சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு அனுப்பியே தீருவோம் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மீண்டும் சூளுரைத்துள்ளார்.
ருவாண்டா திட்டத்துக்கு, நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகள் முட்டுக்கட்டையாக இருந்ததாக சுட்டிக்காட்டிய பிரிதமர் ரிஷி,
இனியும் தாமதிக்க முடியாது எனவும், இன்றிரவு (22) நாடாளுமன்றம் கூடும் எனவும், ருவாண்டா திட்டம் தொடர்பில் வாக்கெடுப்பு நடந்தே தீரும் எனவும் கூறியுள்ளார்.
இனி, ஆனால், ஒருவேளை, என்ற பேச்சுக்கெல்லாம் இடமே கிடையாது என தெரிவித்த ரிஷி சுனக், இன்னும், 10 அல்லது 12 வாரங்களில் ருவாண்டாவுக்கு விமானங்கள் போயே தீரும் என தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் கருத்தின்படி, ஜூலை மாதத்தில் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தும் விமானங்கள் புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மட்டக்களப்பு, வாகரைப் பிரதேசத்தில் அபிவிருத்தி என்ற போர்வையில் மேற்கொள்ள திட்டமிடப்படும் இறால் வளர்ப்பு திட்டம் மற்றும் இல்மனைட் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பக பிரதேச பொதுமக்களால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒன்று கூடிய மக்கள் கையில் பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி, இல்மனைட் அகழ்வை முற்றாக தடை செய்ய வேண்டும் என்றும் சூழலை பாதிக்கும் இறால் வளர்ப்பு திட்டம் தங்களுக்கு வேண்டாம் என்றும் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.
பிரதேச செயலக பிரதான நுழை வாயில் கதவினை பூட்டியவாறு எவரும் உள்ளே செல்லாத வகையில் போராட்டம் இடம்பெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோர்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக வருகை தந்து நல்லதொரு பதில் தரவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
இதன்போது கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் அருணன் வருகைத் தந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.
மேலும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை அரசாங்க அதிபர் போராட்டத்தில் ஈடுபட்டோர் மற்றும் பிரதேச சிவில் அமைப்புக்களை சந்தித்து இந்த விடயங்கள் தொடர்பான நேரடி கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்க அதிபர் தரப்பில் பதில் கூறப்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
மதிப்பிற்குரிய இயன் பைரன் எம்.பி உடனான இராஜதந்திர சந்திப்பு
இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல்சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்தகுற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடைசெய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, பிரித்தானியாவின் லிவர்பூல் மேற்கு டெர்பி (Liverpool West Derby) பகுதி பாராளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய இயன் பைரன் எம்.பி (Hon. Ian Byrne MP) அவர்களுடன் இராஜதந்திர சந்திப்பொன்று கடந்த வியாழக்கிழமை (18/04/2024) மதியம் 12.00 மணியளவில் மெய்நிகர் வழியாக இடம்பெற்றுள்ளது.
சட்ட ஆலோசகரும் மனித உரிமைசெயற்பாட்டாளுமான திரு. கீத் குலசேகரம் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த முக்கிய சந்திப்பில், The Sri Lanka Campaign for Peace and Justice (SLC) அமைப்பின் பிரச்சார இயக்குனர் திருமதி. இவோன் ஸ்கோஃபீல்ட் மற்றும் இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமாக சர்வதேச மையத்தின் (ICPPG) சார்பில் திரு. றோய் ஐக்ஷான் கலந்துகொண்டன. அத்துடன் இனப்படுகொலையின் நேரடி சாட்சியங்கள் மற்றும் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களான விஷ்வா றமேஸ், சந்திரசேகரன் கிஷாந்தன், ஜெயவீரசிங்கம் பேரானந்தம் மற்றும் சசிகரன் ஆகியோரும் கலந்து கொண்டு, தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
கீத் குலசேகரம் அவர்கள் தனது தலைமை உரையின் போத முக்கியமாக மூன்று கோரிக்கைகளை முன்வைத்தார்.
இலங்கையில் இடம்பெற்ற மற்றும் இடம் பெற்றுக்கொண்டிருக்கும் இனப்படுகொலைக்கு வரலாற்று ரீதியாக பிரித்தானியாவே பொறுப்பு என்பதை விளக்கி, இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் மட்டுமன்றி, தற்போது இலங்கையில் தொடரும் ஆள்கடத்தல் மற்றும் சித்திரவதைகளும் சவேந்திர சில்வாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுத படைகளே மேற்கொண்டுவருவதால் அதற்கும் சவேந்திர சில்வாவே பொறுப்பு என்றும், சந்திப்பில் கலந்துகொண்ட சித்திரவதைக்குள்ளானவர்கள் இதற்கு நேரடிசாட்சி என்றும் தெரிவித்தார்.
