Home Blog Page 309

ஸ்ரீதர் தியட்டரை மீட்டு தர கோரியும் , 100 மில்லயன் நஷ்டஈடு கோரியும் டக்ளஸுக்கு எதிராக வழக்கு

image_pdfPRINT
யாழ் நகரின் மத்தியில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகம் இயங்கும் ஸ்ரீதர் திரையரங்கின் கட்டடத்தின் உரித்தை மீளப் பெற்றுத் தருமாறு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுதாரர்களாக இராட்ணசபாபதி ஸ்ரீதர் உள்ளிட்ட 6 பேர் மனுதாரர்களாகவும்,  ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவை எதிர்மனு தாரராகவும்  குறிப்பிட்டு சட்டத்தரணி கேசவன்  சயந்தன் குறித்த மனுவை நேற்றைய தினம் புதன் கிழமை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 1996ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையைப் பயன்படுத்தி அனுமதி எதுவுமின்றி சட்டவிரோதமாக குடியேறிய எதிர்மனுதாரர் 20 ஆண்டுகளுக்கு மேலாக  வாடகை எதையுமே வழங்காமல் ஆதனத்தையும் கட்டடத்தையும் வைத்துள்ளார்.
இதன் காரணமாக உரிமையாளர்களாகிய எமக்கு மாதம் ஒன்றுக்கு 75 ஆயிரம் ரூபா வீதம் ஏற்பட்ட  இழப்பும் அதன் வட்டியையும் இணைத்து இதுவரை காலத்துக்குமான இழப்பீடாக 100 மில்லியன் ரூபாவையும் எதிர் மனுதாரர் வழங்கவேண்டும்.
அத்துடன் தற்போது இடம்பெறும் வழக்குச் செலவுடன் கட்டடத்துடன் கூடிய ஆனத்தின்  உரித்தினையும் பெற்றுத் தரவேண்டும், என மனுதாரர்கள்  கேட்டுள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம்; இடைநிறுத்தியது நிர்வாகம்

image_pdfPRINT
யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தின் அனுமதியுடன் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களால் அமைக்கப்பட்டு வந்த  முள்ளிவாய்க்கால் நினைவாலய கட்டுமானப்பணியை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர் கல்வி அமைச்சு இணைந்து இடைநிறுத்தியுள்ளன.
இறுதி யுத்த முள்ளிவாயக்கால் பேரவலத்தை நினைவு கூறுவதற்கு நினைவாலயம் அமைக்க பல்கலைக்கழக மாணவர்கள் திட்டமிட்டனர். இதன்படி பல்கலைக்கழக வளாக முன்றலில் அதனை அமைக்கும் பணிகளை கடந்த புதன்கிழமை (18) ஆரம்பித்திருந்தனர்.
எனினும் குறித்த இடத்தில் அமைப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகத்தின் உயர்மட்டத்தால் தடங்கல் ஏற்பட்ட,பல்கலைக்கழக நிர்வாகத்தின் உயர்மட்டத்துக்கும் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் இடையே கடந்த வியாழக்கிழமை பிற்பகல் பேச்சுவார்த்தைகள்  இடம்பெற்றன

இதில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவிடத்துக்கு அருகாமையில் குறித்த நினைவாலயத்தை அமைக்குமாறு உயர்மட்டத்தினரால் மாணவர் ஒன்றியத்திடம் கோரப்பட, அதற்கு இணக்கம் தெரிவித்த மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள், நிர்வாகத்தால் அடையாளம் காட்டப்பட்ட இடத்தில் கடந்த வியாழக்கிழமை தொடக்கம் கட்டுமானப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவாலய பணிகளை தற்போதுள்ள நிலையுடன் இடைநிறுத்துமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர் கல்வி அமைச்சு இணைந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு பணித்துள்ளது.

இதனையதூத்து மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த  முள்ளிவாய்க்கால் நினைவாலய கட்டுமானப்பணிகள் நேற்று மாலையுடன் இடைநிறுத்தப்பட்டது.

