Home Blog Page 271

சர்வதேச விசாரனையை வழியுறுத்தி கவனயீர்ப்பு பேரணி

image_pdfPRINT

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான இன்று வியாழக்கிழமை மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச விசாரனையை வழியுறுத்தி கவனயீர்ப்பு பேரணி இடம் பெற்றது. 

மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் காலை  10.30 மணியளவில் குறித்த பேரணி ஆரம்பமானது. குறித்த பேரணியில் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும்  யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் இருந்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் அமைப்புக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டிருந்தனர். 

மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து ஆரம்பமான குறித்த பேரணி மன்னார் பொது வைத்தியசாலை பிரதான வீதியூடாக சென்று மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்தது.

அதனைத் தொடர்ந்து மன்னார் மாவட்டச் செயலகத்தை சென்றடைந்தது. அங்கு ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட மகஜர் வாசிக்கப்பட்டு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. 

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார்

image_pdfPRINT

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்டவர் முல்லைத்தீவு முறுகண்டியைச்  சேர்ந்த 32 வயதான கருப்பையா நித்தியகலா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பாதுகாப்பு உத்தியோகத்தரின் இடுப்புப் பட்டி மற்றும் இரண்டு நீல மற்றும் சிவப்பு பேனைகள் இருந்ததால் இவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் என சந்தேகம் கொண்டு தேடுதளில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கிளிநொச்சியில் உள்ள அனைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களை மேற்பார்வை செய்யும் நிறுவனங்களுக்கு சென்று பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் யாரும் இன்று வருகை தரவில்லை என வினவிய பொழுது அறிவியல் நகரில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் ஒரு உத்தியோகத்தர் வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ஆடைத் தொழிற்சாலை உத்தியோகத்தர்களுடன் அவரது வீட்டுக்கு சென்று அவரது உறவினர்களிடம் விசாரித்ததன் பின்னர் அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்து சென்று சடலம் அவர் தான் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் யுவதி சடலமாக மீட்பு; அருகில் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளின் உடமைகள் கண்டெடுப்பு

image_pdfPRINT

கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் பதின்ம வயது சிறுமி ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.

பன்னங்கண்டி பகுதியில் உள்ள இரணைமடு நீர்பாசன கால்வாய்க்குள் சடலம் ஒன்று காணப்படுவதாக ஊரவர்கள் கிளிநொச்சி பொலிசாருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை சடலம் காணப்பட்ட பகுதிக்கு அருகில் சிவில் பாதுகாப்பு படைப்பிரிவினரின் சீருடைக்கான இடுப்பு பட்டி (பெல்ட்) பேனாக்கள் , மோட்டார் சைக்கிள் திறப்பு , காற்சங்கிலி , உள்ளிட்ட தடய பொருட்களையும் பொலிசார் மீட்டு உள்ளனர்.

அத்துடன் குறித்த பெண்ணின் ஆடைகள் அலங்கோலமாக உள்ளமையால்,  பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் சடலத்தின் முக பகுதியில் கடும் காயங்கள் உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படாமையால் , பெண்ணை வேறு இடத்தில் இருந்து கடத்தி வந்து இருக்கலாம் எனும் கோணத்திலும் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

காணாமல் போனோர் தினம்; கவனயீர்பு போராட்டத்திற்கு அழைப்பு

image_pdfPRINT

சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ் மாவட்டத்தில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

வடக்கு மாகாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மேற்கொள்ளப்படும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி ஒரு வருடங்களை கடந்து அவர்களின் உறவுகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்சியான போராட்டம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

சர்வதேசம் நீதியை பெற்று தர வேண்டும் என கோரி தமது போராட்டத்தை பல்வேறு விதத்தில் தொடர்கிறார்கள். அந்தவகையில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட திகதியை முன்னிட்டு எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக முன்றலில் முன்னெடுக்கவுள்ளனர்.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து தரப்பினரையும் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த தினத்தன்று பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்களாலும் பிரித்தானியாவின் North Terrace, Trafalgar Square WC2N 5DX எனும் இடத்தில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதில் பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்களை கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மைத்திரிக்கு மகஜர்!

