Home Blog Page 293

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிரந்தர குழு: உறுப்பினராக விரும்புவோருக்கான பகிரங்க அழைப்பு

image_pdfPRINT

தமிழின அழிப்பு நாளான மே18 முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நினைவேந்தல் நிகழ்வுக்கான நிரந்த குழுவொன்றை அமைக்க தீர்மானித்துள்ள வடமாகாண சபை அக் குழுவில் உறுப்பினராக இணைய விரும்புவர்களுக்கான அழைப்பொன்றை விடுத்துள்ளது.

இதுகுறித்து முதலமைசர் சீ.வீ.விக்னேஸ்ரவன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு,

10வது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி – 2019

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வருடந்தோறும் மே மாதம் 18ம் திகதி நினைவுபடுத்துவதற்காக நினைவேந்தல் நாளாக அத்தினத்தை பிரகடனப்படுத்தியிருந்தோம். அதற்காக இவ் வருடத்திற்கான வழிநடத்தல் குழுவொன்றை அமைத்திருந்தோம்.

இனிவருங்காலங்களில் சில வேளை வடமாகாணசபைக்கான தேர்தல் உரிய காலத்தில் நடாத்தப்படாமையால் எம்மவர் ஆட்சியில் இல்லாதிருக்க வேண்டிவரினும் அல்லது ஆளுநரின் ஆட்சியில் எதிர்வரும் காலங்களில் இருக்கவேண்டிவரினும்கூட இந்நிகழ்வை தொடர்ந்து வருடந்தோறும் நடாத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய உத்தேசித்துள்ளோம்.

அதற்கான குழுவை இப்போதே நியமிக்கத் தீர்மானித்துள்ளோம். இந்நிகழ்வு தொடர்ச்சியாக வருடந்தோறும் பரந்துபட்ட விதத்தில் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதில் உறுதியாகவுள்ள ஆர்வமுள்ள பொது நிறுவனங்களை இக்குழுவில் நிறுவனத்திற்கு இருவர் என்ற ரீதியில் இணைத்துக் கொண்டு ஒரு குழுவை உருவாக்க எண்ணியுள்ளோம். மேலதிகமாக வேண்டுமெனில் தேவையான சில நபர்களையும் உள்ளடக்க உத்தேசித்துள்ளோம்.

இக்குழுவானது 2019ம் ஆண்டிலிருந்து சுயமாக இயங்கக் கூடியதாக இருக்கும். இவ்வாறு அமையவிருக்கும் குழுவில் உறுப்பினராக இணைந்து கொள்ள விரும்பும் பொது அமைப்புக்கள் மற்றும் பொது நிறுவனங்கள் மற்றும் தகைமை சார்ந்த பொதுமக்கள் அவ்வாறு சேர்த்துக் கொள்ளக்கூடிய பெயர்களை தத்தமது கடிதத் தலைப்புக்களில் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகோள் ஒன்றை இதன் மூலம் விடுக்கின்றேன்.

அனுப்ப வேண்டிய முகவரி – ​கௌரவ முதலமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர்

​​​​​முதலமைச்சர் அலுவலகம்

வடமாகாணம்

​​​​கைதடி

குழு அங்கத்தவர் நியமனமானது உரியவாறு வெளிப்படையாக காலாகாலத்தில் நடைபெறும்.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்

முதலமைச்சர்

வடமாகாணம்

கடலட்டை சர்ச்சை- மக்கள், அரசியல்வாதிகளால் முடக்கப்பட்டது யாழ் .கடற்றொழில் நீரியல் வள திணைக்களம்!

image_pdfPRINT

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் வெளியிடங்களை சேர்ந்தவர்களால் மேற்கொள்ளப்படும் கடலட்டை பிடிப்பை நிறுத்துமாறு கோரி, இன்று யாழ்ப்பாண நகரிலுள்ள கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் முற்றுகையிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தனும் இந்த முற்றுகைப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பண்ணையிலுள்ள கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் அலுவலகத்தை இன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் போராட்டக்காரர் முற்றுகையிட்டனர். அதனால் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் அலுவலகத்துக்குள் செல்லவிடாமல் தடுக்கப்பட்டுள்ளனர்.