அத்துடன் சவேந்திர சில்வா யுத்தகுற்றங்களில் ஈடுபட்டிருப்பதை ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் குறிப்படப்பட்டிருப்பதையும், அவர்மீது ஏற்கனவே அமெரிக்கா, கனடா பயணத்தடை விதித்துள்ளதையும் எடுத்துக்காட்டிய அவர், அமெரிக்கா, கனடாவின் வழியை பின்பற்றி பிரித்தானியாவும் தடை விதிக்கவேண்டும் என்று முதலாவது கோரிக்கையாக முன்வைத்தார். மேலும் பிரித்தானிய புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் என்பதையும் விவரித்து தமிழ்மக்களுக்கு நீதி வழங்க வேண்டிய கடமைப்பாட்டையும் எடுத்துரைத்தார்.
இரண்டாவதாக, ITJP மற்றும் ICPPG ஆகிய அமைப்புக்கள் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு (FCDO) போதுமான ஆதாரங்களை சமர்பித்த போதும் இன்னும் உரிய நடவடிக்கை எடுக்க தவறியிருப்பதனை சுட்டிக்காட்டி அதற்காக குரல் கொடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
அடுத்து உரையாற்றிய இவோன் ஸ்கோஃபீல்ட், சவேந்திர சில்வா இழைத்த யுத்தக்குற்றங்களையும் அதற்கான ஆதாரங்களையும் விபரமாக எடுத்து விளக்கினார்.
கருத்துக்களையும் உள்வாங்கிய பாராளுமன்ற உறுப்பினர் தனது சந்தேகங்களை கேட்டு தெளிவடைந்துடன், ஈழத் தமிழர்களின் கோரிக்கையையும் ஆதங்கத்தையும், தனது பகுதியில் வாழும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தான் பிரித்தானிய அரசிற்கு எடுத்துரைப்பதாகவும், FCDO இதுவரை நடவடிக்கை எடுக்காமைக்கு காரணத்தை கேட்டு கடிதம் அனுப்புவதாகவும் உறுதி அளித்தார். அந்துடன் திரு. கீத் குலசேகரம் கேட்டுக்கொண்டபடி தமிழருக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழு (APPGT) மற்றும் மக்நெட்ஸ்கை தடைகளுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற குழுக்களில் (APPG for Magnitsky Sanctions) இணைவது பற்றியும், இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடைசெய்யக் கோரி வீடியோ ஒன்றை வெளியிடுவது பற்றியும் பரிசீலிப்பதாகவும் வாக்களித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் வெளிவராத 8 உண்மைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நேற்று (19) வழங்கியதாக கொழும்பு பேராயர் இல்ல ஊடகப் பேச்சாளர் சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பு பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சிறில் காமினி பெர்னாண்டோ இவ்வாறு தெரிவித்தார்.
மின்னஞ்சல் மூலம் சஹாரானுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதாக வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளால் வெளிப்படுத்தப்பட்ட நபரின் அடையாளத்தை வெளிப்படுத்தாமை, கைது செய்யாமை போன்ற எட்டு உண்மைகளை அவர் வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடைபெறுமாகயிருந்தால் தமிழர்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்யக்கூடியதாக முடிவுகளை தமிழர்களை வழிநடத்தும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றாக இணைந்து எடுக்கவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
தியாக தீபம் அன்னை பூபதியின் 36 ஆவது ஆண்டு நிறைவேந்தல் நிகழ்வின் இறுதி நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பு நாவலடியில் உள்ள அன்னாரின் சமாதியில் உணர்புவூர்வமாக நடைபெற்றது
நேற்று மாலை கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்திலிருந்து நினைவு பேரணியானது ஆரம்பமாகி நாவலடியில் உள்ள அன்னையின் சமாதி வரையில் சென்றது. பேரணியானது நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் சமாதியை அடைந்ததும் அங்கு நிகழ்வுகள் நடைபெற்றன .
சிவில் சமூக அமைப்புக்குள் இணைந்து நடத்திய இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.கேகேஸ்வரன்,பா.அரியநேத்திரன்,ஞா.சிறிநேசன்,தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்க இணைப்பாளர் வேலன் சுவாமிகள் அருட்தந்தை ஜோசப்மேரி,முன்னாள் மாநகர முதல்வா தி.சரவணபவன்,முன்னாள் பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,முன்னாள் மாநகரசபை உறுப்பினர்கள், உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது அன்னை பூபதியின் மகள்மாரினால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து சமாதியில் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவுப்பேருரைகள் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் தியாகத்தாய் அன்னைபூபதியின் நினைவுப்பிரகடனம் வெளியிடப்பட்டது.இதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் வெளியிட்டுவைத்தார்.
இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,
இந்த மண்ணில் தமிழ் மக்கள் ஒரு கௌரவமான வாழ்க்கையினை வாழவேண்டும் என்பதற்காகவே அன்னை பூபதி அவர்கள் 36வருடங்களுக்கு முன்னர் தனது உயிரை தியாகம் செய்தார்.அன்னையின் இந்த தியாகத்திற்கு ஒரு அர்த்தம் இருப்பதாகயிருந்தால் இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வினை பெற்றுக்கொடுப்பதே எமக்கு அனைவருக்கும் முன்பாகவுள்ள கடமையாகும்.
அந்த வகையில் தமிழ் மக்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கின்றது.ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் வரும்.இந்த ஆண்டு ஜனாதிபதிதேர்தல் ஒன்று நடைபெறவிருக்கின்றது.
தென்னிலங்கையில் உள்ள அரசியல்கட்சிகளின் மட்டங்களில் தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் குறித்து பேசுவதுஇதமிழர்கள் குறித்து சிந்திப்பதுஇதமிழர்கள் பேசுபொருளாக மாறுவது இந்த ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் காலப்பகுதியில்தான்.இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடக்கயிருக்கும் ஆண்டு.அவ்வாறு நடக்குமானால் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்திசெய்யக்கூடியதான முடிவுகளை தமிழ் மக்களை வழிநடாத்தும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து எடுப்பதுதான் இந்த தாயின் தியாகத்திற்கு நாங்கள் செய்யக்கூடிய விடயம்.இந்த வருடத்தில் சிறந்த ஒரு தீர்மானத்தை நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து எடுக்கவேண்டும் என தெரிவித்தார்.
”இந்திரா காந்தி கச்சதீவை இலங்கைக்கு வழங்கியமை சரியான முடிவென” தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”இந்திரா காந்தி கச்சதீவை இலங்கைக்கு கொடுத்தது சரியான முடிவு. பிழையான விடயத்தை இந்திராகாந்தி செய்ய மாட்டார்.
ஆரம்பத்தில் கச்சதீவை ஒருவரும் தேடவில்லை. ஆரம்பத்தில் இலங்கை நெடுந்தீவு மீனவர்களும், இந்திய மீனவர்களும் கச்சை தீவுக்கு சென்றுவருவது வழமை.
எனினும் சிறிமாவோ பண்டாரநாயக்கா பிரதமராக இருந்த காலத்தில் அவர், விடுதலைப்புலிகளால் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிவித்து இந்தியப்பிரதமரிடம் விடுத்த கோரிக்கைக்கு இணங்கவே கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது.
பொதுவேட்பாளர் என்று சொல்பவர்கள் 2004ம் ஆண்டு 26 ஆசனங்கள் வைத்திருந்தபோது இனப்பிரச்சனையை தீர்த்திருக்க முடியும். மக்கள் இறக்கின்ற போது வாய் திறக்காதவர்கள் இப்பொழுது பொதுவேட்பாளர் பற்றிப் பேசுகின்றனர்” வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
மே மாத இறுதிக்குள் வடக்கில் 60 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்கப்படும்” என வடமாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
யாழில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இந்த வருட இறுதிக்குள் மீள் குடியேற்ற நடவடிக்கை நிறைவு செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்புரைக்கு அமைய, மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
யாழ் மாவட்டத்தில் ஆயிரத்து 500 குடும்பங்களை சேர்ந்தவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். அவர்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் விசேட கூட்டம் நடத்தப்பட வேண்டும். அத்துடன் ஏற்கனவே மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வீடுகளுக்கான மின்சார விநியோகம் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
இதேவேளை, வட மாகாணத்தில் காணி உறுதிப் பத்திரங்களை கைமாற்றும் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. “உரித்து” காணி உறுதிகளை வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமையை மே மாத நிறைவுக்குள் வட மாகாணத்தில் 60 ஆயிரம் பேருக்கான காணி உறுதிப் பத்திரங்கள் கையளிக்கப்படவுள்ளன.
வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வீட்டுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் திட்டமிடல்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த திட்டத்தில் நெடுந்தீவு மக்களுக்கான 76 வீடுகளும் உள்வாங்கப்பட்டுள்ளன” இவ்வாறு வட மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
”தமிழ் பொது வேட்பாளரைக் களமிறக்குவது பெரும்பான்மை தரப்பில் இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடாகும்” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் வடமராட்சிக் கிளை அலுவலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இந்த ஆண்டு தேர்தல்கள் ஆண்டு என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையினால் இந்த ஆண்டிலே இந்தத் தேர்தல்கள் மூலமாக மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் என நாங்கள் பிரார்த்திப்போம்.
அது உண்மையான பாரிய மாற்றமாக இருக்க வேண்டும். ஆட்சி முறையிலும் நாட்டினுடைய சரித்திரத்திலும் உண்மையான மாற்றம் ஏற்பட வேண்டும்.
