Home Blog Page 103

கிளாஸ்கோ வரும் யுத்தக்குற்றவாளி ஜனாதிபதி கோட்டாபயவை கைதுசெய்வேண்டும்-வைகோ

சிறிலங்காவின் ஜனாதிபதி கோட்டாபய ரஜபக்ஷ மற்றும் இராணுவ அதிகாரிகளான கமால் குணரட்ன ஜகத் ஜெயசூரியா சிசிர மெண்டிஸ் உள்ளிட்ட யுத்தக்குற்றவாளிகளை கைது செய்து சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி தண்டிக்க வேண்டுமென மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் தலைவர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை பிரித்தானியாவின் கிளாஸ்கோவில் எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா.வின் காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட யுத்த குற்றவாளிகளை கைது செய்யவேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

சிறிலங்காவின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச உட்பட அந்நாட்டு இராணுவ மற்றும் காவல்துறை உயர் அதிகாரிக்ளுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் 200 தமிழர்கள் சார்பாக நேற்றை தினம் வழக்கு தொடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு,

இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்து இனப்படுகொலை செய்த கொடியவர்கள் மகிந்த ராஜபக்சே, கோத்தபாய ராஜபக்சே மற்றும் இலங்கைப் படைத்தலைவர்கள் கமால் குணரட்ன, ஜகத் ஜெயசூரியா, சிசிர மெண்டிஸ் மற்றும் பல அதிகாரிகளைக் கைது செய்து, உலக நீதிமன்றத்தின் குற்றக்கூண்டில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை, மறுமலர்ச்சி தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உள்ள, ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தின் 36 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்றபோது, அந்தக் கருத்தை வலியுறுத்தினேன்; இந்திய நாடாளுமன்றத்திலும் பேசி இருக்கின்றேன்.

2009 ஆம் ஆண்டு, இறுதிக்கட்டப் போரில் மட்டும், 1 இலட்சத்து 37 ஆயிரம் ஈழத்தமிழர்கள் பேர் படுகொலை செய்யப்பட்டதாக, ஐ.நா. மன்றம் அமைத்த மார்சுகி தாருஸ்மன், ஸ்டீவன் ராட்னர், யாஸ்மின் சூகா ஆகிய மூவர் குழு அளித்த ஆய்வு அறிக்கை, ஆவணச் சான்றுகளுடன் குற்றம் சாட்டி இருக்கின்றது.

ஆனால், 12 ஆண்டுகள் கடந்தபின்னரும், இன்றுவரையிலும், இனப்படுகொலையாளர்கள் மீது எந்த நடவடிக்கையையும், உலக நாடுகள் மேற்கொள்ளவில்லை. இலங்கையிலும் அத்தகைய நீதி விசாரணை எதுவும் நடைபெறவில்லை.

இது தமிழ் இனத்திற்கு எதிரான அநீதி ஆகும்.

படுகொலை செய்யப்பட்டவர்கள் தவிர, பல்லாயிரக்கணக்கில் காணாமல் போன ஈழத்தமிழ் இளைஞர்களின் நிலை என்ன? அவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா? இல்லையா? என்பதும் தெரியவில்லை.

சுமார் 8 இலட்சம் தமிழர்கள், இலங்கையில் இருந்து வெளியேறி, உலகின் பல நாடுகளில் அடைக்கலம் பெற்று இருக்கின்றார்கள். அவர்களுள் பல்லாயிரக்கணக்கானவர்கள், இலங்கைக்கு வந்து போவதற்கும் இலங்கை அரசு தடை விதித்து இருக்கின்றது. தவிர, ஆட் கடத்தல், சட்டத்திற்கு எதிராக தடுத்து வைத்தல், சித்திரவதைகள், வலுக்கட்டாயமாக நாடு கடத்தல் போன்ற குற்றங்களையும், இலங்கையின் சிங்கள இனவாத அரசு, தொடர்ந்து செய்து வருகின்றது. இவை எல்லாம், மனித உரிமைகளுக்கு எதிரான குற்றம்.

மியான்மர் நாட்டில், ரொகிங்யா முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்த வழக்கை, உலக நீதிமன்றம் (International Court of Criminal Justice) விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு இருக்கின்றது.

