போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பொதுமக்கள் பணத்தில் சிறைகளில் பராமரிக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
கம்பஹா, மீரிகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான சிங்கப்பூர் சட்டங்கள் இங்கும் அமுல்படுத்தப்பட வேண்டும்.
இதில் பிரதான பெரும் வியாபாரிகளாக உள்ளவர்கள் பொதுமக்கள் பணத்தில் சிறைகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.nஇது ஈஸி கேஷ் (EZ Cash) முறையில் இயங்கினாலும்,தற்போதைய அரசாங்கத்திடம் இதற்கு தீர்வு இல்லை.
ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் சிங்கப்பூரின் தண்டனை முறை வழங்கப்படும். போதைப்பொருள் கடத்தல்காரர்களை காப்பாற்ற தற்போது பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போதைப்பொருள் பயங்கரவாதம் என்பதால், இதனை கட்டுப்படுத்த விசேட படைப்பிரிவு அவசியம்.
நாட்டின் சட்டக் கட்டமைப்பு கூட தற்போது சீர்குலைந்துள்ளதால், இதற்கு நாம் முதுகெழும்பை நேராக வைத்துக்கொண்டு சட்டம் ஒழுங்கை வலுப்படுத்த ஒரு நாடாக ஒன்றிணைய வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.