காணிகளுக்கான ஆவணங்களை வழங்குமாறு கோரி முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்!
தமது காணிகளுக்கான முதல்தர ஆவணத்தை வழங்குமாறு கோரி முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வன்னிவிளான்குளம் மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாந்தை கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக குறித்த போராட்டம் இன்று இடம்பெற்றது.
பாண்டியன்குளம் சந்தியிலிருந்து பேரணியாக புறப்பட்ட கிராம மக்கள் பிரதேச செயலக வாசலில் நின்றவாறு கோசங்களை எழுப்பினர்.
கடந்த 2014ம் ஆண்டு மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தால் துவரங்குளம் வயல் காணிக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை உறுதிப்படுத்தி தமக்கு வழங்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
குறித்த பகுதியில் வசிக்கும் 58 விவசாயிகளுக்கு பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட காணிகளின் உறுதியை வழங்குமாறு கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் உதவிப் பிரதேச செயலாளரிடம் போராட்டத்தில் ஈடுபட்ட பிரதேச மக்களால் மகஜரும் கையளிக்கப்பட்டது.
இதேவேளை இது தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசென்று பிரச்சினைக்கான தீர்வினை பெற்று தருவதாக கூறியதை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.
அரசாங்கத்திடம் நிலையான பொருளாதார கொள்கையில்லை
இலங்கை அரசாங்கத்திடம் நிலையான பொருளாதார கொள்கையில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
தர்மபுரத்திலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மக்கள் தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில் எரிபொருள் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தினால் தங்களது வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்பொழுது அரசாங்கம் IMF இன் இரண்டாம் கட்ட நிதியினை பெறுவதற்காக நாட்டுமக்களுக்கு பெரும் சுமையைகொடுத்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவேந்தல்
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ். ஊடக அமையத்தில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.
யாழ். ஊடக அமையத்தின் தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.
போர் சூழலில் யாழில் இருந்து , துணிவாக ஊடகப்பணியாற்றியவர் மயில்வாகனம் நிமலராஜன். பி.பி.சி.யின் தமிழ் மற்றும் சிங்கள சேவை , வீரகேசரி , ராவய போன்ற ஊடகங்களில் பணியாற்றி இருந்தார்.
இந்நிலையில் கடந்த 2000ஆம் அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகள் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு, அவரது வீட்டின் மீதும் கைக் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகள் குறித்த கருத்து : வழக்கில் விஜயகலா விடுதலை!
விடுதலைப் புலிகள் மீளுருவாக்கம் குறித்த வழக்கில் இருந்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை விடுதலை செய்யது கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதே தமது முக்கிய நோக்கம் என அவர் தெரிவித்த கருத்து தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற அரச நிகழ்வொன்றில் சிறுவர் மற்றும் மகளிர் விவகார இரஜாங்க அமைச்சராக இருந்த விஜயகலா மகேஸ்வரன் இவ்வாறு கூறியிருந்தார்.
அவரது உரை இனங்களுக்கு இடையிலான ஓற்றுமையை சீர்குலைக்கும் வகையில் அமைந்தது என தெரிவித்து அன்றயதினமே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் குறித்த வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
பிணையில் விடுவிக்கப்பட்ட விஜயகலா மகேஸ்வரனை சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபருக்கு எதிரான வழக்கை தொடர்வதற்கு போதிய சாட்சியங்கள் இல்லை என சட்டமா அதிபர் அறிவுறுத்தியதாக பொலிஸார் முன்னதாக நீதிமன்றில் கூறியிருந்தனர்.
வடக்கில் சுமார் 9543 ஏக்கர் காணிகள் படையினரால் அபகரிப்பு
வடக்கில் படையினரால் அபகரிக்கப்பட்டுள்ள சுமார் 9543 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றையதினம் (18) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் குறித்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.