அரசியல் உரிமைகள் அனைவரினதும் கைகளுக்கும் கிடைக்க வேண்டும். ஒவ்வொரு மக்களும் தங்களுடைய வாழ்க்கையைத் தாங்களே தீர்மானிக்கின்ற அந்த ஆட்சி முறைமை மாற்றம் ஏற்பட வேண்டும். அதுதான் உண்மையான மக்கள் ஆட்சி. அப்படியான ஒரு மாற்றத்தை நாங்கள் கொண்டுவர வேண்டும்.
தேர்தல்கள் வருகின்றபோது பலவிதமான குழப்பங்கள் மக்கள் மத்தியில் ஏற்படுவதுண்டு. பல பல வித்தியாசமான சிந்தனைகள் எல்லாம் உட்புகுத்தப்படுவதுண்டு. ஆனால், ஊழலற்ற உண்மையாக மக்களை ஆட்சி செய்கின்ற மாற்றம் ஏற்படவேண்டும். எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் தங்களுடைய தலைவிதியை நிர்ணயிக்கத்தக்க வண்ணமாக ஆட்சி முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தல் ஒரு மாற்றத்துக்கான தேர்தல். இதனை இலாவகமாக நாம் கையாள வேண்டும். தமிழ்ப் பொது வேட்பாளர் ஜி.ஜி. பொன்னம்பலம் முதல் எம்.கே. சிவாஜிலிங்கம் வரை என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ்ப் பொது வேட்பாளரைக் களமிறக்குவது சிங்களத் தரப்பில் இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடாகும்” இவ்வாறு எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நேற்றைய தினம் (11.04.2024) விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புத்தக வெளியீட்டு நிகழ்வு ஒன்றை ஏற்பபாடு செய்தமைக்காக தமிழ் தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைவரான தீபச்செல்வனிடம் இவ்வாறு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நா. யோகேந்திரநாதனின் 34 நாட்களில் நீந்திகக் கடந்த நெருப்பாறு என்ற புத்தகம் எழுத்தாளர் தீபச்செல்வன் தலைமையில் அண்மையில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்த புத்தக வெளியீடு தொடர்பாகவே விசாரணை இடம்பெற்றதாக தீபச்செல்வன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த புத்தகம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்கும் நோக்கில் எழுதப்பட்டதா என்றும் விசாரணையின் போது கேட்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை குறித்த புத்தகத்தின் வெளியீட்டு விழாவை நீங்கள் ஏன் நடத்தீனர்கள் என்று கேட்கப்பட்டது.
கிளிநொச்சியின் மூத்த எழுத்தளார் நா. யோகேந்திரநாதனை மதிப்பளிப்பு செய்யும் நோக்கிலேயே வெளியீட்டு விழாவை நடாத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காலை 11மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட விசாரணை சுமார் இரண்டரை மணிநேரத்திற்கும் மேலாக இடம்பெற்றள்ளது.
நமது ஈழநாட்டின் வாழ்வாதார உதவித்திட்டத்தில் இம்முறை புதுக்குடியிருப்பு பிரதேசத்தை சேர்ந்த போரினால் பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களிற்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.
நமது ஈழநாடு உதவித்திட்டத்திடம் கேட்டுக்கொண்டதிற்கிணங்க மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கீத் குலசேகரத்தின் எற்பாட்டில் செயற்பாட்டாளர்களான முஹமட் இன்ரான் மற்றும் குகசோபனா நகுலேந்தன் ஆகியோரின் நிதிப்பங்களிப்பில் மேற்படி உதவித்திட்டம் வழங்கிவைக்கப்பட்டது.
ஜூலை 17ஆம் திகதிக்குப் பின்னர் எந்த நாளிலும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை கோரும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நேரத்தை தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்ததன் பின்னர், வேட்புமனுக்களை கோருவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணையாளர் நாயகம் வெளியிடுவார்.
அதன்படி ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் முதல் வாரத்திலோ அல்லது ஒக்டோபர் முதல் வாரத்திலோ நடத்தப்படலாம் எனவும் பிரச்சாரத்திற்கு 28 அல்லது 35 நாட்கள் அவகாசம் இருக்கும் எனவும் அதன்படி தேர்தலுக்கான வேட்புமனுவை அழைக்கும் திகதி முடிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஆரம்பகட்ட பணிகளை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே ஆரம்பித்துள்ளது. இதனிடையே இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி இன்று முதல் ஆரம்பமாகியுள்ளதுடன் எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதி வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர்களை உள்ளிட முடியாதவர்களுக்கு இவ்வருடம் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாகவும், கிராம சேவையாளர் அலுவலகத்திலோ அல்லது தேர்தல் காரியாலயத்திலோ பெயர்களை உள்ளிட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.