ஒரே நாளில் 37 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல்; 27 பேருக்கு நீதிமன்றம் தண்டனைத் தீர்ப்பு

image_pdfPRINT
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மதுபோதையில் மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 27 பேர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் இன்று தண்டிக்கப்பட்டனர்.
அத்துடன், சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 7 பேர், டெங்கு நுளம்பு பெருக்கத்துக்கு ஏதுவாக குடியிருப்பு சூழலை வைத்திருந்த குற்றச்சாட்டில் 3 பேர் என 10 பேர் தண்டிக்கப்பட்டனர்.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று (26) ஒரே நாளில் 37 பேருக்கு எதிராக கோப்பாய் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர்.
குறித்த வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.
மதுபோதையில் சாரத்தியம் செய்தனர் என்ற குற்றச்சாட்டில் 27 பேர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.அவர்களில் 3 பேர் அரச உத்தியோகத்தர்கள் என பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.
 அரச உத்தியோகஸ்தர்கள் மூவருக்கும் 7 ஆயிரத்து 500 ரூபா தண்டமும் ஆயிரத்து 500 ரூபா அரச செலவும் விதித்து மன்று உத்தரவிட்டது. அத்துடன் அவர்கள் மூவரின் சாரதி அனுமதிப் பத்திரங்களும் 9 மாதங்களுக்கு இடைநிறுத்தி வைக்க மன்று கட்டளையிட்டது.
மேலும் அதே குற்றச்சாட்டில் முற்படுத்தப்பட்ட ஏனைய 24 பேருக்கும்,  7 ஆயிரத்து 500 ரூபா தண்டம் செலுத்த வேண்டும், அத்துடன்  50 மணித்தியாலங்களுக்கு குறையாத சமூகப் பணியில் ஈடுபடவேண்டும் என்று மன்று உத்தரவிட்டது.
அதேவேளை அவர்கள் 24 பேரின் சாரதி அனுமதிப் பத்திரங்களை 9 மாதங்களுக்கு தடுத்தவைத்திருக்கவும் மன்று கட்டளையிட்டது.
அதேவேளை, புதுவருட தினத்தன்று சட்டவிரோதமாக அரச சாராயத்தை விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் முற்படுத்தப்பட்டார். அவரிடம் மீட்கப்பட்ட 175 மில்லி லீற்றர் கொள்ளவு கொண்ட 54 போத்தல்கள் சாரயத்தையும் பொலிஸார் சான்றுப் பொருளாக இணைத்தனர்.
அவர் குற்றத்தை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் 10 ஆயிரம் ரூபா தண்டம் செலுத்துமாறு நீதிமன்று உத்தரவிட்டது.
அதேவேளை  சட்டவிரோதமாக சாரயம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் மேலும் 5 பேரிடமும் தண்டம் அறவீடு செய்து விடுவிக்க மன்று உத்தரவிட்டது.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டெங்கு நுளம்பு பெருக்கத்துக்கு ஏதுவாக குடியிருப்பை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் 3 பேர் மன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்களிடம் தலா ஆயிரத்து 500 தண்டம் அறவிட மன்று கட்டளை வழங்கியது.

பாடசாலைக்கு காணியை பெற்றகொடுக்க களத்தில் இறங்கிய அமைச்சர்

image_pdfPRINT

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் க.சர்வேஸ்வரன்இ பூநகரி முழங்காவில் பகுதி பாடசாலைகளுக்கு நேற்று முன்தினம் (23) கள ஆய்வுப்பணி பயணம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

இந்த கள ஆய்வுப்பணி மூலம் முழங்காவில் மகாவித்தியாலயத்திற்கு தேவையான காணி தொடர்பான வியங்கள் ஆய்வுக்கு உற்படுத்தப்பட்டன.

