Home Blog Page 277

யாழ்.மாநகர சபை பிரதி முதல்வரை கட்டி வைச்சு அடிக்க முடியாது-ஆர்னோல்ட்

image_pdfPRINT

யாழ்.மாநகர சபை பிரதி முதல்வரை கட்டி வைச்சு என்னால் அடிக்க முடியாது என யாழ். மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்தார்.

யாழ்.மாநகர சபையின் கூட்டம் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை காலை மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

அதன் போது நடைபெற்ற விவாதம் ஒன்றில் பிரதி முதல்வர் எதிர்கட்சி உறுப்பினர் மணிவண்ணன் விகிதாசார உறுப்பினர் என கூறி அவரை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்தார்.

அதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து , அவரின் கருத்தை வாபஸ் பெற வேண்டும் எனவும், விகிதாசார உறுப்பினர் என ஒருவரை குறிப்பிட்டு கூறும் போது இந்த சபையில் உள்ள 18 விகிதாசார உறுப்பினர்களையும் அது குறிக்கும் எனவும் , சபை உறுப்பினர்களை கௌரவம் இன்றி பேச முடியாது எனவும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதற்கு முதல்வர் தான் அந்த கருத்தை அறிக்கையில் இருந்து நீக்கி விடுகிறேன் என அறிவித்தார். அதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி உறுப்பினர்கள் உடன்படவில்லை. பிரதி முதலவர் சபையில் எழுந்து நான் அந்த கருத்தை வாபஸ் பெறுகிறேன் என கூற வேண்டும் என தெரிவித்தார்கள்.

அதனை அடுத்து முதல்வர் , பிரதி முதல்வரிடம் வாபஸ் பெறுங்கள் என கேட்டார். அதற்கு பிரதி முதல்வர் தன் கருத்தை வாபஸ் பெற மாட்டேன் என ஆணித்தரமாக கூறி அமர்ந்தார்.

அதனை தொடர்ந்து சபையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பிரதி முதல்வரின் கருத்து இந்த சபையில் விகாதாசார முறைமையில் தெரிவு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களையும் அவமதிக்கும் வகையில் உள்ளது என எதிர்கட்சி உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.

அதற்கு முதல்வர் தன்னால் என்ன செய்ய முடியும். பிரதி முதல்வர் தன் கருத்தை வாபஸ் பெற முடியாது என கூறுகின்றார். கருத்தை வாபஸ் பெறு என கட்டி வைச்சு அடிக்கவா முடியும் என அப்பாவித்தனமாக சபையில் கேட்டார்.

அதனை அடுத்து எழுந்த ஈழமக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர் செல்வவடிவேல் , இந்த சபையில் உள்ள அனைவரும் உறுப்பினர்களே . இங்கே விகாதாசார முறைமையில் தெரிவு செய்யப்பட்டவர்களை அவமதிக்கும் மாறு சக உறுப்பினர் தெரிவிக்கும் கருத்தை ஏற்றுகொள்ள முடியாது என தெரிவித்தார்.

அத்துடன் மேலும் எதிர்கட்சி உறுப்பினர்கள் பிரதி முதல்வரின் கருத்துக்கு எதிர்ப்புக்களை தெரிவித்தனர்.

கடுமையான எதிர்ப்பு சபையில் எழுந்ததால் இறுதியில் பிரதி முதல்வர் எழுந்து தனது கருத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார்.

அதேவேளை ஆளும் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பில் விகிதாசார முறைமையில் தெரிவான உறுப்பினர்கள் எந்த விதமான கருத்தையும் தெரிவிக்காது மௌனம் காத்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக அரசியல் சீர்கேடுகளை அஸ்வினின் காட்டூன்கள் பிரதிபலித்து காட்டுகின்றன

image_pdfPRINT

‘கோடுகளால் பேசியவன்’ நூல் அறிமுக விழாவில் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆனந்தி சூரியபிரகாசம்

கேலிச்சித்திர கலைஞர் மறைந்த ஊடகவியலாளர் அஸ்வின் சுதர்சனின் காட்டூன்களை ஆவணப்படுத்திய ‘கோடுகளால் பேசியவன்’ நூல் அறிமுக விழா லண்டன் கரோ பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது.

