தமிழீழ சுயநிர்ணய அமைப்பினரால் பிரதமர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது

தமிழர் தாயக நிலப்பரப்பில் ஸ்ரீலங்கா ராணுவப் பயங்கரவாதத்தால் தொடர்ச்சியாக எம் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்ற பேரவலம் குறித்தும், அரச படைகளால் ஏற்கனவே நிகழ்த்தப்பட்டு தற்போது தொடர்ச்சியாக மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுக்கொண்டிருக்கும் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பிலும் கரிசனை எடுத்து, ஸ்ரீலங்கா பேரினவாத அரசின் மீது தமது ராஜதந்திர ரீதியிலான அழுத்தங்களை பிரித்தானிய அரசாங்கம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனு ஒன்றை எமது “தமிழீழ சுயநிர்ணய அமைப்பு” 15/08/2025 வெள்ளிக்கிழமை பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தில் கையளித்தது.
பல தசாப்தங்களாக தமிழர் தாயகத்திலும், ஸ்ரீலங்காவின் தலைநகரிலும் எம் மக்கள்மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கும், துன்புறுத்தல்களுக்கும், பாலியல் வன்கொடுமைகளுக்கும் எதிரான விசாரணைகளுக்காக இதுவரை சர்வதேச நீதிப்பொறிமுறை ஒன்று உருவாக்கப்படவில்லை. அதேவேளை, தமிழர்கள் மீதான வன்கொடுமையின் ‘கறுப்பு ஜூலை’ என்று நினைவுகூரப்படுகின்ற காலப்பகுதியின் நீட்சியையும், எதிர்வரும் ‘சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாள்’ பேரெழுச்சியையும் கருத்தில்கொண்டு இந்தக் காலப்பகுதியில் பிரித்தானியப் பிரதமருக்கான மனு கையளிப்பினை எமது அமைப்பு மேற்கொண்டது.
பிரித்தானியாவின் தற்போதைய ஆளும் கட்சியான லேபர் அரசாங்கமானது தமது தேர்தல் வாக்குறுதிகளில் மிக முக்கியமான ஒன்றாக, எம் தமிழர் தாயக நிலப்பரப்பில் எம் மக்கள் மீது ஸ்ரீலங்கா பௌத்த பேரினவாத அரசபடைகளால் நிகழ்த்தப்பட்ட மனிதப் பேரவலம் குறித்து சர்வதேச நீதிப் பொறிமுறைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்திருந்தது. அந்தவகையில், ஸ்ரீலங்கா அரசின் ராணுவத் தளபதிகளாகச் செயற்பட்ட போர்க்குற்றவாளிகளான சவேந்திர சில்வா உட்பட்ட ஒரு சிலர் மீது பிரித்தானியா அண்மைய காலத்தில் தடையும் விதித்துள்ளது. அத்துடன், தற்போதைய பிரித்தானியப் பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் ஒரு மனித உரிமைகள் சட்டத்தரணியாக பணியாற்றியவர் என்பதனால் எமது மக்களின் வலியையும், எமக்கான நீதிக் கோரிக்கையையும் அவரால் தெளிவாகப் புரிந்துக்கொள்ள முடியும் எனவும் நாம் எதிர்பார்க்கின்றோம் என்பதனையும் இவ்வேளையில் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அதேவேளை, எமது இந்த மனு கையளிப்பிற்கு முன்னதாக, பிரித்தானியா பிரதமர் அலுவகத்திற்கு முன்னால் புலம்பெயர்வாழ் எம் உறவுகள், எமது அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் ஒன்றுகூடி சர்வதேச நீதிவிசாரணையை வலியுறுத்திய போராட்டம் ஒன்றினை பிற்பகல் 2:00 மணியளவில் மேற்கொண்டிருந்ததுடன், போராட்ட இறுதியில் தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் தலைவர் முனைவர்.சொக்கலிங்கம் யோகலிங்கம், செயலாளர் முனைவர். அருணாச்சலம் ராஜலிங்கம் மற்றும் ஊடகச் செயலாளர் ராகவன் கணேசமூர்த்தி ஆகியோர் பிரித்தானியப் பிரதமருக்கான மனுவை அவரது அலுவலகத்தில் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.




