Home Blog Page 282

”கொள்கையின் பிரகாரம் ஐக்கியமாக நாம் தயார்”

image_pdfPRINT

“கூட்டமைப்பின் இராஜதந்திர நடவடிக்கைகள்
பிழைத்துவிட்டதை தலைமை ஏற்றுவிட்டது”

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் செயலாளர் நாயகமுமான சிவசக்தி ஆனந்தன் எமது ‘நமது ஈழ நாடு’ இணையத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி

கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தமிழர்விடுதலைக் கூட்டணியில் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிட்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் அடுத்து வரும் தேர்தல்களை எவ்வாறு எதிர்கொள்ளவுள்ளது?

பதில்:- நாம் தேர்தலுக்காக கூட்டமைப்பிலிருந்து வெளியேறவில்லை. இன்னும் சொல்லப்போனால் கூட்டமைப்பின் இருப்பைப் பற்றி கூட்டமைப்பின் பேச்சாளராகச் செயற்படுபவரே கேள்வி எழுப்பியுள்ளார். கூட்டமைப்பின் ஜனநாயகமற்ற அணுகுமுறையும் கூட்டமைப்பின் பெயரில் இருவர் மட்டுமே முடிவுகள் மேற்கொண்டு செயற்பட்டு வந்துள்ளனர். எமது கருத்துக்கள் புறந்தள்ளப்பட்டு, உதாசீனம் செய்யப்பட்டன.
மேலும் எமக்கிருந்த துருப்புச்சீட்டைச் சரியாகக் கையாண்டிருந்தால் ஓரளவிற்கேனும் பலன்களை அடைந்திருக்க முடியும்.

இவை அனைத்திற்கும் மேலாக அரசியல் யாப்பிற்கான இடைக்கால அறிக்கை என்பது முழுக்க முழுக்க மக்களின் ஆணைக்கு எதிராக அமைந்திருந்தது. இதனைச் சுட்டிக்காட்டியதன் விளைவாகவே நாம் அவர்களுக்கு வேண்டத்தகாதவர்களாகிவிட்டோம்.
இவை அனைத்தும் தேர்தலுக்காக தமது கட்சியின் சின்னத்தைக் கொடுத்ததற்காக தமிழரசுக் கட்சி எடுத்துக்கொண்ட மேலாதிக்கப் போக்கினாலேயே நடைபெற்றன.

எனவே நாம் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடத் தயாரில்லை என்று தெரிவித்தோம்.
தேர்தல் அரசியலுக்கும் அப்பால் ஒரு பொதுவான கொள்கையின் அடிப்படையில் வேலைத்திட்டங்களை வகுத்து அதனை ஏற்றுக்கொள்பவர்களுடன் ஒரு இறுக்கமான கட்டமைப்பை ஏற்படுத்தி அதனூடாகவே தேர்தல்களை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.

கேள்வி:- மாகாண சபைத் தேர்தலை மையப்படுத்தி முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையிலான அணி உருவாகின்றபோது தங்களுடைய கட்சி பங்கேற்பதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்ப்புக்களை வெளியிடுகின்றதே?

பதில்:- தேர்தல் நேரத்தில் அதனைப் பார்த்துக்கொள்ளலாம். அதற்கு முன்னர் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திர நடவடிக்கைகள் பிழைத்துவிட்டதை அதன் தலைவரே ஏற்றுக்கொண்டுவிட்டார்.

எனவே எமது மக்களின் அன்றாட பிரச்சினைகள் தொடக்கம் அரசியல்தீர்வு வரை அனைத்தையும் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
எனவே, களச் செயற்பாடுகளே தேர்தலுக்கான முன்னணியைத் தீர்மானிக்க முடியும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

கேள்வி:- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப்.இற்கும் இடையில் முரண்பாடு வரக்காரணம் என்ன?

பதில்:– சில வேளைகளில் புரிந்துணர்விலும் தொடர்பாடல்களிலும் ஏற்படுகின்ற குறைபாடுகள் கருத்து வேறுபாடுகளைத் தோற்றுவித்துவிடுகின்றன. இவை தொடர்ந்தும் நீடிக்க வேண்டிய அவசியமில்லை. மக்கள் நலன்சார்ந்து அனைவரும் சிந்திப்போமாக இருந்தால் இவை ஒரு பொருட்டல்ல.

கேள்வி:- முதலமைச்சர் தலைமையிலான அணி உருவாகாத பட்சத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப்.தொடர்ந்தும் தமிழர் விடுதலைக்கூட்டணி தலைமையிலான கூட்டணியிலேயே நீடிக்குமா?

பதில்:- தமிழர்களின் அரசியல் உரிமைப் பிரச்சினை என்பது வெறுமனே தேர்தலோடு மட்டுப்படுத்தப்படுவதல்ல. அதனை எட்டுவதற்கு தேர்தலும் ஒரு களம் அவ்வளவுதான். இதனை ஒவ்வொருவரும் உணர்ந்தால் ஐக்கிய முன்னணி குறித்து ஒருவரும் வலியுறுத்த வேண்டிய அவசியமில்லை. அது தானாகவே உருவாகிவிடும்.

கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் மீண்டும் இணைவதற்கு சாத்தியம் உண்டா?

