SHARE

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்கப்படும்” என வடமாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற  மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இந்த வருட இறுதிக்குள் மீள் குடியேற்ற நடவடிக்கை நிறைவு செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்புரைக்கு அமைய, மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

யாழ் மாவட்டத்தில் ஆயிரத்து 500 குடும்பங்களை சேர்ந்தவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். அவர்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் விசேட கூட்டம் நடத்தப்பட வேண்டும். அத்துடன் ஏற்கனவே மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வீடுகளுக்கான மின்சார விநியோகம் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

இதேவேளை, வட மாகாணத்தில் காணி உறுதிப் பத்திரங்களை கைமாற்றும் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. “உரித்து” காணி உறுதிகளை வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமையை மே மாத நிறைவுக்குள் வட மாகாணத்தில் 60 ஆயிரம் பேருக்கான காணி உறுதிப் பத்திரங்கள் கையளிக்கப்படவுள்ளன.

வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வீட்டுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் திட்டமிடல்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த திட்டத்தில் நெடுந்தீவு மக்களுக்கான 76 வீடுகளும் உள்வாங்கப்பட்டுள்ளன” இவ்வாறு  வட மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email