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் தென்னிலங்கை மீனவர்கள் சிலர், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அப்பகுதியில் தங்கியிருந்து கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்னிலங்கை மீனவர்களின் இந்த செயற்பாட்டை கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் நியாயப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் தென்னிலங்கை மீனவர்களால் முன்னெடுக்கப்படும் கடலட்டை பிடிக்கும் தொழிலை தடுத்து நிறுத்தி, அவர்களை தமது பகுதிகளிலிருந்து வெளியேற்றுவதுடன் வடமராட்சி கடற்பரப்பில் கடலட்டை தொழிலை முற்றாக தடைசெய்யுமாறு வலியுறுத்தியும் உள்ளூர் மீனவர்களால் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு அங்கமாகவே இன்றைய முற்றுகைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடமாகாணசபை உறுப்பினர்கள் சந்திரலிங்கம் சுகிர்தன், ரவிகரன் உள்ளிட்டவர்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

யாழ். பல்கலை, 33 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா ஆரம்பம்

image_pdfPRINT

யாழ். பல்கலைக் கழகத்தின் 33 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி இன்று காலை 8.30 மணிக்கு பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் எஸ். பத்மநாதன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

சகல பீடங்களையும் சேர்ந்த 1706 பட்டதாரிகள் இம்முறை பட்டம் பெறவுள்ளனர்
.

யாழில் இந்தியப்படைகள் வழிபட்ட ஆலயம்

image_pdfPRINT

இந்திய அமைதிப்படையென்ற பெயரில் இலங்கைக்கு வந்த இந்தியப்படையினர் அமைத்து வழிபட்ட முருகன் ஆலயமொன்று கண்டறியப்பட்டுள்ளது. வடமராட்சி செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திற்கு அருகில் ஆட்களற்ற பகுதியில், பற்றைக்காட்டிற்குள் இருந்த ஆலயமே கண்டறியப்பட்டுள்ளது.

1987ம் ஆண்டு இலங்கைக்கு இந்திய அமைதிப்படையினர், செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு அருகில்- தொண்டமானாற்றில்- முகாம் அமைத்திருந்தனர். அவர்கள் வழிபட இந்த ஆலயத்தை உருவாக்கியிருக்கலாமென தெரிகிறது.

இந்த ஆலயத்தில் இந்திய அமைதிப்படையில் பணியாற்றிய தமிழகத்தை சேர்ந்த இந்திய இராணுவத்தினருடைய பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலயம் யாழ் தொண்டைமணாறு செல்வச்சன்நிதி கோவிலுக்கு எதிராக சுமார் 1km தூரத்தில் இது காணப்படுகிறது.

தொண்டைமானாறு துருசு திருத்தப்பணி இடம்பெற்றுவருகிறது. இதன்போது பற்றைக் காடுகள் துப்பரவு செய்யும் போது இந்த ஆலயம் கண்டறியப்பட்டது.

அடங்க மறுக்கும் வரணி ஆலய நிர்வாகம் – வழக்கு தொடரவுள்ள இளைஞர்கள்

image_pdfPRINT

யாழ்ப்பாணம் வரணி சிமில் கண்ணகை அம்மன் ஆலயத்தில், சாதிய பாகுபாடு காரணமாக நேற்று JCB இயந்திரத்தின் மூலம் தேர் இழுத்த விவகாரத்தை தமிழ்பக்கம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருந்தது. ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் இது பெரும் விவாதமாக இன்று மாறிய நிலையிலும், இன்றும் அநாகரிகமான நடவடிக்கையில் ஆலய நிர்வாகம் ஈடுபட்டது.

தீர்த்தக்கேணியை சுற்றி முள்கம்பி வேலியிட்ட பின்னரே தீர்த்தோற்சவம் நடந்தது.

ஆலய சூழலில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் யாரும் தீர்த்தக்கேணிக்குள் இறங்ககூடாது என்பதற்காக, தீர்த்தக்கேணியை சுற்றிலும் முள்கம்பி வேலியிடப்பட்டிருந்தது.

அதே சமயத்தில், இன்று தீர்த்தோற்சவத்தை யாரும் புகைப்படம் எடுக்காமலும் கவனித்துக் கொண்டது ஆலய நிர்வாகம்.

நேற்று தொடக்கம் சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் பெரும் சரச்சையை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இதற்கு தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகிறார்கள். இந்தநிலையில், நாளை கண்ணகை அம்மன் ஆலய திருவிழாவில் பங்குபற்ற அனுமதிக்கப்படாத ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் இளைஞர்கள் சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர்

பரபரப்பை ஏற்படுத்திய குழந்தையின் மரணம்

image_pdfPRINT

காய்ச்சால் காரணமாக இரண்டு வாரங்களாக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று பயனின்றி உயிரிழந்த இரண்டரை வயது பெண் குழந்தையின் இறுதிச் சடங்கில் சடலத்திலிருந்து மலம், சலம் வெளியேறியதால் உறவினர்கள் குழப்ப நிலை ஏற்பட்டது.

