Home Blog Page 32

9 வருடங்களின் பின்னர் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு!

image_pdfPRINT

பெண்ணொருவரைக் கொலைசெய்த வழக்கில் 9 வருடங்களின் பின்னர் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து கிளிநொச்சி மேல் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

கிளிநொச்சி, பிரமந்தனாறு பகுதியில கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம்  திகதி மாத்தளை பகுதியைச் சேர்ந்த இராஜசுலோஜனா என்ற பெண்ணைக்  கத்தியால் குத்திப் படுகொலை செய்து கிணற்றுக்குள் தள்ளிவிட்ட குற்றச்சாட்டில் அப்பெண்ணிக் காதலனைப் பொலிஸார் கைது செய்தனர்.

இவ்வழக்கு விசாரணையானது கடந்த 9 வருடங்களாக நடைபெற்றுவந்த நிலையில், இன்று நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. குறித்த நீதிமன்றத்தினால் மரண தண்டனை வழங்கப்படுவது இதுவே முதன் முறையெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இத்தீர்ப்பு வழங்கும் போது அனைவரும் எழுந்து நின்றதுடன் நீதிமன்றத்தின் அனைத்து மின்விளக்குகளும் அணைக்கப்பட்டு நீதிமன்ற செயற்பாடுகள் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அம்பிட்டிய தேரருக்கு சபையில் தகுந்த பதிலடி கொடுத்த சாணக்கியன்

image_pdfPRINT

மட்டக்களப்பு – மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தமிழ் மக்களை துண்டு துண்டாக வெட்டுவேன் என தெரிவித்துள்ளதுடன், என்னையும் எனது மக்களையும் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றார். இந்த பௌத்த பிக்குவுக்கு எதிராக  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். 

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மட்டக்களப்பில் இருக்கும் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் எனது நாடாளுமன்ற சிறப்புரிமைகளை மீறும் வகையில் செயற்பட்டுள்ளார்.  கடந்த அக்டோபர் மாதம் 18ஆம் திகதி  நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் கட்டளையை பொலிசார் நடைமுறைப் படுத்தவில்லை என்பதனை வலியுறுத்தியிருந்தேன்.

அந்த விடயத்தை இந்த தேரர் வேறு வகையில் திரிபுப்படுத்தி நான் நாடாளுமன்றத்தில் பேசும் போது என்னை தடுக்க அங்கு முதுகெலும்புள்ள சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவரும் இல்லையா என்று எனது சிறப்புரிமையை மீறும் ஓர் காணொளியினை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் கிழக்கில் வசிக்கும் தமிழர்கள் ஒவ்வெருவரையும் துண்டு துண்டாக வெட்டுவேன் எனவும் அச்சுறுத்தியுள்ளார்.

இவ்வாறாக என்னையும் நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும்  இந்த பௌத்த  பிக்குவுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். 

மட்டு. மேச்சல் தரைப்பகுதியில் புதிய பொலிஸ் சோதனைச்சாவடி!

image_pdfPRINT

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரைப் பகுதியில் அமைக்கப்பட்ட பொலிஸ் சோதனைசாவடியை மட்டு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திறந்து வைத்தார்.

குறித்த மேச்சல்தரைப் பகுதியில் பொலிஸ் காவல் அரண் ஒன்று அமைக்குமாறு மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டத்தில் பண்ணையாளர்கள் கோரிக்கைக்கு அமைய சோதனைசாவடி அமைக்க தீர்மானம் எடுக்கப்பட்டது.

இவ்வாறு தீர்மானிக்கப்பட்ட பொலிஸ் சோதனைச் சாவடியை கரடியனாறு பொலிஸ் நிலையத்தின் பிரிவாக புதிய சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு அதனை நேற்று சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சென்று பார்வையிட்டு பொலிசாரை கடமைக்கு அமர்த்தி கடமைகளை ஆரம்பித்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்கள் தொடர்பாக ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் இன்னும் நிறைவேறவில்லை – விக்னேஸ்வரன்

image_pdfPRINT

தமிழ் சமூகம் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகள் எவற்றையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிறைவேற்றவில்லை என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக ஜனாதிபதி உறுதியளித்த போதும் அவை நிறைவேற்றப்படாததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இவ்வாறான வாக்குறுதிகளை வழங்கியிருந்தாலும் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தாலும், அரச திணைக்களங்களாலும் தமது காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை மற்றும் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே தமிழ் மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது.

