SHARE

வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிப மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சராக சட்டப்படி பா.டெனீஸ்வரன் பதவி வகிக்க வேண்டும். அவரது அமைச்சுக்களைப் பகிர்ந்து கொண்டவர்கள் அந்தப் பதவிகளிலிருந்து உடனடியாக விலகவேண்டும்” என்ற கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் கட்டளை வடக்கு மாகாண ஆளுநருக்கு இன்று கிடைத்துள்ளது,

இதனடிப்படையில் அமைச்சர் பா.டெனீஸ்வரனின் முன்னயை துறைகளை அவருக்கு ஒதுக்கியதன் அடிப்படையில் 5 அமைச்சர்கள் கொண்ட மாகாண அமைச்சர் வாரியத்தின் விவரத்தை தருமாறு வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக முன்னாள் மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் தாக்கல் செய்திருந்த மனு மீதான கட்டளையை மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை வழங்கியது.

வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், தம்மை பதவியில் இருந்து நீக்கியது தவறு என்று உத்தரவிடக் கோரி, முன்னாள் மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

நீதியரசர்கள் குமுதினி விக்ரமசிங்க, ஜானக டி சில்வா ஆகியோரைக் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து கட்டளை வழங்கியது.

இந்த நிலையில் அந்தக் கட்டளை, வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேக்கு அனுப்பிவைக்கப்பட்டது. கொழும்பிலுள்ள ஆளுநர் அலுவலகத்துக்கு கட்டளை இன்று காலை கிடைத்தது.

அதனை ஆராய்ந்த ஆளுநர், அமைச்சர் பா.டெனீஸ்வரனின் முன்னயை துறைகளை அவருக்கு ஒதுக்கியதன் அடிப்படையில் 5 அமைச்சர்கள் கொண்ட வடக்கு மாகாண அமைச்சர் வாரியத்தின் விவரத்தைக் கோரி முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார் என ஆளுநர் அலுவலகத் தகவல் மூலம் தெரிய வருகின்றது.

இதேவேளை, டெனீஸ்வரனின் துறைகளில், போக்குவரத்து அமைச்சை முதலமைச்சர் க.வி.விக்னேஷ்வரன் தன்வசம் எடுத்துக்கொண்டார். விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சுடன் மீன்பிடி அமைச்சும் இணைக்கப்பட்டு அமைச்சர் கந்தையா சிவநேசனுக்கு வழங்கப்பட்டது.

மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கல், விநியோகம் -தொழிற்துறை, தொழில் முனைவோர் மேம்படுத்தல் ஆகியவற்றுடன் வர்த்தக வாணிபத்தினை இணைத்து அமைச்சர் அனந்திர சசிதரனுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email