தமிழ் தகவல் நடுவதின் (TIC) ஏற்பாட்டில்  நடைபெற்ற மேற்படி நிகழ்வில், விசேட விருந்தினராக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் Paul Scully யும்

பிரதம விருந்தினராக சிரேஷ்ட ஊடகவியலாளரும் சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் இயக்குனருமான ஆனந்தி சூரியபிரகாசம் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

மங்கள விளக்கேற்றல் தமிழ் தாய் வாழ்த்து வரவேற்பு நடனம் என சிறப்புற ஆரம்பமா  இந்நிகழ்வில் முதலில் கேலிச்சித்திர கலைஞர்  அஸ்வினின் ஊடக பயணம் குறித்த  “கோடுகளால் பேசியவன்’ எனும் காணொளி ஒன்று திரையிடப்பட்டது.

தொடர்ந்து இந்நிகழ்விற்கான தனது ஆசியுரையினை அனுப்பி வைத்த வடமாகாண முதல்வர் சீ.வி. விக்னேஸ்வரின் ஆசியுரை தொகுப்பாளர் சத்தியமூர்த்தி சதீசனினால் வாசிக்கப்பட்டது.

பின்னர் சிறப்புரை ஆற்றிய பாராளுமன்ற உறுப்பினர் Paul Scully,  ‘காட்டூன்களிற்கு மொழி அவசியம் இல்லை’ என்ற அஸ்வினின் கோட்பாட்டை நிரூபிக்கும் வகையில் அவரின் காணொளியில் காண்பிக்க பட்ட அவரது காட்டூன்கள் குறித்த தனது வியப்பை வெளிப்படுத்தினார்.

இதனையடுத்து ‘கோடுகளால் பேசியவன்’ நூலினை   நாடாளுமன்ற உறுப்பினர் அறிமுகம் செய்து வைக்க பிரதம விருந்தினர் ஆனந்தி சூரிய பிரகாசம் பெற்றுக்கொண்டார்.

பின்னர் ஆய்வுரையாற்றிய சிறப்பு விருந்தினர் சிரேஷ்ட ஊடகவியலாளர்  இளையதம்பி தயானந்தன், ஊடகவியலாளர் அஸ்வின் தனது படைப்புக்களில் மொழியை ஒரு பிரதானமாக கொள்ளவில்லை. ஆனால் அவன் படைப்புகள் பேசுகின்றன என்பதை அவரது காட்டூன்கள் மட்டுமல்ல அவர் இயக்கிய வார்த்தைகளற்ற ‘கண்ணே என் கண்ணே என்ற குறும் படம் ஒன்றும் காட்டி நிற்கின்றது’ என கூறினார்.

அறிமுக உரையாற்றிய பிரதம விருந்தினர் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆனந்தி சூரிய பிரகாசம், அஸ்வின் காட்டூன்கள் மூலம் பேசவில்லை மாறாக கோவப்படுகிறான். சமூக அரசியல் சீர்கேடுகளில் அவனது கோபத்தை காட்டூன்களில் காட்டியுள்ளார் என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய சிறப்பு விருந்தினர்களான சகோதர மொழி சிரேஷ்ட ஊடகவியலாளர் சண்டன பண்டார மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவகுரு பிரேமானந்தன் ஆகிய இருவரும் உண்மையாக உழைக்கும் ஊடகவியலாளர்களை துரத்தும் சவால்கள் குறித்து பேசினர்.

இறுதியாக காட்டூனிஸ்ட் அஸ்வினின் சகோதரனும் ஊடகவியலாளருமான அல்வின் சுகிர்தன், அல்வினின் நினைவுகள் குறித்து உரையாறியதுடன் தொடர்ந்து  தமிழ் தகவல் நடுவதின் செயற்பாட்டாளர்களுக்கான சான்றிதழ்கள் வழங்களுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

‘கோடுகளால் பேசியவன்’ நூல் அறிமுகம்

image_pdfPRINT

ஊடகவியலாளர் மறைந்த கேலிச்சித்திரக் கலைஞர் அஸ்வின் சுதர்சனின் கேலிச்சித்திரங்களை ஆவணப்படுத்திய “கோடுகளால் பேசியவன்” நூல் பிரித்தனியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது .

தமிழ் தகவல் நடுவம் (TIC)  பிரித்தானியாவில் நடாத்தும் மேற்படி நூல்  அறிமுக விழா, நாளை சனிக்கிழமை 28 ஆம் திகதி  வெஸ்ட்மினிஸ்டர் ஹரோ பல்கலைக் கழகத்தில் (University of Westminster Harrow Campus, Watford Road ,Northwick Park, HA1 3TP ) பி.ப 14.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வின்  சிறப்பு  விருந்தினரான பிரித்தானிய நாடளுமன்ற உறுப்பினர் Paul Scully  நூலினை அறிமுகம் செய்துவைக்கவுள்ளதுடன் பிரதம விருந்தினராக சிரேஷ்ட ஊடகவியலாளரும் பி.பி.சி.யின் முன்னாள்  ஊடகவியலாளருமான திருமதி ஆனந்தி சூரியப்பிரகாசம் கலந்து கொள்ளவுள்ளார்.

அதேவேளை, சர்வதேச ஊகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறை சார்ந்த பலரும் இந்நிகழ்வில்  பங்கேற்கவுள்ளனர்.

தமிழ் பத்திரிகைத் துறையில் கார்ட்டூனுக்கான தனி முத்திரையை பதித்தது மட்டுமல்லாது அதில் நவீனத்துவத்தை புகுத்தி பத்திரிகைகளில் வெளிவந்த அஸ்வினின் கேலிச்சித்திரங்கள் அரசியல் முதல் சமூகம் வரை இன்றும் தீர்க்கதரிசனம் பேசுபனவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோத கரு கலைப்பு ; இளம் பெண்ணுக்கு பிணை

image_pdfPRINT

இளவாலை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத கருக்கலைப்பு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளம் பெண்ணை  பிணையில் விடுவிக்க நீதிவான் நீதிமன்றுக்கு உத்தரவிட்டது.

சட்டவிரோத கருக்கலைப்பு செய்த இளம் பெண் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று இளவாலைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார்,மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இன்று அறிக்கை தாக்கல் செய்தனர்.

குற்றஞ்சாட்டப்படும் இளம் பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதால் அவரை விசாரணை செய்யுமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு மல்லாகம் நீதிவான் அறிக்கையிட்டார்.

அதனடிப்படையில் யாழ்ப்பாணம் நீதிமன்ற பதில் நீதிவான் வி.ரி.சிவலிங்கம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்தார்.

“குற்றஞ்சாட்டப்படுபவர் திருமணம் முடிக்கவில்லை. சகோதரியின் கணவருடன் தவறான உறவு காரணமாக கர்ப்பவதியாகினார்.

இளம் பெண் 4 மாதங்களில் மாத்திரைகளை உள்கொண்டு சட்டவிரோதமாக கருக்கலைப்புச் செய்துள்ளார்.

வறுமைக்கோட்டுக்கு உள்பட்ட குடும்த்தைச் சேர்ந்தவராக இருப்பதால் அவருக்கு பிணை வழங்குவதில் ஆட்சேபனையில்லை” என்று இளவாலைப் பொலிஸார் பதில் நீதிவானிடம் சமர்ப்பணம் செய்தனர்.

விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் நீதிமன்ற பதில் நீதிவான் வி.ரி.சிவலிங்கம், சந்தேகநபரை பொலிஸ் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டதுடன், வழக்கை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முன்னெடுக்க பொலிஸாரை அறிவுறுத்தினார்.

சிறுப்பிட்டி இளைஞர்கள் படுகொலை; இராணுவத்தை காப்பாற்றும் கோரிக்கை நிராகரிப்பு

image_pdfPRINT

சிறுப்பிட்டி இளைஞர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கிலிருந்து இராணுவத்தினரைக் காப்பாற்றுவதற்கு அவர்கள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று வியாழன் நிராகரித்தது.

“கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கை முகத் தோற்றளவில் விசாரணை செய்து சாட்சிகளை ஒழுங்குபடுத்துவதே சுருக்கமுறையற்ற விசாரணையாகும். எனவே சுருக்க முறையற்ற விசாரணையை முன்னெடுத்து வழக்கை மேல் நீதிமன்றுக்கு பாரப்படுத்துவதே நீதிவான் நீதிமன்றின் கடமையாகும்.

இந்த வழக்கில் எதிரிகள் தரப்பால் முன்வைக்கப்பட்ட நிழற்பிரதி வாக்குமூலங்களை வைத்து சுருக்கமுறையற்ற விசாரணையை நடத்த முடியாது என்ற விண்ணப்பத்தை மன்று நிராகரிக்கின்றது.