image_pdfPRINT

முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களுக்கு எதிராக மகாவலிக்கு எதிரான தமிழர் மரபுரிமை பேரவையின் ஏற்பாட்டில்  இன்றைய தினம்  முல்லைத்தீவில் முன்னேடுக்கப்பட்ட போராட்டத்தின் இறுதியில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு சென்று மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கோதீஸ்வரனை சந்தித்து ஜனாதிபதியிடம் கையளிக்க கோரி  மகஜர் ஒன்றிணையும் கையளித்துள்ளனர்.

மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத் தலைவர்களான விஜயகுமார் நவநீதன் , வைத்திய நிபுணர் எஸ் .சுதர்சன், மற்றும் இலூஜி ஆம்ஸ்ரோங் அடிகளார் ஆகியோர் இணைந்து கையளித்த குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

01. மகாவலி எதிர்ப்பு மரபுரிமை பேரவையினராகிய நாங்கள் முல்லை மாவட்ட சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் கிராமமட்ட அமைப்புக்கள் சார்பாக எமது அதிருப்தியினைத் தெரிவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். மகாவலி திட்டத்தினால் இழைக்கப்படுகின்ற அநீதிகள் மற்றும் எமது மக்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்கள் தொடர்பாக தங்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய வரலாற்றுக் கடமையை நாம் தவற விட விரும்பவில்லை.

02. மணலாறு (வெலியோயா) பிரதேச செயலாளர் பிரிவை மையப்படுத்தி வட மத்திய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் எல்லைகளை உள்ளடக்கிய வகையிலே மகாவலி எல் (L) வலயத்திட்டத்தின் கீழ் பாரிய உள்கட்டுமான அபிவிருத்தி வேலைகள் நடைபெறுவதனை நாமறிவோம். 2009 போர் முடிவடைந்த பின்னர் மகாவலி ” எல்” வலயத்தின் கீழ் மணலாறு பிரதேச செயலாளர் பிரிவில் 6000 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன.

இக்குடியேற்றங்களுக்காக 1984 ஆம் ஆண்டு பலவந்தமாக விரட்டியடிக்கபட்ட தமிழ் மக்களுக்கு சொந்தமான 2000 ஏக்கர் காணிகளும் மேலும் பல ஆயிரம் ஏக்கர் காணிகளும் சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு காணி உறுதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன.

குடிநீர் வளங்கல், மின்சாரம், போக்குவரத்து, சுகாதாரம், சுயதொழில் வாய்ப்புக்கள் மற்றும் கல்வி அபிவிருத்திச் செயற்பாடுகளக்காக  3000 மில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட நிதி மகாவலி அபிவிருத்தி திட்டதின் கீழ் மணலாறு பிரதேச செயலாளர் பிரிவில் செலவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தினூடாக தமிழர்களுக்கு எந்தப் பயனும் இன்றுவரை கிடைக்கவில்லை.

03. முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்ட எல்லைகளை உள்ளடக்கிய மணலாறு பிரதேச செயலகப் பிரிவானது திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்கும், வட கிழக்கின் எல்லைகளை துண்டாடி வடக்கையும் கிழக்கையும் நிரந்தரமாக பிரிப்பதற்கான அரசின் தந்திரோபாய நடவடிக்கையாகவே நாம் கருதுகின்றோம்.

04. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் பெரும் பகுதிகள் மகாவலி அரசாணையின் கீழ் ஏற்கனவே மகாவலி ”எல் (L)” வயலத்திற்குள் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் மகாவலி தனது நடவடிக்கைகளை மணலாறு பிரதேச செயலாளர் பிரிவோடு மட்டுப்படுத்தியிருந்தது.

 அண்மையில் கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் மற்றும் கொக்கிளாய் பகுதிகளில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 8 சிங்கள மீனவர்களுக்கு மகாவலி அதிகாரசபையினால் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதனூடாக மகாவலி அதிகார சபையானது கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவினுள் தனது காணி அதிகாரத்தினை பிரயோகிக்க ஆரம்பித்துள்ளது.