குழந்தை உயிருடன் இருப்பதாக சிலர் நம்பிக்கை வெளியிட்டதால், தேவாலயத்துக்கு எடுத்துச் சென்று வழிபாடு நடத்தப்பட்டுள்ளது. எனினும் குழந்தை உயிரிழந்துவிட்டதாக பெரியவர்கள் கூறியதையடுத்து சடலம் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில் ஆலடிப் பகுதியில் இன்று நண்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

இரண்டரை வயது பெண் குழந்தை காய்ச்சல் பாதிக்கப்பட்டாள். குழந்தையை தெல்லிப்பளை வைத்தியசாலையில் பெற்றோர் சேர்த்துள்ளனர். அங்கு குழந்தைக்கு 4 நாள்கள் சிகிச்சையளிக்கப்பட்டது.

எனினும் காய்ச்சல் நீடித்தமையால் பாலகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு 11 நாள்கள் சிகிச்சை வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்றிரவு குழந்தை உயிரிழந்துவிட்டார் என மருத்துவ அறிக்கையிடப்பட்டது. சடலம் ந
நள்ளிரவு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இறுதிச் சடங்கு இன்று (7) வீட்டில் நடைபெற்றுள்ளது. முற்பகல் 11 மணியளவில் குழ்ந்தையின் சடலத்திலிருந்து மலம், சலம் வெளியேறியுள்ளது.

அதனால் குழந்தை உயிருடன் உள்ளது என சிலரால் நம்பிக்கை வெளியிடப்பட்டது. அதனையடுத்து குழந்தையின் சடலம் தேவாலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

பின்னர் இந்து முறைப்படி வழிபாடும் நடைபெற்றுள்ளது. எனினும் குழந்தை உயிரிழந்துவிட்டது என பெரியோர்கள் பெற்றோருக்கு எடுத்துக் கூறினர். அதனையடுத்து சடலம் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.இறுதிச் சடங்கு நாளை நடைபெறவுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மாறுபட்ட தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டதால் யாழ். குடாநாட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

பிரித்தானியாவின் ஆயுதவிற்பனை; பாராளுமன்ற விவாதத்திற்குட்படுத்த தமிழ் இளையோர் கடும்பிரயத்தனை

image_pdfPRINT

இலங்கையுடனான ஆயுதவிற்பனையை பிரித்தானியா நிறுத்தவெண்டுமென்ற கோரிக்கை வலுபெற்றுள்ள நிலையில், குறித்த விவகாரம் வெகுவிரைவில் பிரித்தானிய நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

தமிழ் தகவல் நடுவத்தில் (TIC) நடைபெற்ற பிரித்தானிய கிங்ஸ்டன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எட் டேவி மற்று ஆயுத விற்பனைக்கெதிரான ஒருங்கிணைப்பாளர்களுடனான கலந்துரையாடலில் இதற்கான சமிக்ஞை பிறந்துள்ளது.

நவீனரக ஆயுதங்களைக்கொண்டு தமிழ்மக்களுக்கெதிராக சிங்களப்பேரினவாதத்தால் நடத்திமுடிக்கப்பட்ட கொடிய யுத்தத்தின் பின்னரான தற்போதைய நல்லாட்சி காலத்திலும், அரசின் இரும்புக்கரம் ஓங்கியே நிலையே காணப்படுகின்றது. தமிழர்வாழ் பிரதேசமான வடக்கு கிழக்குகளில் இராணுவமயமாக்கல் மற்றும் காணிகள் அபகரிப்பு தொடர்ந்தவண்ணமே உள்ளன. இதன் பின்னணியில் பிரதான காரணியாக ஆயுதக்கொள்வனவே காணப்படுகின்றது.

அந்தவகையில் இலங்கைக்கு ஆயுதம் விற்பனை செய்யும் பிரித்தானியா உடனடியாக அதனை நிறுத்த வேண்டுமென்றும். சம்பந்தப்பட்ட அமைச்சுக்கு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தம் கொடுக்கவேண்டும் என்ற நோக்கில் தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) ஏற்பாட்டில் அதன் உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்கள் சுமார் 6 மாத காலத்திற்கு மேலாக பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து குறித்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தி வருகின்றனர்.