இந்த வழக்கு மேல் நீதிமன்றுக்கு பாரப்படுத்தப்பட்டப்படும். சட்ட மா அதிபர் திணைக்களத்தால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் போது, எதிரிகள் தரப்பு தமது ஆட்சேபனையை மேல் நீதிமன்றில் முன்வைக்க முடியும்” என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் கட்டளை வழங்கினார்.

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டிப் பகுதியில் இளைஞர்கள் இருவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தினரின் வழக்கு நேற்று யாழ்ப்பாண நீதிமன்றில் நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் சுருக்கமுறையற்ற விசாரணைக்காக வந்தது.

இதன்போது மன்றில் சந்தேகநபர்களான 5 இராணுவத்தினரும் முன்னிலையாகினர். வழக்கின் 3ஆவது சந்தேகநபரான இராணுவச் சிப்பாய் உயிரிழந்துவிட்டார்.

வழக்குத் தொடுனர் தரப்பில் சட்ட மா அதிபர் சார்பில் அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் முன்னிலையானார். இராணுவத்தினர் சார்பில் தென்னிலங்கை சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.

“இராணுவத்தினருக்கு எதிரான சாட்சிகள் பொலிஸில் வழங்கிய வாக்குமூலங்களின் உண்மைப் பிரதிகள் இல்லை. அவற்றின் நிழல் பிரதிகளை வைத்து வழக்கை நடத்த முடியாது. அதனால் இந்த வழக்கிலிருந்து இராணுவத்தினர் ஐவரையும் விடுவிக்கவேண்டும்” என்று சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கடந்த தவணையின் போது மன்றில் ஆட்சேபனை வெளியிட்டார்.

“சாட்சி ஒருவர் இல்லாத போதுதான் அவர் வழங்கிய பொலிஸ் வாக்குமூலத்தின் உண்மைப் பிரதி இருக்கவேண்டும். ஆனால் இந்த வழக்கில் சாட்சிகள் மன்றில் தோன்றி சாட்சியமளிப்பதால், அவர்களின் பொலிஸ் வாக்குமூலத்தின் நிழல் பிரதியை முன்வைத்தால் போதும்” என்று அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் மன்றுரைத்திருந்தார்.

இரு தரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான், வழக்கை நிழல் பிரதியுடன் தொடர்வது தொடர்பில் எதிரிகள் தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனை குறித்த மன்றின் கட்டளை  வழங்கப்படும் அறிவித்திருந்தார்.

அதனடிப்படையில் எதிரிகள் தரப்பு விண்ணப்பம் நேற்று நீதிவான் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது.

வழக்கின் சுருக்கமுறையற்ற விசாரணைகள் வரும் செப்ரெம்பர். 2ஆம் திகதி இடம்பெறும் என்றும் நீதிமன்று தவணையிட்டது.

பின்னணி

1997ஆம் ஆண்டு ஒக்டோபர் 28ஆம் திகதி இளைஞர்கள் இருவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இதனுடன் தொடர்புபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட 16 இராணுவத்தினரை அச்சுவேலி பொலிஸார் கைது செய்தனர்.

எனினும் 1998 ஆம் ஆண்டு நீதிவான் நீதிமன்றம் குறித்த நபர்களுக்கு பிணை வழங்கியது.

இதனைத்தொடர்ந்து கிடப்பில் போடப்பட்ட வழக்கு 2016ஆம் சட்டமா அதிபரால் விசாரணைக்கு கொண்டுவரப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட 16 இராணுவத்தினரில் இருவர் போரில் உயிரிழந்தனர். இந்த நிலையில் 14 இராணுவத்தினர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

எனினும் அவர்களில் 9 பேரை வழக்கிலிருந்து விடுவிக்க சட்ட மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கினார். ஏனைய 5 சந்தேகநபர்களுக்கும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் பிணை வழங்கியது.

இந்தச் சம்பவம் தொடர்பில் 1997ஆம் ஆண்டே விசாரணைகளை மேற்கொண்டிருந்த இராணுவப் பொலிஸார், கொல்லப்பட்ட இளைஞர்களில் ஒருவரின் சங்கிலி மற்றும் கைக்கடிகாரம் என்பவற்றை முகாமுக்குள் இருந்து மீட்டிருந்தனர்.