பதில்:- மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இன்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோல்வியடைந்து விட்டது. இதனை உணர்ந்த முதலமைச்சரும் கடந்த 24.06.2018 அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நீதியரசர் பேசுகிறார் என்னும் நூல் வெளியீட்டில் ஐக்கியம் என்பது கொள்கை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆகவே, தனது தோல்வியை ஏற்றுக்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் நலன்சார்ந்து சிந்திக்க வேண்டும். அப்படி சிந்தித்தால் ஐக்கியம் என்பது தானாகவே ஏற்பட்டுவிடும்.

கேள்வி:- அவ்வாறு இணைவதென்றால் கூட்டமைப்பில் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட வேண்டும்?

பதில்:- ஐக்கியம் என்பது கொள்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக வேண்டும். அங்கத்தவர்கள் அனைவரும் சமமாகக் கருதப்பட வேண்டும். வேலைகள் பகிர்ந்தளிக்கப்பட்டு கூட்டு முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். முடிவெடுப்பதற்காக ஒன்று கூடலும் செயற்படுவதற்காகப் பிரிந்து செல்லுதலுமாக அமைய வேண்டும். இதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு பொதுவான யாப்பு இருக்க வேண்டும். உருவாகின்ற ஐக்கிய முன்னணி என்பது அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய பரந்து விரிந்த ஒரு குடையமைப்பாக இருக்க வேண்டும்.

இவ்வாறு உருவாக்கப்படுகின்ற அமைப்பானது பின்னர் கட்சி ரீதியாகச் செயற்படக்கூடாது. ஐக்கிய முன்னணிக்கென்று ஒரு பொதுச் சின்னம் இருக்க வேண்டும். சட்டவலு இருக்க வேண்டும். மக்களின் பிரச்சினைகளை வினைதிறனுடனும், பற்றுறுதியுடனும் அணுக வேண்டும். புதிய கோணத்தில் ஆக்கபூர்வமாகச் சிந்திக்கின்ற அனைவரையும் உள்ளீர்ப்பதாக அமைப்பு கட்டியெழுப்பப்படவேண்டும்.

சமூகததின் அனைத்து மட்டங்களையும் உள்ளடக்கக்கூடியதாகவும் அனைவருக்கும் பொறுப்புக்களைப் பிரித்துக்கொடுக்கக்கூடியதாகவும் ஒவ்வொரு அங்கமும் தனது நலன் சார்ந்தும் சமுதாய நலன் சார்ந்தும் சிந்தித்து செயற்படக் கூடியதாக இருக்க வேண்டும்.
உதாரணமாக கமக்கார அமைப்பை எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு விவசாயம் தொடர்பான பிரச்சினைகள் இருக்கின்ற அதே நேரத்தில் இனப்பிரச்சினையும் இருக்கின்றது.

ஆகவே அவர்கள் இரண்டையும் சிந்தித்துச் செயற்படவேண்டும். பெண்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் தமது உரிமைகளையும் சமத்துவத்தையும் வென்றெடுப்பதற்காகக் குரல்கொடுக்கின்ற அதேவேளை, இனத்தின் உரிமைக்காகவும் குரல்கொடுக்க வேண்டியவர்களாக உள்ளனர்.

இவ்வாறு சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தத்தமது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கின்ற அதேவேளை, தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைக்காகவும் குரல்கொடுக்க வேண்டியவர்களாக உள்ளனர். உருவாகின்ற ஐக்கிய முன்னணி இவைகளுக்கு இடமளிப்பதாக இருக்க வேண்டும்.

கேள்வி:-பாராளுமன்றத்தில் உங்களை உரையாற்றுவதற்கு கூட்டமைப்பின் தலைமையால் அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்றீர்கள்? அதன் பின்னணியை பகிரங்கப்படுத்துங்கள்

பதில்:- புதிய அரசியல் யாப்பிற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை குறித்து முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் விவாதித்து அதில் எட்டப்படும் முடிவுகளைப் பொறுத்து பின்னர் பாராளுமன்றக் குழுக்கூட்டத்தில் விவாதிக்கலாம் என்று தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைக் கூட்டுமாறு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கூட்டமைப்பின் தலைவரிடம் கோரியிருந்தது.

ஆனால் திரு.சம்பந்தன் அவர்கள் எமது கோரிக்கையை நிராகரித்து பாராளுமன்றக் குழுவைக் கூட்டினார். வேண்டா விருப்பாக ஒரு மாலை வேளையில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைக் கூட்டினார். ஒரு தேசிய இனத்தின் உரிமை சார்ந்த விடயத்தை முதலில் கட்சிகள் மட்டத்தில் கூடிப்பேசி ஆராய்ந்து கொள்கை முடிவை எடுத்து பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கலாம் என்பதே எமது கோரிக்கையாக இருந்தது.

தங்களது கட்சியின் சின்னத்தைத் தேர்தலுக்காகக் கொடுத்த ஒரே காரணத்திற்காக தங்களது கட்சிக்கு அதிக ஆசனங்களை ஒதுக்கிக்கொண்டு அதனூடாக அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்டு அந்த பெரும்பான்மையைக் கொண்டு தனது முடிவுகளை ஏனையோர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே திரு.சம்பந்தனின் விருப்பமாகும்.