05. மகாவலி எல் (L) வலய மற்றும் முன்மொழியப்பட்டுள்ள மகாவலி வலயங்கள் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்கும் வட மாகாணத்தின் சனத்தொகையை கட்டமைக்கப்பட்ட ரீதியில் மாற்றியமைப்பதற்குமான அரசின் முயற்சியாகவே நாம் கருதுகின்றோம்.

06. தொல்லியல் திணைக்களம் திட்டமிட்ட வரலாற்றுத் திரிபுகளை மேற்கொள்வதோடு தமிழர்களின் கலாசார மற்றும் சமய முக்கியத்துவம் மிக்க இடங்கள் பழைமை வாய்ந்த பௌத்த விகாரைகளாக உண்மைக்கு புறம்பாக பிரகடனப்படுத்தி வருகிறது.

செம்மலை நீராவி பிள்ளையார் ஆலய பழைமை வாய்ந்த பௌத்த விகாரையாகப்பிரகடனப்படுத்தப்பட்டமை அண்மைய உதாரணமாகும்.

07.முல்லைத்தீவின் ஆயிரக்கணக்கான ஏழை மீனவர்களின் வாழ்வாதார மூலமாக இருக்கின்ற நந்திக்கடல் மற்றும் நாயாறுக் களப்புக்கள் மீன்பிடி செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டு இயற்கைப் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது ஆயிரக் கணக்கான ஏழை மீனவர்களின் வருவாய் உழைப்பையும் வாழ்வாதாரத்தையும்மோசமாகப் பாதிக்கும் செயற்பாடாகும்.

08. ஜனாதிபதி அவர்களே, போருக்குப் பின்னரான இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு முல்லை மாவட்ட மக்கள் சிக்கல் நிறைந்த இடர்பாடுகளை சந்தித்து வருகின்றார்கள். அரசின் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் சட்டதிட்டங்கள் காரணமாக எமது மக்கள் சொல்லொணா துன்பங்களை எதிர்கொண்டுள்ளார்கள். உங்களுடைய தலைமைத்துவத்தின் கீழ் இந்த நாட்டின் குடி மக்களான எமக்கு கருத்துக்களை வெளிப்படையாகத் தெரியப்படுத்துவதற்கும் நின்மதிப் பெருமூச்சு விடுவதற்கும் எமக்கு அருகதையிருப்பதாகவே கருதுகின்றோம்.

எமது கோரிக்கைகளாவன,

1. மகாவலித் திட்டத்தின் நன்மை, தீமைகள், சவால்கள் மற்றும் சிக்கல் தன்மைகளை கருத்திற் கொண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற மகாவலி திட்டச் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறும் வடக்கின் ஏனைய பகுதிகளில் விஸ்தரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள திட்ட முன்மொழிவுகளை கைவிடுமாறும் தங்களை வினையமுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

2. கொக்கிளாய், கொக்கத்தொடுவாய் மற்றும் கருநாட்டுக்கெணி கடற்கரையில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் சிங்கள மீனவர்களுக்கு மகாவலி அதிகார சபையால் வழங்கப்பட்டுள்ள காணி அனுமதிப்பத்திரங்கள் உடனடியாக மீளப் பெற வேண்டும்.

3. 1984 வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு சொந்தமான, நீதிக்கு புறம்பாக சிங்கள மக்களுக்கு பிரித்து வழங்கப்பட்ட 2000 வாழ்வாதார நிலங்கள் அதன் உண்மையான உரிமையாளர்களான தமிழ் மக்களுக்கு மீள வழங்க வேண்டும்.

4. தமிழர்களின் மரபுரிமையை திட்டமிட்டு சீரழிக்கும் நோக்குடன் மாவட்ட அரசாங்க அதிகாரிகளையும் கிராமிய அமைப்புக்களையும் கலந்துரையாடாது வரலாற்று திரிபை ஏற்படுத்தும் நோக்கோடு தன்னிச்சையாகசெயற்படும் தொல்லியல் திணைக்களத்தின் நீதிக்குப் புறம்பான செயல்பாடுகள் உடன் நிறுத்தப்பட வேண்டும்.