வடக்கில் சிங்களவர்களுக்கு நியமனங்கள் நிறுத்தப்பட வேண்டும்- சிவாஜிலிங்கம்

image_pdfPRINT

யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணத்தில் புதிதாக சிங்களவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படுவதை நிறுத்த வேண்டுமென வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் யாழ் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இணைத் தலைவர்களான முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் விஐயகலா மகேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது துறை ரீதியான முன்னேற்ற மீளாய்வின் போது விலை மதிப்பீட்டுத் திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டது.

அத் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பில் உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்களால் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இதனையடுத்து விலை மதிப்பீட்டுத் திணைக்களம் உரிய முறையில் சிறப்பாகச செயற்படுவதற்கு விசேட அமைச்சரவை அனுமதியைப் பெற்று ஆளணிகளை உள்வாங்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

அவ்வாறு ஆளணியை உள்வாங்குகின்ற போது அந்த ஆளணி குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டுமென சிவாஜிலிங்கத்தால் சுட்டிக்காட்டப்பட்டது.

அதாவது தற்போது யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணம் முழுவதும் மட்டுமல்லாமல் கிழக்கு மாகாணத்திலும் புதிதாக சிங்களவர்களுக்கே நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு ஒவ்வொரு இடத்திலும் எல்லா வேலைகளிற்கும் சிங்களவர்கள் வருகின்ற நிலை தடுக்கப்பட்டு தமிழர்களையே உள்வாங்க வேண்டும். தமிழர்களையே நியமிக்கவே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்பு யூலை நினைவுதினம்

image_pdfPRINT

கறுப்பு யூலையின் 35வது ஆண்டு நினைவு நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று  நடைபெற்றது.

உனர்வு பூர்வமாக நடைபெற்ற நிகழ்வில் சுமார் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏத்தி அஞ்சலி செலுத்தினர்.

அதேவேளை அன்று தமிழர்கள் பட்ட துன்பத்தை பிரதி பலிக்கும் ஆவணப்படம் ஒன்றும் அங்கு காண்பிக்கப்பட்டது.

செம்மணியில் மனித எழும்புக்கூட்டு எச்சங்கள் ; விசாரணைகளில் அசமந்தம் காட்டும் பொலிஸார்

image_pdfPRINT

செம்மணியில் மனித எழும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதில் பொலிசார் அசமந்தமாக செயற்படுவதாக குற்றசாட்டுக்கள் எழுந்துள்ளன. 

செம்மணி பகுதியில் நீர் தாங்கி அமைப்பதற்காக மண்ணினை அகழ்ந்த போது , கடந்த வெள்ளிக்கிழமை மாலை மனித எழும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டன.

அது தொடர்பில் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதனை அடுத்து கடந்த சனிக்கிழமை மாலை யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் சி.சதிஸ்தரன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் , அகழ்ந்து எடுத்து சென்ற மண்ணினையும் பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் , அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுகிழமை யாழ்.போதனா வைத்திய சாலை சட்டவைத்திய அதிகாரி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று இருந்தார்.

அதன் போது யாழ்.பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை.

சட்டவைத்திய அதிகாரி க.மயூரதன் நேற்றுகாலை 11 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்ற போது , தடயவியல் பொலிசார் மற்றும் குற்றத்தடுப்பு பொலிசார் மாத்திரமே அங்கு நின்றனர். பொறுப்பதிகாரிகள் எவரும் சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை .

அதேவேளை அங்கு அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்கு உரிய உபகரணங்கள் , ஏற்பாடுகள் எவையும் காணப்படவில்லை. அதனால் அகழ்வு பணிகளை முன்னெடுக்க வந்திருந்த சட்ட வைத்திய அதிகாரியின் தலைமையிலான குழுவினர் அகழ்வு பணிகளை ஒத்தி வைத்து சென்றனர்.

நீதிமன்றின் ஊடாக குறித்த அகழ்வு பணிகள் நேர்த்தியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என பலவேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழில்.திடீரென மயங்கி விழுந்த மூவர் உயிரிழப்பு; வெவேறு இடங்களில் சம்பவம்

image_pdfPRINT

யாழில்.திடீரென மயங்கி விழுந்த மூவர் உயிரிழந்துள்ளனர். கொக்குவில் , பலாலி , சங்கானை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.