அதுபோல, இலங்கையில் பாதிக்கப்பட்ட 200 தமிழர்கள் சார்பாக, Global Rights Compliance LLP (GRC) என்ற சட்ட அமைப்பு, ரோமச் சட்டத்தின் 15 ஆவது சரத்தின் கீழ் (Article 7 of the Ro Roman Statute) பன்னாட்டுக் குற்ற இயல் நீதிமன்றத்தின் வழக்கு நடத்துபவரின் (ஞசடிளநஉரவடிச) கவனத்திற்கு, பிரச்சினையைக் கொண்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில், பிரித்தானியாவில் கிளாஸ்கோ நகரில், ஐ.நா.மன்றத்தின் சார்பில், இந்த ஆண்டு காலநிலை மாற்ற மாநாடு (COP26) நடைபெற இருக்கின்றது. அந்த மாநாட்டில், கோத்தபாய இராஜபக்சே கலந்து கொள்ள இருப்பதாகத் தெரிகின்றது.

அக்கொடியவனின் வருகையை எதிர்த்துக் களம் காண, புலம் பெயர் நாடுகளில் வாழுகின்ற ஈழத்தமிழர்கள் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றார்கள்.

இனக்கொலை செய்த பல நாடுகளின் ஆட்சியாளர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணையின் முடிவில் தண்டனை பெற்று இருக்கின்றார்கள். இரண்டாம் உலகப் போரின்போது, 3500 யூதர்கள் படுகொலையில் தொடர்பு உடைய, 100 வயதான நாஜி அதிகாரி மீது, ஜெர்மனி நாட்டின் நீதிமன்றத்தில் கடந்த மாதம் விசாரணை தொடங்கி இருக்கின்றது.

அதுபோல, மனித உரிமைகளுக்கு எதிரான குற்றங்களை இழைத்த கோத்தபாய இராஜபக்சேவைக் கைது செய்து, குற்றக்கூண்டில் நிறுத்த வேண்டும் என, ஈழத்தமிழ் அமைப்புகள் கோரிக்கை பிரித்தானிய அரசின் காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்தக் கோரிக்கையை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரிக்கின்றது. இந்தத் கருத்தை வலியுறுத்தி, ஐரோப்பியத் தமிழ் தொலைக்காட்சிகளுக்கு நேர்காணல் அளித்துள்ளேன்.

ஐரோப்பியக் கண்டத்தின் பல்வேறு நாடுகளில் வாழ்கின்ற ஈழத்தமிழர்கள் ஒருங்கிணைந்து, கோத்தபாயவுக்கு எதிரான அறப்போரில் களம் காண வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை – 8
28.10.2021

சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்குற்றவாளிகளை தடைசெய்ய கோரும் பிரித்தானிய எம்.பி.

இலங்கையின் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடை செய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரித்தானிய தொழிலாளர் கட்சியின் East Ham தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினர் Hon.Stephen Timms வலியுறுத்தியுள்ளார்.

சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்த குற்றவாளிகளை தடைசெய்யகோரி பிரித்தானியாவில் உள்ள தமிழர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு செய்பாட்டாளர் சதீஸ் குலசேகரம் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்கி ஆதரவு தெரிவித்து நமது ஈழநாட்டுக்கு அவர் வழங்கிய விசேட காணொளியிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அதில் இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பலர் கொல்லப்பட்டது, வைத்தியசாலைகள் மற்றும் சமாதான பிரதேசம் ஆகியவற்றின் மீதான குண்டுவீச்சுக்களை மேற்கொண்ட 58 ஆவது படைப்பிரிவிற்கு தலைமை தாங்கி இராணுவத்தை நேரடியாக வழிநடத்திய சவேந்திர சில்வாவை அமெரிக்கா தடை செய்யதது போன்று பிரித்தானியாவும் தங்கள் மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகாரசபையின் கீழ் தடை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

https://www.youtube.com/watch?v=tCzS23RoreY&ab_channel=Namathueelanadu

கோட்டாபயவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் 200 தமிழர்கள் வழக்கு தொடுப்பு!

கிளாஸ்கோவில் வைத்து கைது செய்யக்கோரி பிரித்தானிய பொலிசாரிடம் ஆதாரங்கள் சமர்ப்பிப்பு