5. வடக்கையும் கிழக்கையும் நிரந்தரமாக பிரிக்கும் நோக்கோடு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வடகிழக்கு எல்லைக் கிராமங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேங்களை உடன் நிறுத்த தவறும் பட்டசத்தில் அது இன நல்லிணக்கத்தை மிக மோசமாக பாதிக்கும்.

6. ஏழை மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு இயற்கைப் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நந்திக்கடல், நாயாற்றுக் களப்புக்கள் மீண்டும் சட்ட ரீதியாக மீன்பிடி நடவடிக்கைகளுக்கு அனுமதியளிக்கப்பட்ட வேண்டும்.

ஆகவே ஜனாதிபதி விரைவாக எமது கோரிக்கைகளை ஏற்று நியாயமான தீர்வினை வழங்குவதனூடாக சமாதானம் நல்லிணக்க முயற்சிகளுக்கு உரமூட்டுமாறு தங்களை தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம் என்று மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவையினர் கையளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாவலி நில ஆக்கிரமிப்பு; முல்லைத்தீவில் திரண்ட எதிரப்பு

image_pdfPRINT

முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களுக்கு எதிரான 3 அம்ச கோரிக்கையை முன்வைத்து மகாவலிக்கு எதிரான தமிழர் மரபுரிமை பேரவையின் ஏற்பாட்டில்  இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

https://youtu.be/7jWjSRetFg4

மகாவலி அதிகாரசபையினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களான கொக்கிளாய், கொக்குதொடுவாய், கருணாட்டுக்கேணி ஆகிய கிராமங்களில் தமிழ் மக்களின் நிலங்களில் அடாத்தாக தங்கியுள்ள சிங்கள மக்களுக்கு காணி உத்தரவு பத்திரங்களை மகாவலிஅதிகார சபை வழங்கியுள்ளது.

இதேபோல் மகாவலி அதிகாரசபை தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து வருகின்றனர் என குற்றம் சாட்டி , அதனால் மகாவலி நீர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தேவையில்லை.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களின் தொல்லியல் அடையாள சிதைப்பு, கலை, கலாச்சார, பண்பாட்டு சிதைப்பு ஆகியவற்றை உடன் நிறுத்தவேண்டும். தமிழர் நிலங்களில் அடாத்தாக தங்கியுள்ள தென்னிலங்கைச் சிங்கள மீனவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள காணி உத்தரவு பத்திரங்களை உடன் இரத்துச் செய்யவேண்டும். என்ற 3 அம்ச கோரிக்கையை முன்வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அவுஸ்திரேலியாவில் தமிழ் அகதி மரணம்

image_pdfPRINT

தற்கொலை முயற்சி செய்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவுஸ்திரேலியா வாழ் தமிழ் அகதியான வசந்தகுமார் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

வவுனியா கோவில்குளம் பகுதியை சேர்ந்த ஐந்து பெண்பிள்ளைகளின் தந்தையான இவர் மன அழுத்தம் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையிலேயே தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்திருந்தார்.

பின்னர் மீட்கப்பட்ட அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அவருக்கான செயற்கை சுவாசம் நேற்று மாலை நிறுத்தப்பட்டிருந்தது.

அவரிற்கான செயற்கை சுவாசத்தை மீள வழங்க கோரி காணொலி மூலம் அவரது பிள்ளைகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இக்காணொலி வைரலாகி அனைத்து மக்களிடையேயும் மனவேதனையினை தோற்றுவித்திருந்தது.

எனினும் அனைவரது வேண்டுகையினையும் தாண்டி அவரது மரணம் நிகழந்துள்ளது.