கொக்குவில் கிழக்கை சேர்ந்த கார்த்திகேசு கதிர்காமத்தம்பி (வயது 60) என்பவர் வீட்டில் பாக்கு இடித்துக்கொண்டு இருந்த வேளை திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

உறவினர்கள் அவரை உடனே யாழ்.போதனா வைத்திய சாலைக்கு எடுத்து சென்றனர். இருந்த போதிலும் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.

பலாலியை சேர்ந்த குணசீலன் குயின்சன் (வயது 30) எனும் இளைஞன் வீட்டில் நேற்றுக்காலை பிட்டு சாப்பிட்டுக்கொண்டு இருந்த வேளை திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார்.

அவரை உடனடியாக உறவினர்கள் தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலையில் சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

மன்னார் பெரிய தம்பம் பகுதியை சேர்ந்த இராமன் இராசதுரை (வயது 60) என்பவர் சங்கானை பகுதியில் மயங்கி விழுந்த நிலையில் சங்கானை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

மன்னாரை சேர்ந்த இவர் சங்கானையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். சங்கானை தொட்டிலடி பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி நின்று விட்டு மீண்டும் மன்னார் செல்வதற்காக பேருந்துக்காக தொட்டிலடி பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.

அதன் போது திடீரென மயக்கி விழுந்துள்ளார். மயங்கி விழுந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சங்கானை வைத்திய சாலையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்தார்

யாழ். வைத்தியசாலையில் பெண் உயிரிழப்பு

image_pdfPRINT

யாழ்.போதனா வைத்திய சாலையில் குழந்தை பிரசவித்த பெண் உயிரிழந்துள்ளார்.

காரைநகர் களபூமி பகுதியை சேர்ந்த இந்திரன் சிவகலா (வயது 21) என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.

குறித்த பெண் பிரசவத்திற்காக கடந்த 16ஆம் திகதி காரைநகர் வைத்திய சாலையில் அனுமதிகப்பட்டார். பின்னர் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டார்.

அந்நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சத்திர சிகிச்சை மூலம் ஆண் குழந்தையை கடந்த சனிக்கிழமை பிரசவித்தார்.

குழந்தை பிரசவித்து ஒரு சில மணி நேரத்தில் தாயார் உயிரிழந்தார். சத்திர சிகிச்சையின் போது ஏற்பட்ட உயர் குருதி அமுக்கம் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டது என விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

இறப்பு தொடர்பான விசாரணையை யாழ்.போதனா வைத்திய சாலை திடீர்மரண விசாரணை அதிகாரி ந,பிரேம்குமார் மேற்கொண்டு இருந்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் சட்டரீதியானது- சுமந்திரன்

image_pdfPRINT

காணாமல்போனவர்கள் அலுவலகத்தின் அமர்வுகளில், அவர்களின் பெருமளவில் பங்கெடுத்திருக்கின்றார்கள். அதேபோல் சில உறவினர்கள் அதனை எதிர்த்து போராட்டங்களை நடாத்தியுள்ளதுடன், பகிஸ்கரிப்பும் செய்துள்ளார்கள்.  அந்த சிலருடைய மன நிலைப்பாட்டை நாங்கள் அறிந்திருக்கின்றோம். ஆனாலும் கூட தற்போதிருக்கும் நிலையில் நடைமுறைச்சாத்தியமானதும், சட்டரீதியானதுமான முறையாக காணாமல் ஆக் கப்பட்டோருக்கான அலுவலகமே இருக்கின்றது. என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

காணாமல்போனவர்கள் அலுவலகம் குறித்து நேற்று சனிக்கிழமை சாவகச்சேரியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

 காணாமல்போனவர்கள் தொடர்பான அலுவலகத்தினை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சிலர் சில இடங்களில் பகிஷ்கரித்திருக்கின்றார்கள். ஆனாலும் பெருமளவு உறவுகள் அலுவலகத்தின் அமர்வுகளில் கலந்து கொண்டிருக்கின்றார்கள். பகிஷ்கரிக்கிறவர்களின் மனநிலையை நாங்கள் நன்றாகவே உணர்ந்து கொள்கிறோம். ஆனாலும் இப்போதுள்ள நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தை

கையாளுவதற்கு இந்த அலுவலகமே நடைமுறைச்சாத்தியமானது.

காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கேட்பது போல் பட்டியல் கொடுப்பதோ? சில இடங்களை காண்பிப்பதோ சாத்தியமற்றது.

