SHARE

தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை அந்தப் பதவியிலிருந்து நீக்க கட்டளையிடுமாறு கோரி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிப்பேராணை மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், தெரிவத்தாட்சி அலுவலகர் உள்பட்டோரை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என யாழ்.மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குள் நிரந்தரமாக வதியாத ஒருவர் உறுப்பினராக தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டமை உள்ளூராட்சி தேர்தல் விதியை மீறும் செயல் என மனுதாரர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே அகில இலங்கை தமிழ் காங்கிரஸால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் வி.மணிவண்ணனை அந்தப் பதவியிலிருந்து நீக்கி கட்டளையிடவேண்டும் என மனுதாரர் கோரியுள்ளார்.

“ஆவலுடன் எதிர்பார்த்தது போன்று எனது மாநகர சபை உறுப்புரிமையை நீக்க கோரி எனக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிகின்றேன்.

புயலாக எழுகின்ற எத்தகைய சவால்களையும் மலையாக நின்று எதிர்கொள்ள நான் தயார். என்னை வெளியேற்ற துடிக்கும் எனது நண்பர்களுக்கு மீண்டும் எனது வாழ்த்துக்கள்” என்று யாழ். மாநகர சபை உறுப்பினரான சட்டத்தரணி மணிவண்ணன் தனது முகநூல் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email