ஒரு அரசியல் கட்சி என்ற அடிப்படையிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஸ்தாபகக் கட்சிகளில் ஒன்று என்பதன் காரணத்தினாலும், மக்களின் நலனில் அக்கறைகொண்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது என்பதினாலும், நாம் கொள்கை முடிவுகள் கட்சி மட்டத்தில் எடுக்கப்பட்டு அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் அங்கீகாரத்தைப் பெறவேண்டும் என்று விரும்பினோம். பாராளுமன்றத்திற்கு வந்திருப்பவர்களில் பலர் அரசியல் முன் அனுபவம் இல்லாதவர்கள். இதற்கு முன்னர் அரசியல் கட்சிகளில் அங்கத்தவர்களாக இல்லாதிருந்தவர்கள்.

எனவே அவர்களுக்கு கொள்கை முடிவுகளை எடுப்பதில் சிரமங்கள் இருக்கும். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தத்தமது கட்சிக்குக் கட்டுப்பட்டவர்கள். ஒருங்கிணைப்புக்குழுவில் அங்கம் வகிப்பவர்கள் அனைவருமே நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்ல.
ஆகவே கட்சியே கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும். இதனை தெரிவித்து நாம் நாடாளுமன்ற குழு கூட்டத்தைப் புறக்கணித்தோம். இதன் காரணமாகவே இன்றுவரை எனக்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

கருணாவை கட்சியின் துணைத் தலைவராக்கிய இவர்கள் விஜயகலாவிடம் கேள்வி எழுப்ப முடியுமா? மகிந்த அணி மீது ரணில் பாய்ச்சல்

image_pdfPRINT

“600 பொலிஸாரைக் கொன்று குவித்த கருணாவுக்கு கட்சியில் துணைத் தலைவர் பதவியை வழங்கப்பட்டது. ஜனாதிபதித் தேர்தலில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பணம் வழங்கி, தமிழ் மக்கள் வாக்களிப்பது தடுக்கப்பட்டது. விடுதலைப்புலிகளை அழித்த இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவை சிறையிலடைப்ட்டார். இவற்றை எல்லாம் செய்தவர்களே இன்று விஜயகலாவின் உரையைத் தூக்கிப்பிடித்துக் கூச்சலிடுகின்றனர்.”

இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,
மகிந்த ஆதரவு கூட்டு எதிரணியினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை நாடாளுமன்றில் முன்வைத்தார்.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் குழு முடிவெடுத்துள்ளது எனவும் அவர் சபையில் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் சர்ச்சைக்குரிய உரை தொடர்பில் அரசினதும், ஐக்கிய தேசியக் கட்சியினதும் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி நாடாளுமன்றத்தில் இன்று மாலை உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவற்றைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

இராஜாங்க அமைச்சர் விஜயகலாவின் சர்ச்சைக்குரிய உரை குறித்து எனக்குத் தெரிவிக்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் ஆராய்ந்து பார்த்தேன். ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் குழுவும் நேற்றுக் கூடியது.

காய்ச்சல் காரணமாக இராஜாங்க அமைச்சர் நேற்று யாழ்ப்பாணத்தில் இருந்தார். கொழும்பு வந்த பின்னர் என்னைச் சந்திக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன். அவரைச் சந்தித்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசியலமைப்பை மீறும் வகையில் எவரேனும் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பதில் நாம் உறுதியாகவே இருக்கின்றோம்.

முப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்புப் படையினர் ஆகியோர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். உயிர்த் தியாகங்களையும் செய்தனர். எனினும், மக்களையும், நாடு பிளவுபடக்கூடாது என்ற கொள்கையிலிருந்த அரசியல் தலைவர்களைப் புலிகள் கொன்றனர்.

கூட்டு எதிரணியினர் நாடாளுமன்றத்தை முடக்கும் வகையில் நேற்று செயற்பட்டுள்ளனர். இவர்கள் யார்? 600 பொலிஸாரைக் கொன்ற கருணாவுக்கு கட்சியில் உப தலைவர் பதவியை வழங்கியவர்கள், பிரபாகரனுக்குப் பணம் வழங்கி ஜனாதிபதித் தேர்தலில் வென்றவர்கள், விடுதலைப்புலிகளைத் தோற்கடித்த இராணுவத் தளபதியை சிறையிலடைத்தவர்கள். இவர்களுக்கு எப்படி விஜயகலாவின் உரை பற்றிப் பேசமுடியும்?

எனவே, இப்படியானவர்களுக்கு எதிராக சபாநாயகர் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் சபையைக் கொண்டுநடத்த விடமாட்டார்கள்.

“நியூயோர்க் ரைம்ஸ்’ பத்திரிகையில் வெளியான செய்தி குறித்த கதையை மூடிமறைக்கவே நாடாளுமன்றம் நேற்று திட்டமிட்டுக் குழப்பப்பட்டது – என்றார்.

ரஞ்சன் வடக்குக்கு வந்து எமக்கு புனர்வாழ்வு அளிக்கட்டும் – முதலமைச்சர் சூடான பதில்

image_pdfPRINT

“வடமாகாணம் வந்து நிலைமையைப் பார்த்துச் செல்ல பிரதி அமைச்சரை அன்புடன் அழைக்கின்றேன். இங்கு வந்து இராணுவத்தினரிடமோ பொலிஸாரிடமோ தனது கட்சிக்காரரிடமோ உண்மையைக் கேட்பதில் பயன் இல்லை. பொதுமக்களிடம் கேட்கட்டும். அவர்கள் சொல்வார்கள் யாருக்குப் புனர்வாழ்வு அளிக்க வேண்டும் என்று!