சிறிலங்காவின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட அந்நாட்டு இராணுவ மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதி மன்றில் (International Criminal Court (ICC) வழக்கு ஒன்று இன்று புதன் கிழமை (27) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை அரசால் பாதிக்கப்பட்டு, நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கபட்ட 200 தமிழர்கள் சார்பாக, Wayne Jordash QC என்ற சட்டநிபுணர் தலைமையில், உலக உரிமைகள் இணக்கம் (Global Rights Compliance LLP (GRC) என்ற சட்டவல்லுனர் அமைப்பினால் ரோமச் சட்டத்தின் 15ஆவது சரத்தின் (Article 7of the Rome Statute) கீழே இந்த வழக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் 31 (ஒக்ரோபர்) ஆம் திகதி முதல் நவம்பர் 12 வரையில் கிளாஸ்கோவில் (Glasgow) நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 2021 காலநிலை மாற்ற மாநாட்டில் (COP26) கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் சிறிலங்கா ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சா மற்றும் மேலே பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இதர நபர்களில் சிலர் உள்ளிட்ட சிறிலங்கா அதிகாரிகளை சர்வதேச அதிகாரவரம்பு கொள்கையின் கீழ் கைதுசெய்வதற்கான பிடிவிராந்தை வெளியிடுவதற்கான ஆயத்தங்களைச் செய்வதற்கு பிரித்தானிய தேசியப் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இந்த வழக்கில் சமர்ப்பிக்கபட்ட ஆதாரங்கள் அனுப்பி வைக்கும் எனவும் சட்டவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய ஜனாதிபதியும் முன்னாள் பாதுகாப்புச் செயலருமான கோட்டாபய ராஜபக்ச, சிறிலங்காவின் தற்போதைய பாதுகாப்புச் செயலரும் சிறிலங்கா இராணுவத்தின் (SLA) முன்னாள் இராணுவத் தளபதியுமான கமால் குணரட்ண, சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும் சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியுமான ஜகத் ஜெயசூரியர், சிறிலங்கா பொலிஸின் குற்ற விசாரணைப் பிரிவு (CID) மற்றும் பயங்காரவாத விசாரணைப் பிரிவுகளின் (TID) பிரதிப் பொலிஸ்மா அதிபர் சிசிர மென்டிஸ் மற்றும் பொலிஸ்மா அதிபர்கள் அதிரடிப்படைப்பிரிவின் (STF) கட்டளை அதிகாரிகளே இந்த வழக்கில் பெயரிடப்பட்டுள்ளனர்.

சிறிலங்காவிலும் பிரித்தானியாவிலும் வாழும் ஏராளமான பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட (ஆட்கடத்தல்கள், சட்டவிரோதமான தடுத்துவைப்புக்கள், சித்திரவதைகள் ஆகிய செயற்பாடுகள் ஊடாக) வலுக்கட்டாயமாக நாடுகடத்தல், நாடு திரும்பிச் செல்வதற்கான உரிமையினை மறுதலித்தல், துன்புறுத்துதல் ஆகிய மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு (Crimes against humanity of deportation (through underlying acts of abductions, unlawful detention and torture), deprivation of right to return and persecution) பொறுப்பாக இருந்தார்கள் என்ற முடிவுக்கு வருவதற்கான நியாயமான அடிப்படையைக் காட்டியே மேற்படி வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்படி வழக்கு குறித்து Global Rights Compliance LLP வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு எதிரான, மிகமோசமான ‘வெள்ளை வான் கடத்தல்கள் உட்பட்ட மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிவதில் நேரடியாக ஈடுபட்ட (குற்ற விசாரணைப்பிரிவு, பயங்கரவாக விசாரணைப் பிரிவு, விசேட அதிரடிப்படை உட்பட்ட) சிறிலங்கா பொலிஸ் மற்றும் சிறிலங்கா இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படைகள் மீது மேற்குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் அதிகாரத்தினைச் செலுத்தும் பதவிகளை வகித்திருந்தார்கள் என்பதனை இத்தகவல் காட்டுகின்றது.