அதனை நாங்கள் கேட்டாலும் கூட உண்மையை தருவார்கள் என்றோ, உண்மையான இடங்களை காண்பிப்பார்கள் என்றோ எந்த உத்தரவாதமும் இல்லை.

ஆகவே நடைமுறைச்சாத்தியமானதும், சட்டபூர்வமானதுமான இந்த அலுவலகமே சிறந்தது. என தெரிவித்தார்.

அதேவேளை வடமாகாண அமைச்சர் சபை தொடர்பான தற்போதைய நிலைப்பாடுகள் குறித்து கேட்ட போது , 

வடமாகாண அமைச்சர் சபை குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் மிக தெளிவாக விடயங்க ளை கூறியுள்ளது. அதில் யாருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளது? யாருக் கு அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் உள்ளது? என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் முதலமைச்சருக்கே அந்த அதிகாரங்கள் உள்ளது. இது முதலமைச்சருக்கு தெரியாமல் இல்லை. ஆனால் தமக்கு தெரியாததுபோல் பாசாங்கு செய்வதாலேயே இவ்வளவு பிரச்சினைகள் உருவாகியிருக்கின்றன.

எனவே மேன்முறையீட்டு நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருக்கும் விடயங்களை அவ்வாறே நடைமுறைப்படுத்தினால் சகல பிரச்சினைகளும் தீர்க்கப்படும். என்றார்.

 யாழ்.குடாநாட்டில் தற்போது ஏற்பட்டு உள்ள சட்டம் ஒழுங்கு சீர்குலைவு தொடர்பாக கேட்ட போது , 

இவ்வாறான சம்பவங்களை கட்டுப்படுத்த மாகாணசபைக்கு சட்டம் ஒழுங்கு அதிகாரங்கள் பூரணமாக பகிரப்படவேண்டும். மேலும் இந்த பிரதேசத்தில் பேசப்படும் மொழியை தமது சொந்த மொழியாக கொண்டவர்கள் பொலிஸ் சேவையில் ஈடுபடவேண்டும்.

அவ்வாறு இருந்தால் மட்டுமே குற்றங்களை குறைக்க இயலும். இல்லையேல் குற்றங்களை குறைப்பது கஸ்டமானதொரு விடயமாகும். ஆனால் அவ்வாறு எல்லாம் நடப்பதற்காக பார்த்துக் கொண்டிருக்க இயலாது.

சட்டம் ஒழுங்கு மத்திய அரசாங்கத்தின் கைகளில் இருக்கும் நிலையில் அவர்கள் அதனை சரியாக நடைமுறைப்படுத்தவேண்டும். இந்த விடயம் தொடர்பாக நாங்கள் தொடர்ச்சியா க அழுத்தங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

அதனாலேயே சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் இங்கே வந்தார்கள். ஆனாலும் ஒன்றும் முடிந்தபாடில்லை. ஆகவே இந்த விடயம் தொடர்பாக தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுப்போம். என தெரிவித்தார்.

தென்னிலங்கை மீனவரின் அத்துமீறலை தட்டிக்கேட்டவரின் படகு தீக்கிரை

image_pdfPRINT

வடமராட்சி கிழக்கு  பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடித்த தென்னிலங்கை மீனவர்களை சுற்றி வளைத்து பிடித்த மீனவர்களில் ஒருவரின் படகு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தீக்கிரை ஆக்கப்பட்டு உள்ளது.

வடமராட்சி கிழக்கு முள்ளியானை சேர்ந்த செபமாலை சுஜீபன் என்பரின் படகே தீக்கிரை ஆக்கப்பட்டு உள்ளது.

கடந்த 20ஆம் திகதி முள்ளியான் கடற்பகுதியில் சட்டவிரோதமான முறையில் தென்னிலங்கையை சேர்ந்த மீனவர்கள் கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு இருந்தனர்.

அவர்களை முள்ளியானை சேர்ந்த மீனவர்கள் சுற்றி வளைத்து பிடித்து கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்திருந்தனர்.

இந்நிலையில் அன்றைய தினம் தென்னிலங்கை மீனவர்களை பிடிப்பதற்கு உதவிய சுஜீபனின் 4 இலட்ச ரூபாய் மதிப்புள்ள படகு மற்றும் படகுக்கான வெளியிணைப்பு இயந்திரம் ஆகியவை இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளை தீக்கிரை ஆக்கப்பட்டு உள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

error: Content is protected !!