இவ்வாறு வடக்கு மாகாண முதலைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரால் இன்று அனுப்பிவைக்கப்பட்ட கேள்வி பதில் அறிக்கையிலேயே இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கேள்வி – விக்கி, விஜயகலா, சிவாஜிலிங்கத்திற்கு விசுவமடு முகாமில் புனர்வாழ்வளியுங்கள் என்று பிரதி அமைச்சர் இரஞ்சன் இராமநாயக்கா கூறியுள்ளார். இதைப்பற்றி உங்கள் கருத்தென்ன?

பதில் – நான் சிங்களத் திரைப்படத்துடன் சம்பந்தப்பட்ட பலருடன் எனது இளமைக்காலத்தில் பழகியவன். என் நண்பரும் வாசுவின் சகோதரருமாகிய யசபாளித நாணயக்காரவின் நட்பால் இது ஏற்பட்டது.

விஜய் குமாரணதுங்க போன்ற பலரை அறிந்து வைத்திருந்தவன். இரஞ்சனை எனக்கு பழக்கமில்லை. ஆனால் அவர் ஒரு உணர்ச்சி மிகுந்த ஒருவர் என்று எனக்குத் தெரியும். நாம் கூறுவனவற்றையும் செய்வதையும் பத்திரிகை வாயிலாக கண்டு உணர்ச்சிவசப்பட்டு விமர்சிக்கின்றார்.

உண்மையை உணர்ந்த பின்னரே அவரின் வார்த்தைகள் வெளிவர வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். எங்களுக்குப் புனர்வாழ்வளிக்க வேண்டுமா என்று முடிவெடுக்க கௌரவ இரஞ்சன் இராமநாயக்க அவர்களை வடக்கிற்கு கௌரவத்துடனும் அன்புடனும் அழைக்கின்றேன்.

இரத்தினப்பிரிய பந்து இல்லாதவர்களுக்குக் கொடுத்து அவர்களின் அன்பைப் பெற்றுக் கொண்டார். எங்கள் நால்வரிடையில் விஜயகலாவும், சிவாஜிலிங்கமும் நானுமே இல்லாதவர்கள். எமது மக்களுக்குப் பாதுகாப்பில்லை; எமக்கு அதிகாரங்கள் இல்லை; எமது கருத்துக்களுக்கு தெற்கில் இடமில்லை, எமக்கு மதிப்பில்லை; புறக்கணிக்கப்படுகின்றோம்; ஆக்கிரமிக்கப்படுகின்றோம்.

ஆகவே இரத்தினப்பிரிய பந்து போல் எமக்கு வேண்டுவனவற்றை உடனே வழங்க இரஞ்சன் இராமநாயக்க முன்வரவேண்டும். எம்மிடம் இல்லாதவற்றை அவரின் அரசின் ஊடாக எங்களுக்கு வழங்கினால் நாமும் அவர் மேல் அன்பும் மரியாதையும் காட்டுவோம்.

வடமாகாணம் வந்து நிலைமையைப் பார்த்துச் செல்ல பிரதி அமைச்சரை அன்புடன் அழைக்கின்றேன். இங்கு வந்து இராணுவத்தினரிடமோ பொலிஸாரிடமோ தனது கட்சிக்காரரிடமோ உண்மையைக் கேட்பதில் பயன் இல்லை.

பொதுமக்களிடம் கேட்கட்டும். அவர்கள் சொல்வார்கள் யாருக்குப் புனர்வாழ்வு அளிக்க வேண்டும் என்று – என்றுள்ளது.

மாவையே எமது தெரிவு- சீ.வீ.கே.சிவஞானம்!

image_pdfPRINT

வடமாகாண முதலமைச்சராக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவே நியமிக்கப்பட வேண்டும். இது எனது தனிப்பட்ட விருப்பம் என வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தின் வீட்டில் இன்று (04) மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் மாவட்டகுழுவின் தீர்மானத்திற்கமைவாக, இன்று ஊடகவியலாளர் சந்திப்பு நடக்கவுள்ளதை தமிழ்பக்கம் காலையிலேயே குறிப்பிட்டிருந்தது.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இலங்கை தமிழரசு கட்சியின் மாவட்ட கிளை கலந்துரையாடல் அண்மையில் இடம்பெற்றது. அந்த கலந்துரையாடலின் போது, யாழ்.மாவட்ட கிளை கூடி ஒரு தீர்மானத்தினை எடுத்துள்ளோம். எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலின் போது, முதலமைச்சர் வேட்பாளராக இலங்கை தமிழரசு கட்சியின் நீண்ட கால உறுப்பினர் ஒருவரையே நிறுத்த வேண்டுமென ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

கட்சியின் யாப்பின் அடிப்படையிலும், கட்சியின் அங்கத்துவ அடிப்படையிலும், தமிழரசு கட்சியின் சார்பாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாகவும், உறுப்பினர் ஒருவர் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரும், தமிழரசு கட்சியின் உறுப்பினர் நியமிக்கப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் அனுப்பி வைக்கப்பட வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினர் எனின், மாவை சேனாதிராஜாவையே முதலாவதாக ஆதரிப்பேன் என்றும், 2013 ஆம் ஆண்டு தேர்தலின் போது, மாவை சேனாதிராஜாவின் பெயரையே தான் பரிந்துரைத்ததாகவும், மாவை சேனாதிராஜா தான் எனின் கட்டாயமாக தனது ஆதரவு அவருக்கே கொடுப்பேன் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