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் தமிழ் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடி, 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதை உறுதி செய்வதாக தெரிவித்திருந்த போதும் அது இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

வேலைநிறுத்தப் போராட்டத்தில் யாழ்.பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்!

image_pdfPRINT

யாழ் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் வேலைநிறுத்தப் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே  இன்று பி.ப பல்கலைக்கழக முன்றலில் குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னிப்புக் கோரினார் அம்பிட்டியே தேரர்!

image_pdfPRINT

தென்னிலங்கையிலுள்ள தமிழர்களை வெட்டுவேன் எனக்கூறிய சர்ச்சைக்குரிய கருத்துத் தொடர்பாக அம்பிட்டியே சுமணரத்தின தேரர் மன்னிப்புக் கோரியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக காணொலி ஒன்றினை வெளியிட்டு தனது கருத்தினைப் பதிவுசெய்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மட்டக்களப்பு, ஜயந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள மயானம் கடந்த 21 ஆம் திகதி தரைமட்டமாக்கப்பட்டது. அங்கு எனது தாயின் சமாதியும் உள்ளதால், பொலிஸாருடன் அந்தப் பகுதிக்குச் சென்று பார்வையிட்டேன்.

இதன்போது சிலர் என்னை தூண்டும் வகையில், காணொளிகளை எடுக்க ஆரம்பித்தமையால், நானும் கோபத்தில் சில கருத்துக்களை வெளியிட்டிருந்தேன்.

இதனை தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர், தமிழ் மக்களை குழப்புவதற்காக பயன்படுத்தி வருகிறார்கள். நான் கூறிய கருத்துக்கள் இனவாதத்தை தூண்டும் கருத்துக்கள் என தமிழ் மக்களிடம் கூறிவருகிறார்கள்.

விசேடமாக, கூட்டமைப்பின் உறுப்பினர் இரா. சாணக்கியன், இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், நான் ஒரு பைத்தியக்காரன் என்றும் எனது தாயின் சமாதி இங்கே இருக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதிலிருந்தே, சாணக்கியன்தான் இந்த மயானத்தை உடைக்க பணித்துள்ளார் என நான் தெரிந்துக் கொண்டுள்ளேன். அப்படி அவர் செய்யாவிட்டால், இந்த செயற்பாட்டை ஏன் அவர் சரியாக காண்பிக்க முற்பட வேண்டும்?

இதுதொடர்பாக நேற்று நீதிமன்றத்திற்கு சென்றபோது, மயானத்தை தரைமட்டமாக்கிய தரப்பினர் குற்றத்தை ஒப்புக் கொண்டதோடு, மீண்டும் மயானத்தை அமைத்துத் தருவதாகவும் கூறியுள்ளனர்.

நானும், தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோருவதாக நீதிமன்றத்திடம் அறிவித்தேன். நான் கவலையுடன் தான் அன்று அவ்வாறு பேசினேன்.

இது இனவாதக் கருத்து கிடையாது. தனி ஈழம் வரப்போவதாக தெரிவித்து, தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காகவே சில நபர்கள் இவற்றை பயன்படுத்துகிறார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அம்பிட்டிய தேரர் மீது ஜனாதிபதி ரணில் நடவடிக்கை?