அவர்களது செயற்பாடுகள் மற்றும் செயற்பாடு தவிர்ப்புக்கள் மூலமாக இந்த மாபெரும் கொடூரங்கள் நடைபெறுவதற்கு இச்சந்தேகநபர்களே நேரடியாகப் பொறுப்பானவர்களாவர். இருந்தபோதிலும், இவர்களில் ஒருவர் கூட, இந்தக் குற்றங்களின் தீவிரத்தன்மை பாரதூரமானதாக இருந்தும், சிறிலங்காவில் குற்றவிசாரணைக்கோ அல்லது வழக்குவிசாரணைக்கோ உட்படுத்தப்படவில்லை. இந்த அடிப்படையில், சர்வதேச நீதிமன்றுக்கு பொருத்தமான இந்த வழக்குகள் சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவை.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் அல்லது உறுப்பினர்கள் என்று சிறிலங்கா அரசாங்கத்தால் கருதப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிராக, குறைந்தது 2002 ஆம் ஆண்டிற்குப் பின்னர் சிறிலங்காவிலும் பிரித்தானியாவிலும் பரவலாகவும் திட்டமிட்ட ரீதியிலும் மேற்கொள்ளப்பட்ட வலுக்கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற்றுதல், மனிதாபிமானமற்ற ரீதியில் திரும்பிச் செல்வதற்கான உரிமையினை மறுதலித்தல், துன்புறுத்துதல் ஆகிய மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக முக்கியமான தகவல்களின் சுருக்கத்தினை இத்தொடர்பாடல் வழங்குகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையிலான போர் நடந்துகொண்டிருந்த காலத்திலும் 2009 இல் அது முடிவுக்கு வந்தபின்னரும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள சிறிலங்கா பாதுகாப்புப் படைகளுக்குச் சொந்தமான சிறிலங்கா அரசாங்கத்தின் அதிகாரிகளால் ஆயிரக்கணக்கான உண்மையான தமிழ் ஆதரவாளர்கள் அல்லது ஆதரவாளர்கள் என்று கருதப்பட்டவர்கள் அல்லது தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் திட்டமிட்ட ரீதியில் கடத்தப்பட்டும், சட்டத்திற்குப் புறப்பாகத் தடுத்துவைக்கப்பட்டும் அல்லது சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டும் வந்துள்ளார்கள். இந்த முறைப்பாடானது பாதிக்கப்பட்ட 200 பேரின் சார்பாகவே மேற்கொள்ளப்படுகின்றது என்றாலும், இவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களானது மேலும் பல்லாயிரக்கணக்கானோர் இவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதைக் கோடிட்டுக் காட்டுகின்றது. இவ்வாறாக, சிறிலங்காவிலும் பிரித்தானியாவிலும் தமிழ் ஆண்கள், பெண்கள் சிறுவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட, தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகின்ற கொடூரமான குற்றங்களின் ஒரு பகுதியையே இப்பாதிக்கப்பட்ட 200 பேரும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளமைப்பிற்குள்ளும் அதன் ஆதரவளர்களுக்குள்ளும் வேரூன்றிப்போயுள்ள தமிழ்ப் பிரிவினைவாதத்தினை எந்த வழியிலாவது இல்லாதொழிப்பதே இக்குற்றங்களைப் புரிந்த சிறிலங்கா அதிகாரிகளின் முக்கிய நோக்கமாக இருந்துள்ளது, இருக்கின்றது. எனினும் இந்த அரசியல் நம்பிக்கையுடன் இருப்பவர்களுக்கும் அமைதியையும் பாதுகாப்பையும் தாயகம் என்று தாம் அழைக்கும் ஒரு இடத்தினையும் தவிர வேறெதையும் விரும்பாத ஆயிரக்கணக்கான சிறிலங்காவின் ஆண்கள், பெண்கள், சிறுவர்களுக்கும் இடையில் சிறிலங்கா அரசாங்கம் எந்தவொரு வேறுபாட்டையும் காட்டுவதில்லை.
இவ்வாறாக, இன மற்றும் அரசியல் அடிப்படையின் இக்குற்றச்செயல்களை சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் மேற்கொள்கையில், உண்மையில் அவர்கள் இனப்பாகுபாடு மற்றும் துன்புறுத்தல் நடவடிக்கைகளையே புரிந்திருக்கின்றார்கள். தாங்கள் எதிர்கொண்ட துன்புறுத்தல்களின் கொடூரத்தன்மை காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் சிறிலங்காவை விட்டு வெளியேறி, பிரித்தானியாவில் புகலிடம் கோருவதைத் தவிர அவர்களுக்கு வேறெந்தத் தெரிவையும் விட்டுவைக்கவில்லை.