அதேவேளை, கட்சியின் தீர்மானம் என்ற ஒன்று இருப்பதனால், எதிர்வரும் மாகாண சபை தேர்தலின் போது, கட்சி யாரைத் தீர்மானிக்கின்றதோ அவருக்கு ஆதரவு வழங்கவும், கட்சியின் முடிவுக்கு கட்டுப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாங்கள் எமது உரித்துக்கள் பற்றி பேசும் போது எம்மைப் பயங்கரவாதிகள் என்று அழைப்பதை நிறுத்துங்கள் – தென்பகுதிக்கு முதலமைச்சர் எச்சரிக்கை

image_pdfPRINT

இராஜாங்க அமைச்சர் விஜயகலா கூறியமைக்கான நிலமையைப் புரிந்து கொள்ளாமல் தெற்கில் உள்ளவர்கள் தமது உள்ளார்ந்த வெறுப்புக்களைப் பிரதிபலிப்பது வருத்தத்திற்கு உரியது. இவ்வாறான தெற்கத்தையவர்களின் நடவடிக்கைகள் விஜயகலாவிற்கு எதிரானது அல்ல. தமிழர் மீதான சந்தேகம், வெறுப்பு, பயம் யாவற்றையும் பிரதிபலிக்கின்றது”

இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று அனுப்பிவைத்த அவரது கேள்வி பதில் அறிக்கையிலேயே இந்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கேள்வி – கௌரவ விஜயகலா மகேஸ்வரன் கூறியது பற்றி தெற்கில் பெரும் களேபரம் ஏற்பட்டுள்ளதே? அது பற்றி உங்கள் கருத்து.

பதில் – வடமாகாணத்தின் தற்காலப் பாதுகாப்பற்ற நிலையையும் முன்னைய பாதுகாப்பான நிலையையும் பற்றி விமர்சிக்க எவருக்கும் உரித்துண்டு. நான் அண்மைய கூட்டத்தில் இருந்தேன். ஆனால் விஜயகலா கூறிய சொற்களைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.

ஒலிவாங்கியில் ஏதோ பிழை இருந்தது. பின்னர் அவரிடமே கேட்டறிந்தேன். இன்றைய பாதுகாப்பற்ற நிலை மாறி பாதுகாப்பான சூழல் ஏற்பட வேண்டும் என்று அவர் கூறியதில் என்ன பிழை என்று எனக்குத் தெரியவில்லை.

முன்பு எமது மக்கள் பாதுகாப்பாக வாழ்ந்து வந்தார்கள் என்பது உண்மை. போர்க்காலத்தில் ஒரு பெண் தனிமையில் நகை நட்டு அணிந்து கொண்டு சூரிய அஸ்தமனத்தின் பின்னர் வீடு நோக்கி நடந்து சென்றால் அவருக்கு எந்தத் தொந்தரவோ பாதிப்போ ஏற்படாதிருந்தது என்பது உலகறிந்த உண்மை. இன்று அப்படியா?

வாள்வெட்டு, வன்புணர்ச்சி, வன்செயல்கள், போதைப்பொருள் பாவனைகள் அதிகரித்து வருகின்றன. இலஞ்ச ஊழல்கள் மலிந்து காணப்படுகின்றன. அதனால்த்தான் நான் இராணுவத்தைத் திரும்ப அழையுங்கள்; பொலிஸ் அதிகாரங்களை எமக்குத் தாருங்கள். சகல வன்முறைகளையும் நிறுத்திக் காட்டுகின்றோம் என்று கூறியுள்ளேன்.

நிலமையைப் புரிந்து கொள்ளாமல் தெற்கில் உள்ளவர்கள் தமது உள்ளார்ந்த வெறுப்புக்களைப் பிரதிபலிப்பது வருத்தத்திற்கு உரியது. இவ்வாறான தெற்கத்தையவர்களின் நடவடிக்கைகள் விஜயகலாவிற்கு எதிரானது அல்ல. தமிழர் மீதான சந்தேகம், வெறுப்பு, பயம் யாவற்றையும் பிரதிபலிக்கின்றது.

எமது பேச்சுக்களை விமர்சிக்காமல் எங்களுடன் ஒற்றுமையாகப் பேச முன்வாருங்கள். சமஷ்டி அரசியல் அமைப்பொன்றை நிறுவ முன்வாருங்கள் என்று தெற்கத்தைய அரசியல் வாதிகளிடம் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

அத்துடன் நாங்கள் எங்கள் உரித்துக்கள் பற்றியோ பாதுகாப்பு பற்றியோ பேசும் போது எம்மைப் பயங்கரவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் அழைப்பதை நிறுத்துமாறு கோருகின்றேன்.

பிரபாகரன் காலத்தில் எம் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள் என்ற உண்மையைக் கூறுவதால் நாங்கள் எவரும் பயங்கரவாதிகள் ஆகிவிட மாட்டோம். அந்த நாள் இன்று வந்திடாதோ என்று விஜயகலா கூறுவதால் அவர் தீவிரவாதி ஆகிவிட முடியாது.

புலிகள் காலத்தில் எம் மக்கள் (போர்க் காலத்தில் ஏற்பட்ட பாதிப்புக்களை விட) பொதுவாகப் பாதுகாப்பாக இருந்தார்கள் என்பது உலகறிந்த உண்மை.

ஆகவே இராஜாங்க அமைச்சர் விஜயகலா தனது கடமைகளைத் தொடர்ந்து பணியாற்ற அவரின் கட்சி இடமளிக்க வேண்டும். அவர் தேசியக் கட்சியில் இடம்பெறுவதால் தமிழச்சி என்ற அந்தஸ்தை இழந்தவராகக் கணிக்கக்கூடாது.