இதன்போது அவர் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் முப்படைகள், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பில், தயாரிக்கப்பட்ட விவரண அறிக்கையொன்றையும் சபாபீடத்திற்கு சமர்ப்பித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது கிளிநொச்சி மாவட்டத்தில் 4378.8 ஏக்கரும், யாழ் மாவட்டத்தில் 2433.79 ஏக்கரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 1578.27 ஏக்கரும், வவுனியா மாவட்டத்தில் 1021.55 ஏக்கரும், மன்னார் மாவட்டத்தில் 130.77 ஏக்கருமாக வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் 9543.18 ஏக்கர் காணிகள் படையினரால் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை சமர்ப்பிக்கப்போவதில்லை – சபாநாயகர்
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று இடமபெற்றுவரும் நாடாளுமன்ற அமர்விலேயே மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.
நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இந்த சட்டமூலம் உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும், அது முன்வைக்கப்படாது என மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை எதிர்த்து 45 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
சவேந்திர சில்வாவை பிரித்தானியா தடைசெய்ய கோரி தொடரும் இராஐதந்திர சந்திப்புக்கள்
பராளுமன்ற உறுப்பினர் பவுலா பார்கர் இடம் கோரிக்கை

இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல்சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்தகுற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடைசெய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, பிரித்தானியாவின் வேவர்ட்ரீ, லிவர்பூல் (Wavertree, Liverpool ) பகுதி பாராளுமன்ற உறுப்பினர் பவுலா பார்கரின் எம்.பி (Hon. Paula Barker MP) அவர்களின் பராளுமன்ற உதவியாளருடன் இராஜதந்திர சந்திப்பு ஒன்று செவ்வாய்கிழமை (17/11/2023) மதியம் 13.00 மணியளவில் மெய்நிகர் வழியாக இடம்பெற்றுள்ளது.
சட்ட ஆலோசகரும் மனித உரிமைசெயற்பாட்டாளுமான திரு கீத் குலசேகரம் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த முக்கிய சந்திப்பில், தொழில்கட்சிக்கான தமிழர்கள் (Tamils For Labour) அமைப்பின் தலைவர் திரு சென் கந்தையா, மற்றும் இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமாக சர்வதேச மையத்தின் (ICPPG) சார்பில் திரு. றோய் ஐக்ஷான் கலந்துகொண்டார். அத்துடன் இனப்படுகொலையின் நேரடி சாட்சியங்கள் மற்றும் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களான கணேசலிங்கம் எபினேசர், மாரிமுத்து சுஜித்தா, குணசீலன் கோகுலன், அருணோதயன் சுப்ரமணியம், மற்றும் அபிந்தன் சுப்ரமணியம் கலந்து கொண்டு, தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள்.
கீத் குலசேகரம் அவர்கள் தனது தலைமை உரையின் போது, இலங்கையில் இடம்பெறும் இனப்படுகொலைக்கு வரலாற்று ரீதியாக பிரித்தானியாவே பொறுப்பு என்பதை விளக்கி, தமிழ்மக்களுக்கு நீதி வழங்க வேண்டிய கடமைப்பாட்டையும் எடுத்துரைத்தார். ITJP மற்றும் ICPPG ஆகிய அமைப்புக்கள் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு (FCDO) போதுமான ஆதாரங்களை சமர்பித்த போதும் இன்னும் உரிய நடவடிக்கை எடுக்க தவறியிருப்பதனை சுட்டிக்காட்டினார். அத்துடன் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் மட்டுமன்றி, தற்போது இலங்கையில் தொடரும் ஆள்கடத்தல் மற்றும் சித்திரவதைகளும் சவேந்திர சில்வாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுத படைகளே மேற்கொண்டுவருவதால் அதற்கும் சவேந்திர சில்வாவே பொறுப்பு என்றும், சந்திப்பில் கலந்துகொண்ட சித்திரவதைக்குள்ளானவர்கள் இதற்கு நேரடிசாட்சி என்றும்தெரிவித்தார்.