அதன் தொடர்ச்சியாக, கோத்தபாய ராஜபக்சாவாலும் கமால் குணரட்ணவாலும் வழிநடத்தப்படும் சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்புப் படைகளின் அச்சுறுத்தல்கள், சித்திரவதைகள், துன்புறுத்தல் கொள்கைகள் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் திரும்பவும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச்செல்வதற்கான அவர்களது உரிமையினை அவர்களிடமிருந்து பறித்தொடுக்கப்பட்டதுடன் தொடர்ந்தும் மறுதலிக்கப்படுகின்றது. இந்த நபர்களும், ஒட்டுமொத்தமாக சிறிலங்கா அரசாங்கமும் ஆரம்பித்துள்ள கொள்கைகள் இன்றுவரை பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்வதைத் தடுத்துக்கொண்டிருக்கின்றது. பாதிக்கப்பட்டவர்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களோ இல்லையே, அவர்கள் சிறிலங்காவுக்குத் திரும்பிச்சென்றால், அவர்கள் சித்திரவதை, காயங்கள் மற்றும் மரணத்தைச் சந்திக்கக்கூடிய ஆபத்தினை எதிர்கொண்டுள்ளர்கள். சிறிலங்காவிலுள்ள பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழைக்கப்படும் தொல்லைப்படுத்தல்கள் மற்றும் அச்சுறுத்தல்களால் மட்டுமன்றி, பிரித்தானியாவிலேயே அவர்கள் மீது தொடர்ந்து மேற்கொள்ளப்படும் கண்காணிப்புக்கள், தொல்லைப்படுத்தல்கள், துன்புறுத்தல்கள் காரணமாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் துன்பத்துக்கு ஆளாகிவருகின்றார்கள். மேற்சொன்ன துன்பங்களுடன் சேர்ந்து, தங்களது வீடுகளை, கலாச்சாரத்தை, குடும்பங்களை இழந்து வெளிநாடு ஒன்றில் தங்களது வாழ்க்கையினைப் புதிதாக ஆரம்பிப்பதிலுள்ள வேதனைகள் உட்பட, பிரித்தானியாவில் அகதியாக இருப்பதிலுள்ள அவமதிப்புக்கள் மற்றும் சிரமங்களும் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கடுமையான மனப்பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன. தொடர்ந்து ஏற்படுத்திவருகின்றன.

இந்தவகையில், இந்த நடவடிக்கைகள் மூலமாகத் தற்போதைய சிறிலங்கா அரசாங்கத்தினால் பிரித்தானியாவிலுள்ள பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் துன்புறுத்தலுக்கு உள்ளாகிவருகின்றார்கள் என்பதே முக்கிய கரிசனையாகும். இந்த நடவடிக்கைகளும், தொடர்ந்துவரும் அக்கொடூரத்தனமும் பிரித்தானியாவிலுள்ள பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட, தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதகுலத்திற்கு எதிரான மூன்று தனித்துவமான குற்றச்செயல்களுக்கு (வலுக்கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற்றுதல், மனிதாபிமானமற்ற ரீதியில் திரும்பிச் செல்வதற்கான உரிமையினை மறுதலித்தல், துன்புறுத்துதல்) வலுச்சேர்ப்பதாகவே அமைகின்றன. ரோமச் சட்டத்தின் அரச பங்காளிகளாக ஐக்கிய இராஜ்ஜியம் திகழ்வதால், அது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரையறைக்குள் வருவதுடன் மட்டுமன்றி, இன்னொரு அடிப்படையிலும் – உலகளாவிய சட்டவரம்புக் கொள்கைகளின் அடிப்படையிலும் – ஐக்கிய இராஜ்ஜியத்திற்கு வரும்போது அவர்களைக் கைதுசெய்வதற்கான அதிகாரத்தினைப் பிரித்தானியாவுக்கு வழங்குகின்றது.

இத்தொடர்பாடல் காட்டுவதுபோன்று, இரண்டு காரணங்களுக்காக இது இருக்கின்றது: முதலாவது, வலுக்கட்டாயமாக நாட்டைவிட்டு வெளியேற்றுதல் என்பது தொடர்ந்து நடைபெறும் ஒரு குற்றச்செயலாகும், அதாவது மேலே குறிப்பிடப்பட்ட நபர்களின் செயற்பாடுகள் காரணமாகவும், சிறிலங்கா அதிகாரிகளின் தொடர்ச்சியான துன்புறுத்தல் செயற்பாடுகள் காரணமாகவும் பாதிக்கப்பட்டவர்களை சிறிலங்காவிலுள்ள தங்களது சொந்த வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதைத் தடுப்பது தொடர்ந்து நடைபெறும்வரைக்கும் இக்குற்றச்செயலானது ஐக்கிய இராஜ்ஜிய நிலப்பரப்பிலேயே நடைபெறுக்கின்றது என்றே பொருள்கொள்ளப்படும். இரண்டாவது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதித்துறையால் அண்மையில் உறுதிப்படுத்தப்பட்டது போன்று, தங்களது சொந்த வீட்டுக்குத் திரும்பிச் செல்வதற்கான உரிமை மறுக்கப்படும் குற்றச்செயலானது பாதிக்கப்பட்டவர் தற்போது அகதியாக எங்கே இருக்கின்றாரோ அங்கேயே நடைபெறுவதாகவே கொள்ளப்படும், அதாவது இவ்விடயத்தில் அது ஐக்கிய இராஜ்ஜியத்தில் நடைபெறுகின்றது. பாதிக்கப்பட்டவர்கள் கடத்தப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு (சிறிலங்காவிலும் பிரித்தானியாவிலும்), அதன்மூலமாக அவர்களது இன மற்றும் அரசியல் அடையாளங்கள் காரணமாக தங்களது தாயகத்திற்கத் திரும்பிச்செல்லும் உரிமை பறிக்கப்பட்டநிலையில் இருக்கின்றார்கள்.