விஜயகலாவின் சுதந்திரமும் தனித்துவமும் பாதுகாக்கப்பட வேண்டும் – என்றுள்ளது.

யாழில் இருவேறு வாள் வெட்டு சம்பவம்; மாணவன் உட்பட இருவர் படுகாயம்

image_pdfPRINT

யாழில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களில் பாடசாலை மாணவன் ஒருவன் உட்பட இருவர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

யாழ்.கொக்குவில் மேற்கு பகுதியில் வீடொன்றினுள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு புகுந்து தாக்குதல் மேற்கொண்டு உள்ளனர்.

இலக்க தகடற்ற மோட்டார் சைக்கிளில் முக மூடி அணிந்து வந்த இருவர் வீட்டினுள் இருந்த சத்திய தாஸ் (வயது 24) என்பவர் மீதே தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

அதேவேளை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 09 மணியளவில் குப்பிளான் தெற்கு பகுதியில்  உள்ள வீடொன்றினுள் எட்டு பேர் கொண்ட கும்பல் ஒன்று புகுந்து தாக்குதல் மேற்கொண்டு உள்ளனர்.

அதன் போது வீட்டில் இருந்த பாடசாலை மாணவனான சி. சரூஜன் (வயது 15) என்பவர் மீது வாளினால் வெட்டி தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த மாணவர் தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அமைச்சர் விஜயகலா பேச்சுக்கு கைதட்டியவர்கள் மீதும் பாயும் விசாரணை

image_pdfPRINT

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்வில் அநாகரிகமாக நடந்து கொண்ட அரச ஊழியர்கள் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதேச செயலர்களுக்கு யாழ்.மாவட்ட செயலர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார். 

‘ஐனாதிபதியின் மக்கள் சேவை’ தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் எட்டாவது நிகழ்வு கடந்த திங்கட்கிழமை காலை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபயவர்த்தன, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பண ஆகியோர் கலந்துகொண்டனர்.
அவர்கள் முன்னிலையில் உரையாற்றிய சிறுவர் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் ” புலிகள் மீள உருவாக வேண்டும் ” என உரையாற்றி இருந்தார்.
அவரது அந்த கருத்தை கேட்டு நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அரச ஊழியர்கள் பலரும் கரகோஷம் எழுப்பி ஆரவாரித்து இருந்தனர்.
அந்நிலையில் தற்போது விஜயகலா மகேஸ்வரனின் கருத்து தென்னிலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் , அன்றைய தினம் நிகழ்வில் கலந்து கொண்ட அரச ஊழியர்கள் தொடர்பில் தற்போது விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு உள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னார், வவுனியா மாவட்டங்களுக்கு அரச அதிபர்கள் நியமனம்

image_pdfPRINT

முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபர் மோகன்ராஜ், மன்னார் மாவட்டச் செயலாளராகவும் நிந்தாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா வவுனியா மாவட்டச் செயலாளராகவும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட செயலர்களுக்கான வெற்றிடங்கள் ஏற்பட்ட நிலையிலேயே இந்த நியமனம் இன்று மாலை வழங்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்துக்கு முஸ்லிம் அரச அதிபரை நியமிக்கவேண்டும் என அமைச்சர் ரிசாத் பதியூதீன் கோரியிருந்தார். அதேவேளை, மன்னார் அரச அதிபராக கிருஸ்தவர் ஒருவர் நியமிக்கவேண்டும் என ஆயர் இல்லம் கேட்டிருந்து.

இந்த நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சரின் ஆலோசனையையும் பெற்று உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு இந்த நியமனங்களை இன்று மாலை வழங்கியது எனத் தெரிவிக்கப்பட்டது.

மன்னார் மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ், வவுனியா மாவட்ட செயலாளர் ஹனீபா இருவரும் இலங்கை நிர்வாக சேவையில் சிறப்பு வகுப்பில் உள்ள நீண்ட கால சேவையுடைய அதிகாரிகளாவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரா.சம்பந்தனை சந்தித்தார் இலங்கைக்கான ஐ.நாவின் வதிவிடப்பிரதிநிதி டெரன்ஸ் டி ஜோன்ஸ்

image_pdfPRINT

இலங்கைக்கான ஐ.நா.வதிவிடப்பிரதிநிதி டெரன்ஸ் டி ஜோன்ஸ் அவர்கள் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் இன்று பாராளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் அமுலாக்கம் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன் அவர்கள் பிரேரணையில் குறிப்பிடப்பட்டிருந்த அநேக விடயங்கள் தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என தெரிவித்தார.

அதேவேளை இலங்கை அரசாங்கமானது இந்த பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியது மட்டுமல்லாது இந்த பிரேரணையை நிறைவேற்றுவதற்கு மேலதிக கால அவகாசத்தினையும் கோரியிருந்த போது அக்கோரிக்கையை சர்வதேச சமூகம் ஏற்று அனுமதித்தும் இருந்தது ஆகவே அரசாங்கமானது தமது வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்க முடியாது என்பதனையும் வலியுறுத்தினார்.