சவேந்திர சில்வா யுத்தகுற்றங்களில் ஈடுபட்டிருப்பதை ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் குறிப்படப்பட்டிருப்பதையும், அவர்மீது ஏற்கனவே அமெரிக்கா, கனடா பயணத்தடை விதித்துள்ளதையும் எடுத்துக்காட்டிய அவர், அமெரிக்கா, கனடாவின் வழியை பின்பற்றி பிரித்தானியாவும் தடை விதிக்கவேண்டும் என்று கோரி பிரித்தானிய புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் என்பதையும் விவரித்தார். தொடர்ந்து உரையாற்றிய திரு சென் கந்தையா அவர்கள், இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடைசெய்வதற்கு இதுவரை 50ற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அனுப்பிய கோரிக்கைகளுக்கு சரியான பதிலை FCDO தராதது வருத்தத்தை தருவதுடன், தற்போதைய பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கு எதிராக தடை விதிக்க தயக்கம் காண்பிப்பது ஏன் என்று வினவினார்.
பிரித்தானிய எதிர்கட்சி தலைவர் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரனை செய்ய வேண்டும் என கூறியதை வரவேற்பதாகவும் அதேபோல் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையினை பிரித்தானியா அங்கீகரிக்க வேண்டும் என வழியுறுத்தினார். கருத்துக்களை உள்வாங்கிய பாராளுமன்ற உறுப்பினரின் உதவியாளர் சந்தேகங்களை கேட்டு தெளிவடைந்துடன், ஈழத் தமிழர்களின் கோரிக்கையையும் ஆதங்கத்தையும், தமது பகுதியில் வாழும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மதிப்பிற்குரிய பவுலா பார்கர் எம்.பி அவர்கள் பிரித்தானிய அரசிற்கு எடுத்துரைக்க தான் உதவுவதாகவும், FCDO இதுவரை நடவடிக்கை எடுக்காமைக்கு காரணத்தை கேட்டு கடிதம் அனுப்புவதாகவும் வாக்களித்தார்.
அத்துடன் திரு. கீத் குலசேகரம் கேட்டுக்கொண்டபடி தமிழருக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழு (APPGT) மற்றும் மக்நெட்ஸ்கை தடைகளுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற குழுக்களில் (APPG for Magnitsky Sanctions) இணையவும், FCDO விற்கு தமிழ்மக்கள் சார்பில் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடைசெய்யக் கோரி தன்னாலான வகையில் அழுத்தம் கொடுப்பதுயும் மதிப்பிற்குரியி பவுலா பார்கர் அவர்களுக்கு எடுப்பதுரைப்பதாகவம் வாக்களித்தார்.


யாழ்.பல்கலையில் உள்ள தூபி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக அனுமதி பெறப்படாமல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி அமைக்கப்பட்டுள்ளது என அரச உயர்மட்டங்களுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதனடிப்படையில் ஜனாதிபதி செயலகம், பொலிஸ் திணைக்களம், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஆகியவற்றுக்கு யாழ். பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் விரிவுரையாளர் ஒருவரிடமிருந்தும், தனி ஆள்கள் இருவரிடமிருந்தும் அனுப்பி வைக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கமைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில் நிதி கையாளுகை மற்றும் அனுமதிகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருப்பதாக அறியவருகிறது.
குருந்தூர் மலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட அதிகாரிகள்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் உள்ள குருந்தூர்மலைக்கு இன்று (17) புத்தசாசன அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட திணைக்கள உயர் அதிகாரிகள் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது குருந்தூர்குளம் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினால் எல்லைப்படுத்தப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
கடந்த மாத இறுதியில் குருந்தி ராஜமஹா விகாரை அமைந்துள்ள தொல்பொருள் பகுதிக்கு சொந்தமில்லாத காணியில் இருந்து 3 ஏக்கர் காணியை ஒதுக்குமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன முன்மொழிந்திருந்தார்.