மேலே குறிப்பிட்ட விடயங்களின் அடிப்படையில், இக்குற்றங்கள் தொடர்ந்தும் நடப்பதைத் தடுப்பதற்கும் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது தாயகம் திரும்பிச் செல்வதற்குரிய அவர்களுக்குள்ள உரிமையினை உறுதிப்படுத்துவதற்கும், உண்மையைத் தெரிந்துகொள்வதற்கும், தங்களைச் சித்திரவதைக்கு உள்ளாக்கியவர்கள் நீதிவிசாரணையை எதிர்கொள்வதைக் காண்பதற்கும், தங்களது இழப்பீட்டுத்தொகையினைப் பெற்றுக்கொள்வதற்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கு நடத்துனரால் விசாரணை ஆரம்பிக்கப்படுவது அத்தியாவசியமானது என பாதிக்கப்பட்டவர்கள் வாதிடுகின்றனர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது”.

இந்த வழக்கின் முதல் கட்டமாக தற்போது பிரித்தானியாவில் வாழும் 200 பாதிக்கப்பட்டவர்கள் சாட்சியம் வழங்கியுள்ள போதிலும், அடுத்த கட்டங்களில் மேலும் பலர் இணைந்து தமது சாட்சியங்களை வழங்கலாம் என்றும், ஏனைய மனித உரிமை அமைப்புக்களும் ஆதாரங்களையும் வாதங்களையும் சமர்ப்பிக்லாம் என்றும் இந்த வழக்கை வழிநடத்துபவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

எதிர்வரும் காலத்தில், தமிழர்கள் மீதான இனப்படுகொலையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிருபிக்கும் முயற்சியில் இது ஒருபடிக்கல்லாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கு குறித்து Global Rights Compliance LLP வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கை

Press-Release-Final

Executive-Summary-Final

எம்.ஏ.சுமந்தரனின் உருவ பொம்மையுடன் யாழ்.குருநகரில் ஹர்த்தால் அனுஷ்டிப்பு

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இழுவை படகு தொழிலை தடைசெய்ய வேண்டும். என தொிவித்திருந்த கருத்தை கண்டித்து யாழ்.குருநகரில் கறுப்புகொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டித்துள்ளனர்.

இன்று(26/10)  காலை தொழிலுக்கு செல்லாமல் கறுப்பு கொடிகளுடன் மீனவர்கள் ஹர்த்தால் அனுட்டித்துள்ளதுடன் குருநகரில் சகல வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டிருக்கின்றது. மேலும் பாராளுமன்ற உறுப்பினரின் கொடும்பாவியும் கட்டப்பட்டுள்ளது.

அண்மையில் இழுவை படகு தொழிலை தடைசெய்யக்கோரி மீனவர்களுடன் இணைந்து போராட்டம் ஒன்றும் நடத்தப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே குருநகர் இழுவை படகு தொழிலாளர்களின் ஒழுங்கமைப்பில் இந்த ஹர்த்தால் நடைபெறுகிறது.

கனடிய தூதரக அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கழகத்திற்கு விஜயம்

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு கனடிய தூதரக அதிகாரிகள் குழு இன்று காலை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பல்கலைக்கழக நிர்வாகத்தினருடன் கலந்துரையாடியுள்ளனர்.

கனடா அரசின் நிதி அனுசரணையுடன் இலங்கையிலுள்ள நான்கு பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் யாழ்.பல்கலைக் கழகத்தின் திட்ட மேம்பாடு குறித்து ஆராய்வதற்காகவே கனடிய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் குழு இன்று யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டது.

தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் டொம் ப்றவ்ணல் தலைமையில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி ஆர். விஜயலட்சுமி, திட்ட ஆலோசகர் ஆகியோரே கனடியத் தூதரகத்தின் சார்பில் விஜயம் செய்தனர் .யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, கலைப்பீடாதிபதி கலாநிதி கே. சுதாகர், மொழிபெயர்ப்புகள் கற்றல் துறையின் தலைவர் எஸ். கண்ணதாஸ் ஆகியோரை கனடிய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் சந்தித்து திட்ட மேம்பாடு குறித்து கேட்டறிந்தனர்.

