SHARE

”தமது உயிருக்கு உத்தரவாதம் இல்லை” என மயிலத்தமடு,மாதவனை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு சித்தாண்டி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக 32வது நாளாக இன்றைய தினமும் மயிலத்தமடு,மாதவனை பண்ணையாளர்கள் தமது சுழற்சிமுறையிலான போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

இப்போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில் ”ஜனாதிபதி தமது மேய்ச்சல் தரை பிரச்சினை குறித்து முன்வைத்துள்ள தீர்மானத்தினை வரவேற்கின்றோம்.

அவருக்கு கால்நடை பண்ணையாளர்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கின்றோம்.எனினும் ஜனாதிபதி முன்வைத்துள்ள இந்த பிரச்சினைக்கான தீர்வினை நடைமுறைப்படுத்தப்படும்போது நாங்கள் அங்கு செல்லமுடியும். நேற்று ஜனாதிபதி தீர்வினை முன்வைத்துள்ள அதேநேரம் இன்றைய தினம் மேய்ச்சல் தரைப்பகுதியில் உழவு இயந்திரங்கள் கொண்டு மேய்ச்சல் தரை காணிகள் விதைப்பு நடவடிக்கைகளுக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அவர்களை அங்கிருந்து அகற்றாமல் நாங்கள் செல்வோமானால் அது எங்களது உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலைமையினையே ஏற்படுத்தும்.

எங்களுக்கு இன்று இருக்கும் ஒரேயொரு நம்பிக்கை ஜனாதிபதி மட்டுமே அவரால் மட்டுமே எமது பிரச்சினைக்கான தீர்வினை முன்வைக்கமுடியும். நாங்கள் இந்த நாட்டில் வாழும் இந்த நாட்டின் பூர்வீக மக்கள் எங்களுக்கான ஒரு தொழிலைக்கூட எங்களது நிலத்தில் செய்யமுடியாத நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எமது உறவுகள்  மேய்ச்சல் தரைக்கு செல்லும்போது அவர் வீட்டுக்கும் வரும் வரையில் நாங்கள் எங்கள் உயிரைக்  கையில் பிடித்துக்கொண்டிருக்கின்றோம்” இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Print Friendly, PDF & Email