இதன் போது காணி ஆணையாளரும் பூநகரி பிரதேச செயலகத்தின் காணிப்பகுதிக்கு பொறுப்பாக இருக்கும் காணி அதிகாரிகளும் அழைக்கப்பட்டு காணிப்பிரச்சினை தொடர்பான விளக்கங்கள் கோரப்பட்துடன் எதிர்காலத்தில் நீச்சல் தடாகம்இஉள்ளக விளையாட்டரங்குஇதொழிநுற்ப ஆய்வுகூடம் போன்ற வசதிகளை ஏற்படுத்தும் வகையிலும் பாடசாலைக்கு காணிகள் அவசியம் வேண்டும் என்ற விடயம் கருத்தில் கொள்ளப்பட்டு அமைச்சரினால் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 30 இற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் தங்குவதற்கும் மேலதிக ஆசிரியர்கள் தங்கும் விடுதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை போர் காரணமாக இரணை தீவில் இருந்து இடம்பெயர்ந்து இரணைமாதா நகரில் இயங்கிக்கொண்டிருக்கும் இரணைதீவு றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் வித்தியாலயத்திற்கும் நாச்சிக்குடா அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலைக்கும் சென்றிருந்த மேற்படி குழுவினர் அவ்விரு பாடசாலைகளுக்கும் தேவையான விடயங்களை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

இக்கள ஆய்வுப்பணி பயணத்தில் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்இகிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளர்இபூநகரிகோட்டக்கல்வி அதிகாரிஇ வடக்கு மாகாண காணி ஆணையாளர் திணைக்கள அதிகாரிகள்இபூநகரி பிரதேசசெயலக காணிப்பகுதி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மதத்தின் பெயரால் இன ஆக்கிரமிப்பு

image_pdfPRINT
வலி வடக்கில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் மிக அருகில் மதத்தின் பெயரால் இன ஆக்கிரமிப்பு நடைபெறுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் குற்றம் சாட்டியுள்ளார்.
அது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் ,
குறித்த பகுதியில் காணப்படும் ஒரு பழமையான இந்துக் கோவிலின் முன்னால் அதன் வாளகத்தினுள்ளேயே ஒரு பௌத்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
போயா தினங்களில் அங்கு இன்றும் பூஜைகள் இடம் பெறுகின்றன. இந்து கோவில் அழிக்கப்பட்ட நிலையில் தற்போது உள்ளது. அதனைப் புனரமைப்பதற்குரிய பணிகள் தற்போது நடைபெறுகின்றன.
கோவில் நிலத்தை அபகரித்து விகாரை அமைத்து மட்டுமல்ல கோவிலின் சொத்துக்கள் இன்று விகாரையின் சொத்துக்களாக்கப்பட்டுள்ளன.
அதாவது கோவிலின் மணிக் கோபுரம் முற்றுமுழுதாக வர்ணங்கள் மூலம் விகாரையின் மணியாக தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கோவிலின் மடப்பள்ளி விகாரையின் பிக்கு தங்குவதற்கு ஏற்றவகையில் மலசல கூடத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இவ் ஆக்கிரமிப்பின் வடிவம் கமுணு விகாரை காங்கேசன் துறை என்ற பலகையுடன் கம்பீரமாக நிற்கின்றது.
வேறு மதங்களுக்கு இம் மண்ணில் இடம் இல்லை என்பது எமது கருத்தல்ல எமது இனத்தின் அடையாளங்களையும் பாரம்பரியங்களையும் பூர்வீக நிலங்களையும் ஆக்கிரமித்து மதத்தின் பெயரால் அபகரித்து இன ஆக்கிரமிப்பை நிகழ்த்தும் செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.
மேலும் , புதிய இடங்களை விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அப்பால் விடுவிக்கப்பட்டும் இன்றும் இன ஆக்கிரமிப்பின் ஒரு வடிவமாகத் தென்படும் கமுணு விகாரை ஏன் அப்பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்களின் கண்ணில் படவில்லை? ஏன் நடவடிக்கை இன்று வரை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் நிரபராதி , பிறிதொரு வழக்கில் விளக்கமறியலில்