வெலிக்கடை சிறைச்சாலையில் கலவரம்

வெலிக்கடை சிறைச்சாலையில் சுமார் 50 கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு கலவரத்தில் ஈடுபட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் வெலிக்கடை சிறைச்சாலையின் கூரையின் மேல் ஏறி சில கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கைதிகள் தற்போது சிறை வளாகத்திற்குள் சொத்துக்களை சேதப்படுத்தி வருவதாகவும் சிறைக் காவலர்கள் பொல்லுகள் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துமிந்த சில்வா போன்றவர்கள் 5 வருடங்கள் மட்டுமே சிறைவாசம் அனுபவித்ததாகவும், சில கைதிகள் 15 வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே இந்த விடயத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏறாவூரில் இரண்டு இளைஞர்களை தாக்கிய பொலிஸ் அதிகாரி பணி நீக்கம்!

மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை உதைத்து கன்னத்தில் அறைந்த பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி இன்று (சனிக்கிழமை) நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் பொலிஸ் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

பொலிஸ் அதிகாரி தாக்கும் வகையிலான காணொளி வெளியாகி நேற்று (வெள்ளிக்கிழமை) பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்து.

இந்நிலையில் குறித்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்த அமைச்சர் சரத் வீரசேகர, பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

சாவகச்சோியை சேர்ந்த 26 வயதான இளம் பெண் கொரோனா தொற்றினால் மரணம்

யாழ்.சாவகச்சோி – மடத்தடி பகுதியை சேர்ந்த 26 வயதான இளம்பெண் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.

இந்த யுவதி உயிரிழந்த நிலையில் பெறப்பட்ட பீ.சி.ஆர் மாதிரிகள் யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பரிசோதிக்கப்பட்டிருந்தது.

இதன்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிரப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.  இதேவேளை உயிரிழந்த பெண் சாவகச்சோி – மடத்தடி பகுதியை சேர்ந்தவர் எனவும் சுகாதார பிரிவு தகவல்கள் தொிவித்திருக்கின்றன.

பொதுமகனை கொடூரமாக தாக்கிய பொலிஸார்

மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் பொதுமகன் ஒருவரை தாக்கும் வகையிலான காணொளி வெளியாகியுள்ளது.  

குறித்த சம்பவம் இன்று மாலை பதிவாகியுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை போக்குவரத்து பொலிஸார் நிறுத்தியதாகவும், அதனை அவதானிக்காது குறித்த நபர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றதன் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபரை பின்தொடர்ந்து வந்த பொலிஸ் அதிகாரியே இடையில் மறித்து அந்த நபர்மீது தாக்குதல் நடத்தியதாக குறிப்பிடப்படுகின்றது. 

பயங்கரவாத சட்டத்தின் கீழ் 39 பேர் கடந்த 3 மாதங்களில் மட்டும் கைது; சபையில் சிறிதரன்

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 39 பேர் இரவிரவாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன், இறுதி யுத்த காலத்தில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்களுக்கு என்ன நடந்தது? கொல்லப்பட்ட சிறுவர்களுக்கு எப்போது நீதி கிடைக்கும் எனவும் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, இளந்தவறாளர்கள் (பயிற்சிப்பாடசாலைகள்) திருத்தச் சட்டமூலம் மற்றும் தண்டனைச்சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்-

வடக்கில் இறுதிக் க்கட்ட யுத்தம் நடந்த கடந்த 2009ஆம் ஆண்டு பல சிறுவர்கள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். குறிப்பாக 18.05.2009 ஆம் ஆண்டில் முன்னாள் போராளிகளின் பிள்ளைகள் இவ்வாறு இராணுவத்திடம் தாய், தந்தையுடன் ஒப்படைக்கப்பட்டனர். இக்காலகட்டத்தில் நான் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றினேன். அப்போது என்னிடம் கல்வி கற்ற மாணவர்கள்கூட இந்த பட்டியலில் உள்ளனர். அவர்கள் அப்போது 6ஆம்,7ஆம் தரங்களில் கல்வி கற்றனர். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகனும் ஆறாம் ஆண்டில் படித்து, இவர்களுடன் இராணுவத்தில் சரணடைந்து கொல்லப்பட்டவர்களின் ஒருவராகவுள்ளார்.

இவ்வாறு உயிருடன் இராணுவத்தில் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள் எங்கே? அவர்களுக்கு என்ன நடந்தது? இவ்வளவு காலமும் இதற்கான நீதி இந்த மண்ணிலே கிடைக்கவில்லை. ஒவ்வொரு தடவையும் ஜெனிவாவில் பிரேரணை வரும் வேளையில், ஜெனிவாவுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வேளையில் மட்டுமே இந்த விடயங்கள் பேசு பொருளாகின்றன.

