா ஒத்துக்கொள்ளவேயில்லை. பயங்கரமான ஒரு சதித்திட்டத்தின் பலியாளாக தன்னை காண்பிப்பதற்கு நூலின் ஊடாக விளைந்திருக்கின்றார்.

அதுமட்டுமன்றி, தமிழர்களையும், முஸ்லிம்களையும், புலம் பெயர் தமிழர்களையும் அவர் மீண்டும் தனது நிரந்தரமான பகையாளிகளாக வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் தான் வெற்றி பெற்றமையால் தன்னைப் பழி தீர்த்துக்கொள்வதற்கு அரகலயவை அச்சக்திகள் பயன்படுத்தியுள்ளன என்று அர்த்தம் கற்பித்திருக்கின்றார்.

மேலும், அரகல பற்றிய மேற்படியான கோட்டாவின் விளக்கம் மீண்டும் சிறுபான்மைச் சமூகங்களின் நலன்களுக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுத்து பெரும்பான்மை இனவாத அணிதிரட்டலைச் செய்வதன் மூலம் மாத்திரமே தங்களால் மீண்டும் அரசியலில் செல்வாக்கான நிலைக்கு வரமுடியும் என்ற ராஜபக்ஷக்களின் உறுதியான தீர்மானத்தின் ஒரு தெளிவான வெளிப்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது.

ராஜபக்ஷக்களைப் பொறுத்தவரையில் தங்களுக்கு எதிரான அரசியல் செயற்பாடுகளை அவர்கள் மிகவும் சுலபமாக வெளிநாட்டுச்சதி என்று கூறிவிடுவார்கள். அதேபோன்று தான் கோட்டாபய ராஜபக்ஷவும் தனது வீழ்ச்சிக்குப் பின்னால் வெளிநாட்டுச் சக்திகளின் சதி இருப்பதாக கூறுகின்றார்.

ஆனால், அவரால் எந்தெந்த நாடுகள் தனக்கு எதிராக சதிவலையைப் பின்னியது என்பதைக் கூட வெளிப்படுத்துவதற்கு அவரிடத்தில் உறுதியான திராணி இல்லை என்பது மட்டும் மிகத் தெளிவாக தெரிகின்றது.

இதேவேளை, கோட்டா ஆயுதப் படைகள், பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவுகளின் மூத்த அதிகாரிகள் வெளிநாட்டுத் தூதரகங்களின் ஊழியர்களுடன் மேற்கொள்ளும் தொடர்புகளைக் கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் மட்டுப்படுத்தவும் கடுமையான நெறிமுறைகள் அமுல்படுத்தப்பட வேண்டும்.” என்று தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த விடயம் மிகவும் ஆழமாக பார்க்க வேண்டியுள்ளது. ரஷ்ய தூதரகம் கூட எந்த நாட்டை மையப்படுத்தி இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளீர்கள் என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தது.

எது எவ்வாறாயினும், சிறிலங்காவின் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் வெளிநாட்டு தூதரகங்களின் மறைமுக நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய செயற்பட்டுள்ளனர் என்பதை கோட்டா வெளிப்படுத்தியுள்ளார்.

தற்போதைய நிலையில், ராஜபக்ஷக்களைப் பொறுத்தவரை அவர்கள் ஒன்றில் மீண்டும் அதிகாரத்துக்கு வரவேண்டும் அல்லது கடந்தகால தவறுகளுக்காக தங்களை பொறுப்புக்கூற வைக்காத ஒருவர் அதிகாரத்துக்கு வருவதை உறுதிசெய்ய வேண்டும். இந்த நோக்கத்தில் தான் அவர்களின் வியூகங்கள் அமையும் என்பதில் சந்தேகமில்லை.
வெளிநாட்டுச்சதி என்ற பிரசாரத்தையும் சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான அரசியலையும் தவிர மீண்டுவருவதற்கு ராஜபக்ஷக்களுக்கு வேறு மார்க்கம் இல்லை. அரகலயவை சிங்கள பௌத்தர்களின் நலன்களுக்கு எதிரானது என்ற கோட்டாவின் கருத்து அந்த சமூகத்தின் விவேகத்தை நிந்தனை செய்வதாக அமைந்திருக்கிறது.

அதேநேரம், அரகலயவை சிறுபான்மை சமூகங்களின் திரட்சியாக வெளிப்படுத்த முனைவதும் சிங்கள, பௌத்த வாதத்தினை மீண்டும் தன்வசப்படுத்துவதற்கான ஒரு முயற்சியே. ஆனால். கோட்டாவை வெகுவாக ஆதரித்த படைகளும் அவரது உறவுகளும் இனியும் அவரை நம்புவார்களா என்பது தான் மிகப்பெரும் கேள்வி.
எது, எவ்வாறாக இருந்தாலும், சிறுபான்மை சமூகங்கள் கோட்டாவைப் பற்றி நன்கறிந்திருந்த நிலையில் இப்போது அவரது நூலால் பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் அம்பலப்பட்டு விட்டார்.

Print Friendly, PDF & Email