image_pdfPRINT
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் முதலாவது சந்தேகநபராக இருந்து ரயலட்பார் நீதிமன்றால் நிரபராதி என விடுவிக்கப்பட்ட பூபாலசிங்கம் இந்திரகுமாரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் இன்றைய தினம் நீதிவான் ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் குறித்த வழக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
அதன் போதே சந்தேகநபரை எதிர்வரும் 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
மேலும்  இவ் வழக்கு கோவைகள் தொடர்பாக விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள சட்டமா அதிபருக்கு நினைவூட்டல் கடிதமொன்றை அனுப்புவதாகவும் நீதிவான் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நபர் , மாணவி படுகொலை வழக்கில் சந்தேக நபராக தடுத்து வைக்கப்பட்டிருந்த கால பகுதியில் , பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு கொலை மிரட்டல் விடுத்தார் என பொலிசாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலையே குறித்த நபர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடத்தல்களால் பதற்றம்; யாழில் சிறுமி, வன்னியில் சிறுவன்

image_pdfPRINT
யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த முல்லைத்தீவை சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை என கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மறுபக்கத்தில் புதுக்குடியிருப்பு சுதந்திரபுரத்தில் வசித்து வந்த சிறுவன் ஒருவனையும் காணவில்லை எனவும் புதுக்குடியிருப்பு பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்விருவேறு கடத்தல்சம்பவங்கள் குறித்து மேலும் தெரிய வருவதாவது,
முள்ளியவளை கிழக்கு 3 ஆம் வட்டாரத்தை சேர்ந்த  சிவநேசன் கஸ்தூரி (15) என்ற சிறுமி யாழ்ப்பாணம் கல்வியம்காட்டு பகுதியிலுள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்த நிலையில், கடந்த 18 ஆம் திகதி மர்மமான முறையில் கடத்திசெல்லப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்படுள்ளது.
இந்நிலையில் குறித்த சிறுமி தொடர்பில் இதுவரையில் எதுவித தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே சுதந்திரபுரத்தை சேர்ந்த சத்தியசீலன் கிருஜன் (15) என்ற சிறுவன் கடந்த 22 ஆம் திகதி தனது சிறிய தந்தையின் வீட்டிலிருந்து 14.00 மணியளவில் தனது வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். எனினும் சிறுவன் இன்னும் வீடுவந்து சேரவில்லை என அவரது தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

கண்மூடித்தனமாக கொலைசெய்ய அதிரடிப்படை அதிகாரிகளிடமிருந்தே கட்டளை வரும்- சிங்களவர் வாக்குமூலம்

image_pdfPRINT
ITJP யின் அதிர்ச்சியூட்டும் புதிய அறிக்கை
தடுத்து வைக்கப்பட்டவர்களை கண்மூடித்தனமாக கொலைசெய்யவும் பலியால் வன்கொடுமை புரியவும் விசேட அதிரடிப்படியின் அதிகாரிகள் சிலரிடமிருந்தே கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன.
இவ்வாறு கடந்த காலத்தில் அதில் பணியாற்றிய சிங்கள படையினர் மற்றும் தமிழ் ஓட்டுக்குழுகள் சாட்சியங்கள் அளித்துள்ளதாக, அதிர்ச்சியளிக்கும் புதிய அறிக்கையை சர்வதேச உண்மைகள் மற்றும் நீதித்திட்டத்திற்கான அமைப்பு (ITJP) இன்று  வெளியிட்டுள்ளது.
ஜஸ்மின் சூகாவை தலைமையாக் கொண்டியங்கும் சர்வதேச உண்மைகள் மற்றும் நீதித்திட்டத்திற்கான அமைப்பு (ITJP) இலங்கையின் விசேட அதிரடிப்படை குறித்த புதிய அறிக்கை ஒன்றை பிரித்தானியா பாராளுமன்றில்  இன்று வெளியிட்டுவைத்து.
விசேட அதிரடிப்படை பற்றிய இந்த அறிக்கையானது கடந்த காலத்தில் அந்த அணியில் பணியாற்றிய சிங்கள பாதுகாப்பு படையினரின் சாட்சியங்களையும் முன்னாள் தமிழ் ஒட்டுக்குழுவினர்களின் சாட்சியங்களையும் அடிப்படையாக கொண்டுள்ளது.