குறித்த அகதியின் விடயத்தில் அவுஸ்திரேலிய அரசோ சம்பந்த பட்ட அதிகாரிகளோ உரிய முயற்சிகளை விரைந்து செய்ய தவறியமையே இம் மரணத்துக்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

யாழ் சிங்கள மகாவித்தியாலயத்தில் ஆறு இன மக்களும் கல்வி கற்றனராம்!

image_pdfPRINT

வடக்கில் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் மீண்டும் உருவாக்குவதற்காகவே  சிங்கள மகா வித்தியாலயத்தை மீள ஆரம்பிக்க வேண்டுமென, அப்பாடசாலை பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகிய தாம் வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்தனர்.

யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தில், இன்று ஞாயிற்றுக்கிழமை  (26) நடைபெற்ற சிங்கள மகா வித்தியாலய பழைய மாணவர் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடலின்போதே, அவ்வாறு தெரிவித்தனர்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

சுமார் 30 வருடங்களின் பின்னர், பல மாவட்டங்களிலும், வெளிநாடுகளிலிருந்தும் ஒன்று கூடிய சிங்கள மகா வித்தியாலய பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இப்பாடசாலையை மீண்டும் ஆரம்பிக்கும் நோக்கில், ஒன்றுகூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வருகின்றோம்.

கடந்த 30 வருடங்களுக்கு முன்னர், தமிழ் , சிங்களம், முஸ்லீம் , போறா , மலே மற்றும் பறங்கியர் என ஆறு இனங்களை சேர்ந்த மாணவர்கள் இந்தப் பாடசாலையில் கல்வி பயின்றுள்ளனர்.இதன்போது, ஆறு இன  மாணவர்களும் கல்வி பயிலும் போது, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துடன், கல்வியை கற்றனர்.

மாணவ பருவத்தில் இருந்த போது, இன, மத வேறுபாடுகளை தோற்றுவிக்காததுடன், யார் எந்த இனத்தவர்கள் என்று தெரியாத அளவுக்கு இப்பாடசாலையில் கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

எனவே, வடக்கு மாகாணத்தில் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த, சிங்கள மகா வித்தியாலயம் ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து, இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தினை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், சிங்கள மகா வித்தியாலயத்தை மீளவும் இயக்குவதற்காக, நோக்கத்துடன் இந்த சங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்கம் தொடர்பாக இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் பேசப்பட்டு வருகின்றது. ஆனால் யாழ்ப்பாண மாவட்டத்தில் நல்லிணக்கத்தைப் பற்றி பேசியதை காணமுடியவில்லை.

நல்லிணக்கத்தை உருவாக்க முதன்முதலில் பாடசாலை ஒன்றை உருவாக்க வேண்டும். அதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக  முன்னர் இயங்கிய இந்தப் பாடசாலையை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும்.

நாட்டில் இடம்பெற்ற அசம்பாவிதங்களின் பின்னர், பாடசாலை எரிக்கப்பட்டது. 1989ஆம் ஆண்டு இந்திய இராணுவம் வந்த போது, பாடசாலையை விட்டு வெளியேறினோம்.

மீண்டும் இப்பாடசாலையை ஆரம்பித்து எமக்குள் இருந்த ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் – சிங்கள மக்கள் மிகவும் ஒற்றுமையுடன் வாழ்கின்றார்கள்.

வடக்கிலும் அந்த சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். பாடசாலையை மீள ஆரம்பிப்பதன் மூலம் ஒற்றுமையும் நல்லிணக்கமும் தானாகவே உருவாகும் என தெரிவித்தனர்

இராணுவ முகாம் அவசியம் என்கிறார் யாழ்.சிங்கள மகாவித்தியாலய பழைய மாணவர் சங்க தலைவர்

image_pdfPRINT

சிங்கள மகா வித்தியாலயத்தில் இயங்கும் இராணுவ படைத்தளத்தை அகற்ற கோரும் எண்ணம் எமக்கு தற்போது இல்லை என யாழ்.சிங்கள மகாவித்தியாலய பழைய மாணவர் சங்க தலைவர் கெனடி சேவியர் தெரிவித்துள்ளார்.

கடந்த 1956 ஆம் ஆண்டு தனி சிங்கள சட்டம் கொண்டு வரப்பட்டு 12 ஆண்டுகளுக்கு பின்னர் 1965ஆம் ஆண்டு சிங்கள மகாவித்தியாலயம் யாழில் நிறுவப்பட்டது.