கடந்தகால சம்பவங்கள் மீள் நிகழாமையை உறுதி செய்யும் முகமாக ஒரு புதிய அரசியல் யாப்பு அங்கீகரிக்கப்படுவதின் அவசியத்தினை வலியுறுத்திய இரா சம்பந்தன் மனித உரிமைகள் பேரவையின் பிரேரணையில் உள்ள அம்சங்களில் இது உள்ளடக்கப்பட்டுள்ளதனையும் எடுத்துக்காட்டினார்.

புதிய யாப்பு தொடர்பில் 1988 ஆம் ஆண்டிலிருந்தே பல்வேறு கருமங்கள் இடம்பெற்று வந்துள்ளதினை தெளிவுபடுத்திய இரா. சம்பந்தன் தற்போது இதனை முன்னெடுத்து செல்வதற்கு அரசியல் விருப்பும் தைரியமுமே தேவைப்பாடாக உள்ளதனையும் சுட்டிக்காட்டினார்.

இந்த விடயங்களில் தமது சொந்த மக்களிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் முகமாக தேவைப்படும் அணைத்து அழுத்தங்களையும் கொடுக்கும் அதேவேளை தொடர்ந்தும் இந்த கருமங்களில் எமது ஈடுபாட்டினை கொண்டிருப்போம் எனவும் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் மந்த கதியில் இடம்பெறும் காணி விடுவிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த இரா. சம்பந்தன் எமது காணிகளில் இராணுவம் பண்ணைகள் நடாத்துவதனை அனுமதிக்க முடியாது எனவும் அவர்கள் எமது மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் இத்தகையான பொருளாதார நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் காணி விடுவிப்பு தொடர்பிலான முடிவுகள் எடுப்பதனை தனியே ஆயுதப்படையினரிடம் கையளிக்காமல் அரசாங்கமானது முடிவுகளை எடுத்து அவற்றினை நடைமுறைப்படுத்தவும் வேண்டும் என்பதனை வலியுறுத்தினார்.

மேலும் கருது தெரிவித்த இரா. சம்பந்தன் அரசாங்கமானது தீவிரவாத போக்காளர்களின் பேச்சுக்களுக்கு தேவையற்ற முக்கியத்துவத்தினை கொடுக்கின்றமையானது இனங்களுக்கிடையேயான புரிந்துணர்வினை ஏற்படுத்துவதற்கு தடையாக அமைகின்றமையையும் எடுத்துக்கூறினார்.

இந்த அரசாங்கத்தினை பதவிக்கு கொண்டுவருவதில் பெரும்பங்காற்றிய எமது மக்கள் கடந்த காலத்தில் அரசாங்கம் பாரிய முன்னேற்றங்களை வெளிக்காட்ட முடியாமையினால் அதிருப்தி அடைத்துள்ளார்கள் என தெரிவித்த இரா சம்பந்தன் எமது இளைஞர்கள் தொடர்ந்தும் வேலைவாய்ப்பு போன்ற விடயங்களில் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதனையும் வலியுறுத்தினார்.

மேலும் ஒரு சில விடயங்கள் செய்யப்படுவதன் முக்கியத்துவத்தினை இந்த அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது அந்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

பொறுப்புக்கூறல் விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா. சம்பந்தன் நாங்கள் முழு இராணுவத்தினையும் குற்றவாளிகள் என்று கூறவில்லை ஆனால் நிச்சயமாக பாரிய குற்றங்களை இழைத்த இராணுவ வீரர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

மனித உரிமைகள் பேரவையில் இருந்து ஐக்கிய அமெரிக்கா விலகியிருந்தாலும் 2015 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் அமுலாக்கம் தொடர்பில் அரசாங்கத்தின் மீதான சர்வதேசத்தின் ஈடுபாடு தொடர்ந்தும் மாற்றமடையாமல் இருக்கும் என இதன்போது கருது வெளியிட்ட ஐ நாவின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி தெரிவித்தார்.

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இச்சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரோடு கூட்டமைப்ப்பின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் கலந்து கொண்டிருந்தார்.

“ஞானசாரவை விட்டுவிட்டு ஏன் விஜயகலாவை பிடிக்கிறீர்கள்?”

image_pdfPRINT

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பில் பேசியது சட்டவிரோதம் என்றால் அன்று ஞானசார தேரர் பிரபாகரன் குறித்து என்னிடம் கூறியதும் சட்டவிரோதமே என ‍தேசிய சகவாழ்வு மற்றும் கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோகணேசன் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் நல்லவவர், வல்லவர், அவரை நாம் அவசரப்பட்டு கொன்று புதைத்து விட்டோம். உண்மையில் அவர் இன்னமும் உயிருடன் இருந்திருக்க வேண்டும். இன்று இந்நாட்டில் உள்ள பல பிரபல சிங்கள அரசியல் தலைவர்களை விட பிரபாகரன் சிறந்தவர்.

பிரபாகரன் கொண்ட கொள்கையில் நேர்மையாக இருந்தார். இன்றுள்ள பல சிங்கள அரசியல்வாதிகள், கொண்ட கொள்கைக்கும், நாட்டுக்கும் துரோகம் செய்பவர்கள் என்று பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரே இந்த கருத்தினை பகிரங்கமாக ஊடகங்களின் முன்னால் வந்து என்னிடம் நேரடியாக சொன்னார்.