அதில் சாட்சியங்கள்,  வெள்ளைவான் கடத்தல் அணியின் வேலையானது ஒரு பயங்கரமூட்டும் திரைப்படம்  போலவே இருந்ததாகவும் ஆனால் அது  சாதாரண வாழ்க்கைமுறைபோல் மாறியிருந்தததாகவும் வன்முறை, ஊழல், பயம், கோபம் மற்றும் வெறுப்பு என்பன தங்களைச் சூழ எப்பவும் இருந்தது என தெரிவித்துள்ளதாக குறிப்படப்படுள்ளது.

மேலும், கிழக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை கண்மூடித்தனமாக கொல்லுதல், மறைமுக கொலைகள்  மற்றும் பாலியல் வன்கொடுமைகளுக்கு அனுமதித்தல் இவற்றுக்கான கட்டளைகள் அனைத்தும் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் சிலரிடமிருந்தே வரும் என சாட்சியங்கள் தெரிவித்துள்ளதாக அதில்   குறிப்பிடப்படுள்ளது.

குறித்த சாட்சியங்கள் கட்டளை அதிகாரியின் பெயர்களையும் புகைப்படங்களையும் சித்திரவதைக்கூடங்களின் வரை படங்களையும் ITJP யிடம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஐ.நா.வின் இறுக்கமாக மீளாய்வு மற்றும் சோதனைகள் இல்லாமல் இலங்கையின்  விசேட அதிரடிப்படையினரை ஐ.நா. அமைதிகாக்கும் படைக்கான பணியில்  ஈடுபடுத்தக்கூடாது என்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

ITJP ஆனது ஐ.நா. அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் பணியாற்றுவதில் இருந்து தடைசெய்யப்படவேண்டும் என நம்பப்பபடும் 50 மேற்பட்ட விசேட அதிரடிப்படையினரினரின் பெயர்களைக் கொண்ட இரகசிய பட்டியல் ஒன்றைத் தயாரித்து வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அறிக்கையினை பார்வையிட எங்கே அழுத்தவும் https://t.co/knqQaQrRuV

நிலம் மீட்கும் பணிக்காக படகேறிய மக்கள்

image_pdfPRINT
கிளிநொச்சி இரணை தீவு கிராம மக்கள் தங்களை சொந்த மண்ணில் மீள் குடியேற்றம் செய்ய கோரி இன்று திங்கட்கிழமை(23) காலை படகு மூலம் தமது சொந்த மண்ணிற்குச் சென்று போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கிளிநொச்சி இரணை தீவு கிராம மக்கள் 1992 ஆம் ஆண்டு தமது சொந்த மண்ணில் இருந்து இடம் பெயர்ந்து சென்று முழங்காவில் கிராமத்தில் உள்ள இரணை மாதா கிராமத்தில் குடியேறியுள்ளனர்
சுமார் 183 குடும்பங்கள் கடந்த 27 வருடங்களுக்கு முன் இடம் பெயர்ந்துள்ள நிலையில் தற்போது 400 குடும்பங்களுக்கு மேலாக தமது சொந்த இடத்தை விட்டு நிர்க்கதியான நிலையில் முழங்காவில் கிராமத்தில் உள்ள இரணை மாதா கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
தமது சொந்த மண்ணில் மீள் குடியேற்றம் செய்ய கோரி சுமார் ஒரு வருடங்களுக்கு மேலாக தமது போராட்டத்தை தொடாந்த குறித்த கிராம மக்கள் தமது சொந்த நிலமான இரணை தீவு கிராமத்திற்கு இன்று (23) திங்கட் கிழமை காலை படகுகள் மூலம் சென்று ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த மக்களுக்கு ஆதரவு தெரிவித்து மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான அமைப்பின் தலைவர் ஜே.ஜாட்சன் பிகிராடோ கலந்து கொண்டு மக்களின் உரிமை சார் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கினார்.
முன்னதாக இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் படகுகள் மூலம் இரணை தீவு கிராமத்திற்கு சென்ற மக்கள் அங்குள்ள தேவாலையத்தில் வழிபாட்டில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து தமது சொந்த மண்ணில் மீள் குடியேற்றம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் செய்ய முயற்சித்தனர். எனினும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட கடற்படையினர் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி உரிய நவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர்.
எனினும் கோரிக்கையினை ஏற்றுக்கொள்ளாத இரணை தீவு கிராம மக்கள் தமது கிராமத்தில் உள்ள கோயிலுக்கு அருகாமையில் தமது போராட்டத்தை மேற்கொண்டனர்.
குறித்த பிரச்சினை தொடர்பில் தீர்வு கிடைக்காத நிலையில் இரணை தீவு கிராமமத்தில் தங்கி நின்று போராட்டங்களை முன்னெடுப்பதாக அந்த மக்கள் முடிவுகளை மேற்கொண்டனர்.
அதற்கு அமைவாக சுமார் 400 குடும்பங்கள் வரை இரணை தீவு கிராமமத்தில் தங்கி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மாணவன் மீது இ.போ.ச சாரதி நடத்தனர் தாக்குதல்; மதுபோதையில் இருந்ததாகவும் குற்றசாட்டு – வவுனியாவில் சம்பவம்