image_pdfPRINT

”தென்னிலங்கை தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன் எனக்  கூறிய அம்பிட்டிய சுமனரத்தின தேரர் மீது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுப்பார்” என தான் நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து  மனோ கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”மட்டக்களப்பு அம்பிட்டிய சுமனரத்தின தேரர், தனது தாயின் கல்லறை உடைக்கப்பட்டதாக, பகிரங்கமாக இனவாத, வன்முறை கருத்துகளை கூறி, மட்டு மாநகரசபை ஆணையாளர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன் தென்னிலங்கை தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன்”  என்று நடுத்தெருவில் கூச்சலிட்டுள்ளார். ஆகவே அடுத்து நடைபெறவுள்ள மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்துக்கு, அம்பிட்டிய சுமனரத்தின தேரருக்கு அதிகாரபூர்வமாக,  அழைப்பு விடுத்து, அவரது தரப்பையும் கேட்டு, அதில் ஏதும் உண்மை உள்ளதா, இல்லையா என்ற விபரங்களை முழு நாட்டுக்கும் தெரியப்படுத்துங்கள்.

பல்லாண்டுகளாக மேலாக பொது வெளியில் இனவாத கருத்துகளை கூறியும், வன்முறைளில் ஈடுபட்டும் வரும் அம்பிட்டிய சுமனரத்தின தேரர் மீது ஐசிசிபிஆர் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இது வரை எந்த சட்டமும் பாயவில்லை. இது முடிவுக்கு வர வேண்டும்.

இவரது பாரதூரமான இனவாத கருத்துகளுக்கு எதிராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சட்ட ஒழுங்கு அமைச்சர் டிரான் அலஸ் மூலம் நடவடிக்கை எடுப்பார் என நான் நம்புகிறேன்.

இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடனும், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி. சிறிகாந்தாவுடனும்  நான் உரையாடியதோடு கல்லறை உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான உண்மையை கண்டறியுமாறு அறிவுறுத்தியுள்ளேன்.

தேரரது தாயின் கல்லறை உடைக்கப்பட்டிருந்தாலும்கூட, அது தொடர்பில் முறைப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, தமிழர்களை குறிப்பாக தென்னிலங்கை தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன், என தேரர் கூற முடியாது. இதை இனிமேல் எம்மால் அனுமதிக்க முடியாது” இவ்வாறு மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

அம்பிட்டிய தேரருக்கு எதிரான வழக்கு 20ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

image_pdfPRINT

மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ன தேரருக்கு எதிராக தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று (31) தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, தேரர் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியை இறுவெட்டில் ஒப்படைக்குமாறு நீதவான் பொலிசாருக்கு உத்தரவிட்டு எதிர்வரும் 20 ம் திகதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.

கடந்த 25ம் திகதி புதன்கிழமை குறித்த தேரர் மட்டக்களப்பு ஜெயந்திபுர விகாரைக்கு அருகாமையில் வீதியை மறித்து தெற்கிலுள்ள தமிழர்கள் ஒவ்வொருவரினதும் தலைலைய வெட்டி அனுப்பபோவதாக அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

தமிழ் சிங்கள மக்களிடையே பாரிய ஒரு இன முரண்பாட்டை தோற்றிவிக்கும் முகமாக கருத்துக்களை தெரிவித்துள்ளமை ஊடகங்கள் ஊடாக வெளிவந்துள்ளன.

தேரர் இவ்வாறான இன முரன்பாட்டை தோற்றுவிக்க முயற்சித்ததுடன் தமிழ் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார் என பலரால் குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

விழிப்படைய வேண்டும் இல்லாவிட்டால் அழிந்துவிடுவோம் – சுகாஷ் எச்சரிக்கை

image_pdfPRINT

கடலட்டைப் பண்ணைகள் அமைக்கப்பட்டு வடக்குக் கிழக்கில் உள்ள தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் சுகாஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

மறுபுறம் சீனா போன்ற நாடுகளிலிருந்து மீன்களை இறக்குமதி செய்வதற்கு உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறும் நிலையில் அது குறித்து விழிப்படைய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அழிந்துவிடுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தன் பதவி விலக வேண்டும்

image_pdfPRINT

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பதவி விலக வேண்டும் என மக்களின் எதிர்பார்ப்பையே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் வெளிப்படுத்தியுள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம்இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

சம்பந்தன் ஐயாவின் அரசியல் அனுபவம் தொடர்பில் அனைவருக்குமே தெரியும். அவர் ஒரு தெளிவான அரசியல்வாதி என்பதுடன் நீண்ட அனுபவசாலி என்றே பலரும் கூறுவார்கள்.