ஆளும் கட்சி எதிர்க்கட்சி என சுமார 30 ற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்ளை இதுவரையில் சந்தித்து குறித்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தி ஆயுதவிற்பனையை நிறுத்த அழுத்தம் கொடுக்க்ககோரி வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் நேற்றையதினம் கிங்ஸ்ட்ன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எட் டேவியுடனான சந்திப்பொன்று தமிழ்த் தகவல் நடுவத்தில் நடைபெற்றது. பணிப்பாளர் வி.வரதகுமார் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில் இச்செயல்த்திட்டத்திற்கான தலைமை ஒருங்கிணைப்பாளர் அஷந்தன் மற்றும் சக ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டர்.

இதில் தலைமையுரையாற்றிய ரி.ஐ.சி.யின் பணிப்பாளர் வரதாகுமார் இருகர அரசியலைக்கையாளும் பிரித்தானியா ஒருகையால் மனித உரிமைகள் பற்றி பேசிக்கொண்டு  மறுகையால் மனித உரிமை மீறலுக்கு காரணியான ஆயுதவிற்பனையை செய்கிறது ஏன்? என்ற கேள்வியை நாடாளுமன்ற உறுப்பினர் எட் டேவி யிடம் முன்வைத்தார்.

அதனைத்தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர்களுடன் ஆயுதவிற்பனையால் தமிழ்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து கேட்டறிந்து கொண்ட எட் டேவி குறித்த விடயத்தை பாராளுமன்ற விவாதத்திற்கு உட்படுத்த தாம் முன்னின்று செயல்படுவதாக உறுதியளித்தார்.

பிரதான எதிர்க்கட்சியான தொழில்கட்சியுடனும் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்தாலோசித்து அவர்களின் ஆதரவுடன் இதனை பாராளுமனற விவாதத்திற்கு உட்படுத்த செயலாற்றுவேன் என அவர் தெரிவித்தார்.

சிவாஜிலிங்கம் மருத்துவமனையில்

image_pdfPRINT

வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

“யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் இன்று பிற்பகல் 2 மணியளவில் அவர் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு, பொது மருத்துவ வல்லுநர் பேரானந்தராஜா தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை வழங்கினர்.

உயர் குருதி அழுத்தம் காரணமாகவே அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. உரிய சிகிச்சையின் பின்னர் எம்.கே.சிவாஜிலிங்கம் 10ஆம் விடுதிக்கு மாற்றப்படுவார்” என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆசிரியர் மீது தாக்குதல் – ஒருவர் கைது

image_pdfPRINT

கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கொக்குவில் பகுதியில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டார் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனான 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினார்.

“கொக்குவில் இந்துக் கல்லூரின் ஒழுக்கக் கட்டுப்பாட்டு பொறுப்பாசிரியரும் உயர்தர கணித பாட ஆசிரியருமான நாடராஜா பிரதீபன் (வயது -41), நேற்று புதன்கிழமை மாலை பாடசாலைக்கு அண்மையாக வைத்து தாக்கப்பட்டார்.

இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்றே அவர் மீது தாக்குதலை மேற்ககொண்டது என விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞன் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஏனைய 4 பேரைக் கைது செய்வதற்கான நடவடிக்கை முடிக்கிவிடப்பட்டுள்ளது.

கொக்குவில் இந்துக் கல்லூரியின் ஒழுக்கக் கட்டுப்பாட்டு ஆசிரியராக அவர் உள்ளமையால், போதைப் பொருள் பாவனை உள்ளிட்ட காரணங்களால் சில மாணவர்களை பாடசாலையிலிருந்து விலக்க அல்லது இடைநிறுத்த காரணமாக அமைந்துள்ளார். அதன் பின்னணியிலேயே ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஆசிரியர் தாக்ப்பட்டதைக் கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்

image_pdfPRINT

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியின் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஆசிரியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

கல்லூரியின் மாணவ ஒழுக்க கட்டுப்பாட்டு ஆசிரியரான பிரதீபன் எனும் ஆசிரியரே நேற்றிரவு தாக்கப்பட்டுயிருக்கின்ளார்.

இத் தாக்குதலைக் கண்டித்து கல்லூரியின் நுழைவாயிலில் ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து இன்று காலை 8 மணிமுதல் இப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் போது தாக்கப்பட்ட ஆசிரியருக்கு நீதி வேண்டுமென்றும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்றும் ஆசிரியர்களது பாதுகாப்புக்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனவும் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழ் அரசியல்வாதிகளால் இயலாவிட்டால் அவர்களை நாங்கள் வெளியேற்றுவோம்

image_pdfPRINT

-வடமராட்சி கிழக்கு மீனவர்கள்

வடமராட்சி கிழக்கில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்ற தமிழ் அரசியல்வாதிகளால் இயலாவிட்டால் அதனை அவர்கள் பகிரங்கமாக கூறவேண்டும். அதன் பின்னர் தென்பகுதி மீனவர்களை நாங்கள் வெளியேற்றுவோம்.