இந்நிலையில் யாழ். மாவட்டத்தில் சீர்குலைந்துள்ள சட்டம், ஒழுங்கு நிலைமையை கண்டித்து ஒரு யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தன் கோபத்தை வெளிப்படுத்திய விஜயகலா மகேஸ்வரனை மாத்திரம் விமர்சிப்பது ஏன்? புலிகள் இயக்கம் தடை செய்யபட்டுள்ளதால், அதைப்பற்றி விஜயகலா பேசுவது சட்டவிரோதம் என கூறலாம். அப்படியானால், அன்று ஞானசாரர் கூறியதும் சட்ட விரோதம் அல்லவா?

விஜயகலா மகேஸ்வரன் தன் கருத்தை சொல்வதற்கு சரியான சொற்களை பயன்படுத்த தவறியிருக்கலாம். ஒரு இராஜாங்க அமைச்சராக அவரது கருத்தில் உரிய முதிர்ச்சி இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரது கோபம் மிகவும் நேர்மையானது.

அத்துடன் இன்று யாழில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது, சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படுகிறார்கள், போதை வஸ்து கலாசாரம் தலை விரித்து ஆடுகிறது. சினிமா பாணி வாள்வீச்சு நடக்கிறது. இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடுவோரை இரும்பு கரம் கொண்டு அடக்க பொலிஸார் தவறி விட்டனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

யாழ். மாநகர சபை உறுப்பினர் மணிவண்ணனை பதவி நீக்கக் கோரி ரிட் மனு

image_pdfPRINT

தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை அந்தப் பதவியிலிருந்து நீக்க கட்டளையிடுமாறு கோரி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிப்பேராணை மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், தெரிவத்தாட்சி அலுவலகர் உள்பட்டோரை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என யாழ்.மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குள் நிரந்தரமாக வதியாத ஒருவர் உறுப்பினராக தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டமை உள்ளூராட்சி தேர்தல் விதியை மீறும் செயல் என மனுதாரர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே அகில இலங்கை தமிழ் காங்கிரஸால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் வி.மணிவண்ணனை அந்தப் பதவியிலிருந்து நீக்கி கட்டளையிடவேண்டும் என மனுதாரர் கோரியுள்ளார்.

“ஆவலுடன் எதிர்பார்த்தது போன்று எனது மாநகர சபை உறுப்புரிமையை நீக்க கோரி எனக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிகின்றேன்.

புயலாக எழுகின்ற எத்தகைய சவால்களையும் மலையாக நின்று எதிர்கொள்ள நான் தயார். என்னை வெளியேற்ற துடிக்கும் எனது நண்பர்களுக்கு மீண்டும் எனது வாழ்த்துக்கள்” என்று யாழ். மாநகர சபை உறுப்பினரான சட்டத்தரணி மணிவண்ணன் தனது முகநூல் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரனின் மேன் முறையீட்டு நீதிமன்றக் கட்டளை மாகாண ஆளுநரிடம் ஒப்படைப்பு

image_pdfPRINT

வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிப மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சராக சட்டப்படி பா.டெனீஸ்வரன் பதவி வகிக்க வேண்டும். அவரது அமைச்சுக்களைப் பகிர்ந்து கொண்டவர்கள் அந்தப் பதவிகளிலிருந்து உடனடியாக விலகவேண்டும்” என்ற கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் கட்டளை வடக்கு மாகாண ஆளுநருக்கு இன்று கிடைத்துள்ளது,

இதனடிப்படையில் அமைச்சர் பா.டெனீஸ்வரனின் முன்னயை துறைகளை அவருக்கு ஒதுக்கியதன் அடிப்படையில் 5 அமைச்சர்கள் கொண்ட மாகாண அமைச்சர் வாரியத்தின் விவரத்தை தருமாறு வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக முன்னாள் மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் தாக்கல் செய்திருந்த மனு மீதான கட்டளையை மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை வழங்கியது.

வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், தம்மை பதவியில் இருந்து நீக்கியது தவறு என்று உத்தரவிடக் கோரி, முன்னாள் மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

நீதியரசர்கள் குமுதினி விக்ரமசிங்க, ஜானக டி சில்வா ஆகியோரைக் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து கட்டளை வழங்கியது.

இந்த நிலையில் அந்தக் கட்டளை, வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேக்கு அனுப்பிவைக்கப்பட்டது. கொழும்பிலுள்ள ஆளுநர் அலுவலகத்துக்கு கட்டளை இன்று காலை கிடைத்தது.

அதனை ஆராய்ந்த ஆளுநர், அமைச்சர் பா.டெனீஸ்வரனின் முன்னயை துறைகளை அவருக்கு ஒதுக்கியதன் அடிப்படையில் 5 அமைச்சர்கள் கொண்ட வடக்கு மாகாண அமைச்சர் வாரியத்தின் விவரத்தைக் கோரி முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார் என ஆளுநர் அலுவலகத் தகவல் மூலம் தெரிய வருகின்றது.

இதேவேளை, டெனீஸ்வரனின் துறைகளில், போக்குவரத்து அமைச்சை முதலமைச்சர் க.வி.விக்னேஷ்வரன் தன்வசம் எடுத்துக்கொண்டார். விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சுடன் மீன்பிடி அமைச்சும் இணைக்கப்பட்டு அமைச்சர் கந்தையா சிவநேசனுக்கு வழங்கப்பட்டது.

மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கல், விநியோகம் -தொழிற்துறை, தொழில் முனைவோர் மேம்படுத்தல் ஆகியவற்றுடன் வர்த்தக வாணிபத்தினை இணைத்து அமைச்சர் அனந்திர சசிதரனுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!