அன்று முதல் 1985ஆம் ஆண்டு வரையிலான கால பகுதியில் யாழில் குறித்த பாடசாலை இயங்கி வந்துள்ளது. 1985ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பாடசாலை மூடபப்ட்டது.

இந்நிலையில் குறித்த பாடசாலை கட்டடத்தில் தற்போது இராணுவத்தினர் தமது 512 படைப்பிரிவின் பாரிய முகாமை அமைத்துள்ளனர்.

தற்போது மீளவும் குறித்த பாடசாலையினை ஆரம்பிக்க வேண்டும் என பாடசாலையில் கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளனர்.

அந்நிலையில் , சிங்கள மகா வித்தியாலய கட்டத்தில் இயங்கும் இராணுவத்தினரின் 512 படைத்தளத்தை அகற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளீர்களா என பழைய மாணவர் சங்க தலைவர் கெனடி சேவியரிடம் ஊடகவியலாளர்கள் வினாவிய போது,

இராணுவ முகாமை அகற்றும் சிந்தனை எம்மிடம் இல்லை. எமக்கு இராணுவ முகாம் அவசியம். முதற்கட்டமாக வாடகைக்கு இடத்தினை பெற்று ஆரம்ப பிரிவினை நடாத்தவே எண்ணியுள்ளோம்.

பாடசாலையை மீள ஆரம்பிப்பது தொடர்பில் யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதியுடன் பேசி இருந்தோம். அதனை கேட்டு அவர் மிகுந்த சந்தோசம் அடைந்தார். தன்னால் ஆனா உதவிகளையும் தேவைகளையும் வழங்க உடன்பட்டுள்ளார்.

முதற்கட்டமாக பாடசாலையை ஆரம்பித்து முன்னேற்றத்தை காட்டிய பின்னர் எமது தேவைகளை கல்வித்திணைக்களத்திடம் கோரி பெற்றுக்கொள்வோம் என தெரிவித்தார்.

சங்குப்பிட்டி பாலத்தில் விபத்து

image_pdfPRINT

யாழ்.மன்னார் A -32 வீதியில் சங்குப்பிட்டி பாலத்தில் ஏற்பட்ட விபத்து சம்பவத்தில் குடும்ப பெண் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவரது கணவர் சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சையின் பின்னர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில் பண்டத்தரிப்பை சேர்ந்த குயின்ஸ் சாளினி (வயது 23) எனும் குடும்ப பெண்ணே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபப்ட்டு உள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ,

சங்குபிட்டி பாலத்தில் ஏறிய கனரக வாகனம், இயந்திரக் கோளாறு காரணமாக பாலத்திலிருந்து பின் நோக்கி வந்துள்ளது. அதன் போது , வாகனத்தின் பின்னால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் தம்பதியர் நிலை தடுமாறு வீதியில் வீழ்ந்துள்ளனர்.

வீதியில் விழுந்த கணவர் சுதாகரித்து உடனடியாக எழுந்த போதும், மனைவி எழும்ப தாமதித்தால், வாகனத்தின் சக்கரங்கள் அவர் மீது ஏறியுள்ளது. அதனால் படுகாயமடைந்துள்ளார்.

உடனடியாக அந்த இடத்திலிருந்தவர்களால் அந்தப் பெண் மீட்கப்பட்டு பூநகரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவரது கணவரும் சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த குடும்பப் பெண்ணின் மீது கனரக வாகன சக்கரம் ஏறியதால், அவரது ஈரல் பகுதியில் கண்டல் காயம் ஏற்பட்டு உள்ளது. அதனால் மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றபப்ட்டார். அவரது கணவர் சிகிச்சையின் பின்னர் வீடு செல்ல அனுமதிக்கபப்ட்டார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பெண்ணுக்கு இன்று மாலை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்தும் அவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதேவேளை அவருக்கு நெஞ்சுப் பகுதி எலும்புக் கூட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக வைத்திய சாலை வட்டார தகவல்கள் தெரிவிகின்றன.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முதலமைச்சரை எதிர்ப்பது எமது நோக்கமல்ல-புளொட்

image_pdfPRINT

தமிழ் மக்களின் தேவைகளுக்காக அவர்களின் விருப்பத்துடனேயே வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஐனாதிபதியின் செயலணிக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பு தெரிவித்துள்ளது.

