SHARE

யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணத்தில் புதிதாக சிங்களவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படுவதை நிறுத்த வேண்டுமென வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் யாழ் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இணைத் தலைவர்களான முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் விஐயகலா மகேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது துறை ரீதியான முன்னேற்ற மீளாய்வின் போது விலை மதிப்பீட்டுத் திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டது.

அத் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பில் உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்களால் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இதனையடுத்து விலை மதிப்பீட்டுத் திணைக்களம் உரிய முறையில் சிறப்பாகச செயற்படுவதற்கு விசேட அமைச்சரவை அனுமதியைப் பெற்று ஆளணிகளை உள்வாங்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

அவ்வாறு ஆளணியை உள்வாங்குகின்ற போது அந்த ஆளணி குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டுமென சிவாஜிலிங்கத்தால் சுட்டிக்காட்டப்பட்டது.

அதாவது தற்போது யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணம் முழுவதும் மட்டுமல்லாமல் கிழக்கு மாகாணத்திலும் புதிதாக சிங்களவர்களுக்கே நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு ஒவ்வொரு இடத்திலும் எல்லா வேலைகளிற்கும் சிங்களவர்கள் வருகின்ற நிலை தடுக்கப்பட்டு தமிழர்களையே உள்வாங்க வேண்டும். தமிழர்களையே நியமிக்கவே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.

Print Friendly, PDF & Email