SHARE

“வடமாகாணம் வந்து நிலைமையைப் பார்த்துச் செல்ல பிரதி அமைச்சரை அன்புடன் அழைக்கின்றேன். இங்கு வந்து இராணுவத்தினரிடமோ பொலிஸாரிடமோ தனது கட்சிக்காரரிடமோ உண்மையைக் கேட்பதில் பயன் இல்லை. பொதுமக்களிடம் கேட்கட்டும். அவர்கள் சொல்வார்கள் யாருக்குப் புனர்வாழ்வு அளிக்க வேண்டும் என்று!

இவ்வாறு வடக்கு மாகாண முதலைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரால் இன்று அனுப்பிவைக்கப்பட்ட கேள்வி பதில் அறிக்கையிலேயே இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கேள்வி – விக்கி, விஜயகலா, சிவாஜிலிங்கத்திற்கு விசுவமடு முகாமில் புனர்வாழ்வளியுங்கள் என்று பிரதி அமைச்சர் இரஞ்சன் இராமநாயக்கா கூறியுள்ளார். இதைப்பற்றி உங்கள் கருத்தென்ன?

பதில் – நான் சிங்களத் திரைப்படத்துடன் சம்பந்தப்பட்ட பலருடன் எனது இளமைக்காலத்தில் பழகியவன். என் நண்பரும் வாசுவின் சகோதரருமாகிய யசபாளித நாணயக்காரவின் நட்பால் இது ஏற்பட்டது.

விஜய் குமாரணதுங்க போன்ற பலரை அறிந்து வைத்திருந்தவன். இரஞ்சனை எனக்கு பழக்கமில்லை. ஆனால் அவர் ஒரு உணர்ச்சி மிகுந்த ஒருவர் என்று எனக்குத் தெரியும். நாம் கூறுவனவற்றையும் செய்வதையும் பத்திரிகை வாயிலாக கண்டு உணர்ச்சிவசப்பட்டு விமர்சிக்கின்றார்.

உண்மையை உணர்ந்த பின்னரே அவரின் வார்த்தைகள் வெளிவர வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். எங்களுக்குப் புனர்வாழ்வளிக்க வேண்டுமா என்று முடிவெடுக்க கௌரவ இரஞ்சன் இராமநாயக்க அவர்களை வடக்கிற்கு கௌரவத்துடனும் அன்புடனும் அழைக்கின்றேன்.

இரத்தினப்பிரிய பந்து இல்லாதவர்களுக்குக் கொடுத்து அவர்களின் அன்பைப் பெற்றுக் கொண்டார். எங்கள் நால்வரிடையில் விஜயகலாவும், சிவாஜிலிங்கமும் நானுமே இல்லாதவர்கள். எமது மக்களுக்குப் பாதுகாப்பில்லை; எமக்கு அதிகாரங்கள் இல்லை; எமது கருத்துக்களுக்கு தெற்கில் இடமில்லை, எமக்கு மதிப்பில்லை; புறக்கணிக்கப்படுகின்றோம்; ஆக்கிரமிக்கப்படுகின்றோம்.

ஆகவே இரத்தினப்பிரிய பந்து போல் எமக்கு வேண்டுவனவற்றை உடனே வழங்க இரஞ்சன் இராமநாயக்க முன்வரவேண்டும். எம்மிடம் இல்லாதவற்றை அவரின் அரசின் ஊடாக எங்களுக்கு வழங்கினால் நாமும் அவர் மேல் அன்பும் மரியாதையும் காட்டுவோம்.

வடமாகாணம் வந்து நிலைமையைப் பார்த்துச் செல்ல பிரதி அமைச்சரை அன்புடன் அழைக்கின்றேன். இங்கு வந்து இராணுவத்தினரிடமோ பொலிஸாரிடமோ தனது கட்சிக்காரரிடமோ உண்மையைக் கேட்பதில் பயன் இல்லை.

பொதுமக்களிடம் கேட்கட்டும். அவர்கள் சொல்வார்கள் யாருக்குப் புனர்வாழ்வு அளிக்க வேண்டும் என்று – என்றுள்ளது.

Print Friendly, PDF & Email