இக் கூட்டத்தில் கூட்டமைப்பு கலந்து கொள்வதால் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்விலோ அல்லது இதர விடயங்களிலோ எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ள புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் வடக்கு முதலமைச்சரை எதிர்ப்பதற்காக இத்தகையதொரு முடிவை கூட்டமைப்பு எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான ஐனாதிபதியின் செயலணிக் கூட்டத்தில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளாது அந்தக் கூட்டத்தைப் புறக்கணிக்க வேண்டுமென வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்மந்தனிடம் கடந்த 22 ஆம் திகதி கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் அன்றையதினம் இடம்பெற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்றக் கூட்டத்தில் கட்சித் தலைவரால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டிருந்தது. ஆனாலும் ஐனாதிபதி செயலணியில் கலந்து கொள்ள வேண்டுமென பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்ததற்கமைய செயலணியில் கலந்து கொள்வதென நாடாளுமன்றக் குழு தீர்மானித்திருந்தது.

கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் மேற்படி முடிவை கடுமையாக விமர்சித்து அறிக்கையொன்றை வெளியிட்டிருந்த வடக்கு மாகாண முதலமைச்சர் பணத்தையும் செல்வாக்கையும் எதிர்பார்த்தே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். அத்தோடு இச் செயலணியில் கலந்து கொள்வதால் ஏற்படும் பாதக நிலைமைகள் தொடர்பிலும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும் இது முதலமைச்சரை எதிர்ப்பதாக நினைத்துக் கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவாகச் செற்படும் முடிவென்றும் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பீ.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் விமர்சித்திருந்தார்.

இவ்வாறானதொரு நிலையிலையே கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தனிடம் இது குறித்து வினவிய போது அவர் பல விடயங்களைத் தெரிவித்திருந்தார்.

மேலும் தெரிவித்துள்ளதாவது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் கடந்த சில தினங்களிற்கு முன்னர் நடைபெற்றிருந்தது. அதன் போது ஐனாதிபதி செயலணிக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளக் கூடாதென வடக்கு முதலமைச்சர் தெரிவித்துள்ள விடயம் குறித்து பேசப்பட்டது. அதன் போது எமது மக்களுக்காக அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்று ஒரு முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது.

ஆந்த முடிவானது கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான ரொலோ ,புளொட், மற்றும் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்தே எடுத்திருந்தது. அதில் நான் கலந்து கொள்ளாது விடினும் எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டிருந்தார்.

இப்படியே தீர்வு வரும் தீர்வு வருமென்று கடந்த பல வருடமாக இழுபட்டுக் கொண்டிருக்கின்றோம். அதற்காக இனியும் அபிவிருத்தி வேலைகளில் நாங்கள் பங்கெடுப்பதை தவிர்த்துக் கொண்டிருக்காமால் அபிவிருத்தியையும் செய்து கொண்டு அரசியல் தீர்வையும் நோக்கிப் பயணிப்போம் என்று கூறியே அத்தகையதொரு முடிவெடுக்கப்பட்டிருக்கின்றது. அதை நானும் ஏற்றுக் கொள்கிறேன்.

ஏனெனில் இக் கூட்டத்திற்குப் போகாமல் விடுவதால் உடனடியாக அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வந்து தீர்வைக் காணப் போவதில்லை. ஆகையினால் அதற்குப் போவதால் இயலுமான வேலைகளைச் செய்து கொண்டு பயணிக்கலாம் என்று நினைக்க முடியும். இவ்வாறே தொடர்ந்தும் தீர்வு வரும் வரும் என்று இருந்தால் எமது மக்கள் தான் பாவம். ஆகையினால் அவர்களுக்காக அபிவிருத்தியை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டியிருக்கின்றது.