என வடமராட்சி கிழக்கு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்றக்கோரி இன்று புதன் கிழமை வடமராட்சி  கிழக்கு மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலிலேயே வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் அவ்வாறு தெரிவித்தனர். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

வடமராட்சி கிழக்கிலிருந்து தென்பகுதி மீனவர்களை வெளியேற்ற அரசியல்வாதிகளால் இயலாவிட்டால் அதனை அவர்கள் பகிரங்கமாக கூறவேண்டும். அவர்களால் முடியாவிட்டால் தென்பகுதி மீனவர்களை எப்படி வெளியேற்றுவதென்பது எங்களுக்கு தெரியும். நாங்கள் அவர்களை வெளியேற்றுவோம்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டு தென்பகுதி மீனவர்களை வெளியேற்றுவது தொடர்பாக மத்திய கடற்றொழில் அமைச்சருடன் பேசி தீர்வு காணுவோம் என்றார்கள்.

அதற்கு என்ன நடந்தது? என கேள்வி எழுப்பிய  கடற்றொழிலாளர்கள்,

அட்டை பிடித்தல், சுருக்குவலை பயன்படுத்துதல், றோலர் படகுகளைப் பயன்படுத்தி கடற்றொழில் செய்தல் போன்ற சட்டத்திற்கு மாறான கடற்றொழில் முறைகளை தடைசெய்யக்கோரி தனிநபர் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றில் கொண்டுவந்து அதனை நிறைவேற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பின்னர் றோலர் படகு தொழிலை உடனடியாக தடைசெய்யவேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவுடன் இணைந்து கூறுகின்றார்.

சட்டவிரோத தொழில்களை தடைசெய்ய விடாது தடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களிடம் எங்களுடைய கடல்வளத்தை பாதுகாக்கும்படி எப்படி கேட்கலாம்?  தென்பகுதி மீனவர்களுக்கு கால அவகாசத்தை வழங்காமல் அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.

இல்லை அதனை செய்ய தங்களால் இயலாது என்றால் அதனை அவர்கள் வெளிப்படையாக கூறவேண்டும். என கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர். இதன்போது அங்கு வடமாகாணசபை  உறுப்பினர்கள் மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் அரசியல்வாதிகள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாளை பாரிய போராட்டம்

அதேவேளை அடாத்தாக தங்கியுள்ள மீனவர்கள் உடனடியாக வெளியேறாது விட்டால் , நாளைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தை முற்றுகையிட்டு பாரிய போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக வடமராட்சி கிழக்கு மீனவர்கள் தெரிவித்தனர்.

தென்பகுதி மீனவர்களை வெளியேற்றக்கோரி மருதங்கேணியில் போராட்டம்

image_pdfPRINT

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை உடனடியாக வெளியேற்றக்கோரி மருதங்கேணி மீனவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் நடைபெற்றது.

இதன்போது “மீன்பிடி திணைக்களமே மீட்டுதா எம் வளத்தை”, “பிரதேச செயலகமே மீட்டுத்தா எம் கடல்வளத்தை”, “அதிகாரிகளே அத்துமீறிய கடற்றொழிலாளர்களிடம் அசமந்தம் காட்டாதே” போன்ற கோஷங்களை எழுப்பியவாறும், பதாகைகளை தாங்கியவாறும் தென்பகுதி மீனவர்கள் அடாத்தாக வாடிகளை அமைத்து தங்கியுள்ள இடத்திலிருந்து மருதங்கேணி பிரதேச செயலகம் வரை ஊர்வலமாக வந்து மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியிருந்தனர்.

இதன் பின்னர் தென்பகுதி மீனவர்களின் அத்து மீறல்களிடமிருந்து தமது கடல்வளத்தை பாதுகாக்கும்படியும், தென்பகுதி மீனவர்களால் உருவாகப்போகும் வாழ்வாதார நெருக்கடியிலிருந்து தம்மை பாதுகாக்கும்படியும் கேட்டு மகஜர் ஒன்றிணை மருதங்கேணி பிரதேச செயலருக்கும்,யாழ்.மாவட்ட அரசாங்க அதிபருக்கும் சேர்த்து மருதங்கேணி பிரதேச செயலரிடம் கையளித்தனர்.

error: Content is protected !!