அவரது தெளிவான பார்வையும் அரசியல் அனுபவமும் எப்போதும் தேவையானது. ஆனால், வயது மூப்பின் காரணமாக அவரால் முன்னரைப் போன்று செயற்பட முடியவில்லை.

குறிப்பாக அவர் பிரதிநிதித்துவம் செய்கின்ற திருகோணமலை மாவட்டத்தில் பல்வேறு சம்பவங்கள் நடைபெறுகின்றபோது அந்த மக்கள் தங்கள் பிரதிநிதி தொடர்பில் தேடுகின்றதுடன் தங்களுக்காக ஒருவர் களத்தில் இருக்கவேண்டும் என்று கோரியிருக்கின்ற நிலைமை உள்ளது.

இவ்வாறான நிலைமையில்தான் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் சில தினங்களுக்கு முன்னர் ஊடகம் ஒன்றுக்கு தெரவித்திருந்தார் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்திருந்தார்.

பௌத்தர்களின் மயானத்தில் கற்பாறைகளை கொட்டியவர் கைது!

image_pdfPRINT

மட்டக்களப்பு ஜெயந்திபுரத்தில் உள்ள பௌத்தர்களின் மயானத்தில் சட்டவிரோதமாக கற்பாறைகளைக் கொட்டிய நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் வீதி நிர்மாணப் பணிகளை செய்துவந்த ஒப்பந்தகாரரான குறித்த நபர் மேலதிக கற்பாறைகளை கனகரக வாகனத்தில் கொண்டு சென்று மயானத்துக்குள் கொட்டியுள்ளார்.

இதனையடுத்து இது தொடர்பாக ஜெயந்திபுர விகாரை விகாராதிபதி பொலிஸ் நிலையத்தில் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் முறைப்பாடு  செய்தபோதிலும், பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளும்  எடுக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.

இதனையடுத்து மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ண தேரர் நேற்றைய தினம் சென்று மீண்டும் முறைப்பாடு செய்திருந்ததோடு குறித்த மயானபகுதிக்கு சென்று சநா.உறுப்பினர் சாணக்கியன் ஆட்களில் இந்த கொடூரமான வேலை என தெரிவித்து தென்பகுதியில் உள்ள தமிழர்களின் தலையை வெட்டப்போவதாகவும் புலிகள் என தெரிவித்து வீதியில் சத்தமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட வீதி அபிவிருத்தி ஒப்பந்தக்காரரை    மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, அவரை எதிர்வரும் 30 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போதைப்பொருள் கடத்தல்காரர்களை அரசாங்கமே பாதுகாக்கின்றது : எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு!

image_pdfPRINT

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பொதுமக்கள் பணத்தில் சிறைகளில் பராமரிக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

கம்பஹா, மீரிகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான சிங்கப்பூர் சட்டங்கள் இங்கும் அமுல்படுத்தப்பட வேண்டும்.

இதில் பிரதான பெரும் வியாபாரிகளாக உள்ளவர்கள் பொதுமக்கள் பணத்தில் சிறைகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.nஇது ஈஸி கேஷ் (EZ Cash) முறையில் இயங்கினாலும்,தற்போதைய அரசாங்கத்திடம் இதற்கு தீர்வு இல்லை.

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் சிங்கப்பூரின் தண்டனை முறை வழங்கப்படும். போதைப்பொருள் கடத்தல்காரர்களை காப்பாற்ற தற்போது பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போதைப்பொருள் பயங்கரவாதம் என்பதால், இதனை கட்டுப்படுத்த விசேட படைப்பிரிவு அவசியம்.

நாட்டின் சட்டக் கட்டமைப்பு கூட தற்போது சீர்குலைந்துள்ளதால், இதற்கு நாம் முதுகெழும்பை நேராக வைத்துக்கொண்டு சட்டம் ஒழுங்கை வலுப்படுத்த ஒரு நாடாக ஒன்றிணைய வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!