மேலும் பணம் செல்வாக்கை எதிர்பார்த்து இத்தகையதொரு முடிவு எடுக்கப்படவில்லை. அபிவிருத்தி நோக்கம் கருதி மக்களுக்காகவே தான் அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது. ஏனெனில் நாங்கள் போவதென ஏற்கனவே ஒரு நிலைப்பாடு இருந்தது.

மேலும் முதலமைச்சர் போக வேண்டாம் என்று கூறியதனால் தான் நாங்கள் போகிறதாகவும் அல்ல. அத்தோடு இந்த முடிவானது முதலமைச்சரைத் தோற்கடிக்க வேண்டுமென்பதற்காக எடுக்கப்பட்டதாக நான் கருதவில்லை.

ஆனால் தமிழரசுக் கட்சியினர் என்ன நோக்கத்திற்காக அப்படியொரு முடிவை எடுத்தார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் முதலமைச்சருடைய கருத்தை எதிர்க்க வேண்டும் அல்லது அவரைத் தோற்கடிப்பதற்காக அந்த முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறுகின்றோம்.

குறிப்பாக அவிருத்தியை முன்னெடுக்கின்ற அதே நேரத்தில் அரசியல் தீர்வையும் நாங்கள் வலிறுத்துவோம். இவ்வாறு இந்த இரண்டும் சமாந்தரமாக கொண்டு செல்லப்பட வேண்டுமென்பதே எங்களுடைய நிலைப்பாடு ஆகும். என மேலும் தெரிவித்தார்.

முல்லையில் மகாவலி அதிகார சபையின் அத்துமீறலுக்கு எதிராக போராட்டம்

image_pdfPRINT

முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களுக்கு எதிரான 3 அம்ச கோரிக்கையை முன்வைத்து “மகாவலிக்கு எதிரான தமிழர் மரபுரிமை பேரவை” எதிர்வரும் 28ம் திகதி தொடக்கம் முல்லைத்தீவில் பாரியளவிலான தொடர் மக்கள் போராட்டம் ஒன்றுக்கான பகிரங்க அழைப்பினை விடுத்துள்ளது.

மகாவலி அதிகாரசபையினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களான கொக்கிளாய், கொக்குதொடுவாய், கருணாட்டுக்கேணி ஆகிய கிராமங்களில் தமிழ் மக்களின் நிலங்களில் அடாத்தாக தங்கியுள்ள சிங்கள மக்களுக்கு காணி உத்தரவு பத்திரங்களை மகாவலி அதிகார சபை வழங்கியுள்ளது.

இதேபோல் மகாவலி அதிகாரசபை தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்துவரும் நிலையில் மாவட்டத்தில் உள்ள புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள், கல்வியலாளர்கள், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இணைந்து மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவை எ ன்ற அமைப்பு ஒன்றை ஸ்தாபித்துள்ளனர்.

இந்த அமைப்பினாலேயே போராட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மகாவலி நீர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தேவையில்லை. முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களின் தொல்லியல் அடையாள சிதைப்பு, கலை, கலாச்சார, பண்பாட்டு சிதைப்பு ஆகியவற்றை உடன் நிறுத்தவேண்டும். தமிழர் நிலங்களில் அடாத்தாக தங்கியுள்ள தென்னிலங்கைச் சிங்கள மீனவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள காணி உத்தரவு பத்திரங்களை உடன் இரத்துச் செய்யவேண்டும். என்ற 3 அம்ச கோரிக்கையை முன்வைத்து எதிர்வரும் 28ம் திகதி காலை 11மணி தொடக்கம் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக பாரிய தொடர் மக்கள் போராட்டம் ஒன்றுக்கான அழைப்பை விடுத்துள்ளது.

இந்த போராட்டத்தில் வடமாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களையும் சேர்ந்த புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள், கல்வியலாளர்கள், நடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், நகரசபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், அரசியல் கட்சி சார்ந்தவர்கள், இளைஞர், யுவதிகளை கலந்து கொள்ளுமாறு அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

error: Content is protected !!