SHARE
வலி வடக்கில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் மிக அருகில் மதத்தின் பெயரால் இன ஆக்கிரமிப்பு நடைபெறுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் குற்றம் சாட்டியுள்ளார்.
அது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் ,
குறித்த பகுதியில் காணப்படும் ஒரு பழமையான இந்துக் கோவிலின் முன்னால் அதன் வாளகத்தினுள்ளேயே ஒரு பௌத்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
போயா தினங்களில் அங்கு இன்றும் பூஜைகள் இடம் பெறுகின்றன. இந்து கோவில் அழிக்கப்பட்ட நிலையில் தற்போது உள்ளது. அதனைப் புனரமைப்பதற்குரிய பணிகள் தற்போது நடைபெறுகின்றன.
கோவில் நிலத்தை அபகரித்து விகாரை அமைத்து மட்டுமல்ல கோவிலின் சொத்துக்கள் இன்று விகாரையின் சொத்துக்களாக்கப்பட்டுள்ளன.
அதாவது கோவிலின் மணிக் கோபுரம் முற்றுமுழுதாக வர்ணங்கள் மூலம் விகாரையின் மணியாக தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கோவிலின் மடப்பள்ளி விகாரையின் பிக்கு தங்குவதற்கு ஏற்றவகையில் மலசல கூடத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இவ் ஆக்கிரமிப்பின் வடிவம் கமுணு விகாரை காங்கேசன் துறை என்ற பலகையுடன் கம்பீரமாக நிற்கின்றது.
வேறு மதங்களுக்கு இம் மண்ணில் இடம் இல்லை என்பது எமது கருத்தல்ல எமது இனத்தின் அடையாளங்களையும் பாரம்பரியங்களையும் பூர்வீக நிலங்களையும் ஆக்கிரமித்து மதத்தின் பெயரால் அபகரித்து இன ஆக்கிரமிப்பை நிகழ்த்தும் செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.
மேலும் , புதிய இடங்களை விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அப்பால் விடுவிக்கப்பட்டும் இன்றும் இன ஆக்கிரமிப்பின் ஒரு வடிவமாகத் தென்படும் கமுணு விகாரை ஏன் அப்பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்களின் கண்ணில் படவில்லை? ஏன் நடவடிக்கை இன்று வரை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
Print Friendly, PDF & Email