அத்துடன் பௌத்த விகாரை மற்றும் இந்து ஆலயம் மற்றும் பொது வசதிகளுக்காகவும் அமைப்பதற்கும் இந்த காணியை ஒதுக்குமாறு, இளைஞர் பாரம்பரியம் மற்றும் நவீன குடிமக்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு முன்மொழிந்திருந்தார்.
இந்நிலையிலேயே இன்று அதிகாரிகள் குருந்தூர் மலைக்கு கள விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.
நாகர்கோவில் மாணவர்கள் படுகொலை நினைவேந்தல் கரப்பந்தாட்டம்
சிறிலங்கா இராணுவத்தின் புக்காரா விமானக் குண்டுவீச்சில் கொல்லப்பட்ட யாழ். நாகர்கோவில் மகா வித்தியாலய மாணவர்கள் நினைவாக பிரித்தானியாவில் நேற்றையதினம் கரப்பந்தாட்டப்போட்டி ஒன்று நடாத்தப்பட்டது.
1995 செப்டெம்பர் 22 அன்று சிறிலங்கா இராணுவத்தின் புக்காரா விமானம் யாழ். நாகர்கோவில் மகா வித்தியாலயம் மீது மூர்க்கத்தனமான குண்டு வீச்சை மேற்கொண்டு 21 மாணவர்களை படுகொலை செய்தது.
இந்நிலையிலேயே, குறித்த இனப்படுகொலையை நினைவுகூறும் வகையிலும் கொல்லப்பட்ட மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் மேற்படி உள்ளக அரங்கு கரப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இதில் கொல்லப்பட்ட மாணவர்களின் திருவுருவப்படங்களிற்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
படங்கள்- அனுசன்





எங்களது உயிருக்கு உத்தரவாதம் இல்லை- மயிலத்தமடு விவசாயிகள்
”தமது உயிருக்கு உத்தரவாதம் இல்லை” என மயிலத்தமடு,மாதவனை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு சித்தாண்டி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக 32வது நாளாக இன்றைய தினமும் மயிலத்தமடு,மாதவனை பண்ணையாளர்கள் தமது சுழற்சிமுறையிலான போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
இப்போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில் ”ஜனாதிபதி தமது மேய்ச்சல் தரை பிரச்சினை குறித்து முன்வைத்துள்ள தீர்மானத்தினை வரவேற்கின்றோம்.
அவருக்கு கால்நடை பண்ணையாளர்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கின்றோம்.எனினும் ஜனாதிபதி முன்வைத்துள்ள இந்த பிரச்சினைக்கான தீர்வினை நடைமுறைப்படுத்தப்படும்போது நாங்கள் அங்கு செல்லமுடியும். நேற்று ஜனாதிபதி தீர்வினை முன்வைத்துள்ள அதேநேரம் இன்றைய தினம் மேய்ச்சல் தரைப்பகுதியில் உழவு இயந்திரங்கள் கொண்டு மேய்ச்சல் தரை காணிகள் விதைப்பு நடவடிக்கைகளுக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அவர்களை அங்கிருந்து அகற்றாமல் நாங்கள் செல்வோமானால் அது எங்களது உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலைமையினையே ஏற்படுத்தும்.
எங்களுக்கு இன்று இருக்கும் ஒரேயொரு நம்பிக்கை ஜனாதிபதி மட்டுமே அவரால் மட்டுமே எமது பிரச்சினைக்கான தீர்வினை முன்வைக்கமுடியும். நாங்கள் இந்த நாட்டில் வாழும் இந்த நாட்டின் பூர்வீக மக்கள் எங்களுக்கான ஒரு தொழிலைக்கூட எங்களது நிலத்தில் செய்யமுடியாத நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எமது உறவுகள் மேய்ச்சல் தரைக்கு செல்லும்போது அவர் வீட்டுக்கும் வரும் வரையில் நாங்கள் எங்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருக்கின்றோம்” இவ்வாறு தெரிவித்துள்ளனர்.