image_pdfPRINT
வவுனியாவில் பாடசாலை மாணவன் ஒருவன் மீது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி , நடத்துனர் மற்றுமொரு நபர் ஆகியோர் இணைந்து தாக்குதல் நடத்தி உள்ளனர்.
வவுனியா பூவரசன் குளம் ஊடாக சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் சாரதி நடத்துனர் ஆகியோரே தாக்குதல் நடத்தி உள்ளனர்.
அது தொடர்பில் மேலும் தெரிய வருவதவாது ,
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான குறித்த பேருந்தும் தனியார் பேருந்து ஒன்று வீதியில் போட்டி போட்டு மிக வேகமாக பயணித்த வேளை வீதியால் மாணவிகளுடன் வந்த மாணவன் “என்ன என்று ஓடுறாய் ?” என சாரதியிடம் கேட்ட போது சாரதி மாணவனுக்கு திரும்ப பேசியுள்ளார். மாணவனும் பதிலுக்கு பேச வாய் தர்க்கம் முற்றியதை அடுத்து சாரதி , நடத்துனர் மற்றுமொரு நபர் ஆகியோர் இணைந்து மாணவன் மீது தடி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.
அதனை அடுத்து அவ்விடத்தில் நின்றவர்கள் மற்றும் பேருந்தில் இருந்தவர்கள் மாணவனை தாக்குதலில் இருந்து காப்பாற்றியுள்ளனர்.
அதேவேளை தாக்குதல் நடத்திய பேருந்து சாரதி நடத்துனர் ஆகியோர் மது போதையில் இருந்ததாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது.
அதேவேளை பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் குறித்த மாணவர் திருடினார் என குற்றம் சாட்டுகின்றார்கள் எனவும், ஆனால் மாணவன் திருடவில்லை எனவும் சாரதிக்கு பேசியதால் தான் மாணவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பேருந்தில் பயணித்தவர்கள் தெரிவித்தனர்.

தமிழ் மக்களின் மனிதநேயத்தை நன்கு உணர்ந்துள்ளேன்-வட மாகாண ஆளுநர்

image_pdfPRINT

தமிழ் மக்களின் மனிதநேயத்தை நான் நன்கு உணர்ந்து கொண்டுள்ளேன் என வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கத்தின் முதலாம் ஆண்டு நிகழ்வில் இன்று (22) பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வாரங்களுக்கு முன்பதாக மத்திய மாகாண ஆளுநராக நான் நிமிக்கப்பட்டபோதும் ஒரு நாளேனும் அக்கடமையினை செய்யாது மீண்டும் வட மாகாணத்திற்கு சேவையாற்ற வந்திருக்கின்றேன். அந்த தருணத்தில் தமிழ் மக்களின் மனிதநேயப் பண்பினை நான் நன்கு அறிந்து கொண்டேன்.