குடும்பம் குடும்பமாக இவர்கள் சரணடைந்தனர். அதற்கான சாட்சிகள், ஆதாரங்கள் உள்ளன. ஆனால் இன்னமும் நீதி கிடைக்கவில்லை. நாட்டில் சட்டங்கள் குறித்து பேசுகின்றோம். நீதிப் பொறிமுறை பற்றி பேசுகின்றோம். சிறுவர்களின் உரிமைகள் குறித்து பேசுகின்றோம். ஆனால் இன்றும் 17 பெண்கள் குழந்தைகளுடன் சிறைகளில் உள்ளனர். அவர்களின் பிள்ளைகளைக்கூட பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த உயரிய சபையில் நியாயம், சட்டம் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் , கைது செய்யப்பட்ட நபர்களை சென்று பார்க்க முடியாத நிலைதான் உள்ளது.

திருகோணமலையில் சிறுவன் ஒருவன் தன்னுடைய முகநூலில் பதிவிட்ட புகைப்படம் காரணமாக கைது செய்யப்பட்டு இன்றும் சிறையில் உள்ளான். இவ்வாறு பல குடும்பங்கள் கண்ணீருடன் உள்ளன.

இந்த கொரோனா காலத்தில் கடந்த மூன்று மாதங்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 39 பேர் இரவிரவாக கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மற்றும் கிளிநொச்சியில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு, சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்கள் தமது பிள்ளைகளுக்காக, உறவினர்களுக்காக, மாவீரர்களுக்காக தமது எண்ணங்களை, கண்ணீரை கற்பூரமாகவோ மெழுகுவர்த்தியாகவோ ஏற்றி வணங்க முடியாத நிலையில் இந்த நாட்டின் சட்டம் செயற்படுகின்றது.. தமிழர்கள் இந்த நாட்டில் எந்த நிலைமையில் உள்ளனர் என்பதை சர்வதேசம் விளங்கிக்கொள்ளவேண்டும். உயிரோடு ஒப்படைக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கு நீதி கிடைக்குமா?-என்றார்.

அத்துடன் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களின் முழு பெயர் விவரங்களையும் சிறிதரன் எம்.பி. சபையில் ஆவணப்படுத்தினார்.

குற்றவியல் நடைமுறை கோவை திருத்தம் ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும்; சுரேஷ்

தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள குற்றவியல் நடைமுறைக் கோவை திருத்த சட்டமூலம் நாட்டு மக்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதுடன் ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்குவதாக அமையும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

“நாட்டில் தற்போது அமுலிலுள்ள குற்றவியல் நடைமுறை தொடர்பான வழிகாட்டல்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று கடந்த 08.10.2021 அன்று அரசால் வெளியிடப்பட்டிருக்கின்றது. இதன் பிரகாரம், ஒருவர் கைது செய்யப்பட்டால் நாற்பத்தெட்டு மணிநேரம் வரையில் அவரை நீதிவான் நீதிமன்றத்திலோ அல்லது மேல்நீதிமன்றத்திலோ ஆஜர்படுத்தாமல் இருப்பதற்கு இந்தத் திருத்தம் வழிவகை செய்கின்றது.

ஒரு சந்தேக நபரை நாற்பத்தெட்டு மணிநேரம் காவலில் வைத்திருப்பது என்பது அவரை சித்திரவதை செய்யவும், தமது விருப்பத்திற்கேற்ற வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ளவும் இந்த கால அவகாசங்கள் உதவும் என்றே நாம் நம்புகின்றோம்.

பொலிஸார் தமது தேவை கருதியோ அல்லது வேறு சில அரசியல்வாதியின் தேவை கருதியோ அல்லது தனிப்பட்ட முறையில் தமது நண்பர்களுக்கு உதவும் வகையிலோ இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடவழிவகை செய்கிறது. எனவே, இந்தக் குற்றவியல் நடைமுறைக் கோவை திருத்தங்கள் என்பது ஒட்டுமொத்தமான இலங்கை மக்களுக்கும் பாதகமாகவே அமையும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இவற்றுக்கு அப்பால் அரசுக்கு எதிராகக் குரல்கொடுக்கக்கூடிய சிறிய பெரிய அரசியல் கட்சிகளை ஒடுக்குவதற்கும் அவர்களது குரல்வளையை நசுக்குவதற்கும் ஜனநாயக முற்போக்கு, சிவில் அமைப்புகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் அவர்களது ஜனநாயக செயற்பாடுகளை முடக்குவதற்கும்கூட இந்தத் திருத்தங்கள் பாவிக்கப்படலாம்” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!