வடமாகாணத்திற்கு நான் ஆளுநராக கடமைக்கு வரும்போது என்னுடய மனைவி அங்கே போகவேண்டாம் என்று சொல்லி அழுதார். நான் இறக்க நேரிடும் என்று கூறினார்.  இன்று அவரும் இங்கே வடக்கு மாகாணத்திற்கு வந்திருக்கின்றார். அவருக்கும் வடக்கு தமிழ் மக்களின் மனிதநேயம் நன்றாக புரிந்துவிட்டது.

கடந்த வருடங்களை விட மேலும் மேலும் இந்த வட மாகாண மக்களுக்கு சேவையாற்ற முடிவு செய்திருக்கின்றேன்.

நான் வயது முதிர்ந்தவன் கவிஞர் கண்ணதாசன் கூறியதைப் போன்று வீடுவரை உறவு வீதிவரை மனைவி காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோஎன்றதைபோன்று கடைசியில் வடமாகாண தமிழ் மக்களுக்காக என் உயிரையும் கொடுத்து சேவையாற்ற இங்கு வந்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

அம்பலவாணர் கலையரங்கினை கட்டுவதற்காக கனடா, பிரித்தானியா, ஆஸ்ரேலியா, ஜேர்மனி போன்ற பல நாடுகளிலிருந்தும் கோடிக்கணக்கான பணத்தினை பலர் நன்கொடையாக வழங்கியிருக்கின்றார்கள். இதனை பார்க்கும்போது புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மாதம் ஒன்றிற்கு ஒரு டொலர் பணத்தினை அனுப்பினால் இங்கு அபிவிருத்தி செய்வதற்கு அரச, அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவியே தேவையில்லை என  தோன்றுகின்றது.

இங்குள்ள அரசியல் தலைமைகள் தமது வாய்களை திறந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடம் ஒரு டொலரை மாதம் ஒன்றுக்கு அனுப்புங்கள் என்று கேட்பது கிடையாது. நிச்சயமாக அவர்கள் கேட்பார்களே ஆனால் அவ்வாறு ஒரு பணத்தினை புலம்பெயர் தமிழர்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

இந்த நாட்டில் ஓரிரு நாட்களில் அரசியல் தலைவர்கள் ஆகவேண்டுமானால் ஒரு முறையிருக்கின்றது. அதுதான் இனவாதம், மொழிவாம், மதவாதம் இவற்றில் ஒன்றினை எடுத்துக்கொண்டு பேசினால் ஓர் இரு நாட்களில் தலைவராக முடியும்.

இதனை மக்களாகிய நாம் புரிந்து கொண்டு ஒன்றாக வாழ்வதற்கு உரிய வழிகளை தேடிக்கொண்டு வாழ வேண்டும். அதற்காக நான் பணியாற்றவுள்ளதாக தெரிவித்தார்.

இராணுவத்தினர் வைத்தியசாலையில்

image_pdfPRINT
சுவாசப் பிரச்சினை காரணமாக, வவுனியா – பம்பைமடு இராணுவ முகாமிலிருந்த 14 இராணுவ வீரர்கள், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம், இன்று (22) நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பம்பைமடு இராணுவ முகாமில் இன்று (22) காலை இராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில், இராணுவத்தினருக்குத் திடீரென சுவாசப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 14 இராணுவ வீரர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டனர்.

அத்துடன் மேலும் பல இராணுவத்தினருக்கு, பம்பைமடு இராணுவ முகாமில் முதலுதவிச் சிகிச்சையளிக்கப்பட்டதெனத் தெரிவிக்கப்படுகின்றது.

error: Content is protected !!